தாராளமயமாக்கலின் 30 ஆண்டுகள்: பழைய இந்தியா Vs புதிய இந்தியா - 4 வேறுபாடுகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
- பதவி, பிபிசி மராத்தி
இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் சகாப்தம் 1991ல் தொடங்கியது. இதன் பின்னர் நாட்டில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன. 90களுக்குப் பிறகு பிறந்த தலைமுறையினருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவைப் பற்றி ஊகிப்பது கடினமாக இருக்கும் அளவிற்கு இந்த மாற்றங்கள் அத்தனை பெரிய அளவில் நிகழ்ந்தன.
இன்றைய தலைமுறைக்கு அந்த இந்தியா நம்ப முடியாததாகத் தோன்றலாம்.
1991க்கு முன்னர் இந்தியா எப்படி இருந்திருக்கும்? அந்த நேரத்தில் நாட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது, ஒரே ஒரு உள்நாட்டு விமான சேவை மட்டுமே இருந்தது என்பதைக்கொண்டு இதை கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் பல முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களை இப்போது புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
இந்தியாவில் ஒரே தொலைக்காட்சி சேனல்
இன்று OTT தளத்தின் காலம். இன்றைய உலகம் மொபைலில் ஒன்றிணைந்துள்ளது போலத்தெரிகிறது. மொபைலில் டிவி சேனல்களையும் பார்க்கத் தொடங்கியுள்ளோம். தற்போது இந்தியாவில் சுமார் 800 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.
இன்றைய இளம் தலைமுறையினர் தொடர்ந்து சேனலை மாற்றும் பழக்கம் கொண்டவர்கள். குழந்தை பருவத்திலிருந்தே ரிமோட் மூலம் டிவி சேனல்களை மாற்ற அவர்கள் கற்றுக்கொண்டார்கள். 1991 வரை, இந்தியாவில் ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல் மட்டுமே இருந்தது. அதுவும் அரசின் சேனலான தூர்தர்ஷன்.
அதாவது 30 ஆண்டுகளில், ஒரு தொலைக்காட்சி சேனலில் இருந்து தொடங்கிய பயணம் 800 சேனல்களை எட்டியுள்ளது. தகவல் மற்றும் பொழுதுபோக்கின் இந்தப் புரட்சி, 1991 ஆம் ஆண்டின் பொருளாதார தாராளமயமாக்கலின் விளைவாகும்.
இந்தியாவில் வண்ண தொலைக்காட்சி ஒளிபரப்பு 1982 ஆம் ஆண்டில் தொடங்கிய போதிலும், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் அதன் தொழில்நுட்பம் மீது அரசின் பல கட்டுப்பாடுகள் இருந்தன. பல செய்தித்தாள்கள் வெளியிடப்பட்டுவந்தன. ஆனால் ஒலிபரப்பிற்கு அரசின் அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு, தூர்தர்ஷன் மட்டுமே மக்களுக்குக் கிடைத்தன.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அதற்குள் உலகின் பல நாடுகளில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தடம்பதித்திருந்தது மற்றும் கேபிள் டிவி சேனல்கள் வளர்ந்து கொண்டிருந்தன. இந்தத்தொழில்நுட்பம் இந்தியாவையும் அடைந்தது. ஆனால் லைஸென்ஸ் ராஜ் (உரிமம் பெறவேண்டிய நிர்பந்தம்) காரணமாக, பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன.
அந்த நேரத்தில் இந்தியாவின் பல பத்திரிகையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை அரசு தொலைக்காட்சி சேனல்களில் வழங்கிவந்தனர். ஆனால் தங்கள் சொந்த சேனலைத் தொடங்குவது ஒரு கனவாகவே இருந்தது.1991 ஆம் ஆண்டின் பொருளாதார தாராளமயமாக்கல் முடிவுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் குறையத்தொடங்கின. தனியார் தொலைக்காட்சி சேனல் என்ற கனவு நனவானது.
