கர்நாடகாவில் நரேந்திர மோதி - அமித் ஷாவின் விருப்பத்தை மீறிய எடியூரப்பா

B. S. Yeddyurappa

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி,
    • பதவி, பிபிசிக்காக

கர்நாடக முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்கவுள்ள பி.எஸ்.எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியால், கட்சிக்குள் செய்ய முடியாத ஒன்றையே செய்துள்ளார் .

பிரதமர் நரேந்திர மோதி, பாஜகவின் தேசிய தலைவரும் நடுவண் அமைச்சருமான அமித் ஷா ஆகிய இந்தியாவின் இரு அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளின் கட்டுப்பாடுகளை எப்படியோ சமாளித்து மீறியுள்ளார்.

அத்வானிக்கு 75 வயதானதும் மேற்கண்ட இருவரும் அவரை, கட்சிக்குள் அதிக முக்கியத்துவம் இல்லாத "வழிகாட்டுதல் குழுவுக்கு" (மார்க்கதர்ஷக் மண்டல்) அனுப்பி வைத்தனர். ஆனால், 76 வயதான தம்மை எடியூரப்பாவை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை தற்போது மோதி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு ஏற்படுத்தியுள்ளார் எடியூரப்பா.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சியை அகற்ற தனக்கு மோதி மற்றும் ஷா ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அவர் அவர்கள் இருவருக்கும் கடிதங்கள் எழுதினார்.

அந்தக் கடிதங்களின் உட்பொருள், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்ததற்கான காரணகர்த்தாவாக தம்மையே முன்னிறுத்திக்கொள்கிறார் என்பதே.

காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தவிர கர்நாடக முழுவதும் பரவலான ஆதரவு பெற்ற ஒரே தலைவராக எடியூரப்பாவே உள்ளார் என்பதால், பாஜக தேசியத் தலைமைக்கும் வேறு வழியில்லை.

நரேந்திர மோதி - அமித் ஷா

பட மூலாதாரம், EUROPEAN PHOTOPRESS AGENCY

பெரும்பான்மை சாதியினரான லிங்காயத்துகளின் ஆதரவும் அவருக்கு உள்ளது.

2019 மக்களவைத் தேர்தல் வரை எச்.டி. தேவேகௌடா குடும்பத்தினருக்கு பெரும் ஆதரவு வழங்கும் வொக்கலிகா சாதியினர் தெற்கு கர்நாடக பகுதியிலேயே உள்ளனர். ஆனால் லிங்காயத்து சாதியினர் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியுள்ளனர்.

1989இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற அடுத்த ஆண்டே வீரேந்திர பாட்டீல் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுதான் லிங்காயத்து சமுதாயத்தினருக்கு அரசியலில் மோசமான காலகட்டமாக இருந்தது.

அத்வானியின் ரத யாத்திரைக்குப் பிறகு தேவநகரியில் உண்டான மதக் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மற்றும், பெங்களூரு விமான நிலையத்தில் அவருக்கு உண்டான பக்கவாதம் ஆகியவற்றால் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வீரேந்திர பாட்டீலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.

அப்போது ஜனதா கட்சிக்கு தங்கள் ஆதரவை மாற்றிக்கொண்ட லிங்காயத்துகள், பின்னர் பாஜகவுக்கு பெரும்பாலும் ஆதரவளிக்கின்றனர்.

"வீரேந்திர பாட்டீல் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதவளிப்பதில்லை; அது எங்களுக்கும் நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை," என்று பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

எனினும் அரசியல் ஆய்வாளர் சந்தீப் சாஸ்திரி அதில் உடன்படவில்லை. "எடியூரப்பாவுக்கு கட்சியின் மத்தியத் தலைமையிடம் பெரும் ஆதரவு இருப்பதாக நான் கருதவில்லை; 2014இல் நடுவண் அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டபோது அதை அவர் மறுத்தார், " என்கிறார் சந்தீப் சாஸ்திரி.

அத்வானி

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தேர்தல் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி ஆகிய இரண்டில் ஒன்று நடக்கும் என்று அவர் கணிக்கிறார்.

"உங்கள் அமைச்சரவை அமைக்கப்பட்ட உடனேயே ஒரு பெரும் அதிர்வை நீங்கள் உணர்வீர்கள். நேரடியாக மக்களிடம் செல்வதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்," என்று நம்பிக்கை வாக்கெப்பின்போது சட்டமன்றத்தில் குமாரசாமி தெரிவித்தார்.

இதன்மூலம், தமது ஆட்சியை அகற்ற உதவிய சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பாவுக்கும் அதையே செய்வார்கள் என்று குமாரசாமி தமது பாணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2007இல் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாரதிய ஜனதா கட்சிகளின் கூட்டணி ஆட்சியின்போது முன்பு ஒப்புக்கொண்டபடி பதவி விலக குமாரசாமி மறுத்தார்.

பின்னர் 2008இல் எடியூரப்பா முதல்வரானார். ஆப்ரேஷன் கமலா - 1 மூலம் அப்போது அவருக்கு பெரும்பான்மை கிடைத்தது. அதாவது எதிர்க்கட்சி உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, அவர்களை பாஜக சார்பில் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைத்து, தங்கள் பலத்தை அதிகரிப்பது.

ஆனால், அப்போது கட்சி மாறி வந்த உறுப்பினர்களால் எடியூரப்பாவுக்கு தொடர் சிக்கல் இருந்தது.

குமாரசாமி, எடியூரப்பா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குமாரசாமி (இடது) மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா

எனினும், 2008-2011 காலகட்டத்தில் பாஜக அரசு சந்தித்த அத்தகைய சிக்கலை இந்த முறை எதிர்கொள்ளும் சூழல் வராது என்று முந்தைய பாஜக மாநில அரசில் சட்ட அமைச்சராக இருந்த சுரேஷ் குமார் கூறுகிறார்.

யாரும் அதிருப்தியில் இருப்பதாக தமக்குத் தோன்றவில்லை என்று அவர் கூறுகிறார்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தின் 20 உறுப்பினர்கள் பாஜக அணிக்கு வந்தபின் எடியூரப்பாவின் வீட்டு முன்பு போராட்டம் நடந்தது. பாஜகவினரின் நலன்கள் சீர்குலைக்கப்படாது என்று அவர்களுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

"ஒரு நீண்டகால பிரச்சனைக்கான குறுகியகால பதில் அவர்களுக்கு வேண்டாமா," என்கிறார் சந்தீப் சாஸ்திரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :