டோக்யோ ஒலிம்பிக் ஹெண்ட் ஸாஸா: தோற்றாலும் நம்பிக்கை விதைத்த ஒலிம்பிக் நட்சத்திரம்

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டே நடந்து முடிந்திருக்க வேண்டிய டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள், நேற்று தான் முறைப்படி தொடங்கப்பட்டன. இந்த ஒலிம்பிக் போட்டியை பிரச்சனையின்றி, கொரோனா பரவலின்றி நடத்தி முடிப்பதே மிகப் பெரிய சாதனை என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்தைப் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.
இதெல்லாம் போக, இந்த ஒலிம்பிக்கிலும் சில புதுமைகள், சாதனைகள் அரங்கேறத் தொடங்கி விட்டன.
நேற்று (ஜூலை 23) கொரிய குடியரசை சேர்ந்த ஆன் சான் என்கிற வில்வித்தை வீராங்கனை, தகுதிச் சுற்றிலேயே 680 புள்ளிகளைப் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
இன்று நடைபெற்ற 49 கிலோ மகளிர் பளுதூக்கும் போட்டியில் சீனாவின் ஹோ சிஹுய் (HOU Zhihui) 94 கிலோ எடையை ஸ்னாச் முறையில் தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்திருக்கிறார். அதே போல 116 கிலோவை க்ளீன் அண்ட் ஜர்க் முறையில் தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்திருக்கிறார்.
இவர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி சாதனை படைத்திருக்கிறார்கள் என்றால், ஒரு இளம் பெண் மட்டும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றே புதிய சாதனை படைத்தார்.
1968ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் மிக இளம் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார், எப்போதும் போர் மேகம் சூழ்ந்திருக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனையான ஹெண்ட் ஸாஸா.
சிரிய நாட்டில் எல்லா வயது பிரிவினர்களிலும் டேபிள் டென்னிஸ் சாம்பியனாகி, மேற்கு ஆசிய அளவிலான போட்டிகளில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று டோக்யோ வந்த ஹெண்ட் ஸாஸா, முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார்.
ஆஸ்ட்ரியாவின் லியூ ஜியாவிடம் 4 - 0 என்கிற செட் கணக்கில் தோல்வியுற்றார்.
தான் போர்களமாக இருக்கும் சிரிய நாட்டின் பல்வேறு சூழல்களைக் கடந்து ஒலிம்பிக் வந்திருப்பதாகவும், கனவுக்காக போராடுமாறும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"நீங்கள் எப்பேர்பட்ட சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும் கடினமாக உழைத்தால், உங்கள் இலக்கை அடையலாம்" என கூறி ஒலிம்பிக் கனவோடு இருப்பவர்களுக்கு உற்சாகமளித்து இருகிறார்.
நீண்ட நேர விமான பயணம், அனுபவம் வாய்ந்த வீரரை எதிர்கொள்வது போன்ற சில காரணங்களால் தான் ஆஸ்ட்ரியாவின் லியூ ஜியாவிடம் இன்று (ஜூலை 24) தோற்றதாகக் கூறியுள்ளார்.
"என் முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே நல்ல அனுபவம் வாய்ந்த வீரரை எதிர்கொள்வது, அதற்கு மனதளவில் என்னை தயார்படுத்திக் கொள்ள கடினமாக இருந்தது" என தன் தோல்விக்குப் பிறகு கூறினார்.
ஆனால் மனதளவிலான தன் தயாரிப்பு தனக்கு திருப்தியளிப்பதாகக் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் சிரிய நாட்டுக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் பெற்றார் ஹெண்ட் ஸாஸா.
"அடுத்த முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு வரும் போது, இன்னும் கடினமாக உழைத்து அடுத்தடுத்த கட்ட போட்டிகளுக்கு முன்னேறுவேன். நான் ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறேன். முதல் போட்டியோடு நான் திரும்ப விரும்பவில்லை." என எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் இந்த இளம் வீராங்கனை.
Please wait..
பிற செய்திகள்:
- இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
- செவ்வாயில் துரப்பணம் போடத் தயாராகும் நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி
- கோவேக்சின் சர்ச்சை: பிரேசில் நிறுவனங்களோடு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட பாரத் பயோடெக்
- யார் இந்த மீராபாய் சானு? மன இறுக்கத்தில் விழுந்தது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
- நரேந்திர மோதிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முகமாக முன்னிறுத்தப்படுவாரா மம்தா பானர்ஜி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













