பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மம்தாவுடன் சேர்ந்த முகுல் ராய்: தாக்கம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், SANJAY DAS/BBC
- எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
- பதவி, கொல்கத்தாவிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக
ஏகப்பட்ட ஊகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில், வெள்ளிக்கிழமையன்று, பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், தனது மகன் சுப்ரான்ஷுவுடன் மீண்டும் தனது தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரசில் இணைந்தார்.
தமது கட்சித் தலைமை, முகுல் ராய் மீது மென்மையான போக்கைக் கடைபிடிக்கக்கூடும் என்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார் திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகத் ராய்.
அவ்வாறு தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் விரைவாகக் காட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, முகுலுக்கும் கட்சித் தலைவர் மம்தா பேனர்ஜிக்கும் இடையிலான பிணக்கு நீங்கியது.
திரிணமூல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, 2017 நவம்பரில் முகுல் ராய் பாஜகவில் சேர்ந்தார்.
திரிணமூல் தலைமையகத்தில் முகுலுடன் நடந்த சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்குப் பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய மம்தா பேனர்ஜி அவர் மீண்டும் கட்சிக்குத் திரும்பியது குறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர், "முகுல் இந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர். எங்களுக்கிடையில் எந்த வித்தியாசமும் இல்லை. தேர்தல் பிரசாரத்தின்போது திரிணமூலுக்கு எதிராக முகுல் ஒருபோதும் பேசியதில்லை" என்று கூறினார்.

பட மூலாதாரம், SANJAY DAS/BBC
`துரோகிகளை மீண்டும் ஏற்க மாட்டோம்`
கட்சிக்குத் துரோகமிழைத்துத் தேர்தலுக்கு முன்னால் பாஜகவுடன் கைகோர்த்தவர்களைக் கட்சி ஒரு போதும் திரும்ப ஏற்காது என்று சுவேந்து அதிகாரியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் சுட்டிக்காட்டினார்.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையைக் காட்டி அச்சுறுத்தி பாஜக முகுலைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக மம்தா கூறினார். "ஓல்ட் இஸ் ஆல்வேஸ் கோல்ட்" என்று கூறினார் மம்தா.
அப்போது பேசிய முகுல், "நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பழக்கமான இடத்திற்கு வந்து பழைய நண்பர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள பாஜகவின் நிலையில், எந்தத் தலைவரும் அங்கே தங்கமாட்டார்கள். என்னால் அங்கே இருக்க முடியவில்லை. எனவே என் தாய் வீட்டிற்குத் திரும்பினேன்" என்றார். மேலும் அவர் மம்தாவைப் பெரிதும் பாராட்டினார்.
கொரோனா தொற்று நிலைமை சற்று சீரான பின்னர், கொல்கத்தா மாநகராட்சி உட்பட 100 க்கும் மேற்பட்ட நகராட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அப்போது முகுல் திரும்பி வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அவர் இந்த அமைப்பின் மையமாக கருதப்படுகிறார்.
மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் திரிணமூல் கட்சி அமைப்பை வலுப்படுத்தியதில் அவரது பங்கு மிக முக்கியமானது. இந்தக் காரணத்திற்காகவே, முகுலை 'மேற்கு வங்காள அரசியலின் சாணக்கியர்' என்றும் அழைக்கிறார்கள்.
திரிணமூல் காங்கிரசில் முகுலின் இடம் காலியாகவே இருந்தது. முகுல் பாஜகவில் சேர்ந்த பிறகு, அந்த இடைவெளியை நிரப்ப மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியைத்தான் பெரிதும் விரும்பினார். ஆனால் அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிய அவர், தேர்தலுக்கு நான்கு மாதங்கள் முன்னர், பாஜகவில் இனைந்தார்.
தேர்தல் நேரத்தில் மம்தாவைத் தாக்கிப் பேசவில்லை
"முகுலின் அணுகுமுறை அவர் தாய்க் கட்சிக்குத் திரும்புவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. தேர்தல் பிரசாரம் முழுவதிலும் பாஜகவில் இணைந்த டிஎம்சி தலைவர்களில் மம்தா பானர்ஜி மீது ஒருபோதும் குற்றம் சாட்டாத ஒரு சிலரில் இவரும் ஒருவர்"என திரிணமூல் தலைவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
முகுல் ராய் திரும்பி வந்தது, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முகுல் திரும்பிவந்தது பல விதங்களில் திரிணமூலுக்கு முக்கியமானது. டிஎம்சியை விட்டு பாஜகவில் சேர்ந்த முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், SANJAY DAS/BBC
அவருக்குப் பிறகு, அர்ஜுன் சிங், சபியாசாச்சி தத், ஷோபன் சாட்டர்ஜி, சுவேந்து ஆதிகாரி, ராஜீவ் பானர்ஜி போன்ற பல தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்தப் பின்னணியில் பார்த்தால், மீண்டும் முகுல் இந்தத் தொடரைத் தொடங்கி வைத்துள்ளாரோ என்ற ஊகம் எழுகிறது.
