மமதா பானர்ஜி: நரேந்திர மோதிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முகமாக முன்னிறுத்தப்படுவாரா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றுவதாக இருந்தால், மிக அரிதாகவே இந்தியில் உரையாற்றுவது வழக்கம்.
ஆனால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்ட தியாகிகள் தினக் கூட்டத்தில் மம்தா இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
கடந்த 28 ஆண்டுகளாக, ஜூலை 21 அன்று மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்ட தனது 13 தொண்டர்களின் நினைவாக, தியாகிகள் தினம் அனுசரித்து வருகிறார் மம்தா. ஆனால் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் ஒருபோதும் உரையாற்றியதில்லை.
இந்த முறை அவர் உருவாக்கிய அம்மரபை அவரே உடைத்தார். காரணம், இந்த நிகழ்ச்சி குறித்த சுவரொட்டிகள், மேற்கு வங்கத்திலிருந்து திரிபுரா வரை, குஜராத் முதல் தமிழ்நாடு வரை பரப்பப்பட்டன.
இந்த மெய்ந்நிகர்க் கூட்டத்தில் டெல்லியைச் சேர்ந்த பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மேற்கு வங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அகாலிதளம், சமாஜ்வாதி கட்சி, என்.சி.பி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, திமுக, டிஆர்எஸ், சிவசேனா, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டிஜிட்டல் தளத்தில் கலந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி இருந்த சூழலில்,மம்தாவும் அவ்வாய்ப்பைத் தவறவிட விரும்பவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை அடுத்த வாரம் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கூட்டவும் அவர் முன்மொழிந்தார். மேலும், தானே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, அனைத்து கட்சித் தலைவர்களும் டெல்லியில் உள்ளனர். மம்தாவும் அடுத்த வாரம் டெல்லிக்கு வருகிறார்.

பட மூலாதாரம், Sanjay das
புதன்கிழமை அவர் ஆற்றிய உரையில், தான் ஒரு தொண்டர் மட்டுமே என்றும் மூத்த தலைவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவேன் என்றும் தெளிவாகக் கூறினார்.
ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் முகமாக முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்ற ஊகம் எழுந்துள்ளது.
தன்னை ஒரு தொண்டர் என அவரே கூறிக்கொண்ட பிறகும், பிரதமர் பதவிக்கான அவரது வாய்ப்பை அரசியல் வல்லுநர்கள் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு மிகப் பெரிய காரணம், தியாகிகள் தினத்தன்று அவர் ஆற்றிய உரை.
காலகட்டம்

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை அவர் நிகழ்த்திய உரையில், "2024-ல் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இப்போதிலிருந்தே செய்யப்பட வேண்டும். நாம் எவ்வளவு நேரம் வீணடிக்கிறோமோ அவ்வளவு தாமதமாகும். அனைத்து கட்சிகளும் வர வேண்டும் பாஜகவுக்கு எதிராக ஒரு முன்னணியை உருவாக்க வேண்டியது அவசியம்." என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
மம்தாவின் இந்த அறிக்கை குறித்துக் கருத்து தெரிவித்த மூத்த ஊடகவியலாளர் மஹுவா சாட்டர்ஜி, 2019 மக்களவைத் தேர்தலுக்குச் சற்று முன்னர், சந்திரபாபு நாயுடுவால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது தேர்தலுக்குக் குறுகிய காலம் மட்டுமே இருந்தது. போதிய அவகாசம் இல்லாததால் வெற்றி கிட்டவில்லை என்கிறார்.
இந்த முறை மம்தா ஏற்கனவே இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. எந்தவொரு போருக்கும் அடிப்படை மந்திரம் எதிராளி பலவீனமாக இருக்கும்போது தாக்குவது தானே. பாஜக முன்பை விட சற்று பலவீனமாகக் காணப்படும் தருணத்தில் மம்தா அதை செய்யத் தொடங்கியுள்ளார்.
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முழு பலத்துடன் போராடியது, ஆனால் மம்தா பானர்ஜியின் தந்திரத்துக்கு முன், 'சோனார் பங்களா' என்ற பாஜகவின் கனவு கலைந்தது. மேற்கு வங்காளத்தின் வெற்றியால் மம்தா உற்சாகமாக இருக்கிறார். ஆனால் பாஜக சற்று சுணக்கமடைந்து இருக்கிறது.
நீங்கள் களத்தில் இறங்கி நேருக்கு நேர் மோதத் தயாராக இருந்தால், மோடி-ஷா ஜோடியை தோற்கடிக்க முடியும் என மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுக்கு முன்னால் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், TWITTER@ANKITLAL
ஆனால் மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா சௌத்ரி, மஹுவா சாட்டர்ஜியின் கருத்துகளுடன் அதிகம் உடன்படுவதாகத் தெரியவில்லை.
மமதா பானர்ஜியின் டெல்லி கனவு நனவாக இன்னும் காலம் வரவில்லை என்று அவர் கருதுகிறார். புதன்கிழமை நடந்த மெய்ந்நிகர் பேரணி இந்த திசையின் முதல் படி என்பதில் ஐயமில்லை. அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் இதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. காலம் கனியும் முன் அவர் பிரதமர் கனவு காண்கிறார் என்பது நீர்ஜா சௌத்ரியின் கருத்து.
"மம்தா எதிர்க்கட்சியில் யாரைக் கூட்டுவார்? அதை எப்படிச் செய்வார்? யார் உடன் வருவார்கள்? யார் வரமாட்டார்கள்? யார் வழிநடத்துவார்கள்? மேற்கு வங்கத்திற்கு வெளியே அவருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது? இத்தனை கேள்விகள் எழுகின்றன.
காங்கிரஸ் தன்னை ஒரு தேசியக் கட்சியாகக் கருதுகிறது. மற்ற கட்சிகள் பிராந்தியக் கட்சிகள். எனவே புதன்கிழமை மம்தாவின் பேரணி மேற்கு வங்கத்திற்கு வெளியே தனது செல்வாக்கை விரிவாக்க அவர் மேற்கொண்ட ஒரு சிறு முயற்சி தான்" என்கிறார் நீர்ஜா.
பாஜகவை மத்தியிலிருந்து அகற்றும் நோக்கத்துடன் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே மம்தாவுக்கு ஒரு பெரிய சவால் என நீர்ஜா கருதுகிறார்.
புதன்கிழமை நடைபெற்ற பேரணியில், ஜூலை 27 முதல் 29 -க்குள் டெல்லியில் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டத்தைக் கூட்டுமாறு ஷரத் பவார் மற்றும் ப. சிதம்பரத்திற்கு மம்தா வேண்டுகோள் விடுத்தார். அந்த நேரத்தில் மம்தாவும் டெல்லி சுற்றுப்பயணத்தில் இருப்பார்.

பட மூலாதாரம், SANJAY DAS/BBC
காங்கிரஸ் அல்லது என்.சி.பி போன்ற கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பது அவரது அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. இதில் அவர் அவர்களை ஆதரிப்பார்.
ஆனால், மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் தவிர ஏனைய பெரிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அது அகிலேஷ் யாதவ் ஆகட்டும், தேஜஸ்வி யாதவ் ஆகட்டும், சரத் பவார் ஆகட்டும், அனைவருமே மம்தாவை ஆதரித்தனர் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
சட்டமன்றத் தேர்தலின் போது மம்தாவை ஆதரித்த கட்சிகள் இன்னும் அவருடன் தான் நிற்கின்றன என்று மஹுவா சாட்டர்ஜி கூறுகிறார். இப்போது அந்த ஆதரவை மம்தா, நாடாளுமன்றத்திலிருந்து வெவ்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் வரை விரிவாக்க விரும்புகிறார்.
மம்தா எதிர்க்கட்சிகளை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் அரவணைத்துச் செல்ல முற்படுகிறார். மேலும் ஒவ்வொரு தளத்திலும் பொதுமக்கள் பிரச்னைகளை எழுப்புகிறார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு நேர்ந்த கதி உத்தரப்பிரதேச தேர்தளிலும் நடந்தால் அல்லது பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை சற்று குறைந்தால், 2024 ல் எதிர்க்கட்சியின் பணி மிகவும் எளிதாகிவிடும் என்று மஹுவா மேலும் கூறுகிறார். ஆனால் அதற்கு மேற்கு வங்கத்தில் ஒரு மம்தா போல உத்தரப்பிரதேசத்தில் ஒரு ஆளுமை வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்று அகிலேஷ் யாதவ் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெளிவாகக் கூறியுள்ளார், ஏனெனில் பெரிய கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் அதிக இடங்களைக் கேட்கின்றன என்றும் ஆனால் அவர்களின் வெற்றி வாய்ப்புகளோ செயல் திறனோ அந்த அளவிற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், எதிர்க்கட்சிகள் சட்டசபைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டு, மக்களவைத் தேர்தலில் ஒன்று கூடினால் அது எந்த அளவு பயனளிக்கும் என்பதை இப்போதே கணிப்பது கடினம். புதன்கிழமை நடந்த மமதாவின் பேரணியில் பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரி, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பி.டி.பி தரப்பிலிருந்து எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா, ஷரத் பவார் மம்தாவை ஏற்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் சோனியா, பவார் போன்ற பெரிய தலைவர்களின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக இருக்கும் என நீர்ஜா சௌத்ரி கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதில் பிரசாந்த் கிஷோரின் பங்கு முக்கியமானது எனவும் நீர்ஜா கருதுகிறார்.
"காங்கிரஸில் உட்கட்சிப் பூசல்கள் இருந்தாலும், கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் அதற்கு அதிக இடங்கள் கிடைக்காத நிலையிலும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்திறன் சிறப்பாக இல்லாத நிலையிலும் காங்கிரஸ் இன்னும் பெரியண்ணன் மனப்பான்மையிலிருந்து வெளியே வரவில்லை.
பவாரும் தனது பிராந்தியத்தில் ஒரு வலுவான தலைவர் ஆவார். இத்தகைய சூழ்நிலையில், பிராந்தியக் கட்சிகள் தேசியக் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வதா என்ற கேள்வி எழுகிறது. மறுபுறம், காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி பிராந்தியக் கட்சியின் தலைமையை ஏற்க முடியுமா என்பதும் ஒரு கேள்வி.
தற்சமயம் எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் ஒரே நோக்கம், பாஜகவை ஆட்சியை விட்டு அகற்றுவது தான். எனவே, சோனியா மற்றும் பவார் மம்தாவின் தலைமையை ஏற்றுக் கொள்வதில் சிக்கலிருக்காது." என மஹுவா கூறுகிறார்.
காங்கிரஸ் தேசிய அளவில் ஒரு பெரிய கட்சி என்பது உண்மைதான், ஆனால் சோனியா காந்தி பிரதமராக விரும்பவில்லை. காங்கிரசில் இருந்து பிரதமர் பதவிக்கு ராகுலின் பெயர் தான் முன்வைக்கப்படும்.
ராகுல் காந்தி மம்தா பானர்ஜியை விட வயது மற்றும் அனுபவம் இரண்டிலும் குறைந்தவர். ராகுல் காந்தி மம்தா பானர்ஜியைப் பிரதமராக ஏற்றுக் கொள்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் அதனால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. பொது வெளியில் ராகுல் எப்போதுமே ஈகோ கொண்டவராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பவாரும் தேர்தல் அரசியலை நன்கு புரிந்துகொண்டவர். அவர் மகாராஷ்டிராவின் மராட்டிய தலைவர். ஆனால், மம்தா பானர்ஜி மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர், வகித்துக் கொண்டிருப்பவர்.
ஷரத் பவார், மம்தா, சோனியா என அனைவரும் ஒரு காலத்தில் காங்கிரசில் ஒன்றாக இருந்தவர்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
மேற்கு வங்கத்துக்கு வெளியே மம்தாவின் செல்வாக்கு

