கோட்சே பற்றிய கருத்து: கமல்ஹாசனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்

கமல்

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் பிரச்சாரத்தின்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து' என்று பேசிய விவகாரத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யதின் தலைவருமான கமல்ஹாசனுக்கு உயர்நீதின்றத்தின் மதுரைக் கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்காக பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் மே 12ஆம் தேதியன்று பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்விகேட்க வந்திருக்கிறேன் நான் இன்று. இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன்" என்று பேசினார்.

இதற்கு பாரதீய ஜனதாக் கட்சியும் இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் பிரிவு 153 ஏ (இரு மதங்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்துதல்), பிரிவு 295 ஏ (மதநம்பிக்கையை புண்படுத்துவதன் மூலம் பதற்றத்தைத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரி கமல்ஹாசன் மதுரை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், இந்த கட்டத்தில் வழக்குகளை ரத்துசெய்யக் கோர முடியாது. வேண்டுமென்றால் முன்ஜாமீன் கோரலாம் என நீதிமன்றம் கூறியது.

ஆகவே, கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். கமல்ஹாசனுக்கு ஹிந்துக்களை பழிக்கும் நோக்கம் இல்லை. அவர் அந்த நோக்கத்தில் பேசவில்லையென கமல் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து மதத்தினரும் ஒன்றாக, அமைதியாக வாழ்வதிலேயே மனுதாரர் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், தங்களுக்கு கமல்ஹாசனை கைதுசெய்யும் நோக்கமில்லை. ஆனால், அரவக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்பி விசாரிக்க நினைத்தால், அந்த விசாரணைக்கு கமல்ஹாசன் வரவேண்டுமென கூறப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர்கள் தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே 20ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்த நீதிபதி, தேர்தல் முடியும்வரை கமல் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேச வேண்டாமென கூறினார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி. புகழேந்தி கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கினார். அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி, ஜாமீன் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :