நரேந்திர மோதி அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கை: "கடன் வாங்கி நெய் உண்பது” போல் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலோக் ஜோஷி
- பதவி, பொருளாதார விமர்சகர், பிபிசி இந்திக்காக
(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)
கடன் வாங்கி நெய் உண்பது என்று சொல்வார்கள்.
இன்று அரசாங்கம் இதைத் தான் சொல்வது போலத் தெரிகிறது. ஒரு முறை இரு முறை அல்ல. மீண்டும் மீண்டும் இதையே தான் அரசு பரிந்துரைக்கிறது. இருப்பினும், அதன் அடுத்த வரி இன்றைய சூழ்நிலைக்கு எந்த வகையிலும் பொருந்தாது. 'யாவத் ஜீவேத் சுகம் ஜீவேத்' - அதாவது வாழும் வரை மகிழ்ச்சியுடன் வாழுங்கள். இங்கே நிலைமை என்னவென்றால், துக்கம் பிடிவாதமாக சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று 6,28,993 கோடி ரூபாய்க்கான புதிய நிவாரணத் தொகுப்பை அறிவித்தார்.
ஆனால் இந்தத் தொகையில் பெரும்பகுதி, கடனாகவே வழங்கப்படுகிறது. அந்தக் கடன் திரும்ப வருமா இல்லையா என்பது அடுத்த கேள்வி. ஆனால் கொரோனா நிவாரணத்தொகையின் முதல் அறிவிப்பிற்குப் பிறகு வந்தவை பெரும்பாலும் கடன் விநியோகிக்கும் திட்டமாகும். அந்தப் பழைய கடனை அடைக்கும் நிலைக்கு மக்கள் வந்தால் தானே அடுத்த கடனைப் பற்றிச் சிந்திப்பதற்கு?
கொரொனா முதல் அலையின் போது அரசு செய்தது என்ன?

பட மூலாதாரம், Reuters
கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடி தொடங்கிய உடனே, அதாவது மார்ச் 26 அன்று, ஏழைகளுக்கு நேரடி மற்றும் உடனடி உதவிகளை வழங்குவதற்காக நிதி அமைச்சர் 1,70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதியை அறிவித்தார். இந்த நிவாரணத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பொது முடக்கம் காரணமாக வேலையில்லாமல் இருந்த மக்களுக்கு உணவுப் பிரச்னை ஏற்படாமல் இருக்கும் நோக்கில், நாட்டின் 80 கோடி மக்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு பருப்பு வகைகள், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக ஒரு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ஏராளமான மக்களின் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் கிராமம் மற்றும் நகரம் என இரண்டையும் சேர்ந்தவர்கள் அடங்குவர். ஒரு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விடக் குறைவான வருமானம் உள்ளவர்கள், 15 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு, தொழிலாளர் வைப்பு நிதியை மூன்று மாதங்களுக்குச் செலுத்துவதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
டெபிட் கார்டிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டது மற்றும் வங்கிகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை விதியும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இரண்டு - மூன்று மாதங்களில் கொரோனாவின் தாக்கம் குரைந்துவிடும், மீண்டும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும் என்று அரசாங்கம் நம்பியது. நீங்களும் நானும் கூட அவ்வாறே நினைத்துக் கொண்டிருந்தோம்.
இயங்கத் தூண்டும் தொகுப்பு அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்த ஏற்பாடுகளில் பெரும்பாலானவை மூன்று மாதங்களை மனதில் கொண்டு தான் செய்யப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது மே மாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார ஊக்கப் பொதியை அறிவித்தார்.
மேலும், தற்சார்பு பாரதம் என்ற கோஷத்தை பிரதமர் முன்னெடுத்தார். மேலும் இந்தத் தொகுப்பு குறித்த விவரங்களை நிதி அமைச்சகம் வெளியிடும் என்றும் கூறினார்.
அடுத்த பல நாட்களுக்கு, நிதி அமைச்சரும் அவரது சக இணை அமைச்சரும் இந்தத் தொகுப்பின் விவரங்களை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பல தவணைகளில் வழங்கினர். எல்லா விவரங்களும் வெளிவந்த பிறகு, பெரும்பாலான வல்லுநர்கள் உண்மையில் இந்தத் தொகுப்பு குறைவாக இருப்பதாகவும், அது வழங்கப்பட்ட பேக்கேஜிங் தான் பெரிதாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்கள்.
முதலாவதாக, அரசாங்கத்தின் பழைய அறிவிப்புகள் அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டு, ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக சந்தையில் புழங்கும் கூடுதலான சுமார் எட்டு லட்சம் கோடி ரூபாயும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு குறை தேடும் வல்லுநர்கள் கூட, அறிவிக்கப்பட்ட தொகுப்பில் 10-ல் ஒரு பகுதி கூட உண்மையில் இல்லை என்று கூறினார்கள்.
இந்த தொகுப்பு அறிவிக்கப்பட்டவுடனே, சந்தையில் தேவையை அதிகரிப்பது தான் உதவுமேயன்றி, பல்வேறு வகையான கடன்களை விநியோகிப்பதன் மூலம் பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பணம் தேவைப்படும்போது தான் யாரும் கடன் வாங்க முன்வருவார்கள் என்பது அவர்கள் வாதம்.
பொது முடக்கம், வேலையின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சந்தையில் தேவை என்பது கிட்டத்தட்ட இல்லாமலே போய் விட்ட நிலையில், வர்த்தகர்கள் அல்லது தொழிலதிபர்களுக்கு கடன்களை வழங்குவதன் பயன் என்ன? அத்தகைய சூழ்நிலையில், கடன் வாங்க யார் வருவார்கள்?
வணிக கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் அல்லது கார், ஸ்கூட்டர் அல்லது வீட்டுப் பொருட்கள் அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் எடுக்கப்பட்ட தனிநபர் கடன்களுக்கான மாதத் தவணை செலுத்துவதில் இருந்து சில மாதங்களுக்குத் விலக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், வட்டி மட்டும் தொடர்ந்து உயர்ந்தது. ஆனாலும், மிகுந்த சிரமத்தில் இருந்த மக்களுக்கு இது ஒரு நிம்மதி அளித்தது என்பதையும் மறுக்க முடியாது.
மூன்றாம் பொதி அறிவிப்பு

பட மூலாதாரம், GETTY CREATIVE STOCK
நவம்பர் மாதத்தில் மீண்டும் 2 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒரு பொதி அறிவிக்கப்பட்டது. தற்சார்பு பாரதம் திட்டத்தின் மூன்றாம் கட்டம். இந்த முறை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து வலியுறுத்தினார், மேலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடியவையாக நம்பப்பட்ட சில துறைகளுக்கு ஆதரவாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கொரோனாவின் போது வேலை இழந்த அல்லது புதிய நபர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக 'ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறு தொழில்முனைவோருக்கான அவசர கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டது, மேலும் பி.எல்.ஐ திட்டத்தில் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாயை 10 துறைகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்னும் பல அறிவிப்புகள் வந்தன. அவை குறித்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஆனால் சிக்கல் முடிவுக்கு வருவதற்குப் பதிலாக, மோசமாகி வருவதாக தெரிகிறது. இதற்கு மிகப் பெரிய காரணம் என்னவென்றால், கொரோனாவை முடிவுக்கு வரும் என்று நினைத்த நிலையில், அது மீண்டும் இரண்டு மடங்கு தீவிரமாகத் தாக்கியது, இப்போது மூன்றாவது அலைக்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புகள் இரண்டாவது அலையின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியாகத் தான் தெரிகின்றன.
புதிய அறிவிப்புகளின் சிறப்பம்சம் என்ன?

திங்களன்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளை அதிகரிக்க 23,220 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டம் கொண்டு வரப்படுகிறது.
உண்மையில், இந்த கடன் உத்தரவாதத் திட்டம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாகும், அதில் 50 ஆயிரம் கோடி ரூபாய் சுகாதாரத் துறைக்கும், மீதமுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் மற்ற துறைகளுக்கும் இருக்கும்.
இது தவிர, பயண முகவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் கடனுதவி அளிக்கும், இது கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை ஆதரிக்க அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் பேரில் வழங்கப்படும்.
இது மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதல் ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளின் விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
எம்.எஸ்.எம்.இ தொழில்களை ஆதரிப்பதற்காக, ஏற்கனவே இயங்கி வரும் அவசர கடன் திட்டத்தின் அளவை 3 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 4.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், தொழில்முனைவோருக்கு எதையும் அடகு வைக்காமல் கடன் வழங்கப்படுகிறது.
இதனுடன், நிதியமைச்சர் ஒரு புதிய திட்டத்தையும் அறிவித்தார், இதில் 25 லட்சம் சிறு தொழிலதிபர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் 1.25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். தற்சார்பு பாரதம் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் ஊக்கத் திட்டத்தின் ஆயுளை நீட்டிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார், அதாவது புதிய வேலைகளை உருவாக்குவதற்கான பி.எல்.ஐ. காலம் நீட்டிக்கப்படும்
இதனால் யாருக்கு லாபம்?

பட மூலாதாரம், Reuters
ஆனால் இந்த திட்டங்களின் மூலம் யாருக்கு எவ்வளவு பயன் கிடைக்கும் என்பது குறித்த கேள்வி எழுகிறது. அரசாங்கம் ஏற்கனவே கொண்டு வந்த கடன் உத்தரவாதத் திட்டத்தில், மூன்று லட்சம் கோடி ரூபாயில் இரண்டு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் பெறப்பட்டுள்ளது. பின்னர் ஒன்றரை லட்சம் கோடி அதிகரிப்பதால் என்ன பயன்?
இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நுகர்வோரின் பைகளில் பணத்தை நிரப்பித் தேவையை அதிகரிக்க வேண்டிய நேரத்தில், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு கடன் வழங்குவதில் அரசாங்கம் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது? இதற்காக, இது உத்தரவாதம் அளிக்கும், வட்டி விகிதத்தை குறைக்கும் மற்றும் அடமானத்தின் நிலையை நீக்கும்.
ஆனால் எந்தவொரு தொழிலதிபரோ அல்லது கடைக்காரரோ கடன் வாங்கி என்ன செய்வார்கள்? அவருக்கு ஒரு கடனின் தேவை அல்லது முக்கியத்துவம் வாடிக்கையாளர்கள் அவருக்கு முன்னால் நிற்கும்போதுதான். பொருட்களை வாங்கவோ, நிரப்பவோ அல்லது தயாரிக்கவோ அவருக்கு பணம் தேவைப்படுகிறது.
இந்த காலத்தின் மிகப்பெரிய பிரச்னை சந்தையில் தேவை இல்லாதது. இதற்குக் காரணம் கோடிக்கணக்கான வேலையற்ற மக்கள், மூடிய தொழில்கள் மற்றும் மக்களின் மனதில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை. அதற்கு சிகிச்சையளிக்க அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும். பின்னர் இதுபோன்ற கடன்களுக்குத் தேவையே இருக்காது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