இதுவரை, முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சோனாலி குஹா உட்பட குறைந்தது நான்கு தலைவர்கள் மம்தா பேனர்ஜியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் மீண்டும் கட்சிக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் குணால் கோஷ் 10 பாஜக எம்எல்ஏக்களும் மூன்று எம்.பி.க்களும் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியுள்ளார். பாஜக கொள்கையை முன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராஜீவ் பானர்ஜியும் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தங்கள் மொத்த பரிவாரங்களுடன் முழு பலத்துடன் களம் கண்ட பாஜகவின் மத்திய தலைவர்கள், மேற்கு வங்காளத்தில் இவ்வளவு வேகமாகக் காட்சிகள் தலைகீழாக மாறும் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
தேர்தலுக்கு முன்பு, பாஜகவில் சேர ஆளும் திரிணாமுல் காங்கிரசிலிருந்து போட்டி போட்டுக்கொண்டு தலைவர்கள் வந்தார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
பிரதமர் பேசியும் முகுல் திரும்புவதைத் தடுக்க முடியவில்லை
பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராயின் அதிருப்தியில் இருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவரைத் தொலைபேசியில் அழைத்தார். இது மேற்கு வங்க அரசியலில் திடீர் ஊகங்களை எழுப்பியது.
மம்தாவின் மருமகனும், திரிணமூல் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி முகுல் ராய் மனைவி கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்தபோது அவரைக் காண மருத்துவமனைக்கு சென்றார். அப்போது இந்த ஊகம் இன்னும் வலுவானது. முகுல் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
முகுல் குணமாகிவிட்டார். ஆனால் அவரது மனைவி கிருஷ்ணா ராய் கடந்த மாதம் முதல் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. ஆனால் மாநில அளவிலோ கட்சி மேலிடத்திலிருந்தோ பாஜகவிலிருந்து யாரும் அவரை நலம் விசாரிக்கவில்லை. இது குறித்து முகுல் மிகவும் கோபமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவர் தனது நெருங்கிய நண்பர்களிடமும் குறிப்பிட்டிருந்தார்.
அபிஷேக் பானர்ஜி திடீரென மருத்துவமனைக்குச் சென்று, முகுலின் மகன் சுப்ரான்ஷு ராயை சந்தித்ததை அடுத்து பாஜகவும் பரபரப்பானது. மாநிலத் தலைவர் திலீப் கோஷ் அன்றே முன்கூட்டி அறிவித்து விட்டு மருத்துவமனைக்குச் சென்றார். மறுநாள் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் முகுலை அழைத்து அவரது மனைவியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரான்ஷு, "கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வருவது அல்லது தொலைபேசியில் அழைப்பது இயல்பு. ஆனால் எதிர்க்கட்சியில் இருந்தும்கூட, அபிஷேக் இங்கு வந்தது ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிறுவயதிலிருந்தே என் தாயை அறிந்தவர், அவரைச் சித்தி என்றுதான் அழைப்பார். " என்று தெரிவித்தார்.
நீங்கள் திரிணமூலுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுப்ரான்ஷு, "முதலில் என் தாயார் நலமடைய வேண்டும். அதன் பிறகு இந்த பிரச்னைகள் பரிசீலிக்கப்படும். அரசியல் இருக்கவே இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
பாஜகவிடம் நம்பிக்கையிழந்த முகுல் ராய்
"கட்சியின் மாநிலத் தலைமையின் மீது முகுல் ராய் கொண்டிருந்த அதிருப்தி வெளிப்படையாகவே தெரிந்தது. அவருக்கு உரிய மரியாதையை இக்கட்சி ஒருபோதும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராகக் கூட இவரது பெயர் அடிபட்டது. ஆனால் அவருக்கு பதிலாக சுவேந்து ஆதிகாரி நியமிக்கப்பட்டார்."என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு தொடர்ந்து எதிர்ப்பு மனநிலையில்தான் இருந்தார். முதலாவதாக, அவர் தனது ஒரு ட்வீட்டில், டி.எம்.சியை விமர்சிப்பதற்குப் பதிலாக பாஜக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர், செய்தியாளர்களுடனான உரையாடலில், மம்தா மற்றும் அபிஷேக் ஆகியோரைப் பாராட்டியும் பேசினார்.

பட மூலாதாரம், SANJAY DAS/BBCம்
முகுல் ராய் பாஜகவில் எந்த நம்பிக்கையில் இணைந்தாரோ அது எதுவும் நிறைவேறவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மாநிலத் தலைமை அவர் மீது சிறப்புக் கவனம் செலுத்தவில்லை.
எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர் அவர் எந்த நிகழ்ச்சியிலும் பகிரங்கமாகக் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்றத் தேர்தலிலும் அவர் மிகவும் தயக்கத்துடன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றார் என்றாலும் அவரது மகன் பீஜ்பூர் தொகுதில் தோல்வியைத் தழுவினார்.
சனிக்கிழமை நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வெளியே சென்றவர்கள் திரும்புவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை.
பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த டி.எம்.சி தலைவர், "மம்தாவின் மருமகனும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி முகுல் திரும்பி வருவதில் முக்கியப் பங்கு வகித்தார். அவரது மனைவியை மருத்துவமனையில் பார்க்கும் சாக்கில் சுப்ரான்ஷுவுடன் உரையாடலைத் தொடங்கி, இதற்கான கதவுகளைத் திறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து மம்தாவும் பச்சைக் கொடி காட்டினார்" என்று தெரிவிக்கிறார்.
மாநில பாஜக கூட்டத்தில், முகுல் ராய் மற்றும் அவரது மகனின் மோசமான அறிக்கைகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன.
மாநிலத் தலைவர் திலீப் கோஷ் மற்றும் முகுல் ராய் இடையே ஏற்கனவே கனன்று கொண்டிருந்த தீயில், இந்தக் கூட்ட நிகழ்வுகள் மேலும் எண்ணெய் ஊற்றின.
சமீபத்தில், பாஜக தலைவர் சாயந்தன் சக்ரவர்த்தி பாஜகவை யானை என்றும், சுப்ரான்ஷு எறும்பு என்றும் குறிப்பிட்டார். யானையின் முதுகிலிருந்து ஒரு எறும்பு இறங்கினால் எந்த இழப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற கருத்துக்கள் முகுலின் கோபத்தை அதிகரித்தன.
மாநில அரசியலில் தாக்கம் எப்படி இருக்கும்?
முகுல் மீண்டும் திரிணமூலுக்கே தாவுவார் என்ற ஊகம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தீவிரமடைந்தது. அப்போது முகுல், ஒரு ட்வீட்டில் தான் பாஜக-வில் தான் இருப்பதாகவும் இனியும் இருக்கப்போவதாகவும் தெளிவு படுத்தியிருந்தார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் அந்த ட்வீட்டை மறு ட்வீட் செய்து முகுலைப் பாராட்டினார். ஆனால் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் அதிகரித்து வந்த மோதலில் சுப்ரான்ஷு அதிருப்தி தெரிவித்ததையடுத்து, இந்த ஊகங்கள் வலுப்பெற்றன.
`வங்காளத்தின் அரசியல் சூழ்நிலையில் பாஜக - முகுல் ராய் உறவு முறிவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்?`
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சமிரன் பால், "முகுல் ராயின் பலம் குறித்து எந்த ஐயமும் இல்லை. அவரால்தான், பாஜகவுக்கு குறிப்பாக 2018 உள்ளாட்சித் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் நிறைய நன்மைகள் கிடைத்தன." என்று கூறுகிறார்.
மேலும் அவர், "முகுல் டிஎம்சி-க்குத் திரும்பியது, அக்கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்திருக்கும் பலரையும் சிந்திக்க வைக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பல சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். முகுல் திரும்பியது பாஜகவின் சரிவின் தொடக்கமாக இது இருக்கலாம் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்." என்று கணிக்கிறார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலலித்த அவர், முகுல் திரிணமூலுக்குத் திரும்பியதையடுத்து, இப்போது அக்கட்சி மதுவா சமூகத்தினரின் வாக்குகள் சிதறுவதைத் தடுக்கும் திசையில் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடும் என்று கூறினார். சமீபத்தில், பாஜக இந்த வாக்கு வங்கியில் கணிசமாகப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுவா சமூகத்தினரின் வாக்கு வங்கி வங்காளத்தில் குறைந்தது 70 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய பலம் பொருந்தியது. இப்போது முகுல் கட்சிக்குத் திரும்பியது, பாஜக முகாமுக்குச் சென்ற இந்த வாக்கு வங்கியின் ஒரு பகுதி, திரிணமூலுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
இதற்குக் காரணம், முகுலின் பலம் அனைவரும் அறிந்ததே. இந்தச் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் அவருக்கு வலுவான பிடிப்பு உள்ளது. கடந்த தேர்தலில் அவர் நதியா மாவட்டத்தில் கிருஷ்ணா நகர் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். அங்கும் மதுவா வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இதற்கிடையில், பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், "எந்தவொரு கட்சிக்கும் செல்ல எவருக்கும் சுதந்திரம் உண்டு. அவர் வந்ததால் சிறப்பு நன்மை எதுவும் கிடைக்கவில்லை. இப்போது வெளியேறியதால் என்ன தீங்கு ஏற்படும் என்று பார்ப்போம்" என்றார்.
பிற செய்திகள்:
- அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வரும் நரம்பு நோய் – ஆய்வில் தகவல்
- தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
- பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்
- காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது
- தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் நாசிக் முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












