மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்ற உரை: '"அண்ணாவின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு"

பட மூலாதாரம், Getty Images
நான் அண்ணாவின் அரசியல் வாரிசு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுக்க முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப் படும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காக பத்திரிகையாளர்கள் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகளும் திரும்பப்பெறப்படுமெனவும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உரையின் முக்கிய அம்சங்கள்
"நீதிக் கட்சி 17 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலில் சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கு பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைப் புகுத்திய கட்சி அது. குறைவான அதிகாரங்களை வைத்துக் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிய கட்சி அது.
நீதிக் கட்சி ஆட்சியில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தத் தருணத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
நீதிக் கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி மு.கருணாநிதி, மு. கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு. இந்த அரசு எட்ட வேண்டிய இலக்குகள்தான் ஆளுநர் உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, மு. கருணாநிதியின் கொள்கை வாரிசு.
இந்த அரசு செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில் அரசின் 5 ஆண்டுகளுக்கான நோக்கத்தையும் திட்டத்தையும் அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். ட்ரைலர்தான். இந்த அரசு வகுத்திருக்கும் பாதை, பயணம், அதில் வரும் இடர்கள், அவற்றை எதிர்கொள்ளும் முறை ஆகியவை வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் கூறப்படும்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்து 49 நாட்கள் ஆகியுள்ளன. எல்லா எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறோம். நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை, நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயணம், பால் விலை குறைப்பு போன்றவற்றைச் செய்திருக்கிறோம்.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், 75,546 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் கொரோனா நோயாளிகளுக்கான செலவை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே செலுத்தும் திட்டத்தின் கீழ் இதுவரை 20,520 பேர் பயனடைந்துள்ளனர்.
"அ.தி.மு.க அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தவில்லை"
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது கொரோனா உச்சத்தில் இருந்தது. மே 7ஆம் தேதி தமிழ்நாட்டில் தினமும் 26ஆயிரமாக இருந்தது. அது 36 ஆயிரமாக உயர்ந்துகொண்டிருந்தது. மருத்துவ வல்லுனர்கள் இது ஐம்பதாயிரமாக உயரும், அதையும் தாண்டிச் செல்லும் என்று சொன்னார்கள்.
ஆனால், அரசு எடுத்த நடவடிக்கைகளால் 7 ஆயிரத்திற்குக் கீழ் வந்தது. கடந்த ஒன்றரை மாத காலத்தில் 89 ஆயிரத்து 618 படுக்கைகள் உருவாக்கப்பட்டன. மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி இந்த அரசுக்கு இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் தங்கள் ஆட்சியில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் தி.மு.க. ஆட்சியில் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் சொல்கிறார். பிப்ரவரி 26ஆம் தேதிவரை முதல்வராக இருந்ததாகக் கணக்கில் கொண்டு இப்படிச் சொல்கிறார். ஆனால், மே 6ஆம் தேதிவரை முதலமைச்சராக இருந்தது அவர்தான்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26ஆம் தேதி வெறும் 481 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார். அதற்குப் பிறகு அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லையென்கிறார். ஆனால், பிப்ரவரி 26ஆம் தேதிக்குப் பிறகு வேறு எந்தப் பணிகளையும் பார்க்கவில்லையா?
ஏப்ரல் 28ஆம் தேதி முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. அன்றைய கொரோனா பாதிப்பு, 16,665. தேர்தல் முடிவுகள் வெளிவந்த மே 2ஆம் தேதி 19,588 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆகவே கொரோனாவை அ.தி.மு.க. அரசு கட்டுப்படுத்திவிட்டது என்ற வாதம் தவறானது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என்று ஒரு திரைப்படம் வந்தது. அதைப்போல பிப்ரவரி 26 முதல் மே 6ஆம் தேதிவரையிலான இரண்டு மாத கால ஆட்சியை அ.தி.மு.க. மறந்துவிட்டதா? ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்ததும் அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் பாதிப்பின் எண்ணிக்கை 26 ஆயிரம் எனக் கூடியது.
"போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகள் திரும்பப்பெறப்படும்"
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய்த் தொற்றில் இருந்து விடுபட்ட பிறகும் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை மையங்கள் துவங்கப்படும். உயர் சிகிச்சை மருத்துவர்கள் அந்த மையங்களில் இருப்பார்கள்.
வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்யாற்றில் 12 ஆயிரம் பேருக்கும் திண்டிவனத்தில் 10,000 பேருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நிலையில் தொழிற்சாலைகள் அமையவிருக்கின்றன.

கடந்த ஆட்சியில் ஊடகங்களுக்கு எதிராகத் துவங்கப்பட்ட வழக்குகள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், நியூட்ரினோ - மீத்தேன் திட்டம் - கூடங்குளம் அணுஉலை - சேலம் எட்டுவழிச் சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடியவர்களின் மீதான வழக்குகள் ஆகியவை திரும்பப்பெறப்படும்.
"புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்"
கடந்த தி.மு.க. ஆட்சியில் எல்லா ஜாதியினரும் குடியேறும் வகையில் 240 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. அவை பராமரிப்பில்லாமல் இருக்கின்றன. அவை சீரமைக்கப்படும். புதிதாக சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும்.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கோயில்களின் புனரமைப்பிற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கோயில்களும் தேர்களும் புதுப்பிக்கப்படும்."
தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- என்ன செய்தார் நரேந்திர மோதி? ஏழு படங்களில் ஏழாண்டு கால ஆட்சி
- விஜய் மல்லையா கடன் பாக்கி: ரூ. 5,646 கோடி சொத்துகளை விற்க நீதிமன்றம் அனுமதி
- '10 குழந்தைகள் பெற்ற' பெண் கர்ப்பமாகவே இல்லை - அம்பலமான பொய்
- இரானில் புதிய அதிபர்: அமெரிக்காவின் நிலைப்பாடு மாறுமா?
- இரண்டாம் உலகப் போரின் போக்கை மாற்றிய ஹிட்லரின் மாபெரும் தவறுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












