நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம்: தோழி பலி

யாஷிகா ஆனந்த்

பட மூலாதாரம், Twitter/yashika

படக்குறிப்பு, யாஷிகா ஆனந்த்

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த மோசமான கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவருடன் பயணம் செய்த அவரது தோழி வந்தி ரெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வந்தி ரெட்டி பவானி அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறவர். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத்.

காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்துள்ளார். அஜாக்கிரதையாக காரை ஓட்டி வந்ததாக யாஷிகா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது உயிர்த் தோழி மரணமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த யாஷிகா?

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், துருவங்கள் பதினாறு, ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்றுவிட்டு காரில் திரும்பியபோது பெரும் விபத்தில் சிக்கியிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் யாஷிகாவின் தோழி வந்திரெட்டி பவானி (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் வந்திரெட்டி பவானி, கடந்த வாரம் சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்து தனது தோழி யாஷிகாவை பார்ப்பதற்காகச் சென்னை வந்தபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"புதுச்சேரியில் இருந்து யாஷிகா ஆனந்த், அவரது தோழி வந்திரெட்டி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்கள் காரில் வந்துள்ளனர். இந்தக் காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்துள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் மாமல்லபுரம், சூளேரிக்காடு அருகே கடல்நீரை குடிநீராக்கும் பிளாண்ட் அருகில் வரும்போது யாஷிகாவின் கட்டுப்பாட்டை மீறி கார் சாலை மையத் தடுப்பில் கடுமையாக மோதியுள்ளது.

யாஷிகாவின் உடல்நலம் எவ்வாறு உள்ளது?

யாஷிகா ஆனந்த்

பட மூலாதாரம், Twitter/Yashika Anand

படக்குறிப்பு, யாஷிகா ஆனந்த்

இந்தச் சம்பவத்தில் வந்திரெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். யாஷிகாவுக்கு கால் முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது. இவர்களோடு காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்று பேரும் சேர்க்கப்பட்டனர். அதன்பின்னர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். காரை அதிவேகமாக ஓட்டி வந்தது, அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிரிழப்பை ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் யாஷிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்கின்றனர்.

``குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளனர்" என சூளேரிக்காடு பகுதி மக்கள் கூறினாலும், முதல் தகவல் அறிக்கையில் அதுதொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :