பிரசாந்த் கிஷோர்: இந்திய அரசியல் சதுரங்கத்தின் ஆலோசகரா? களம் காணும் அரசியல்வாதியா?

- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
தேர்தல் ஆலோசகராக பிரபலமாக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் காங்கிரசோடு இணைவது பற்றி காரசாரமான விவாதம் நடைபெறுகிறது. ஆனால் அவரது நோக்கம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
2014 ஆம் ஆண்டில் ஒரு தொழில்முறை தேர்தல் ஆலோசகராக பாஜகவின் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பேற்ற பிரசாந்த் கிஷோர், தற்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்ததன் மூலம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறார்.
பிரஷாந்த் கிஷோர் ஒரு தேர்தல் உத்தி வகுப்பாளராக எந்த விஷயத்தில் மாறுபட்டவராக இருக்கிறார் என்றால், அவர் ஓர் 'ஊதியம் பெறும் தொழில்முறை ஆலோசகராக' பணியாற்றுகிறார், அவரிடம் ஒரு முழு ஆய்வுக் குழு இருக்கிறது. அவர் எந்த ஒரு அரசியல் கட்சியுடன் இணைந்தவர் அல்ல என்பது தான்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அவரது புகழ் அதிகரித்துள்ளது. ஏனெனில் திரிணமூல் காங்கிரஸ் பாஜகவின் சவாலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அவர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்ததால், அது மம்தாவுக்கு பெருமளவு உதவியது என்று சிலர் நம்புகிறார்கள்.
அவர் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் இருந்து வெளிவந்த பிறகு காங்கிரசில் சேர்வது குறித்து ஊகங்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கு முன் அவர் 'எதிர்க்கட்சி ஒற்றுமையின் ஒருங்கிணைப்பாளர்' என்று வர்ணிக்கப்பட்டபோதும், அவர் குறித்த விவாதம் இருந்தது. சரத் பவாருடனான அவரது சந்திப்பு குறித்தும் பல்வேறு ஊகங்கள் எழுந்தன.
பீகாரில் உள்ள போஜ்புரி பேசும் பகுதியைச் சேர்ந்த 44 வயதான பிரசாந்த் கிஷோர், தனது தொழில்சார் சேவைகளை, நரேந்திர மோதி, நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இதுவரை அளித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
2021 மே 2 ஆம் தேதி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், தான் தொழில்முறை அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற ஊகங்கள் அதன் பிறகு வலுப்பெற்றன.
அவர் அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எப்போதுமே உள்ளது. பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகரா அல்லது அரசியல்வாதியா என்பது குறித்து எப்போதுமே தெளிவு இருந்ததில்லை.
அத்தகைய சூழ்நிலையில், அவர் காங்கிரசில் சேருவது குறித்த ஊகங்களிலிருந்து மீண்டும் அதே கேள்வி எழுப்பப்படுகிறது.
மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்து கொள்வதாகக் கூறும் அரசியல் கட்சிகள், ஏன் இந்த 'தேர்தல் மேலாளரை' தங்களுடன் இணைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றன என்பதுதான் அது.
காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு ஓர் உத்தி வகுப்பாளர் பாத்திரத்தை அவர் வகித்தார் என்பதையும், அவரது உத்தி, உத்தரபிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்பதையும் இங்கே நினைவில் கொள்வது அவசியம். ஆனால் பொதுவாக அவர் மிகவும் வெற்றிகரமான தேர்தல் மேலாளராக கருதப்படுகிறார்.
மேற்குவங்க தேர்தலில், பாஜகவின் கடுமையான போட்டி இருந்தபோதிலும், மம்தா பானர்ஜி பெற்ற வெற்றி, பிரசாந்த் கிஷோரின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது மற்றும் அவரது ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக மதிப்பிடப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், 2024 ல் நரேந்திர மோதிக்கு எதிராக,'எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க அவர் தயாராகி வருவதாக, சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடனான அவரது சந்திப்புகள் குறித்து ஊகங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது கடினமான பணியாக இருக்கும்போதிலும்கூட, பாஜகவுக்கு எதிராக அவற்றை ஒன்றுதிரட்டும் இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தவல் குல்கர்னி கருதுகிறார்.
"யாராவது மம்தா பானர்ஜியை பிரதமராக்க விரும்பினால், மற்ற தலைவர்கள் தயாராக இருப்பார்களா? சரத் பவார் இதைப்பற்றி சிந்திப்பாரா? 2019ல் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், 'பாஜகவை அகற்ற வேண்டும்' என்ற ஒருமித்த கருத்து இருந்தது. அப்படி இருந்தும்கூட அவைகளால் ஒன்றிணைய முடியவில்லை. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று ஸ்டாலின் மட்டுமே கூறியிருந்தார்," என சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் டி சுரேஷ்குமார் குறிப்பிடுகிறார்.
மூன்றாவது அல்லது நான்காவது முன்னணி என எதுவுமே பாஜகவுடன் போட்டியிட முடியும் என தான் கருதவில்லை என என்.டி.டி.வி உடனான உரையாடலில், பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் சிந்தனையின் ஒரு பகுதியாக, சரத் பவாரை நாட்டின் அடுத்த குடியரசுத்தலைவராக்குவதற்கு ஒருமித்த கருத்தை சேகரிக்கும் நோக்கத்துடன் பிரசாந்த் கிஷோர் தலைவர்களை சந்திக்கிறார் என பேச்சு அடிபடுகிறது.
சரத் பவாரின் பிரதமராகும் கனவு பொய்த்துவிட்டதால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத்தலைவர் தேர்தலின் பக்கம் அவரது கண்கள் உள்ளன. ஆனால் இதுவரை இந்த விஷயங்கள் அனைத்தும் ஊகங்கள் மட்டுமே. ஏனெனில் சரத் பவார் இது குறித்து எதுவும் கூறவில்லை என்று தவல் குல்கர்னி தெரிவிக்கிறார்.
பிரசாந்த் கிஷோர் ஏன் தேவை?

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் மேலாளர்களின் திரைக்குப் பின்னால் உள்ள பணிகள் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. தேர்தலின் போது வெற்றிபெற்றுவிடுவார் என்ற கருத்தை தலைவரைச் சுற்றி உருவாக்குவதே அவரது பணி. பிரச்சனைகளை புரிந்து கொள்ளுதல், தேர்தல் நடைபெறும் பகுதிகள் தொடர்பான கணக்கு மற்றும் பொதுமக்களின் மனநிலையை மதிப்பிடுவதில் அவர் வல்லுநர் என்று கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் மேலாளர்களின் அந்தஸ்து அதிகரித்து வருவது, அரசியல் வெற்றிடத்துக்கு சான்றாகும் என பஞ்சாபின் அரசியல் ஆய்வாளர் முனைவர் ஜக்ரூப் சைகோன் கூறுகிறார்.
அரசியல் கட்சிகளில் உள்ள வெற்றிடத்தைக் காட்டுகிறது...
"மேலாளர்களாக செயல்படும் ஒரு சிலருக்கு அதிகாரம் வழங்கப்படும் நிலையானது, அரசியல் அமைப்பு குறிப்பாக அரசியல் கட்சிகளில் நிலவும் வெற்றிடத்தைக் குறிக்கிறது," என்கிறார் அவர்.
"இன்றைய தலைவர்கள் அடிமட்டத்திலிருந்து எவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கும், பஞ்சாபில் உள்ள தலைவர்களின் பெயர் எத்தனை மோசமாக இருக்கிறது என்றால் பலர் தங்கள் கிராமங்களுக்குள் அவர்களை நுழையக்கூட அனுமதிக்காத இழிநிலைக்கும் இது ஒரு அறிகுறியாக இருக்கிறது," என்கிறார் முனைவர் ஜக்ரூப் சைகோன்.
கடந்த சில ஆண்டுகளில் அடிமட்ட நிலையில் இருக்கும் ஊழல் காரணமாக மக்கள் எவ்வாறு கட்சியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர் என்று மேற்கு வங்கத் தேர்தலின் போது, டி.எம்.சி தலைவர்கள், பிபிசி செய்தியாளர் அமிதாப் பட்டாசாலியிடம் விவரித்தனர்.
பிரசாந்த் கிஷோர் இதை கட்சித் தலைவர்களிடம் கூறினார். ஏனெனில் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்களால் இந்த விஷயங்களை அவர்களிடம் சரியாக முன்வைக்க முடியவில்லை.
ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் பிரசாந்த் கிஷோர் எவ்வாறு நிர்வகித்தார் என்பதை அமிதாப் விளக்குகிறார். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், அவரது குழுவினர் பல பகுதிகளில் சுற்றித் திரிந்து, எந்தத் தலைவர் எங்கே, என்ன சொல்ல வேண்டும் என்று கூறுவார்கள்.
பிரசாந்த் கிஷோரின் மேற்பார்வையில், 'பங்களா நிஜர் மேகே சாய்' ( மேற்குவங்கம் தனது மகளை விரும்புகிறது) என்ற லட்சக்கணக்கான சுவரொட்டிகள், மாநிலமெங்கும் ஒட்டப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இது தவிர, 'தீதி கோ போலோ' ( தீதியிடம் சொல்லுங்கள்) ஹெல்ப்லைன் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் குழாய்களில் தண்ணீர் இல்லாதது முதல் அசுத்தம் வரை நேரடியாக தொலைபேசியில் புகார்களைக் கூறினர்.
அது குறித்த நடவடிக்கையை உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டது. 'துவாரே சர்க்கார்' ( உங்கள் வாயிற்படியில் அரசு) திட்டத்தின் கீழ், பொதுத் துறைகள் அப்பகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முகாம்களுக்கு ஏற்பாடு செய்தன.
இந்த திட்டங்கள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற உதவின. ஆனால் இந்த திட்டங்களை பரிந்துரைக்க பிரசாந்த் கிஷோர் தேவையில்லை என்று அமிதாப் பட்டாசாலி தெரிவிக்கிறார்.
"காங்கிரசின் நிலை மோசமடைந்து விட்டது, ஏனெனில் அது ஒரு வரவேற்பறை கட்சியாக மாறியதால் பொது மக்களிடமிருந்து அது துண்டிக்கப்பட்டது என பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறுவார். யார் எங்கிருந்து விலகிச்செல்கிறார்கள் என்பதை பிரசாந்த் கிஷோர் ஆராய்கிறார். இதன் காரணமாக பலருக்கும் டிக்கெட் கிடைக்காது. " என்று பத்திரிகையாளர் ஜெயந்த் கோஷால் கூறுகிறார்
சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் டி சுரேஷ்குமார் ஜெயலலிதாவின் எடுத்துக்காட்டைத் தருகிறார். ஜெயலலிதா சமூக ஊடகங்களில் இல்லவேயில்லை. ஆனால் அவரிடம் அபார தன்னம்பிக்கை இருந்தது. மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். அவர் தெரிவு செய்யப்பட்ட சிலரின் உதவியுடன் ஆட்சி செய்தார் என்று அவர் குறிப்பிடுகிறார்.
"தலைவர்களுக்கு நம்பிக்கை இல்லாதபோது, தாங்கள் ஜெயிக்க முடியாது என்று அவர்கள் உணரும்போது, அவர்கள் இதுபோன்ற உத்தி வகுப்பாளர்களை நாடுகிறார்கள். மேலும் ஆலோசகர்களின் உதவியுடன் நரேந்திர மோதி இத்தகைய பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார் என்று பல தலைவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மை இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
"ஒரு உத்தி வகுப்பாளர், உரையை எழுத முடியும், ஆனால் அந்தத்தலைவர்தான் உரையை வலுவான முறையில் வழங்க வேண்டும். நரேந்திர மோதி பெரிய பேச்சாளர். அவர் பேசுவது மக்களுக்குப்பிடிக்கிறது," என்கிறார் சுரேஷ் குமார்,
"அரசியல்வாதிகள் எப்போதும் பிசியாக இருப்பார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு படி பின்னால் சென்று அவர்கள் பார்ப்பதில்லை.," என்று மும்பையின் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தவல் குல்கர்னி கூறுகிறார்.
பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆசை?

பட மூலாதாரம், Getty Images
பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் ஆசை இருப்பதாகவும், அது மாநிலங்களவை உறுப்பினராக ஆவதுடன் நிற்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் ஜெயந்த் கோஷல் கருதுகிறார்.
"2024 தேர்தலில் கூட்டணி அரசின் கிங்மேக்கராக உருவெடுக்க பிரசாந்த் கிஷோர் விரும்புகிறார்" என ஜெயந்த் கோஷல் கூறுகிறார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளைப் பொருத்து இது இருக்கும் என்றும், அப்போதுதான் அவருடைய நோக்கங்கள் தெளிவாகத் தெரியும் என்றும் கோஷல் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இறந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டிய நேரத்தில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் சந்திப்புகள் நடைபெறுகின்றன.
பல மோதி ஆதரவாளர்களும் அவருடைய கோவிட் மேலாண்மையில் மகிழ்ச்சியாக இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, வேலையின்மை மற்றும் விலைவாசி அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
"பிரசாந்த் கிஷோர் எந்த கட்சியிலும் சேரலாம். அவர் விரும்பினால் மாநிலங்களவை எம்.பி. ஆக முடியும், ஆனால் அவர் மாநிலங்களவை உறுப்பினராக விரும்பவில்லை," என்று ஜெயந்த் கோஷல் கூறுகிறார்.
"திரிணமூலின் இரண்டு மாநிலங்களவை இடங்கள் இப்போது காலியாக உள்ளன. பாஜகவுடன் அவருடைய உறவு மோசமாக இல்லை. ஆகவே அந்தக்கட்சியும் அவரை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது," என்று கோஷல் தெரிவித்தார்.
மறுபுறம், சென்னையின் மூத்த பத்திரிகையாளர் டி சுரேஷ்குமார், பிரசாந்த் கிஷோரின் சித்தாந்தம் குறித்து கேள்வி எழுப்புகிறார்.
"பிரசாந்த் கிஷோர் ஒரு தேர்தலில் வலதுசாரிக் கட்சியின் பக்கம் இருந்தார். மற்றொரு தேர்தலில், அவர் மற்றொரு சித்தாந்தத்தின் பக்கம் இருந்தார். ஒருமுறை அவர் தமிழ் கட்சியின் பக்கம் இருந்தார். மற்றொரு முறை அவர் ஒரு தெலுங்கு கட்சியுடன் கூட்டாக இருந்தார்.
அவர் ஒரு தலைவராக உருவெடுக்க வேண்டுமானால், அடிமட்ட நிலையில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அவர் தன்னை நிரூபிக்க வேண்டும், அவர் ஒரு கட்சியில் பாராசூட் மூலம் இறங்கி, தலைவராக முடியாது," என அவர் தெரிவித்தார்.
பிரசாந்த் கிஷோர் பற்றிய கேள்விகளுக்கும் குறைவில்லை

பட மூலாதாரம், Getty Images
பிரசாந்த் கிஷோர் இவ்வளவு பெரிய மந்திரவாதி என்றால், உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக அவரது மந்திரம் ஏன் வேலை செய்யவில்லை என்று கேள்விகள் எழுகின்றன.
அவர் கூறியதை காங்கிரஸ் கட்சி செயல்படுத்தவில்லை,.இதன் காரணமாகவே கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று இதற்கு பதில் வருகிறது.
இது தவிர 2014ல் நரேந்திர மோதியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பங்களிப்பு மிகைப்படுத்தப்பட்டதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அந்த நேரத்தில் காங்கிரசில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றால் பொது மக்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அவர்கள் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை நரேந்திர மோதியிடம் ஒப்படைத்தனர். அதற்கு பிரசாந்த் கிஷோரின் தேவை இருக்கவில்லை.
தமிழகத்தில் ஸ்டாலினின் வெற்றிக்குப்பின்னால் பிரசாந்த் கிஷோர் தவிர, பிற காரணிகளும் இருந்தன. ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்கு ஒரு காரணம் சந்திரபாபு நாயுடு மீது மக்கள் கொண்ட அதிருப்தி என்றும் பத்திரிகையாளர் டி சுரேஷ்குமார் குறிப்பிடுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