1991 வளைகுடாப் போரின் படங்கள் கேபிள் டிவி மூலம் பல வீடுகளை எட்டியதற்கு இதுவே காரணம். இந்தியாவில் வெளிநாட்டு சேனல்களை செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்ப கேபிள் டிவி வழி வகுத்தது.
சில ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்சி சேனல்களின் புரட்சி இந்தியாவில் காணப்பட்டது. ஸ்டார் நெட்வொர்க் 1991 இல் இந்தியாவுக்குள் நுழைந்தது. விரைவில், சுபாஷ் சந்திராவின் ஜீ நெட்வொர்க் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் தனியார் சேனல்கள் செயற்கைக்கோள் வழியாக ஒளிபரப்பைத் தொடங்கியபோது, கேபிள் ஆபரேட்டர்களின் டிஷ் ஆண்டெனாக்கள் கிராமங்கள்தோறும் தோன்ற ஆரம்பித்தன. கேபிள் நெட்வொர்க்கின் வலைப்பின்னல் விரிவடைந்தது.
உலகெங்கிலும் உள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் சின்னத்திரை மூலம் இந்தியாவின் வீடுகளை அடைந்தது. டிவி பார்ப்போர் எண்ணிக்கை கோடிகளை எட்டியது. இந்தியாவிலும் தனியார் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு பெரிய பொருளாதாரம் உதயமாகத் தொடங்கியது.
இதற்குப் பிறகு டி.டி.எச்(Direct to Home) சகாப்தம் ஆரம்பமானபோது டிவி மேலும் அதிகமான மக்களை சென்றடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
தனியார் வங்கிகளின் துவக்கம்
இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் தனது முதல் வங்கிக் கணக்கைத் திறக்கிறார் அல்லது ஒரு பணியில் சேர்ந்த பிறகு பெருநிறுவன சம்பளக் கணக்கைத் திறக்கிறார் என்றால், அது தனியார் வங்கிக் கணக்காக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.
தற்போது, எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ ,ஆக்சிஸ் வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருக்கவில்லை. அந்த நாட்களில், அரசுதுறை வங்கிகள் மட்டுமே இருந்தன.
தாராளமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரே நாட்டின் வங்கித் துறை திறக்கப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் 22 தனியார் வங்கிகளும், 27 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் உள்ளன. தங்களை விரிவுபடுத்திக்கொள்ளமுடியாத பல வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன.
நாடு முழுவதிலும் மக்கள் அல்லது நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய மொத்தக்கடனில் 42 சதவிகிதம், தனியார் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளன.
1991 ஜூலை மாதம் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் அறிமுகம் செய்த தாராளமயமாக்கல் கொள்கைகள் தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த நேரத்தில் அது பல நிலைகளை கடந்துள்ளது. 1969 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். 1980 இல் மேலும் ஆறு வங்கிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டன.
அரசுத்துறை வங்கிகளின் சகாப்தத்தில் பணப்புழக்கம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. ஆனால்1991 க்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டது. வங்கித் துறையில் சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டத்தை அப்போதைய அரசு ரிசர்வ் வங்கியிடம் கேட்டது.
நரசிம்மராவ் தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை 1991 டிசம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் எல்லா பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் தனியார் வங்கிகளை அனுமதிக்கும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அரசு உடனடியாக வங்கித் துறையைத் திறக்கவில்லை. இதில் ரிசர்வ் வங்கியின் முக்கிய பங்கு இருந்தது. தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் விதிகளின் கீழ் மட்டுமே செயல்பட வேண்டும். 1993 இன் ஆரம்பத்தில், ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளை அனுமதித்தது.
அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சி.ரங்கராஜன் இருந்தார். அவர் தனியார் வங்கிகளை அனுமதித்தார். ஆனால் அதை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் நிதி இருக்கவேண்டும் என்பது தகுதி நிலை பட்டியலில் சேர்க்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக சுமார் 100 நிதி நிறுவனங்கள் வங்கிகள் திறக்க விண்ணப்பித்திருந்தன. பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு, யுடிஐ, ஐடிபிஐ மற்றும் ஐசிஐசிஐ ஆகியவற்றை வங்கித் துறையில் நுழைய அரசு அனுமதித்தது. இதன் பின்னர் குறுகியகாலத்திற்குள், எச்.டி.எஃப்.சி உட்பட வேறு ஆறு வங்கிகளும் அனுமதிக்கப்பட்டன.
இருப்பினும், அந்த காலகட்டத்தில் பலர் தனியார் வங்கிகள் வருவதை எதிர்த்தனர். பெரிய வணிக நிறுவனங்களின் வங்கிகள் அனுமதிக்கப்படாததால் தொழிலதிபர்கள் கோபமடைந்தனர். இருப்பினும், நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சகாப்தமும் பின்னர் தொடங்கியது.
இரண்டாம் கட்டமாக 2002-03ல், தனியார் வங்கிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த சுற்றில் கோட்டக் மஹிந்திரா மற்றும் யெஸ் வங்கி அனுமதி பெற்றன. 2014 ஆம் ஆண்டில் மூன்றாம் கட்டம் வந்தபோது , 25 விண்ணப்பதாரர்களில் இருவர் மட்டுமே ஒப்புதல் பெற்றனர்.
புதிய வங்கிகளின் அறிமுகம் இந்தியாவின் பொருளாதாரத்தை சீராக்கியது மற்றும் மக்களில் பெரும் பகுதியினர் முக்கிய நீரோட்டத்தில் இணைய உதவியது. ஆரம்ப காலகட்டத்தில் நுகர்வோர், அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகளில் சிறந்த சேவைகளைப் பெற்றனர், ஆனால் தற்போது, இந்த சேவைகளுக்கான கட்டணம் நுகர்வோரிடமிருந்தே பெறப்படுகிறது.
தனியார் வங்கிகளின் வருகையுடன், அரசுத்துறை வங்கிகளில் பணியின் திறனும் வேகமும் அதிகரித்தது. ஆனால் ஏடிஎம் மையங்கள் மற்றும் மொபைல்களின் மூலம் வங்கி சேவைகளைப்பெறுவது பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை..

பட மூலாதாரம், Getty Images
தொலைத்தொடர்பு புரட்சி
1991 க்கு முன்னர், இந்திய வீடுகளில் தொலைபேசி வைத்திருப்பது வளமையின் சின்னமாக கருதப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள், தொலைபேசி அழைப்பைப்பெற அல்லது அழைப்பைச்செய்ய மற்றவர்களின் வீடுகளில் மணிக்கணக்கில் காத்திருப்பார்கள் அல்லது தொலைபேசி பூத்துகளில் வரிசையில் நிற்பார்கள் என்று சொன்னால், இன்றைய தலைமுறை அதை நம்புவது கடினம்.
இன்று மொபைல் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலைக்கும் பேசலாம் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசியை நம்பியிருக்கும் நிலை முற்றிலும் முடிந்துவிட்டது.
இந்தியாவில் தொலைதொடர்பு புரட்சி 1991 இல் தொடங்கவில்லை என்றாலும் கூட, 1991 க்குப் பிறகு அதன் வேகம் அதிகரித்தது. இந்தியாவில் தொலைபேசி புரட்சி 1980 களில் இருந்து தொடங்கியது.
1984 க்குப் பிறகு, தொலைதூர பகுதிகளில் கூட தொலைபேசி சாவடிகள் துவங்கப்பட்டன. இந்தத் துறையில் தனியார் நிறுவனங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டன. எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகியவை உருவாக்கப்பட்டன. ஆனால் 1991 ல் தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நிலமையை முற்றிலுமாக மாற்றின.

பட மூலாதாரம், Getty Images
புதிய பொருளாதாரக் கொள்கைகளுடன், தொலைத் தொடர்புத் துறை உபகரணங்கள் உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது. 1992 இல், அதன் பல சேவைகள் தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் தனியார் துறை இதில் பெருமளவு முதலீடு செய்ததை அடுத்து, நாடு முழுவதும் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய சந்தைக்குள் வர ஆரம்பித்தன.
1994 ஆம் ஆண்டில், தாராளமயக் கொள்கைகளின் கீழ், நாட்டின் முதல் தேசிய தொலைத்தொடர்பு கொள்கை அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 1997 இல் உருவாக்கப்பட்டது.
அதற்குள் தொழில்நுட்பமும் மேம்படத் தொடங்கியது, மொபைல் புரட்சி இந்தியாவில் தொடங்கியது. இரண்டாவது தேசிய தொலைத்தொடர்பு கொள்கை 1999 இல் வந்தது. அதன் பிறகு தொலைத் தொடர்புத் துறையில் மூன்றாம் கட்ட மாற்றம் ஆரம்பமானது.

பட மூலாதாரம், Getty Images
விமான சேவைகளின் விரிவாக்கம்
1991 ஆம் ஆண்டின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் ஆக்கபூர்வமான தாக்கம் ஏற்பட்டது. இந்திய சந்தையில் திடீரென தனியார் விமானங்களின் வரிசை நுழைந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல விமான நிறுவனங்களின் நிலை மோசமடைந்தது.
ஏர் கார்ப்பரேஷன் சட்டம், 1953 இன் கீழ் ஒருகாலத்தில் இந்திய வான்வெளி மீது இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. 1991 ஆம் ஆண்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பிறகு, சிவில் விமானத் துறையை தனியாருக்கு திறந்துவிட அரசு முடிவு செய்தது.
ஏர் கார்ப்பரேஷன் சட்டம், 1994 இல் திருத்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவைகளில் தனியார் அனுமதிக்கப்பட்டனர்.
திறந்த வான் கொள்கை காரணமாக விரைவில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டு விமான நிறுவனங்கள் வந்தன. ஜெட் ஏர்வேஸ் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ் ஆகியவை இந்தியாவின் ஆரம்பகால தனியார் நிறுவனங்களாக இருந்தன. இருப்பினும், இப்போது இந்த இரண்டு நிறுவனங்களுமே இந்திய விமானத் துறையில் இல்லை.
ஆரம்ப கட்டத்தில், தனியார் நிறுவனங்களின் விமான பயண டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருந்தது. இது தவிர, ஈஸ்ட்- வெஸ்ட் ஏர்லைன்ஸ் மற்றும் வித்யுத் போன்ற விமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் வெவ்வேறு காரணங்களால் அவை மூடின.
பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக, நடுத்தர வர்க்கத்தின் ஒரு புதிய பிரிவு இந்தியாவில் உருவானது. இது ரயில் பயணத்துடன் ஒப்பிடும்போது விமானம் மூலம் பயணிக்கும் கூடுதல் செலவை தாங்கக்கூடிய திறன் பெற்றது. இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டையும் 100 சதவிகித என்ஆர்ஐ முதலீட்டையும் அரசு அனுமதித்தது.
மலிவுக்கட்டண விமானங்களின் சகாப்தம் இந்தியாவில் 2003 முதல் தொடங்கியது. அதே ஆண்டில் ஏர் டெக்கான் , மலிவு கட்டண சேவையைத் தொடங்கியது. இதன் பின்னர், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, கோ ஏர், கிங்ஃபிஷர் போன்ற நிறுவனங்கள் மலிவு விலையில் விமான பயணத்தை வழங்கத் தொடங்கின. இந்தியாவின் விமான நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
1991 ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸில் சுமார் ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் பயணித்தனர். 2017 க்குள் உள்நாட்டு விமானப்பயணிகளின் எண்ணிக்கை 14 கோடியாக அதிகரித்தது.
ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. ஏர் இண்டியா விற்பனையின் விளிம்பில் உள்ளது. ஆனால் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












