சி. ரங்கராஜன்: "இந்தியாவின் பல தளங்களில் சீர்திருத்தம் செய்வது அவசியம்"

ரங்கராஜன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிகில் இமாம்தார்
    • பதவி, பிபிசி

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரும், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருமான முனைவர் சி. ரங்கராஜன், இந்தியாவின் தாராளமய கொள்கையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். இந்த சீர்திருத்தம் நடந்து 30 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், பிபிசியின் நிகில் இமாம்தாரிடம் விரிவாகப் பேசினார் ரங்கராஜன்.

50 வருடங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பொருளாதாரத்தை எப்படி விடுப்பது என்று நரசிம்மராவ் அரசு திணறியதைப் பற்றியும் 1991ல் நடந்த அந்த முக்கிய நிகழ்வுக்குப் பிறகு இந்தியா கடந்து வந்த பாதை பற்றியும் அவர் நிகிலிடம் பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியிலிருந்து.....

இந்தியாவின் தாராளமயக் கொள்கையை வடிவமைத்தவர்களில் நீங்கள் முக்கியமானவர். இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் என்ன? அவற்றை நாம் அடைந்துவிட்டோமா?

விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் '1991' ஆண்டை ஒரு மைல் கல் எனலாம். பணத்தை பாக்கி வைத்திருந்ததால் இந்தியா கடும் பொருளாதாரப் பிரச்னையில் இருந்தது. ஆனால் இந்தியாவின் பொருளாதார கொள்கையை மாற்றியமைக்கும் வாய்ப்பாக அது மாற்றப்பட்டது. இது மூன்று திசைகளிலிருந்து நடந்தது. 1991க்குப் பிறகு வந்த புதிய பொருளாதார கொள்கை, இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த உரிம முறையை ரத்து செய்தது. உள்ளே வருவதற்கும் வளருவதற்குமான தடைகள் நீக்கப்பட்டன. போட்டிகள் நிறைந்த ஒரு சூழல் கொண்டு வரப்பட்டது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின்மீதான பாரபட்சம் களையப்பட்டது அடுத்த முக்கியமான மாற்றம். இன்னும் சொல்லப்போனால் பொதுத்துறைக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த பல துறைகள் தனியாருக்கும் திறந்து விடப்பட்டன.

மூன்றாவது முக்கியமான மாற்றம் இறக்குமதிக்கான மாற்றை உறுதி செய்யும் திட்டத்தைக் கைவிடுவது. அதாவது, சில பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதாகவும் சில பொருட்களின் இறக்குமதிமீது கடும் வரிகளை விதிப்பதாகவும் இந்தத் திட்டம் இருந்தது. அதைக் கைவிட்டு நாம் உலக சந்தை அமைப்புக்குள் சென்றோம் என்று சொல்லலாம். நாம் உலக அரங்கில் போட்டி போடத் தயாரானோம், நம் அமைப்புகளுக்கு உலக சந்தையில் போட்டி போட அழைப்பு வந்தது. நம்மால் உலக அரங்கில் பொருட்களை விற்க முடிந்தது.

உள்நாட்டிலும் வெளியிலும் ஒரு போட்டி நிறைந்த சூழலைக் கொண்டுவருவதன் மூலம் பொருளாதார செயல்திறனை அதிகப்படுத்துவதாக தாராளமயக்கொள்கை விளங்கியது.

ப சிதம்பரத்துடன் ரங்கராஜன்

பட மூலாதாரம், Getty Images

ஐம்பது ஆண்டுகள் அரசு கட்டுப்பாட்டில் இருந்தபிறகு, ஒரு சிறுபான்மை அரசைத் தலைமையாக வைத்துக்கொண்டு இந்த சீர்திருத்தங்கள் தைரியமாகக் கொண்டுவரப்பட்டன. ரிசர்வ் வங்கியின் முதல் துணை ஆளுநராகவும் பிறகு ஆளுநராகவும் நீங்கள் பதவி வகித்தபோது, மன்மோகன் சிங், பிரதமர் நரசிம்ம ராவுடன் இந்த முடிவுகளை எடுத்தீர்கள். அப்போது பயமாக இருந்ததா?

அவை துணிச்சலான முடிவுகள். ஆபத்து நிறைந்த முடிவுகளும்கூட. உதாரணமாக, புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் ரூபாயை மதிப்பிழக்கச் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. ஆபத்தான, தைரியமான முடிவு அது. ஆனால் அது சரியாக நடக்கவில்லை என்றால் புதிய திட்டமும் முடிவுக்கு வரும் என்று பொருள். ஆகவே நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்கள் ஆபத்துடன் சேர்ந்தே இருந்தன. இதில் பணியாற்றும் அனைவரும் கொஞ்சம் கவலைப்பட்டோம்.

ஆனால் இந்த மாற்றம் வேண்டும் என்பதை உணர்ந்திருந்தோம். அப்போது இருந்த பிரச்சனையின் தீவிரம் இந்த மாற்றத்தைத் தூண்டியது. அடுத்த மூன்று வாரங்களுக்கான இறக்குமதிகளுக்கு மட்டுமே அன்னிய செலவாணி கையிருப்பு இருந்தது.

வெளிநாட்டுக் கடன்களுக்குப் பணம் கட்டமுடியாமல் போகும் ஆபத்து நிலவியது. ஆகவே வழக்கமான முறைகள் உதவாது என்று புரிந்துகொண்டோம். நாங்கள் கொண்டுவருகிற மாற்றங்கள் பெரியவைதான், அவை சரியாக அமையவில்லை என்றால் ஏற்படும் பின்விளைவுகளையும் நாங்கள் அறிந்திருந்தோம்.

இந்த மாற்றங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு இருந்ததா?

காங்கிரஸ் கட்சியின் பழைய தலைவரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அரசின் பங்களிப்பு குறையும் என்பதால் இடதுசாரிகளும் முழுமையாக எதிர்த்தார்கள். 1991, ஜூலை 24ம் தேதி நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தனது பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது நாடாளுமன்றத்தில் பெரிய அமளி ஏற்பட்டது, கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

பலரும் சர்வதேச நிதியம், உலக வங்கிக்கு ஆதரவான பட்ஜெட் இது என்றார்கள். இதுபோன்ற ஒரு திட்டத்தை இரு அமைப்புகளுமே சொல்லிவந்தன என்றாலும், கடந்த காலத்திலிருந்து விடுபட்டு எதிர்காலத்துக்கான ஒரு திட்டமாக நாங்கள் வடிவமைத்த ஒரு மாற்றுத் திட்டம் இது.

பிரச்னை இருந்ததால் எங்களால் பல விஷயங்களை நடைமுறைப்படுத்த முடிந்தது. வேறு ஒரு காலத்தில் இதை ஏற்பார்களா என்பது சந்தேகம்தான், ஆனால் மக்களும் சில முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பிரச்னையின் பிரமாண்டம் சீர்திருத்தங்களுக்கு உதவியது எனலாம்,

மன்மோகன் சிங்குடன் ரங்கராஜன்

பட மூலாதாரம், Getty Images

ரூபாய் மதிப்பை 20% வரை குறைத்ததில் உங்களுக்குப் பங்கு உண்டு. இந்தியாவுக்குள் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளை அனுமதித்ததிலும் உங்களுக்குப் பங்கு உண்டு. அதைப் பற்றி சொல்லுங்களேன்..

வங்கித்துறையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கும் நோக்கம் அதேதான் - நுகர்வோரை மையப்படுத்திய ஒரு செயல்திறன்மிக்க அமைப்பைக் கொண்டுவருவது. வங்கித்துறையில் அரசின் ஆதிக்கம் இருந்ததால் அங்கு குறைவான போட்டியே நிலவியது.

வணிக வங்கிகளை தேசியமயமாக்கியதில் நிச்சயம் ஒரு நன்மை இருந்தது - அந்த நோக்கம் நிறைவேறியது என்று சொல்லலாம். புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு வங்கிகளை எடுத்துச் செல்வதன்மூலம் சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு வங்கி சேவைகளைத் தருவது.

தேசியமயமாக்கலுக்கு முன்னால் இந்திய வங்கிகள் பெரும்பாலும் நகரங்களில் அமைந்திருந்தன என்பதால் இந்த முயற்சி ஒரு வெற்றிதான். ஆனால் அங்கு நிலவும் போட்டி போதவில்லை என்று உணர்ந்தோம், செயல்திறனை அதிகரிக்கும் முடிவுகளை எடுத்தோம்.

பண இருப்பு வீதம், சட்டரீதியான பணப்புழக்க வீதம் ஆகியவை அதிகமாக இருந்தன. அவற்றைக் குறைத்தோம். சில விவேகமான நெறிமுறைகளைக் கொண்டுவந்தோம். மூலதனப் போதுமான வீதம், சொத்துக்களைப் பிரித்தெடுக்கும் முறை ஆகியவற்றைக் கொண்டுவந்தோம். எல்லா வங்கிகளும் அரசுடையவை என்பதால் இவை தேவையில்லை என்ற நிலை இருந்தது. அரசு நிலைக்கும் என்பதால் வங்கியும் நிலைக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் வங்கித்துறைக்கு சில நெறிமுறைகள் தேவை என்று எங்களுக்குத் தோன்றியது. ஆகவே இவற்றை வலியுறுத்தினோம்.

போட்டியை அதிகப்படுத்த இரண்டு விஷயங்களை செய்தோம். முதலில் தனியார் வங்கிகளை உள்ளே வரவிட்டோம். அதற்கு சட்டரீதியான மாற்றம் தேவையிருக்கவில்லை.

ஏனென்றால் ரிசர்வ வங்கியிடமே அதற்கான சட்டரீதியான அதிகாரம் இருந்தது. ஆனால் அது பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படவில்லை.

அதை நான் மீண்டும் உயிர்ப்பித்து, வங்கிகள் உள்ளே வருவதற்கான குறைந்தபட்ச விதிகளை உருவாக்கினேன்.

அடுத்தது பொதுத்துறை வங்கிகளில் ஒரு மாற்றம் கொண்டுவந்தோம். அரசிடமே 100% முதலீடு இருக்கும் என்றாலும், அதை 51%ஆகக் குறைக்கக்கூடிய ஒரு விதியை சேர்த்தோம். வங்கிகளின் மீதான கண்காணிப்பை நெறிப்படுத்துவதற்கான முறைகளும் கொண்டு வரப்பட்டன.

30 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை நீங்கள் திரும்பிப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?

சீர்திருத்தங்கள் ஒரு பெரிய பரப்பைக் கையாண்டிருக்கின்றன. தாராளமயவாதத்திற்குப் பின்னான வளர்ச்சி பொருளாதார செயல்திறனைப் பொறுத்தவரை நன்றாகவே இருக்கிறது.

1991க்கு முன்பு 4.2% இருந்த வளர்ச்சி விகிதம் 6.2%ஆக உயர்ந்தது. 2007-2008ல் இது 9.2% ஆகக்கூட உயர்ந்தது. இது ஒரு பெரிய வளர்ச்சி. 2016-17க்குப் பின் வளர்ச்சி விகிதம் குறைவது குறித்த ஒரு கவலை இருக்கிறது. அது ஏன் நடக்கிறது என்பதை நாம் துல்லியமாக கவனிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

விஷயம் என்னவென்றால் பொதுவான பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. 1991க்கு முன்னாலும் 1991லும் பணத்தைத் திரும்ப செலுத்த முடியாமல் இருந்த இந்தியாவின் நிலைமை முன்னேறியிருக்கிறது. இப்போதைய அன்னிய செலவாணி கையிருப்பு கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர்கள்.

பிரச்னை என்று சொல்லப்போனால் 2008லும் 2013லும் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அதைத் தவிர இந்தப் பாதையில் பெரிய சறுக்கல்கள் ஏற்படவில்லை. இந்த இரு ஆண்டுகளில்கூட பிரச்சனையை சமாளிக்கும் அளவுக்கு நம்மிடம் கையிருப்பு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் வெளியிலிருக்கும் துறைகளை தாராளமயவாதம் வெற்றிகரமாக மேலாண்மை செய்திருக்கிறது என்றே சொல்வேன்.

ரங்கராஜன்

பட மூலாதாரம், Getty Images

வளர்ச்சி விகிதம் குறைவதுதவிர, பாதுகாப்பு வாதம் அதிகரிக்கிறது, கட்டணங்கள் திரும்பப் பெறப்படுகின்றன, அவை கவலையளிக்கின்றனவா?

வளர்ச்சி என்பது பற்றிய என் ஒரு அவதானிப்பை விளக்கிவிட்டு இதற்கு பதில் சொல்கிறேன். சீர்திருத்தங்கள் வருவதால் மட்டுமே வளர்ச்சி வந்துவிடாது.

முதலீட்டுக்கான சூழலை நீங்கள் வளர்க்க வேண்டும். 2016க்குப்பிறகு முதலீட்டு விகிதம் ஐந்து விழுக்காடு குறைந்துவிட்டது. ஜிடிபியில் 39%ஆக இருந்தது 34% ஆக சரிந்துவிட்டது. இது நல்லதல்ல.

நாம் பல தளங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. 1991ல் ஒரு பெரிய மாற்றம் வந்து கொள்கையே மாறியது. இப்போது அது தேவையில்லை. ஒவ்வொரு துறையிலும் எங்கு போட்டி இல்லையோ அங்கு போட்டியை ஏற்படுத்தவேண்டும். அந்த அணுகுமுறை தேவை.

சமீபகாலமாக கட்டணங்கள் அதிகரித்திருக்கின்றன என்கிறீர்கள். அது கவலையளிக்கிறது. இந்த வழியில் பயணிக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

நம்மால் திறமையாகப் போட்டிபோட முடியும் என்று 1991ல் உலகுக்குக் காட்டிவிட்டோம். ஆனால் தாராளமய சந்தையின் பலன்கள் பற்றி நமக்கு வகுப்பெடுக்கும் நாடுகள்கூட கட்டணங்களை அதிகரிக்கின்றன.

உலகில் உலகமயமாக்கல் திரும்பப் பெறப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். மற்ற நாடுகள் சரியான திசையில் சென்றால் இந்தியாவும் அந்தப் பாதையில் பயணிக்கலாம். பெரிய நாடுகள்கூட வணிகத்தை இறுக்கிப் பிடித்திருக்கின்றன. பொதுவாக, தாராளமான, நியாயமான சந்தை கொண்ட ஒரு சூழல் தேவை என்பேன்.

ரங்கராஜன்

பட மூலாதாரம், Getty Images

1991ல் நடந்த மாற்றங்கள் நுகர்வோருக்கும் பொருட்களின் சந்தை, கையிருப்பு போன்ற விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்தன. ஒரு நுகர்வோராக எந்த மாற்றம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

தொலைபேசி சேவை ஒரு சிறந்த உதாரணம். 1991க்கு முன்னால் நீங்கள் ஒரு தொலைபேசி வாங்க விரும்பினால் பதிவு செய்துவிட்டு 3,4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போது மறுநாளே தொலைபேசி வந்து விடுகிறது. 1950களின் பிற்பகுதியில் நான் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றபோது உங்கள் அறையில் தொலைபேசி இணைப்பு தரலாமா என்று சிலர் வந்து கேட்டனர்.

இந்தியாவில் இதற்கு எத்தனை காலம் பிடிக்கும் என்று நான் யோசித்தேன். மதியமே இணைப்பு தரப்படும் என்றார்கள். இந்தியா இப்போது அந்தப் பாதையில் பயணிக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை தாராளமயமாக்கல் உறுதிசெய்திருக்கிறது.

ஒரு விஷயத்தை சொல்லி முடித்துக் கொள்ள விரும்புகிறேன். சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால், அதனால் ஏற்படும் வளர்ச்சி பெரும்பாலானோருக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் சீர்திருத்தத்திற்கு அர்த்தமே இருக்காது.

2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தை கவனியுங்கள். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8-9% ஆக இருந்தது. வறுமையின் விகிதமும் வேகமாகக் குறைந்தது, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், உணவுத்திட்டம் போன்ற பல சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் அதே நேரத்தில் கொண்டு வந்தோம். பல சமூக-பொருளாதாரப் பிரச்னைகளுக்கு வளர்ச்சியே தீர்வு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :