நிர்வாண காட்சி விதிகள் தொடர்பில் கணவரை திட்டிய ஷில்பா ஷெட்டி: ராஜ்குந்த்ரா பற்றி போலீசிடம் என்ன சொன்னார்?

ராஜ்குந்த்ரா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆபாச படங்கள் தயாரிப்பு விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, கைதாகியுள்ள தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். அவரை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளால் ஏற்கெனவே ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் விசாரணையின்போது ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக நம்புவதாகக் கூறிய ஷில்பா ஷெட்டி, அது முழுக்க, முழுக்க லண்டனைச் சேர்ந்த நபரால் நிர்வகிக்கப்பட்ட செயலி என்றும் பணம் முதலீடு மட்டுமே ராஜ்குந்த்ரா தரப்பில் செய்யப்பட்டது என்று கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

என்ன ஆதாரம்?

ஹாட்ஷாட்ஸ் செயலியில் பதிவேற்றப்படும் மாடல்களின் படங்கள் மற்றும் தங்களுடைய ஓடிடி படங்களில் நடிக்க வரும் மாடல்கள், நடிகைகளுக்கான கவர்ச்சி கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக ராஜ்குந்த்ரா நடத்தி வந்த வாட்ஸ் அப் குரூப்பில் கிடைத்த கடிதப் பரிவர்த்தனை நகலை ஷில்பா ஷெட்டியிடமும் ராஜ் குந்த்ராவிடமும் காண்பித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த கடிதத்தில், ஓடிடி படங்களில் குறிப்பிட்ட நடிகையை வைத்து படம் எடுப்பதற்கு முன்பாக, அவரை பற்றிய குறிப்புகளை தயாரிப்பு நிறுவனமான தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவரை இறுதி செய்வதில் ஹாட்ஷாட்ஸ் அணியின் முடிவே இறுதியானது. தேர்வாகும் நபர், சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும். துணிச்சலான காட்சிகளில் மேல் பாக ஆடையின்றியும், பின்புறம் நிர்வாணமாகவும் நடிக்கக் கூடியவராக அந்த நடிகை இருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஷில்பா ஷெட்டி

பட மூலாதாரம், UNDOCUMENTED

படக்குறிப்பு, காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஹாட்ஷாட்ஸ் நிறுவனத்தின் மின்னஞ்சலில் இடம்பெற்ற மாடல்களுக்கான விதிகள்

அதைப் பார்த்த ஷில்பா ஷெட்டி, இதுபோன்ற வரிகள் ஆபாசத்தை தூண்டக்கூடியவை கிடையாது என்றும் அவை முழுக்க, முழுக்க படத்தின் கதைக்கு தேவைப்படும் கவர்ச்சி மட்டுமே என்றும் இதை நீதிமன்றத்தில் உரிய வகையில் தங்களுடைய தரப்பு வாதிடும் என்றும் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறின.

ஷில்பா ஷெட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போலீஸ் விசாரணைக்கு பிறகு அழைத்து வரப்படும் ராஜ்குந்த்ரா (இடமிருந்து இரண்டாவது)

இதைத் தொடர்ந்து ராஜ் குந்த்ராவிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, நடிகைகள் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டுவது தொடர்பான வரிகள், பிற தயாரிப்பு நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறைகள்தான் என்றும் அதையே தாங்களும் பின்பற்றியதாகவும் கூறினார்.

இதைக்கேட்ட ஷில்பா ஷெட்டி,ராஜ் குந்தராவை கடுமையாக திட்டியதாகவும் இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், "எனது மார்கெட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. என்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கிக் கொண்டு விட்டனர் என்று ஷில்பா கோபத்துடன் பேசினார்," என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, லண்டனில் இருந்து செயல்படும் ஹாட்ஷாட்ஸ் என்ற செயலி மூலம் ஆபாச படங்கள், காணொளிகளை பதிவேற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்ததாக ராஜ் குந்த்ரா மீதும் அவரது கூட்டாளிகள் சிலர் மீதும் மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஷில்பா ஷெட்டி

பட மூலாதாரம், SOCIAL MEDIA

பிணையில் வர முடியாத வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67ஏ பிரிவின்படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர இந்திய தண்டனை சட்டத்தின் வேறு சில பிரிவுகளின் கீழும் ராஜ் குந்த்ரா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆபாச பட விற்பனை மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ராஜ்குந்த்ரா ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்காக இந்தியாவில் உள்ள ஒரு தனியார் வங்கி மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் ஆப்ரிக்கா என்ற வங்கியின் கணக்குக்கு இடையே கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்ததையும் காவல்துறையினர் தங்கள் தரப்பு ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

கணவர் ராஜ் குந்த்ரா கைது நடவடிக்கைக்குப் பிறகு, அவருடன் தொடர்புபடுத்தி ஷில்பா ஷெட்டியை சமூக வலைதளங்களிஸ் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்பட்ட ஷில்பா ஷெட்டி, இந்த சவாலான கட்டத்தில் இருந்து மீளுவோம் என்று குறிப்பிட்டு தமது சமூக ஊடக பக்கத்தில் சில ஊக்கம் தரும் தகவல்களை பகிர்ந்திருந்தார்.

இருந்தபோதும், தான் வழக்கமாக பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி சூப்பர் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஷில்பா ஷெட்டி பங்கேற்கவில்லை. ராஜ் குந்த்ராவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது இந்த விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தாமல் இருக்க காவல்துறைக்கு உத்தரவிடுமாறு ஷில்பா ஷெட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படும் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :