கர்நாடக அரசியல்: எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகினார் - அடுத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று காலையில் அறிவித்த பி.எஸ். எடியூரப்பா, தமது ராஜிநாமா கடிதத்தையும் மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார். இதையடுத்து அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலோட்.

பட மூலாதாரம், KARNATAKA RAJ BHAVAN
முன்னதாக, பெங்களூருவில் உள்ள விதான் செளதா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசிய எடியூரப்பா, "முதல்வர் பதவியில் இருந்து நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன்," என்றார்.
"மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர்களின் விருப்பம் மற்றும் பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்," என்று எடியூரப்பா உணர்ச்சிபொங்க பேசினார்.
வாரிசு அரசியல் சர்ச்சை
மாநிலத்தில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக தமது மகன் விஜயேந்திராவை துணை முதல்வராக்க எடியூரப்பா முயல்வதாகவும் மாநிலத்தில் அவரது குடும்பம் அரசு விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருந்தன.
இந்த விவகாரத்தில் அவரை பாஜக மேலிடம் கடந்த வாரம் நேரில் அழைத்துப் பேசியது. பிரதமர் நரேந்திர மோதியும் அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து புதிய முதல்வருக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் எடியூரப்பா கூறி வந்தார். ஆனால், கட்சி தலைமை முடிவை அறிவிக்கும் முன்பே தமது ராஜிநாமா அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
எடியூரப்பாவின் பதவி விலகல் கடிதம் இன்று மாலை மாநில ஆளுநரிடம் வழங்கப்பட்டதும் அடுத்த முதல்வர் யார் என்பதற்கான தேர்வில் பாஜக மேலிடம் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படாத அரசியல் உத்தி

பட மூலாதாரம், Getty Images
இந்த அரசியல் நிகழ்வுகளின் பின்னணி தொடர்பாக பிபிசி இந்திக்காக செய்தியாளர் இம்ரான் குரேஷி வழங்கும் களத்தகவலை பார்க்கலாம்.
இந்தியாவில் ஒரு முதலமைச்சர், தான் பதவியில் இருந்து விலகும் முறையான அட்டவணையை அறிவிப்பதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தனது பதவி விலகும் திட்டத்தை பகிரங்கப்படுத்தியதன் மூலம், கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, கடந்த காலத்தில் தான் படைத்த பல சாதனைகளைப்போல, ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
2008ஆம் ஆண்டில் கர்நாடகாவில் தனி ஆளாக தேர்தல் களம் கண்டு பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தவர் எடியூரப்பா. இந்த முறை முதலமைச்சர் பதவியில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூலை 25 ஆம் தேதி, கட்சியின் மத்திய தலைமையிடமிருந்து வரும் அழைப்புக்காக தான் காத்திருப்பதாக வெளிப்படையாகக் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருக்கும் மாநில சட்டப்பேரவைத்தேர்தலில் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு தனது பணியை அடுத்த நாளே தொடங்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், எடியூரப்பா பதவியில் இருந்து விலக கேட்டுக் கொள்ளப்படுவாரா என்று கோவாவில் கட்சி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார். கர்நாடகா சிறப்பாக செயல்படுகிறது. தனது பாணியில் மாநிலத்தை எடியூரப்பா வழிநடத்துகிறார்," என்று கூறினார்.
இதையடுத்து மாநிலத்தில் தலைமை பதவிக்கு நெருக்கடி உள்ளதா என்று கேட்டபோது, "அப்படி நினைப்பது நீங்கள் தான். நாங்கள் அல்ல," என்று பதிலளித்தார் நட்டா.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தமது பதவி விலகல் முடிவை அலுவல்பூர்வமாக அறிவித்திருக்கிறார் எடியூரப்பா.
அசாதாரண முடிவுக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
கட்சியின் மத்திய தலைமையின் கட்டளையின்பேரில் பல முதலமைச்சர்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். சிலர் வேறொரு கட்சியில் இணைந்ததால் வெளியேறினர். மற்றவர்கள் கட்சியில் தொடர்ந்து நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியுள்ளனர்.
ஆனால், `ஒரு விதிவிலக்காக 78-79 வயது வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட்டதற்கு நன்றி கூறி' மத்திய தலைமை அறிவுறுத்தினால் முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக எடியூரப்பா சொன்னதுபோல், இதுவரையிலும் யாரும் சொன்னதில்லை. பிரதமர் நரேந்திர மோதி, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
2018 தேர்தலில் கட்சியின் முகமாக இருந்த எடியூரப்பா, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான தனது திட்டங்களை பகிரங்கமாகக் அறிவித்ததற்கு அவர் மீது அளிக்கப்பட்டுவரும் நெருக்குதலே காரணம் என்று கருதப்படுகிறது.
" பதவியில் தலைவர் நுழைவதற்கு அட்டவணை இருப்பதை நாம் பார்த்த்துள்ளோம். ஆனால் ஒரு தலைவரின் பதவி விலகலுக்கான நிகழ்ச்சி நிரலைப் பற்றி இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை, '' என்று அரசியல் வருணனையாளரும், 'சம்யுக்த கர்நாடகா' என்ற கன்னட நாளேட்டின் ஆசிரியருமான ஹன்சேவாடி ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார்.
" இந்த நிலைமை யதார்த்தமாக மாறுமா இல்லையா என்று சொல்வது மிகவும் கடினம். அடுத்த இரண்டு நாட்களில் எதுவும் நடக்கக்கூடும். ஏனெனில் பின்விளைவுகள் பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது," என்றார் ராஜன்.
நிச்சயமற்ற நிலைமை ஏன்?

பட மூலாதாரம், Getty Images
மாநில அரசியலில் எடியூரப்பாவுக்கு இருக்கும் அந்தஸ்தின் காரணமாகவும், கூடவே மாநிலத்தின் முக்கியமான லிங்காயத் சாதிக் குழுவின் மறுக்கமுடியாத தலைவராக அவர் இருப்பதாலும் நிச்சயமற்ற நிலை எழுகிறது.
கர்நாடகாவில் வெகுஜன தலைவராக இருந்த எடியூரப்பாவின் அந்தஸ்துதான், 2014ல் பிரதமராக வேண்டும் என்ற பிரசாரத்தைத் தொடங்கிய நரேந்திர மோதியை, தாய் கட்சியான பாஜகவுக்கே திரும்புமாறு எடியூரப்பாவுக்கு அழைப்பு விடச்செய்தது.
எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா பக்க்ஷா (கேஜேபி), 2013 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர். 2008 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று தென்னிந்தியாவில் கட்சிக்கான கதவுகளைத் திறந்துவைத்த எடியூரப்பா, கட்சியின் முக்கிய தலைவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் எடியூரப்பா 2011 மே மாதம் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியிருந்தது. தனது மகன்களால் நடத்தப்படும் அறக்கட்டளைக்கு பயனளிக்கும் விதமாக, அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்கமுயும்வகையில் மாற்றியதான இரண்டு வழக்குகளில், அந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் 23 நாட்கள் அவர் சிறையில் கழித்தார்.
அரசியல் ரீதியாக, அவர் பாஜகவின் மிக முக்கியமான தலைவராக உள்ளார். மேலும் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அவர் மோதியை ஏமாற்றவில்லை.
2018 ஆம் ஆண்டில், பாஜக அவரது வயதை புறந்தள்ளி அவரை மீண்டும் முதலமைச்சராக்கியது. உண்மையில் வயதின் அடிப்படையில் அவர் கட்சியின் 'வழிகாட்டிகள் குழு' வில் வைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், மாநிலத்தின் முக்கிய சாதிக் குழுவின் மீதான அவரது பிடி, கட்சி இதைச்செய்வதை தடுத்தது. (மாநில மக்கள்தொகையில் லிங்காயத்துகள் 17 சதவிகிதம்)
அத்தகைய தலைவர் கட்சியின் மத்திய தலைமையால் பதவி விலகுமாறு கேட்கப்படுவது, கட்சி வட்டாரங்களில் புருவங்களை உயர்த்தியுள்ளது. இது கட்சியின் எதிர்காலத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தின் ஒரு தலைவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதன் விளைவுகளை காங்கிரஸ் ஏற்கனவே அனுபவித்துள்ளது.
1990 அக்டோபரில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, வீரேந்திர பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். முந்தைய ஆண்டுதான், பாட்டீல் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 179 இடங்களை வென்றதன் மூலம் காங்கிரஸை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருந்தார்.
சக்திவாய்ந்த லிங்காயத் தலைவரான பாட்டீல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அத்வானியின் ரத யாத்திரை கர்நாடகா வழியாகச் சென்றபோது மிக மோசமான வகுப்புவாத மோதலும் ஏற்பட்டது. ராஜீவ் காந்தி பாட்டீலை சந்திப்பதற்கு முன்பு மாநிலத்தின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டதால், லிங்காயத்துகளில் பெரும் பகுதியினர் அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்களித்தனர்.
``அவர் (எடியூரப்பா) முதல்வரானதிலிருந்து கட்சிக்கு இருந்த மிகப்பெரிய அச்சம் இதுதான். இப்போதிலிருந்து இரண்டு வருடங்களில் ஒரு இளைய முதலமைச்சரை முன்நிறுத்துவது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது,'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பின்விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
"லிங்காயத் சமூகம் பாஜகவை விட்டுச்செல்லாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்பதற்கான முதல் அறிகுறியாக எடியூரப்பா பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார், "என்று அரசியல் ஆய்வாளரும், லிங்காயத் விவகாரங்கள் நிபுணருமான ரம்ஜான் தர்கா பிபிசியிடம் தெரிவித்தார்.
"கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் எவருடனும் இந்த சமூகம் செல்லும். ஏனெனில் அது அதிகாரத்தின் பக்கம் இருக்க விரும்புகிறது. 2013 தேர்தலில் லிங்காயத்துகள் பெருமளவில் பாஜகவுக்கு வாக்களித்தார்கள். எடியூரப்பாவின் கேஜேபிக்கு அல்ல என்பதை நாம் மறந்து விடக்கூடாது, ''என்று ராஜன் கூறுகிறார்.
கட்சியில் ஒரு மிகப்பெரியமாற்றமாக ராஜன் இதை பார்க்கிறார்.
"லிங்காயத்துக்கு பதிலாக மற்றொரு சமூகத்திலிருந்து ஒரு தலைவரை முன்வைப்பதன் மூலம் பரிசோதனை செய்ய கட்சி விரும்புகிறது. அதனால்தான், பிராமணர்களான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி (ஒரு வோகாலிகர்) போன்ற தலைவர்களின் பெயர்கள் , சாத்தியமான முதலமைச்சர் வேட்பாளர்களாக குறிப்பிடப்படுகின்றன,' என்று அவர் கூறினார்.
"லிங்காயத் சமூகத்தை தளமாகக் கொண்ட கட்சியாக இருக்க பாஜக விரும்பவில்லை. அதற்கு மாறாக ஒரு இந்துத்துவ கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அக்கட்சி விரும்புகிறது, அதன் வெளிப்பாடாகவே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவிடம், அவராகவே முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தத்தை பாஜக மேலிடம் கொடுத்துள்ளது," என்று ராஜன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த மூன்று-நான்கு நாட்களில், லிங்காயத் மட் சுவாமிஜியின் குழுக்கள் , மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த குழுக்கள் முதல் சிறிய குழுக்கள் வரை, எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்றதன்மூலம் லிங்காயத் சமூகம் அவரை முழுமையாக ஆதரிக்கிறது என்ற செய்தியை தெரியப்படுத்துகின்றன. 2023 வரை எடியூரப்பா முதல்வராக தொடர வேண்டும் என்று கூறும் அளவிற்கு ஒரு சுவாமிஜி சென்றார்.
தலைமை மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நிகழும் வழக்கமான அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களாக இவை காணப்படுகின்றன. "தேர்தல்களில் பாஜகவுக்கு லிங்காயத்துகள் அளிக்கும் ஆதரவு கட்சியின் தலைமையுடன் இணைக்கப்படலாம். ஆனால் இது பலவிதமான காரணிகளுடன் இணைந்துள்ளது, '' என்று பிரபல அரசியல் வர்ணனையாளரும், ஜாக்ரன் லேக்சிட்டி பல்கலைக்கழக துணைவேந்தருமான பேராசிரியர் சந்தீப் சாஸ்திரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"முக்கியமான காரணிகளில் ஒன்று, கட்சியின் கருத்தியல் கொள்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக்கொள்கையை லிங்காயத்துகள் ஏற்றுக்கொள்கின்றனர்,"என்று அவர் கூறினார். இந்த மாற்றத்தின் மற்றொரு முக்கியமான அம்சத்தை பேராசிரியர் சாஸ்திரி சுட்டிக்காட்டுகிறார்.
`` பாஜக எவ்வாறு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதைப் பார்த்தால், மத்திய தலைமையின் வலியுறுத்தல் மிகவும் வலுவாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இதை நீங்கள் கர்நாடகாவிலும் பார்க்கக்கூடும்," என்று அவர் விளக்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













