நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செய்த மாயாஜாலம்: 30 ஆண்டு கால தாராளமய பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அஹமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
24 ஜூலை 1991 - இது இந்தியா பொருளாதார விடுதலை பெற்ற நாள் என்று கூறலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24 அன்று முன்வைக்கப்பட்ட பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமாக எழுதப்பட்டது.
இந்தியாவின் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில், உற்பத்தியிலிருந்து விலை நிர்ணயம் வரை அனைத்தையும் அரசாங்கம் தான் தீர்மானித்தது.
இந்த அமைப்பு உரிம அனுமதி ஆதிக்கம்( லைனென்ஸ் பெர்மிட் ராஜ்) என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது.
இதற்கு மாறாக, தாராளமயப் பொருளாதாரத்தில், தனியார் நிறுவனங்களின் சுதந்தரத்தை ஊக்குவிக்கவும், தனியார் துறையை ஊக்குவிக்கவும், அரசாங்க முதலீட்டைக் குறைக்கவும், திறந்த சந்தையை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் பல பொருளாதார சீர்திருத்த திட்டங்களை அந்த 1991 ஜூலை 24 பட்ஜெட் மூலம் அறிவித்தது அன்றைய அரசாங்கம்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
•உள்நாட்டுச் சந்தையில் நிறுவனங்களிடையே போட்டியை ஊக்குவிக்கும் அறிவிப்பு வெளியானது.
•உரிம ஆதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நிறுவனங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
•இறக்குமதி உரிமங்களுக்குத் தளர்வுகளும் ஏற்றுமதி அதிகரிப்புக்கு ஊக்கமும் அளிக்கப்பட்டு புதிய ஏற்றுமதி- இறக்குமதிக் கொள்கைக்கு வித்திடப்பட்டது.
•அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. நேரடி அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகும் என்று கூறப்பட்டது.
•மென்பொருளை ஏற்றுமதி செய்வதற்கான வருமான வரிச் சட்டத்தின் 80HHC பிரிவின் கீழ் வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த முக்கியமான பட்ஜெட் நவீன இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதற்கான பெருமையனைத்தும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அவரது நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகிய இருவரையே சேரும். அந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து டாக்டர் சிங் பாராளுமன்றத்தில், "எந்த ஒரு சிந்தனையும் அதற்கான நேரம் வந்தால் யார் தடுத்தாலும் நிற்காது" என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் விக்டர் ஹ்யூகோவின் சொற்களை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
அதாவது, இந்தியா ஒரு பெரிய சக்தியாக பொருளாதாரமாக உருவெடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் அவர் கூறியதன் உட்பொருள்.
மன்மோகன் சிங்கின் தன்னம்பிக்கையான சொற்களுக்கு மாறாக, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான நிர்ப்பந்தத்தில், மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் அப்போது இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசார் பாரதியின் முன்னாள் தலைவரான சூர்யா பிரகாஷ் அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் மூத்த பத்திரிகையாளராக இருந்தார்.
பிபிசியுடன் பேசிய அவர், "இது காலத்தின் கட்டாயம் என்பது என் கருத்து. ஆனால் ஒரு தேசத்தின் சரித்திரத்தில் நிர்ப்பந்தம் ஏற்படுவது என்பது மிகப்பெரிய சவாலாகும். அந்தச் சவாலைத் துணிவுடன் ஏற்று நடந்தால், மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நோக்கி செல்ல முடியும். 1991 ஆம் ஆண்டின் நெருக்கடி அது போன்ற ஒரு நிர்ப்பந்தம் தான். இரண்டாவதாக, நரசிம்மராவ் போன்ற ஒரு மூத்த தலைவரை அந்த நேரத்தில் பிரதமராகப் பெற்றது இந்த நாட்டின் பேறு. அவர் மிகவும் தொலை நோக்குச் சிந்தனையுடன் நடவடிக்கைகளை எடுத்து நாட்டிற்கு நல்வழி காட்டினார். நாடு பயணிக்கும் திசையும் வேகமும் இதனால் பெரிதும் மாறியது." என்று கூறுகிறார்.
இந்த நிலை எப்படி ஏற்பட்டது?

பட மூலாதாரம், Getty Images
சுதந்தரத்திற்குப் பின்னரே இந்தியா பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது. பொருளாதார சீர்திருத்தங்களின் தேவை உணரப்பட்டது. ஆனால் இது குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒருபோதும் ஒருமித்த கருத்து இருந்ததில்லை. இந்திரா காந்தி 1966 இல் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. ராஜீவ் காந்தி கணினிகள் மற்றும் வண்ண தொலைக்காட்சிகளைக் கொண்டுவந்தார். ஆனால் பொருளாதார சீர்திருத்தத்தின் பாதை சரியாக வகுக்கப்படவேயில்லை.
இதற்கிடையில், 1980 களில், இந்தியாவின் பொருளாதார பிரச்னைகள் அதிகரித்தன. 1990 வாக்கில் இவை கடுமையான பொருளாதார நெருக்கடியாக உருமாறின. அப்போது யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராகவும், சந்திரசேகர் பிரதமராகவும் இருந்தார்.
பிபிசி இந்தியுடன் ஒரு சிறப்பு உரையாடலில், அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, "பிரபல பொருளாதார நிபுணர் ஐ.ஜி. படேல் 1991 ல் பெங்களூரில் ஒரு சொற்பொழிவின் போது கூறியதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 80 களில் குறிப்பாக கடைசி ஐந்து ஆண்டுகள், சிறிதும் கவலையின்றிச் செலவு செய்து வந்தது அரசாங்கம் என்று அவர் கூறினார்." என்று நினைவு கூர்ந்தார்.
மூத்த பத்திரிகையாளர் சங்கர் ஐயரின் கூற்றுப்படி, 1988 ஆம் ஆண்டில், சர்வதேச செலாவணி நிதியம், இந்தியா ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கி வேகமாக நகர்கிறது என்றும் அதிலிருந்து மீள, கடன் பெறுமாறும் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தியது. ராஜீவ் காந்தி இந்த ஆலோசனைக்கு உடன்பட்டாலும் பொதுத் தேர்தல்கள் நெருங்கிவிட்டதால் அவர் இது குறித்துக் கவனம் செலுத்தத் தவறிவிட்டார். அவருடைய கட்சியின் மூத்த தலைவர்ளும் அப்போது அதற்குத் தயாராக இல்லை.
1989 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, வி.பி.சிங் அரசாங்கம் அமைக்கப்பட்டது. வி.பி. சிங் பிரதமர் பதவியில் அமர்ந்தபோது, ஆரம்ப நாட்களில் அரசாங்க கருவூலம் காலியாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
வி.பி. சிங் அரசாங்கம் இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஒரு பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கி, ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கவிழ்ந்தது. அடுத்ததாக சந்திரசேகர் பிரதமரானார், யஷ்வந்த் சின்ஹா அவரது நிதியமைச்சராகவும், டாக்டர் மன்மோகன் சிங் அவரது பொருளாதார ஆலோசகராகவும் ஆனார்கள்.
அதற்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னும் தீவிரமாகிவிட்டது. மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தாவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அளித்த பேட்டியில், அந்தக் காலத்தை நினைவு கூர்ந்த டாக்டர் சிங், "இந்தியா நெருக்கடியில் இருந்த சமயத்தில் சந்திரசேகர் பிரதமரானார். பொருளாதார ஆலோசகராக அறிவுரை வழங்குமாறு என்னைக் கேட்டார். என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன்." என்று கூறினார்.
அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிறைந்த அந்த சூழலில், புதிய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் சவால்கள் இன்னும் அதிகரித்தன. இது குறித்து அவர் பிபிசி இந்தியிடம், "நான் 1990 டிசம்பரில் நிதியமைச்சராக இருந்தபோது, அந்த நேரத்தில் இந்தியாவில் அந்நியச் செலாவணி இருப்பு இரண்டு பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. அதாவது அடுத்த இரண்டு வாரங்களுக்கான இறக்குமதிச் செலவுகளுக்கு மட்டும் தான் கையிருப்பு இருந்தது. " என்று தெரிவித்தார்.
தங்கத்தை அடகு வைத்தல்
அந்த நேரத்தில் ஏற்கெனவே கடனின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவிற்கு மேலும் கடனும் தேவைப்பட்டது. பல நாடுகளின் குறுகிய காலக் கடன்களின் சுமை இந்தியாவை அழுத்தியது. தவணைகள் மொத்தமாக சுமார் 5 பில்லியன் டாலராக இருந்தது. கடனுக்கு வட்டி செலுத்த பணம் இல்லை.
யஷ்வந்த் சின்ஹா கூறுகிறார், "நான் நிதி அமைச்சர் ஆவதற்கு முன்பு, 5 பில்லியன் டாலர் குறுகிய கால கடன் பெறப்பட்டிருந்தது. குறுகிய கால கடன் என்றால் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையான கடன். நேரம் முடிந்ததும், அதை திருப்பிச் செலுத்த வேண்டும். நம்மிடம் மிகக் குறைந்த அளவு அந்நியச் செலாவணி கையிருப்பே இருந்ததால், கடன் தொகை திரும்பச் செலுத்த முடியாதவர்களாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம் எழுந்தது."
கொடுப்பனவு நிலுவையில் ஏற்றத்தாழ்வுடன் தொடங்கிய கடுமையான பொருளாதார நெருக்கடி, பின்னர் நடப்புக் கணக்கில் ஏற்றத்தாழ்வு காரணமாக மிகவும் தீவிரமானது. இத்தகைய சூழ்நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு வங்கியில் ஒன்றிய அரசு அடமானம் வைத்தது, இவை அனைத்தும் ரகசியமாக செய்யப்பட்டன, ஆனால் இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையால் நாட்டிற்குப் பொருளாதார நிவாரணம் ஒன்றும் பெரிதாகக் கிட்டவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சில மாதங்களுக்குப் பிறகு, நரசிம்மராவ் அரசாங்கம் ரிசர்வ் வங்கியில் வைத்திருந்த நாட்டின் தங்க இருப்புக்களை இரண்டு வெளிநாட்டு வங்கிகளுக்கு அடமானம் வைத்தது. இதுவும் ரகசியமாக வைக்கப்பட்டது, ஆனால் அது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இன் புலனாய்வுப் பத்திரிகையாளரால் அம்பலப்படுத்தப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் சுசேதா தலால் பெயர் ஹர்ஷத் மேத்தா ஊழல் வழக்கில் பிரபலமானதைப் போல, 1990-91 காலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியின் உண்மையை வெளிக்கொண்டு வந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் ஷங்கர் ஐயரின் பெயரும் பிரபலமானது. இந்திய அரசாங்கத்தின் இந்தச் சர்ச்சைக்குரிய நடவடிக்கையின் திரையை விலக்கும் பணியை அவர் செய்திருந்தார்.
பிபிசியுடன் பேசிய அவர், "ஒரு குடும்பத்தில் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்படும்போது, கடைசி கட்டமாக, பெண்களின் நகைகள் அடமானம் வைக்கபடுகின்றன. நாட்டின் நிதி நெருக்கடி எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை முதல் முறையாக மக்களுக்கு உணர்த்தியது எனது செய்தி" என்று கூறுகிறார் அவர்.
நாட்டின் தங்கம் வெறும் 400 மில்லியன் டாலர்களுக்கு அடமானம் வைக்கப்பட்டது. இந்தத் தொகை இன்றைய தொழிலதிபர்களுக்கு ஒரு சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால், அந்தக் கால கட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் சந்திரசேகரைக் கடுமையாகச் சாடினார்கள்.
அந்த நாட்களை நினைவு கூர்ந்த யஷ்வந்த் சின்ஹா, "எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் அப்போது பாட்னாவில் இருந்தேன், தேர்தலில் போட்டியிடச் சென்றிருந்தேன். எனது கையொப்பத்தைப் பெற நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் என்னிடம் வந்தார். தங்கத்தை அடமானம் வைப்பது அரசின் முடிவு என்றும் வெளியிலிருந்து ராஜீவ் காந்தியும் இதற்கு ஆதரவளிக்கிறார் என்றும் தெரிந்ததால், நான் கையெழுத்திட்டேன்." என்கிறார்.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு இதனால் பெரிய அவப்பெயர் ஏற்பட்டது. "நாட்டின் தங்கத்தை அடகு வைக்கும் பணியைச் செய்த மாமனிதர் இவர்தான் என்று தேர்தல் பிரச்சாரங்களில் எதிர்க் கட்சிகள் கூறி வந்தன," என்று அவரே குறிப்பிடுகிறார்.
வளைகுடா போரும் எண்ணெய்ப் பற்றாக்குறையும்
தங்கத்தை அடகு வைத்ததால் இந்திய அரசுக்கு அதிக நன்மை கிடைக்கவில்லை. பொருளாதார நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், வளைகுடாப் போர் தொடங்கியது, இது இந்தியாவுக்கு இரண்டு விளைவுகளை ஏற்படுத்தியது - முதலில், இராஜதந்திர ரீதியாக, இந்தியா தனது அருகாமை நாடான ஈராக்குக்கு ஆதரவளிப்பதா அமெரிக்காவுக்கு ஆதரவளிப்பதா என்ற நெருக்கடிக்கு உள்ளானது.
இரண்டாவது, போரின் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையை எப்படிக் கையாள்வது என்ற சிக்கல். போருக்கு முன்னர், இந்தியா ஒவ்வொரு மாதமும் 500 கோடி ரூபாய் எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிட்டது. ஆனால் போர் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு மாதமும் 1200 கோடி ரூபாய் செலவிடப்பட வேண்டியிருந்தது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சந்திரசேகர் அரசாங்கம் சர்வதேச செலாவணி நிதியத்தின் உதவியை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஷங்கர் ஐயர், " சிறுபான்மை அரசாங்கமாக இருந்த போதிலும், அவர் (சந்திரசேகர்) ஒரு தைரியமான முடிவை எடுத்தார். சர்வதேச செலாவணி நிதியத்தில் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. அப்போது, சுப்பிரமணியன் சுவாமி வணிக அமைச்சராக இருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறையுடன் பேசி, அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும் என்று சந்திரசேகர் அவரிடம் கூறினார்." என்று விவரிக்கிறார்.
வளைகுடாப் போரில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப இந்தியாவின் விமான நிலையங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி தேவைப்பட்டது. அதற்கு சுவாமி ஒப்புக்கொண்டார். "ஒப்பந்தம் எட்டப்பட்டு மறுநாள் முதல் விமானம் இந்தியாவில் தரையிறங்கியது, சர்வதேச செலாவணி நிதியம் இந்தியாவின் ஜாமீன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது," என்று ஷங்கர் ஐயர் கூறுகிறார்.
இது சந்திரசேகர் மற்றும் சுப்பிரமணியன் சுவாமியின் அறிவால் நடந்தது. சர்வதேச செலாவணி நிதியத்தைத் தவிர, அவருக்கு எந்தக் கடனும் கொடுக்க யாரும் தயாராக இல்லை என்ற நிலை அப்போது இருந்தது.
டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு
சர்வதேச செலாவணி நிதியத்தின் கடனைப் பெறுவதற்கு 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதில் இந்தியாவின் பொருளாதாரத்தைத் திறந்துவிடுவது மற்றும் அரசாங்க நிறுவனங்களின் முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
1991 மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. ராஜீவ் காந்தி, நரசிம்மராவுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்தார். அவரும் அரசியலிலிருந்து பாதி ஓய்வு பெற்றிருந்தார். ஆனால் காலத்தின் தீர்ப்பு வேறாக இருந்தது. ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். தலைவராக நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டி ஆட்சியும் அமைத்தார்.
நிதியமைச்சர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்த முதல் தேர்வு பொருளாதார நிபுணர் ஐ.ஜி.படேல். ஆனால் அவர் ராவின் கோரிக்கையை நிராகரித்தார். அதன் பிறகு, முன்னர், சந்திரசேகரின் பொருளாதார ஆலோசகராக இருந்த மன்மோகன் சிங் மீது பிரதமரின் கண்கள் விழுந்தன. பின்னர் அவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
"சர்வதேச நிதி அமைப்புகளில் டாக்டர் சிங்கிற்கு நல்ல செல்வாக்கு இருந்ததால் பிரதமர் அவரை நிதியமைச்சராக்க எண்ணினார். இதன் மூலம், சர்வதேச வங்கிகளிடமிருந்து எளிதாக கடன்களைப் பெற முடியும் என்பது அவரது கணக்கு." என்கிறார் ஷங்கர் ஐயர்.
டாக்டர் சிங் நிதி அமைச்சரானதும், நரசிம்மராவ் ஒருபோதும் அவரைக் கைவிடவில்லை. சூர்யா பிரகாஷ் கூறுகிறார், "ஒவ்வொரு வாரமும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதார தாராளமயமாக்கலை விமரிசித்து மன்மோகன் சிங்கைத் தாக்கிவந்தனர். ஆனால் நரசிம்மராவ் அவருக்கு உறுதுணையாக இருந்து ஆதரவளித்தார். ஐந்தாண்டுகளும் தனது ஆதரவை அளித்து அவரை முன்னிறுத்தினார்."
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நரசிம்மராவ் பத்திரிகையாளர் சேகர் குப்தாவுக்கு அளித்த பேட்டியின் போது, "டாக்டர் மன்மோகன் சிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துப் போக முயற்சித்தார். நான் அதற்கு ஒரு பாறை போல உறுதியாக ஆதரவளித்தேன்" என்று கூறினார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க 1991 ஜூலை 24
நரசிம்மராவ் அரசாங்கம் ஜூன் மாதத்தில் அமைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த பிரபலமான பட்ஜெட் முன்வைக்கப்பட்டது, இது நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது. அந்த நாள் ஜூலை 24. ஆண்டு 1991. பொதுவாக ஒரு பட்ஜெட்டைத் தயாரிக்க மூன்று மாதங்கள் ஆகும், ஆனால் மன்மோகன் சிங்குக்கு ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருந்தது.
அவர், தாக்கல் செய்த பட்ஜெட், லைசென்ஸ் பெர்மிட் ராஜ் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கியது, தனியார் நிறுவனங்கள் வந்தன, வெளிநாட்டு நிறுவனங்களும் நுழைந்தன.
நரசிம்மராவ் தொழில் அமைச்சகத்தைத் தன்னிடம் வைத்திருந்தார். இந்த அமைச்சகத்தில் அதிக மாற்றம் தேவைப்பட்டது. ராவ் தனது தோழர்களின் எதிர்ப்பையும் மீறி ஒவ்வொரு சிறப்பான சீர்திருத்தத்தையும் கொண்டு வந்தார்.
விரைவில் அதன் நன்மைகள் தென்படத் தொடங்கின. பணம் பன்மடங்காகப் பெருகியது. அரசு நிறுவனங்கள் முதலீடுகளைத் திரும்பப்பெறத் தொடங்கின. அந்நிய முதலீடு வந்தது. வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் இந்திய நிறுவனங்கள் தோல்வியடையும் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்ளூர் சப்ளையர்களாக மட்டுமே இருக்கும் என்று அஞ்சப்பட்டதற்கு மாறாக,
நிறுவனங்கள் செழிக்கத் தொடங்கின. சந்தையில் வேலை வாய்ப்புகள் பெருகின. கோடிக்கணக்கான மக்கள் முதன்முறையாக வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்ந்தனர்.
தவறான நேரத்தில் வந்த சரியான மனிதர்
அந்தக் கால ஊடகங்கள் டாக்டர் மன்மோகன் சிங்கைத் தான் ஹீரோவாகக் காட்டினாலும் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் உண்மையான ஹீரோ பி.வி. நரசிம்மராவ் என்று சூர்யா பிரகாஷ் மற்றும் சங்கர் ஐயர் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Reuter Raymond/Sygma via Getty Images
ஆனால் 1991 ல் சந்திரசேகரின் அரசாங்கம் வீழ்ச்சியடையவில்லை என்றால், பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஹீரோக்கள் சந்திரசேகர் மற்றும் யஷ்வந்த் சின்ஹா என்றே அறியப்பட்டிருப்பார்கள். காரணம், யஷ்வந்த் சின்ஹா 1991 வரவு செலவுத் திட்டத்தை தயாரித்திருந்தார்.
பொருளாதார சீர்திருத்தத்தின் பல முடிவுகள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. பிப்ரவரி 28 அன்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவிருந்தது, ஆனால் அரசாங்கம் காங்கிரஸ் ஆதரவை இழந்து, இடைக்கால பட்ஜெட்டைத் தான் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்ய முடிந்தது.
அந்தத் தருணத்தை நினைவு கூர்ந்து, யஷ்வந்த் சின்ஹா கூறுகிறார், "பிப்ரவரி 28 அன்று நாங்கள் பட்ஜெட்டை முன்வைத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து, சர்வதேச செலாவணி நிதியத்திடம் 5-6 பில்லியன் டாலர் கடனைப் பெறுவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது சாத்தியமாகவில்லை. காரணம், நீங்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வையுங்கள் என்று காங்கிரஸ் கூறியதால், நெருக்கடி இன்னும் தீவிரமடைந்தது." என்கிறார்.
மேலும் கூறும் அவர், "இடைக்கால பட்ஜெட் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து, வீடு சென்று கைப்பட ராஜினாமா கடிதம் எழுதி சந்திரசேகருக்கு அனுப்பி விட்டு, அரசு வாகனத்தைத் திருப்பி அனுப்பிவிட்டு, அலுவலகம் செல்வதை நிறுத்திவிட்டேன்" என்று தெரிவித்தார்.
ஆனால் சந்திரசேகர் அவரை வற்புறுத்தினார், அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார், இறுதியாக அவர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார் (சில வாரங்களுக்குப் பிறகு அரசாங்கம் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.)
"பட்ஜெட் உரையைத் தவிர எல்லாம் தயாராக இருந்தது. பட்ஜெட் உரை நிகழ்த்தப்படவில்லை. ஆனால் இடைக்கால பட்ஜெட் உரை நிகழ்ந்தது. அந்த இடைக்கால பட்ஜெட் உரையைப் பாருங்கள், ஜூலை மாதம் மன்மோகன் சிங் முன்வைத்த பட்ஜெட் உரையையும் பாருங்கள். இரண்டும் ஒன்று போலவே இருக்கும். பல பத்திகளில் எங்கள் இடைக்கால பட்ஜெட்டில் நாங்கள் சொன்னது போலவே அதே விஷயங்கள் கூறப்பட்டுள்ளன." என்று யஷ்வந்த் சின்ஹா கூறுகிறார்.
சந்திரசேகர் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது ஏன்?
ஷங்கர் ஐயர் இதை ஒப்புக்கொள்கிறார். பட்ஜெட்டை உருவாக்கிய இரு தலைவர்களின் அணிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. சந்திர சேகரின் அரசாங்கத்தை வெளியில் இருந்து ஆதரித்த காங்கிரஸ் கட்சிக்கு, யஷ்வந்த் சின்ஹா ஒரு பெரிய சீர்திருத்தத்தை அறிவிக்கப் போகிறார் என்று ஒரு தகவல் வந்ததாகவும், அதற்கான நற்பெயரை சந்திரசேகர் அரசாங்கம் பெறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் அதனால் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
ஷங்கர் ஐயர் கூறுகிறார், "சின்ஹா சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் பட்ஜெட்டை வழங்கியிருந்தால், நற்பெயர் அவருக்குக் கிடைத்திருக்கும். யஷ்வந்த் சின்ஹா பற்றி நான் எப்போதும் கூறுவது, அவர் தவறான நேரத்தில் வந்த சரியான மனிதர் என்பது தான். அதாவது அவரது நேரம். அவருக்கு ஒருபோதும் சரியாக இருந்ததில்லை, அதை யஷ்வந்த் சின்ஹாவும் ஏற்றுக்கொள்கிறார்.
சீர்திருத்தத்தை இன்னும் துரிதப்படுத்த வேண்டுமென்று ஒரு சாராரும் சீர்திருத்தத்தின் காரணமாக சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன, அவை குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் கூறினர். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு வரலாறு, தேசத்தை ஒரு பெரிய பொருளாதாரமாக ஆக்கியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பிற செய்திகள்:
- ராஜ் குந்த்ராவின் ஹாட்ஷாட்ஸ் செயலி: "என் கணவர் தயாரித்தது ஆபாச படம் அல்ல" - ஷில்பா ஷெட்டி
- தோற்றாலும் துவளாத 12 வயது 'ஒலிம்பிக் நம்பிக்கை' ஹெண்ட் ஸாஸா
- இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
- யார் இந்த மீராபாய் சானு? மன இறுக்கத்தில் விழுந்தது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












