ஒலிம்பிக்கில் இந்தியா: மீராபாய் சானு முதல் நீரஜ் சோப்ரா வரை - இந்தியாவின் எதிர்பார்ப்புகளும் எதார்த்தங்களும்

பட மூலாதாரம், Getty Images
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், இன்று (ஆகஸ்ட் 8, ஞாயிற்றுக்கிழமை) இனிதே நிறைவடைகிறது.
ஒரு சுவாரஸ்ய கதை கொண்ட த்ரில்லர் சினிமா போலவே பல்வேறு திருப்பங்களோடும், இன்ப அதிர்ச்சிகளோடும், சில ஏமாற்றங்களோடும், நிறைய நம்பிக்கைகளோடும் ஒலிம்பிக் நிறைவடைந்திருக்கிறது.
53 பெண்கள் 68 ஆண்கள் என 121 பேர் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது இந்தியா.
ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி, ஒலிம்பிக் போட்டி துவக்கத்துக்கு முன், இந்தியாவின் பல வீரர் வீராங்கனைகளிடம் ரசிகர்களுக்கும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. அவைகளை வீரர்கள் பூர்த்தி செய்தார்களா? எதிர்பாராமல் ஏதாவது நடந்த சம்பவங்கள் இருக்கின்றனவா? வாருங்கள் பார்ப்போம்.
வில்வித்தை

பட மூலாதாரம், Getty Images
வில்வித்தையில் தீபிகா குமாரி, அதானு தாஸ் ஆகியோர் மீது இந்தியாவுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. தீபிகா குமாரி உலகின் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர். முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவஸ்தர் என்கிற முறையில் அவர் மீது அதீத நம்பிக்கை இருந்தது.
இருப்பினும் அவரால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஒலிம்பிக் தொடக்கத்துக்கு முன்பே தகுதிப் போட்டிகளில் 680 புள்ளிகளைப் பெற்று ஒலிம்பிக் சாதனை படைத்த கொரிய வீராங்கனை ஆன் சானிடம் தான், பெண்கள் தனிநபர் காலிறுதியில் தோற்றார் தீபிகா குமாரி.
ஆனால் அவருக்கோ, அவரது கணவர் அதானு தாஸுக்கோ பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். இருப்பினும் இந்த ஒலிம்பிக் அனுபவம் இந்தியா போன்ற இளைஞர்கள் நிரம்பி இருக்கும் தேசத்துக்கு மிகவும் அவசியமாகிறது.
பேட்மின்டன் - எதிர்பார்த்ததோ தங்கம் - எதார்த்தமோ வெண்கலம்

பட மூலாதாரம், LINTAO ZHANG/GETTY IMAGES
கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை பி வி சிந்து இந்த முறை எப்படியும் தன் பதக்கத்தை தங்கமாக்கிவிடுவார் என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்தது.
ஆனால் அரை இறுதியில் உலகின் டாப் வீராங்கனையோடு மோதி தோற்றார்.
பிறகு வெண்கலத்துக்கு சீன வீராங்கனையோடு மோதி வெண்கலம் பெற்றார் சிந்து.
பெரும்பாலும் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்கும் இந்திய சமூகம், சிந்துவை இப்போதும் தங்கள் வீட்டில் ஒருவராகக் கருதி பாராட்டிக் கொண்டிருக்கிறது.
பாக்ஸிங் - தேசம் வருந்திய மேரி கோமின் தோல்வி

பட மூலாதாரம், RAMSEY CARDY
உடல் வலிமையை மிகவும் பேணிப் பாதுகாக்க வேண்டிய, அதிக உடல் உழைப்பைக் கோரக் கூடிய பாக்ஸிங் விளையாட்டில் தன் 38ஆவது வயதிலும் ஒலிம்பிக் களம் கண்ட, மேரி கோமை முதலில் வாழ்த்திவிடுவோம்.
மேரி கோம் களம் புகுந்தால் தங்கம் நமக்குத் தான் என கண்மூடித்தனமாக அவர் திறமையை நம்பியது இந்தியா.
ஆறுமுறை உலகச் சாம்பியனான இந்தியாவின் மேரி கோம் ஒலிம்பிக் போட்டிகளில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறியது விவாதத்துக்கு உள்ளானது.
கடைசி நேரத்தில் ஆடையை மாற்றச் சொன்னது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியதும், நடுவர்களின் கணிப்பு சரியாக இல்லை என்று அவர் கூறியதும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன.
ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் மொத்தமுள்ள மூன்று சுற்றுகளில் இரண்டு சுற்றுகளை மேரி கோம் வென்றார். இருப்பினும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அவருடன் மோதிய கொலம்பியாவின் வேலன்சியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அதிகம் எதிர்பார்க்கப்படாத லவ்லினா போர்கோஹைன் பெண்கள் 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்று எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.
இன்று லவ்லினாவால், அவரது கிராமத்துக்கு சாலை வசதி கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
பவானி தேவி

பட மூலாதாரம், Getty Images
ஃபென்சிங் விளையாட்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்டே ஒரே வீரர் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி மட்டுமே. பவானி தேவி தனது முதலாவது போட்டியில் வென்றாலும் இரண்டாவது போட்டியில் அவர் பிரான்ஸ் நாட்டின் மனோன் ப்ருனட் உடன் மோதி தோல்வியுற்றார். அந்த பிரான்ஸ் நாட்டு வீராங்கனை தான் பவானி தேவியின் தனிநபர் சேப்ரே பிரிவில் வெண்கலம் வென்ற வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
கோல்ஃப்
இப்படி ஒரு விளையாட்டு இந்தியாவில் விளையாடப் படுகிறதா? சரி அப்படியே பொழுது போக்குக்கு விளையாடினாலும், ஒலிம்பிக்கில் எல்லாம் இந்த விளையாட்டு இருக்கிறதா? என கோல்ஃப் விளையாட்டை நோக்கி இந்தியர்களை ஈர்த்ததில் வீராங்கனை அதிதி அசோக்குக்கு மாபெரும் பங்கு உண்டு.
மயிரிழையில் வெண்கலம் பறிபோனது வருத்தம் தான் என்றாலும், ஒரே இரவில் ஒரு விளையாட்டை இந்தியாவுக்கே பகிரங்கப்படுத்தியதற்கு அதிதிக்கு நிச்சயம் ஒரு தங்கப் பதக்கம் கொடுக்கலாம்.
ஹாக்கி - நாடி நரம்புகளை துடிக்க வைத்த தாறுமாறான ஆட்டம்

பட மூலாதாரம், ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES
பெண்கள் ஹாக்கி அணி பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கூட பலரும் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவை வென்று முன்னேறிய விதம் உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தது.
பெண்கள் ஹாக்கி அணி பதக்கங்களை வெல்லவில்லை, இதயங்களையும், அடுத்த தலைமுறை ஹாக்கி வீராங்கனைகளையும் வென்று அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதிபட கூறலாம்.
ஆண்கள் ஹாக்கி - ஹிட்லரையே மிரள வைத்த ஹாக்கி ஜாலங்களுக்கு சொந்தக்காரர்கள் இந்தியா. என்ன... ஒரு நான்கு தசாப்தங்களாக இந்தியா தன் இடத்தை மற்ற அணிகளிடம் பறிகொடுத்துவிட்டது.
இந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று மீண்டும் தன் மீசையை முறுக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.
துப்பாக்கி சுடுதல்

பட மூலாதாரம், Getty Images
தனிநபர் விளையாட்டில் இந்தியா சார்பாக அதிக வீரர்கள் பங்கெடுத்த விளையாட்டு துப்பாக்கி சுடுதல் தான். மனு பாக்கர், செளரவ் செளத்ரி, அபூர்வி சந்தேலா, யஷஸ்வினி சிங் தேஸ்வால், ரஹி சர்னொபட், ஐஸ்வர்ய பிரதாப் சிங் தோமர் என பல நட்சத்திர வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கெடுத்ததால் ஒரு சில பதக்கங்களாவது நிச்சயம் வசமாகும் என இந்தியா எதிர்பார்த்தது.
ஏகப்பட்ட உலக சாம்பியன்கள் இருந்தும், துரதிர்ஷ்டவசமாக ஒரு ஒலிம்பிக் பதக்கம் கூட இந்த விளையாட்டில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கவில்லை என்பது பெரும் சோகம்.
பளுதூக்குதல்

பட மூலாதாரம், Chris Graythen/Getty Images
கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு, இந்தியாவுக்கு மீண்டும் பளுதூக்குதலில் இருந்து பதக்கம் பெற்றுக் கொடுத்தவரும் ஒரு பெண் தான். இப்படி ஒரு விளையாட்டில் மீரா பாய் சானு கலந்து கொள்கிறார் என்று கூட பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒலிம்பிக் தொடங்கிய முதல் நாளே வெள்ளி வென்று இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சியோடு நம்பிக்கை கொடுத்ததில் மீரா பாய் சானுவுக்கு முக்கிய பங்கு உண்டு.
மல்யுத்தம்

பட மூலாதாரம், Getty Images
ஆமிர் கானின் 'தங்கல்' படத்தின் மூலம், தமிழகம் போன்ற மல்யுத்தம் ஆடாத மாநிலங்களில் கூட, மல்யுத்தத்தை ஒரு விளையாட்டாக ரசிக்கத் தொடங்கினர். 2008 & 2012 ஒலிம்பிக்கில் சுஷீல் குமார் வென்ற இரு பதக்கங்கள், 2012-ல் யோகேஷ்வர் தத் வென்ற பதக்கம், 2016-ல் சாக்ஷி மாலிக் வென்ற பதக்கத்தோடு, இந்த ஒலிம்பிக்கில் ரவிகுமார் தஹியாவின் வெள்ளி மற்றும் பஜ்ரங் புனியாவின் வெண்கலம் என எதிர்பாரா பதக்கங்களால் இந்திய மல்யுத்தம் கலைகட்டியுள்ளது.
வினேஷ் போகத், தீபக் புனியா போன்ற வீரர்களிடம் இருந்து பதக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் கிடைக்கவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
கனவு தாகத்தைத் தணித்த நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம், BEN STANSALL/AFP VIA GETTY IMAGES
இந்தியா கடந்த 100 ஆண்டுகளாக தடகளத்தில் ஒரு பதக்கத்தைக் கூட வெல்லவில்லை. அந்த கனவு தாகத்தை தன் நிராகரிக்க முடியாத வெற்றி மூலம் தணித்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.
87.58 மீட்டர் தூரம் வீசி இந்தியாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் 24 வயது இளைஞர் நீரஜ் சோப்ரா. மில்கா சிங், பி டி உஷா போன்ற இந்தியாவின் ஆகச் சிறந்த தடகள வீரர்களின் கனவுகள் நனவாகியுள்ளது.
நீரஜ் வெள்ளி அல்லது வெண்கலம் வெல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது. தங்கம் வென்றதில் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
இன்னும் மூன்று ஆண்டுகள் தான், அடுத்த ஒலிம்பிக் வந்துவிடும், இப்போது தூவப்பட்டிருக்கும் விதைகள், அடுத்த ஒலிம்பிக்கில் விருட்சங்களாகும் என்கிற நம்பிக்கையில் இந்தியா விடைபெற்றுள்ளது.
பதக்கங்களை வென்ற வீரர்களுக்கும், அடுத்த ஒலிம்பிக் பதக்க போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சூரர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பிற செய்திகள்:
- சிந்து சமவெளியில் பேசப்பட்டது தொல் திராவிட மொழி: ஆய்வுக் கட்டுரை தரும் தகவல்
- 'மாயன் நாள்காட்டி': உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா?
- ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா
- ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி: ஒரு டோஸ் போதும் - 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












