தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
`தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அச்சம் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து, ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வருகின்றன.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு மாநில அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், தி.மு.க அரசு பதவியேற்ற பிறகு பள்ளிகளைத் திறப்பதில் ஆர்வம் காட்டி வந்தது. இதன் ஒருபகுதியாக ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியானது.
ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை. இந்நிலையில், `கொரோனா தொற்றுப் பரவல் குறைந்த பிறகே பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்' எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அப்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், `` கொரோனா மூன்றாவது அலை வரும் எனக் கூறப்படுவதால் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு முதலமைச்சரின் ஒப்புதலோடு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ``பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆகியவற்றின் மதிப்பெண் உள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிதாக உள்ளது. விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது" என்றார்.
பிற செய்திகள்:
- பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
- மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் எம்.பி-க்கு பொதுமன்னிப்பு – சர்ச்சையாவது ஏன்?
- தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மாவட்ட ஆட்சியராக 11 பெண்கள்
- முதியோர் நடத்தும் ஆன்லைன் ரேடியோ - கொரோனா காலத்தில் ஒரு தன்னம்பிக்கை கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












