இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு - தற்போதைய நிலை என்ன?

இலங்கை தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு

பட மூலாதாரம், CARL COURT

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (மே 21) ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், இலங்கையில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் இதுவாக அமைந்திருந்தது.

மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று காலை 8.45க்கு கொழும்பு கொச்சிகடை தேவாலயத்தை இலக்கு வைத்து முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளாக கிங்ஸ் பேரி, ஷாங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகியவற்றின் மீதும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இலங்கை தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு - மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

பட மூலாதாரம், ANADOLU AGENCY/GETTY IMAGES

காலை 8.45 முதல் 9.30 வரையான குறுகிய காலத்திற்குள்ளேயே இந்த அனைத்து தாக்குதல்களும் நடத்தப்பட்டன. தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பல வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சித்த வேளையில், பயங்கரவாதிகள் பாதுகாப்பு பிரிவை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரிவினரும் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தினார்கள்.

அத்துடன், சாய்ந்தமருது பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் தமது குடும்பத்தாருடன் குண்டை வெடிக்க செய்து, தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த சம்பவத்தில் மாத்திரம் சுமார் 15 பேர் வரை உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு தடவைகள் ஏற்பட்ட அமைதியின்மையினால் சமூக வலைத்தளங்களுக்கு அரசாங்கம் பல முறைகள் தடை விதித்திருந்தது.

இலங்கை தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு - மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

பட மூலாதாரம், ANADOLU AGENCY

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், இந்த தாக்குதலை தாமே நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பின்னர் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கையில் 9 வருடங்களின் பின்னர் அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களில் ஊடாக இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 89 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 69 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினர் வசமும், 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வசமும் காணப்படுவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் நாட்டின் முக்கிய இடங்களில் கடமையாற்றியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதிகள் பயற்சிகளை பெற்றதாக கூறப்படும் பல முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பு, நுவரெலியா, குருநாகல் போன்ற பகுதிகளிலேயே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலத்தில் நடத்தப்பட்ட பல சோதனை நடவடிக்கைகளின் போது ஆயுதங்கள், வெடிப் பொருட்கள், சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் என பல பொருட்கள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தன.

அத்துடன், வீதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, முப்படையினர் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையையும் காண முடிகின்றது.

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

இதேவேளை, இந்த தாக்குதல் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து இன்று வரையான ஒரு மாத காலம் வரை நாட்டின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை முழுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள அதேவேளை, சில தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட பிரபல வர்த்தக நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த தாக்குதலை தொடர்ந்து, முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கும் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது,

மேலும், இந்த தாக்குதலை நடத்திய குழுக்கு சொந்தமானது என கருதப்படும் 140 மில்லியன் ரூபாய் (இலங்கை பெறுமதி) பணம் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கடந்த 6ஆம் தேதி தெரிவித்தார்.

இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள பணத்தில் ஒரு தொகை பணம், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஹ்ரான் ஹாசிம்
படக்குறிப்பு, சஹ்ரான் ஹாசிம்

அத்துடன், ஏனைய பணம் வங்கி கணக்குகளில் காணப்படுவதாகவும், அந்த வங்கி கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த பயங்கரவாத குழுவிற்கு சொந்தமானது என கருதப்படும் 7 பில்லியன் ரூபாய் (இலங்கை பெறுமதி) பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்த குழுவின் சொத்துக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு, அவை அரசுடமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 14ஆம்தேதி வெளியிடப்பட்டது.

இதன்படி, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, இலங்கையில் முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் பல பகுதிகளின் மீது அடையாளம் தெரியாத குழுவினர் கடந்த சில தினங்களாக தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

குறிப்பாக வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளிலுள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டிருந்தன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், VALERY SHARIFULIN

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்த தாக்குதலை அடுத்து நாட்டில் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியிருந்த பின்னணியில், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பல தடவைகள் போலீஸ் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கையில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.

இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பௌத்த விகாரைகள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்புக்கு மத்தியிலேயே பக்தர்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்கி வருகின்றமையைகூட காணமுடிகின்றது.

அதுமாத்திரமின்றி அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்புக்காக முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவ்வாறான அச்ச நிலைமை தொடர்கின்ற நிலையில், தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு மாதமாகின்ற பின்னணியில், இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து இடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :