மீராபாய் சானு: காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்த பெண்ணின் கதை

பட மூலாதாரம், Dean Mouhtaropoulos/Getty Images
- எழுதியவர், வந்தனா தாந்த்
- பதவி, தொலைக்காட்சி ஆசிரியர் - பிபிசி இந்திய மொழிகள்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி பளு தூக்குதல் பிரிவில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு 109 கிலோ எடையைத் தூக்கி தாய்நாட்டுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
கடந்த ஆண்டு டோக்யோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் இவர் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடக்கி வைத்தார்.
49 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் கிளீன் அன் ஜெர்க் பிரிவில் அவர் முதல் முயற்சியில் 110 கிலோ தூக்க முயன்று அதை சரியாகச் செய்தார்.
இரண்டாவது முயற்சியில் 115 கிலோ தூக்க முயன்றார். அதில் வெற்றி பெற்றதோடு அதன் மூலம் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.
மூன்றாவது முயற்சியில் அவர் 117 கிலோ தூக்க முயன்றார். ஆனால், அதில் அவர் வெற்றி பெறவில்லை.
ஸ்னாட்ச் பிரிவில், மீராபாய் 84 மற்றும் 87 கிலோ எடையை தூக்கினார். ஆனால் மூன்றாவது முறையாக 89 கிலோவை தூக்க முடியவில்லை.
மொத்தம் அவர் தூக்கிய எடை 201 கிலோ.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இது அவருக்கு ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத் தந்தது. இந்தியாவுக்கும் ஒலிம்பிக்கில் நல்ல தொடக்கத்தைத் தந்தது.
பதக்கப்பட்டியலில் இந்தியா
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு பதக்கம் வெல்வதே குதிரைக் கொம்பாக இருந்த காலம் உண்டு. போட்டி இறுதியை எட்டும் வரை பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயரைப் பார்ப்பதே அரிதாக இருந்த காலமும் உண்டு. ஆனால், இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வழங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே இந்தியா தன் முதல் பதக்கத்தை பெற்றது. இது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

பட மூலாதாரம், VINCENZO PINTO/AFP/Getty Images
மீராபாயின் மன உறுதி மிக்க பயணம்
2016 ரியோ ஒலிம்பிக்கில் மோசமான செயல்திறனால் படுதோல்வி அடைந்தது முதல் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதுவரை, சானுவின் பயணம் அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடியது.
கடந்த முறை அவர் ரியோ ஒலிம்பிக்கிற்குச் சென்றபோது, நிலமை வேறுமாதிரியாக இருந்தது.
ஒலிம்பிக் போன்ற ஒரு போட்டியில் நீங்கள் மற்ற வீரர்களைவிட பின்தங்கி இருந்தால் அது வேறு விஷயம். ஆனால் உங்கள் விளையாட்டை நீங்கள் முடிக்க முடியாவிட்டால் அது எந்த வீரரின் மன உறுதியையும் சிதைக்கக்கூடும்.
2016 ஒலிம்பிக்கில் மீராபாய் சானுவுக்கு அப்படித்தான் நடந்தது. ஒலிம்பிக்கில் தனது பிரிவில் 'முடிக்கவில்லை' என தனது பெயருக்கு முன்பாக எழுதப்பட்ட இரண்டாவது வீரர் மீராதான். நாள்தோறும் பயிற்சியின்போது எளிதில் தூக்க முடிந்த எடையை, ஒலிம்பிக் போட்டி நாளில் அவரால் தூக்க முடியவில்லை.
கைகள் உறைந்துபோனதால் அவரால் அசைக்கக்கூடமுடியவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவில் இரவு என்பதால், மிகக் குறைந்த இந்தியர்கள் மட்டுமே அந்தக் காட்சியைப் பார்த்தார்கள்.
இந்தியாவின் விளையாட்டு ஆர்வலர்கள் காலையில் செய்தியைப் படித்தபோதுதான் இந்த தகவல் தெரிந்தது. ஒரே இரவில் இந்திய ரசிகர்களின் பார்வையில் மீராபாயின் மதிப்பு சரிந்தது.
மனச்சோர்வுக்கு சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images
2016 க்குப் பிறகு அவர் மனச்சோர்வுக்கு ஆளானார். ஒவ்வொரு வாரமும் மனநல மருத்துவருடன் ஆலோசனை அமர்வுகளை எடுக்க வேண்டியிருந்தது.
இந்த தோல்விக்குப் பிறகு, இந்த விளையாட்டை விட்டுவிடுவது குறித்தும் மீரா சிந்திக்கத்தொடங்கினார். பின்னர் அந்த சிந்தனையை கைவிட்டு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் வலுவாக மீண்டும் நுழைந்தார்.
2018 இல் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 48 கிலோ பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானு இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
எடையை பராமரிக்க சாப்பிடவில்லை
4 அடி 11 அங்குல மீராபாய் சானுவைப் பார்த்தால், இவரால் மற்றவர்களை தோற்கடிக்கமுடியுமா என்ற வியப்பு தோன்றும்.
2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தனது எடையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு தூக்கியதன் மூலம் தங்கம் வென்றார், அதாவது 194 கிலோ எடையை அவர் தூக்கினார்.
கடந்த 22 ஆண்டுகளில் அவ்வாறு செய்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை மீராபாய் பெற்றார்.
மீரா தனது 48 கிலோ எடையை பராமரிக்க அன்று உணவுகூட சாப்பிடவில்லை. ஒலிம்பிக் பயிற்சியில் ஈடுபட்ட மீரா, கடந்த ஆண்டு தனது சகோதரியின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை.
இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மீராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. 2016 முதல் அவர் அனுபவிக்கும் வலிக்கு அது ஒரு சாட்சியாக இருந்தது.
மூங்கில் கொண்டு பளு தூக்குதல் பயிற்சி
ஆகஸ்ட் 8, 1994 இல் மணிப்பூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மீராபாய் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் திறமையானவர். சிறப்பு வசதிகள் இல்லாத அவரது கிராமம் தலைநகர் இம்பாலிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அந்த நாட்களில், மணிப்பூரைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் குஞ்சுராணி தேவி நட்சத்திரமாக இருந்து ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றார்.
அதே காட்சி சிறிய மீராவின் மனதில் குடியேறியது மற்றும் ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான மீராபாய் ஒரு பளு தூக்கும் வீரராக மாற முடிவு செய்தார்.
2007 ஆம் ஆண்டில் அவர் பயிற்சி செய்யத் தொடங்கியபோது, முதலில் அவரிடம் இரும்பு பார் இல்லை, எனவே அவர் மூங்கில் கொண்டு பயிற்சி செய்தார்.

பட மூலாதாரம், VINCENZO PINTO/AFP via Getty Images
கிராமத்தில் பயிற்சி மையம் இல்லையென்பதால், அவர் பயிற்சிக்காக 50-60 கி.மீ தூரம் செல்வார். உணவில் தினமும் பால் மற்றும் கோழி தேவைப்பட்டது, ஆனால் சாதாரண குடும்பத்தின் பிறந்த மீராவுக்கு அது சாத்தியமில்லை.
11 வயதில் அவர் 15 வயதுக்குட்பட்ட சாம்பியனாகவும், 17 வயதில் ஜூனியர் சாம்பியனாகவும் ஆனார். குஞ்சுராணியைப் பார்த்த மீராவுக்கு சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் 192 கிலோ தூக்கி குஞ்சுராணியின் தேசிய சாதனையை முறியடித்தார்.
உலக சாம்பியன்ஷிப்பைத் தவிர, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளிலும் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பளுதூக்குதல் தவிர, மீராவுக்கு நடனமாடுவது பிடிக்கும். பிபிசிக்கு அளித்த பேட்டியில், "நான் சில நேரங்களில் பயிற்சிக்குப்பிறகு என் அறையை மூடிவிட்டு நடனமாடுவேன். எனக்கு ஹிந்தி நடிகர் சல்மான் கான் மிகவும் பிடிக்கும்," என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













