இந்திரா காந்தி வாஜ்பேயி, அத்வானிக்காக காங்கிரஸ் எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொன்னாரா? #BBCFactCheck

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி
பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில், வாஜ்பேயி மற்றும் அத்வானி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக உதவும் வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொன்னதாக குறிப்பிடும் இந்திய இளைஞர் காங்கிரஸின் இணையதள பத்திரிகையின் ட்விட்டர் பதிவு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"பலம் நிறைந்த ஒன்றுக்கும், பலவீனமான ஒன்றுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதே ஜனநாயகம். அந்த வகையிலே, வாஜ்பேயி மற்றும் அத்வானிக்கு இந்திரா காந்தி வாய்ப்பு வழங்கினார்" என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதே கருத்துகளை கொண்ட பதிவுகள் சமீபத்தில் ஃபேஸ்புக்கிலும் பரவி வருகின்றன.
"மக்களவையில் பாஜக ஓர் உறுப்பினரைக்கூட கொண்டிராதபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைத்து, அந்த இடத்தை வாஜ்பேயி மற்றும் அத்வானிக்கு கொடுத்தார்" என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி - பதில்களை அடிப்படையாக கொண்ட கோரா எனும் இணையதளத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்களை பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை அறிவதற்கு பிபிசியின் வாசகர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்த கூற்று முற்றிலும் தவறானது என்பதை கண்டறிந்துள்ளோம்.
கூற்றின் உண்மைத்தன்மை

பட மூலாதாரம், Getty Images
1980ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, அதாவது 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.
1984 அக்டோபர் மாதம் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில்தான் பாஜக முதல் முறையாக தேர்தலை சந்தித்தது.
அந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 404 தொகுதிகளில் வெற்றிபெற, இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.
அந்த தேர்தலில் பாஜக வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இந்திய மக்களவைத் தேர்தல் வரலாற்றில் பாஜக வென்ற குறைந்தபட்ச இடங்களாக தற்போதுவரை இதுவே நீடிக்கிறது.
அதாவது, குஜராத்திலிருந்து ஏ.கே. பட்டேல் என்பவரும், ஆந்திரப்பிரதேசத்திலிருந்து சண்டுபட்ல ஜங்கா ரெட்டி என்பவரும் பாஜகவின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தனர்.
குவாலியர் தொகுதியில் போட்டியிட்ட வாஜ்பேயி தோல்வியடைந்தார்.
அதே வேளையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி 1970 முதல் 1994 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரஷீத் கிட்வாயிடம் கேட்டபோது, "இது மிகவும் அபத்தமான போலிச் செய்தி. 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன்னதாகவே இந்திரா காந்தி இறந்துவிட்ட நிலையில், இந்த விவகாரத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் வினோத் சர்மாவும் இந்த செய்தி போலியானது என்பதை உறுதி செய்தார்.
"இது முற்றிலும் தவறான செய்தி. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரை பதவிலிருந்து நீக்குவதே அசாதாரணமான ஒன்றாக இருக்கும்போது, அதை மற்றொரு கட்சியை சேர்ந்தவருக்கு கொடுப்பது நடைமுறையில் ஒத்துவராது" என்று வினோத் கூறுகிறார்.
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமொன்றை எழுதிய மூத்த பத்திரிகையாளர் கும்கும் சத்தாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "அச்சமயத்தில் வாஜ்பேயி, அத்வானி போன்றோரும் பெரிய தலைவர்களாக இருந்தனர். இதுபோன்ற சம்பவம் ஏதாவது நடந்திருந்தால், அதை அவர்கள் ஒப்புக்கொண்டிருப்பார்கள். இதுபோன்ற விடயத்தை நான் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை" என்று கூறினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












