இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார்

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரன்

பட மூலாதாரம், RAJAMAHENDRAN - NEWS FIRST

இலங்கையின் ஊடக ஜாம்பவான், கேப்பிட்டல் மஹாராஜா குழுமத் தலைவர், ஆர்.ராஜமகேந்திரன் இன்று (25) காலமானார்.

கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வார காலமாக சிகிசிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 'நியூஸ் பெஸ்ட்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சக்தி, சிரச, எம்.ரி.வி, நியூஸ்பெஸ்ட் ஆகிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளராக ஆர்.ராஜமகேந்திரன் விளங்கினார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆர்.ராஜமகேந்திரன், இலங்கையின் அரசியல், வர்த்தகம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தனது செல்வாக்கை செலுத்தியிருந்தார்.

பல ஆட்சி மாற்றங்களின் போது, ஆர்.ராஜமகேந்திரனின் செல்வாக்கு அதில் காணப்பட்டதாக ஒவ்வொரு தடவையும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழர்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் காணப்பட்ட தருணத்தில், சக்தி தொலைக்காட்சியை அவர் தொடங்கினார்.

டிவிட்டர் செய்தி

பட மூலாதாரம், Arun Prasath

அதேபோன்று, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலங்கையில் முதல் தடவையாக ஊடக நிறுவனத்தை ஆரம்பித்தவர் அவரே.

அது மாத்திரமன்றி, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி சேவையான சன் குழுமத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு, இலங்கையில் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலப் பகுதிகளில் இந்திய சினிமாவை தமிழர்களின் வீடுகளில் பார்வையிடும் வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

அதேவேளை, ரஜினிகாந்த் நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான தீ திரைப்படத்தின் கூட்டு தயாரிப்பாளராக அவரது நிறுவனம் விளங்கியது.

இலங்கையில் ரஜினிகாந்த்தை வைத்து திரைப்படம் எடுத்த பெருமை இவரை சாரும் என கூறப்படுகின்றது.

இந்த வகையில், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியது மாத்திரமின்றி, தமிழக சினிமாவுடன் இவரது தொடர்பு இறுதி வரை காணப்பட்டது.

இதேவேளை, ஆர்.ராஜமகேந்திரனின் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது இரங்கலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ஆர்.ராஜமகேந்திரனிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நீண்ட பிணைப்பினை நினைவுகூர்வதாக அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :