அ.தி.மு.க பொறுப்புகளிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் விலகல்: காரணம் என்ன?

அ.தி.மு.கவில் தாம் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் அறிவித்தித்திருக்கிறார். மாவட்ட அமைச்சருடனான மோதலால், கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் வெங்கடச்சாலத்தின் விலகல் ஏன், இது என்ன விளைவை ஏற்படுத்தும்?
முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், தான் வகித்துவந்த அம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி, முதல்வரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இருந்தபோதும் கட்சியின் அடிப்படைத் தொண்டராகத் தொடரப்போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் என்ற பொறுப்பில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன்.
அவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, அவரை 2012 ஜூலை 19ஆம் தேதி பதவிநீக்கம் செய்த ஜெயலலிதா, அதே மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்தை புதிய வருவாய்த் துறை அமைச்சராக நியமித்தார்.

பட மூலாதாரம், Getty Images
எளிய தொண்டராக அ.தி.மு.கவில் தனது பணிகளைத் துவங்கிய தோப்பு வெங்கடாச்சலத்தின் வளர்ச்சி அபாரமான ஒன்று. தோப்புப்பாளையம் கிளை செயலராக அ.தி.மு.கவில் தன் அரசியலைத் துவங்கிய வெங்கடாச்சலம், பிறகு பெருந்துறை நகரச் செயலராகவும் பெருந்துறை தாலுகாவின் அண்ணா தொழிற்சங்க செயலராகவும் படிப்படியாக உயர்ந்தவர்.
இதற்குப் பிறகு ஈரோடு புறநகர் மாவட்டத்தின் ஜெயலலிதா பேரவையின் செயலராகவும் உயர்ந்தார். 2010ல் அ.தி.மு.கவின் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலராக வெங்கடாச்சலத்தை நியமித்த ஜெயலலிதா, 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் அளித்தார்.
அந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சியின் கேகேசி பாலுவைவிட சுமார் 40,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் வெங்கடாச்சலம். இதற்குப் பிறகு, வருவாய்த் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என பதவிகள் அவரைத் தேடிவந்தன.
ஆனால், 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வெங்கடாச்சலத்திற்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றிருந்தது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கே.சி. கருப்பணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா மறைந்த நிலையிலும்கூட வெங்கடாசலத்திற்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. கே.ஏ. செங்கோட்டையன் புதிய அமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தார்.
தனது அதிருப்தியை பல தருணங்களில் தோப்பு வெங்கடாச்சலம் வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை அருகே சுமார் 58 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, கே.ஏ. செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், அந்த விழாவை வெங்கடாச்சலம் புறக்கணித்தார்.
4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அரவக்குறிச்சித் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார். அதே தொகுதியில் அமைச்சர் கே.சி. கருப்பணனும் நியமிக்கப்பட்டிருந்ததால், அங்கு தேர்தல் பணியாற்றாமல் சூலூர் தொகுதியில் சென்று பணியாற்றிவந்தார் வெங்கடாச்சலம்.

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்த நிலையில் கடந்த மே 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடாச்சலம், மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தனுக்காக தானும் அமைச்சர் கருப்பணனும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தும்கூட, கே.சி. கருப்பணன் சரியாகப் பணியாற்றவில்லையெனக் குற்றம்சாட்டினார்.
கட்சிக்கு எதிரானவர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்துவைப்பதாகவும் குற்றம்சாட்டிய வெங்கடாச்சலம், இது தொடர்பான ஆதாரங்களை முதல்வருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார்.
ஆனால், தன்னுடைய அமைச்சர் பதவியையும் மாவட்டச் செயலாளர் பதவியையும் குறிவைத்தே வெங்கடாச்சலம் இந்த விவகாரங்களைக் கிளப்புவதாக அமைச்சர் கருப்பணன் பதிலுக்குக் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில்தான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது ஆளும் அ.தி.மு.கவுக்கு 115 உறுப்பினர்களே உள்ளனர். இவர்களில் தினகரன் ஆதரவாளர்களாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துவருகின்றனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரியும் கருணாசும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்மாதிரி முடிவெடுப்பார்கள் எனத் தெரியாத நிலை இருந்துவருகிறது.
ஆகவே ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் தற்போது நடந்து முடிந்துள்ள 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளை வெல்லவேண்டிய நிலையில் ஆளும்கட்சி இருந்துவருகிறது. தோப்பு வெங்கடாசலமும் அதிருப்தியாளராக மாறினால், குறைந்தது 9 இடங்களையாவது அக்கட்சி வென்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












