தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படுவது ஏன்? நிறப்பாகுபாடு காட்டுகிறார்களா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அஹமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
நான்காவது தலைமுறையாக தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கைரத் திமா, டர்பன் நகரத்தின் மையத்தில் உள்ள தனது மளிகைக் கடை சமீபத்திய வன்முறையில் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
"கொள்ளையர்கள் எனது கடையை காலி செய்து, வெளியேறுவதற்கு முன்பு உடைத்து நொறுக்கிச் சென்றனர்." என்று அவர் பிபிசி ஆப்ரிக்க சேவையிடம் தெரிவித்தார்.
"இப்படிப் பலர் தங்கள் கடைகளிலிருந்து பொருட்களை இழந்தனர்," என்று வருத்தத்துடன் தெரிவித்தார் அவர்.
சூறையாடப்பட்ட, தீ வைக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் பெரும்பாலானவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்காரர்களுக்குச் சொந்தமானவையே. இந்த வன்முறையின் இலக்கு தாங்கள்தான் என்று அந்தச் சமூகத்தினர் உணர்ந்து கொண்டனர்.
தென் ஆப்ரிக்காவில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் மற்றும் படங்களில் கடைகள், மால்கள், வீடுகள் மற்றும் லாரிகள் கொள்ளையடிக்கப்படுவதையும் தீ வைக்கப்படுவதையும் கண்டோம்.

பட மூலாதாரம், Zubair ahmad
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 25,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால், தற்சமயம், வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் இந்திய வம்சாவளியினரிடையே இன்னும் அச்சம் காணப்படுகிறது.
சிறுபான்மை முன்னணிக் கட்சியைச் சேர்ந்த ஷாமின் தாக்கூர்-ராஜ்பன்சி தென்னாப்ரிக்காவின் குவாஸுலு-நடால் மாகாணத்தின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.
டர்பனில் இருந்து பிபிசி இந்தி சேவையுடன் பேசிய அவர், "இப்போது அனைத்துச் சமூகத்தினரும் அச்சத்தில் தான் வாழ்கிறார்கள். வன்முறை உச்சத்தில் இருந்தபோது, இந்திய சமூகத்தினரிடையே மிகுந்த அச்சம் நிலவியது. அது இயல்பானதே." என்று கூறினார்.
இந்த வன்முறையின் மையம் குவாஸுலு-நடாலில் உள்ள கடலோர நகரமான டர்பன் ஆகும். 1893 இல் மகாத்மா காந்தி இந்தியாவில் இருந்து வந்து இருந்த நகரம் இது. காந்தி பின்னர் தனது ஆசிரமத்தை அருகிலுள்ள பீனிக்ஸ் நகரில் அமைத்தார், இது சமீபத்திய வன்முறையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியினர் வெளிநாட்டில், ஒரு நகரத்தில் வசிக்கிறார்கள் என்றால் அது இந்த நகரத்தில் தான்.
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா கைது செய்யப்பட்ட பின்னர், தென்னாப்ரிக்காவின் பல நகரங்களில் வெடித்த வன்முறையில் 117 பேரும் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், SHAMEEN THAKUR RAJBANSI
இந்திய வம்சாவளியினரின் இழப்பு
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டின் மக்கள் தொகையில் இரண்டரை சதவீதம் மட்டுமே உள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ள செல்வந்தர்கள்.
அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் முழுமையாக அறியப்படவில்லை, ஆனால் இந்த கடை உடைப்புகளும் எரிப்புகளும் கொள்ளைகளும் அந்தச் சமூகத்தினரின் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே உடைத்துவிட்டது என்பது உண்மை.
டர்பனில் கல்வி மற்றும் அரசியல் ஆய்வாளர் லுப்னா நாத்வி பிபிசி இந்தியிடம் பேசுகையில், "நிறவெறிக் காலத்தில், சில இந்தியக் குடியேற்ற நகரங்கள் அமைக்கப்பட்டன. பீனிக்ஸ் போன்ற சில இந்தியக் குடியேற்ற நகரங்களில், ஏற்பட்ட சேதம் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சேதம் தான், காரணம், அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். ஆனால் பெரிய தொழில்துறை மற்றும் பொருளாதார பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் அனைத்துச் சமூகத்தினருக்கும் ஏற்பட்டுள்ளன." என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், ZUBAIR AHMAD
பஞ்சீயன் சகோதரர்கள் என்ற இந்திய நிறுவனத்திற்கு ஐந்து கிளைகள் உள்ளன, அவற்றில் நான்கு கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. அதன் உரிமையாளர் தனது கடைகளில் ஒன்று கொள்ளையடிக்கப்படுவதையும் உடைத்து நொறுக்கப்படுவதையும் நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷாமின் தாக்கூர்-ராஜ்பன்சி கூறுகையில், "வணிக நிறுவனங்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளன. கிழக்கில் உள்ள இந்தியர்கள் வாழும் பகுதியில் வணிக நிறுவனங்களும் வீடுகளும் தாக்கப்பட்டன." என்று தெரிவித்தார்.
லுப்னா நத்வி கூறுகையில், உணவு விநியோக லாரிகள் தீப்பிடித்ததால் சில நாட்கள் வீடுகளில் கூட உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் ரொட்டி மற்றும் பால் போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.
இந்தியர்கள் இலக்காக்கப்பட்டது ஏன்?
ஆரம்ப நாட்களில் அனைத்து சமூகங்களும் வன்முறையின் பிடியில் இருந்தன என்று கூறப்பட்டாலும், அடுத்தடுத்த தாக்குதல்களில், இந்தியர்களின் சொத்துக்கள் குறிவைக்கப்பட்டன.
"ஆரம்பத்தில் இந்திய சமூகத்தின் மீது நேரடித் தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் வன்முறை குடியிருப்புப் பகுதிகளில் பரவத் தொடங்கியது, இதனால் இனரீதியான பதற்றம் ஏற்பட்டது." என்று கூறுகிறார் ஷாமின் தாக்கூர்-ராஜ்பன்சி.
இந்திய சமூகம் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று லுப்னா நத்வி கருதுகிறார். "இந்தத் தாக்குதல் இங்குள்ள ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் (ஏஎன்சி) அரசாங்கத்திற்கு எதிரானது, இது ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு எதிரான வன்முறை." என்கிறார் அவர்.
தென்னாப்பிரிக்கா ஒரு வானவில் தேசம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், அங்கு பல சமூக, இனங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நெல்சன் மண்டேலா அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், ZUBAIR AHMAD
1994 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா முதன்முறையாக ஒரு ஜனநாயக நாடாக மாறியது, அதன் பின்னர் அனைத்து இன, சமூகத்தினரும் ஒன்றாக வாழ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அதிக வெற்றிகளும் கிட்டியுள்ளன. ஆனால் இன்னும் தேசிய ஒருங்கிணைப்பின் பணி நிறைவடையவில்லை.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையில் 2.5 சதவீதம் மட்டுமே. வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது சதவீதம். இந்த இனத்தின் தலைவர்கள் பல தசாப்தங்களாக தென்னாப்பிரிக்காவை ஆண்டனர். உள்ளூர் கறுப்பின மக்கள் 80 சதவீதம் பேர் இந்த நாட்டில் வாழ்கின்றனர். ஆனால் தென்னாப்பிரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு எதிராக இனரீதியாகப் பாகுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தியர்களுக்கு எதிரான கடும் குற்றச்சாட்டு
கறுப்பினத்தவருடனான இந்திய சமூகத்தின் உறவுகள் பொதுவாக நன்றாக இருந்தாலும், உள்நாட்டில், இரு சமூகங்களுக்கிடையில் சமூக பதற்றங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றன. இது ஒரு முறை 1949 வன்முறையிலும், இரண்டாவது முறையாக 1985 வன்முறையிலும் வெளிப்பட்டது. ஆனால் அப்போது தென்னாப்பிரிக்கா நிறவெறி வெள்ளை இனத் தலைவர்களின் அரசாங்கங்களின் கீழ் இருந்தது.

பட மூலாதாரம், Empics
1994 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா நெல்சன் மண்டேலா தலைமையில் ஒரு ஜனநாயக நாடாக மாறியது, அவர் அனைத்து சமூகங்களுடனும் நல்லிணக்கத்தை வளர்ப்பதை வலியுறுத்தினார். ஆனால் இன்று நடக்கும் வன்முறை கடந்த 25 ஆண்டுகளில் நடந்ததில்லை.
கறுப்பின மக்களிடையே இந்தியர்கள் இனவாதிகள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஜோஹன்னஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ஸ்வெட்டோ நகரில் உள்ள ஒரு பத்திரிகையாளர் சிஸ்வே பிகோ, `இனப் பதற்றங்கள் துடித்துக்கொண்டிருக்கும் டைம் பாம்` போன்றவை என்று கூறுகிறார்.
ஒரு பக்கம் கருப்பினத்தவருடன் மறுபுறம் வெள்ளையர்களுடன்
"அவர்கள் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்) அரசியல் நன்மை தேவைப்படும்போது தங்களைக் கறுப்பர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். வெள்ளை இனத்துடன் சேர வேண்டி ய நேரத்தில் எங்களுக்கு எதிராகத் திரும்புகிறார்கள்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் பிகோ.
'தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள்'
பிகோ, தனக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல நண்பர்கள் உள்ளனர் என்றும் தான் இந்திய சமூகத்திற்கு எதிரானவர் இல்லை என்றும் வலியுறுத்துகிறார். ஆனால் "அவர்கள் தங்களை விட சற்றே உயர்ந்தவர்கள் என்றும் வெள்ளையர்களுக்குச் சமமானவர்கள் என்றும் கருதுகிறார்கள்" என்பது அவர் கருத்து.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் இந்த நடத்தை குறித்து பிகோ ஆச்சரியப்படுவதில்லை, "சாதி அமைப்பு காரணமாக அவர்கள் ஒருவருக்கொருவர் திரை மறைவில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்தால் அது இன்னும் மோசமாக இருக்கும். அதனால் அவர்களின் இந்த அணுகுமுறையால் நாங்கள் ஆச்சரியப்படுவதில்லை." என்கிறார்.
பாகுபாடு பார்ப்பவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பதாக ஷாமின் தாக்கூர்-ராஜ்பன்சி கூறுகிறார். "இது இந்தியர்களைப் பற்றிக் கறுப்பினத்தவர்களிடையே நிலவி வரும் கருத்து என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஆனால் கறுப்பின மக்கள் இனவெறி கொண்டவர்கள் என்ற நம்பிக்கையும் இந்திய சமூகத்தினரிடையே உள்ளது. ஆனால் இனவெறி எல்லா சமூகத்தினரிடையேயும் உள்ளது."
அவர் மேலும் கூறுகையில், "வரலாற்று ரீதியாக இங்கு சமூகங்களுக்கிடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது, இது 1949 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் பிரதிபலித்தது, ஆனால் இந்தச் சம்பவங்கள் அடக்குமுறை ஆட்சிகளின் கீழ் நிகழ்ந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் இப்போது ஒரு ஜனநாயகத்தில் வாழ்கிறோம். ஜனநாயகத்திற்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளில் இந்திய சமூகம் மற்றும் ஆப்பிரிக்க சமூகம் ஒன்றாக வாழ்கிறது, அவர்கள் நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்கிறார்கள். " என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Gallo Images/Getty
இந்திய சமூகத்தில் ஒரு சிலரே இனவெறி கொண்டவர்கள் என்று லுப்னா நத்வி கூறுகிறார். "இந்திய சமூகத்தில் சிறுபான்மை மக்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று கருதி மற்றவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கிறார்கள், ஆனால் இங்கு வாழும் பெரும்பாலான இந்தியர்கள் மற்ற சமூகங்களுடன் ஒன்றாக வாழ்கிறார்கள். "
நிறவெறி அரசாங்கத்தை அவர் குற்றம் சாட்டுகிறார். "இனவெறி காரணமாக, வெவ்வேறு சமூகங்கள் பிரிக்கப்பட்டன. இனவெறி அரசாங்கம் வெவ்வேறு சமூகங்களிடையே பதற்றத்தை உருவாக்க முயன்றது." என்கிறார் அவர்.
சமீபத்திய வன்முறையின் போது, பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன, அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாகக் காட்டப்பட்டது, பெரும்பாலான கொள்ளையர்கள் கறுப்பர்கள். தென்னாப்பிரிக்க செய்தித்தாள்களிலும் இந்திய மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறித்த தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர்களின் அறிக்கைகள் இதுவரை வெளியாகவில்லை. ஜூலியஸ் செலோ மாலேமா ஒரு குறிப்பிடத்தக்க இளைஞர் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இவர், 2013 ல் பொருளாதார சுதந்திரப் போராளிகள் என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.
அவர் தனது ஒரு ட்வீட்டில், "பீனிக்ஸ் நகரில் இந்தியர்கள் எங்கள் மக்களை அடித்துக் கொன்ற ஒரு சம்பவம் பற்றி மட்டுமே நான் பேச விரும்புகிறேன். காவல்துறையினர் அந்த நபர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், ஏனென்றால் அவர்களைக் கண்டுபிடிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எவ்வளவு விரைவில் அவர்கள் அதைச் செய்கிறார்களோ அவ்வளவு நல்லது" என்று குறிப்பிட்டிருந்தார்.
அபேதனேகோ என்ற இளைஞர் தனது ட்வீட்டில், "துப்பாக்கியால் சுட்ட அந்த இந்தியர்களையும் வெள்ளை மக்களையும் வெறுக்க வேண்டாம், மாறாக கறுப்பின மக்களிடம் ஏன் பெரிய துப்பாக்கிகள் இல்லை என்று நாம் கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஒருமைப்பாடு சிதையும் அபாயம்
பல ஆய்வாளர்கள் தென்னாப்பிரிக்காவின் முக்கிய பிரச்னைகள் ஊழல், வேலையின்மை மற்றும் பொருளாதார உயர்வு தாழ்வு தான் என்று கருதுகின்றனர். தென்னாப்ரிக்கா ஒரு ஜனநாயகமாக மாறியதிலிருந்து, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) அதிகாரத்தில் உள்ளது, அதன் பொருளாதாரக் கொள்கைகள் தோல்வியுற்றன, கட்சி பிரிவினைவாதத்திற்குப் பலியாகிவிட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
டெய்லி மேவரிக்கின் இணை ஆசிரியர் ஃபெரியல் ஹஃபாஜி ஒரு கட்டுரையில், வன்முறை ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, இது ஜனாதிபதி ரமபோசாவின் அரசாங்கத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரிவினைவாத ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பரவலாக இரண்டு முக்கிய குழுக்களாக பிரிந்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒன்று ஜனாதிபதி ரமபோசா தலைமையிலானது. ஜேக்கப் ஜுமா நிர்வாகத்தின் போது ஒரு தசாப்த காலமாக நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தொடர்ந்து, அரசாங்க நிறுவனங்களையும் பொறுப்பாளர்களையும் மெதுவாக அவர் மீண்டும் கட்டியெழுப்புவதாக அவரது ஆதரவாளார்கள் கூறுகிறார்கள். மற்றொரு பிரிவு முன்னாள் ஜனாதிபதி ஜுமாவுக்கு அனுதாபமும் கடும் விசுவாசமும் கொண்டது.

பட மூலாதாரம், EPA
ஊழலும் இந்தியாவின் குப்தா சகோதரர்களின் பங்கும்
முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா ஊழல் குற்றத்திற்காக 15 மாத சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று வியாபாரம் செய்த குப்தா சகோதரர்களுடன் அவர் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
அவருக்கு எதிராக நடந்து வரும் விசாரணையில், இந்தியாவின் மூன்று குப்தா சகோதரர்களுக்கு அவர்களின் வியாபாரத்தில் அவர் பயனளித்தாரா என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த சகோதரர்களின் பெயர்கள் அதுல் குப்தா, அஜய் குப்தா மற்றும் ராஜேஷ் குப்தா. ஜுமாவுக்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், இந்த மூன்று சகோதரர்களையும் அவர் அரசு வளங்களை கொள்ளையடிக்கவும் அரசாங்க கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஜுமா மற்றும் குப்தா சகோதரர்கள் மறுத்துள்ளனர்.
ஜேக்கப் ஜுமா 2018 ல் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது, அதன் பின்னர் அவருக்கு எதிராக விசாரணை தொடங்கியது. இதற்கிடையில் குப்தா சகோதரர்கள் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறினர். நாட்டின் நீதிமன்றத்தில் நடந்து வரும் பல வழக்குகளில் அவர்களது பெயர்கள் உள்ளன, தென்னாப்பிரிக்க காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.
குப்தா சகோதரர்களுக்கு எதிரான பொது மக்களின் கோபம் இந்தியர்கள் மீது திரும்பியுள்ளது என்று கருதப்படுகிறது. குப்தா சகோதரர்கள் 1990 களில் உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் நகரத்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
பிற செய்திகள்:
- ராஜ் குந்த்ராவின் ஹாட்ஷாட்ஸ் செயலி: "என் கணவர் தயாரித்தது ஆபாச படம் அல்ல" - ஷில்பா ஷெட்டி
- தோற்றாலும் துவளாத 12 வயது 'ஒலிம்பிக் நம்பிக்கை' ஹெண்ட் ஸாஸா
- இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
- யார் இந்த மீராபாய் சானு? மன இறுக்கத்தில் விழுந்தது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