பட மூலாதாரம், Getty Images
"2024-ல் மம்தா பிரதமர் வேட்பாளரா என்று நீங்கள் கேட்டால், இந்த வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று நான் கூறுவேன்." என்கிறார் மஹுவா.
மேற்கு வங்கத்தில் 42 மக்களவை இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் தேவேகவுடா மற்றும் ஐ.கே குஜ்ரால் ஆகியோர் பிரதமராக முடியும் போது, மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு மம்தாவின் வாய்ப்பையும் புறக்கணிக்க முடியாது. இன்று, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், மேற்கு வங்கத்தில் பாஜகவின் தோல்வி பற்றி பேசப்படுகிறது, அத்துடன் மம்தாவின் பெயரும் பெரிதாகி வருகிறது.
மம்தாவின் கட்சி மேற்கு வங்கத்தின் பிராந்தியக் கட்சி தான். ஆனால், மேற்கு வங்கத்திற்கு வெளியே தனது அடையாளத்தைப் பரவலாக்கும் நோக்கத்துடன் தான் தியாகிகள் தின நிகழ்ச்சியின் சுவரொட்டிகளை மாநிலத்துக்கு வெளியிலும் பரப்பினார்.
டெல்லி, குஜராத், திரிபுரா, பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நேரடியாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், வங்காள மொழியில்லாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மம்தா ஆற்றிய உரை தான் சிறப்பம்சம்.

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை தனது உரையில், மம்தா மூத்த தலைவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றும் ஒரு தொண்டர் மட்டுமே தாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இது குறித்துக் கருத்து கூறிய மஹுவா, "இந்த அறிவிப்பும் மம்தா பானர்ஜியின் அரசியலின் ஒரு பகுதியாகும். எந்தவொரு பதவிக்கும் பேராசைப்படாத ஒரு தலைவரை, மற்ற அரசியல் கட்சிகள் விரைவில் நம்பும், உடன் பயணிக்கத் தயாராக முன்வரும்" என்கிறார்.
மம்தாவின் அறிக்கையை விரிவாக விளக்கிய மஹுவா, "மம்தா, தான் பிரதமராவது தனது முன்னுரிமை அல்ல என்றும் பாஜகவை அகற்றுவது தான் முக்கிய நோக்கம் என்றும் அதற்குத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெளிவாகக் கூறியுள்ளார்." என்று கூறுகிறார்.
மம்தா பானர்ஜியின் உரைக்குத் தங்கள் விளக்கங்களை வழங்கி வருகிறார்கள் வல்லுநர்கள். ஆனால் வரவிருக்கும் நாட்களில், 2024 ஆம் ஆண்டுக்கான பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி ஒரு விவாதம் எழும் போது, நிச்சயமாக மம்தா பானர்ஜியின் பெயரும் பட்டியலில் இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












