பிராமணியத்தை எதிர்த்து கருத்து: சாதி குறித்த சர்ச்சையில் கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா

பட மூலாதாரம், INSTAGRAM/CHETANAHIMSA
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூரிலிருந்து
கன்னட நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சேத்தன் குமார் சமீபத்தில் பிராமணியத்துக்கு எதிராக பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. அவர் கருத்துக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் கன்னட திரைத் துறையோ மெளனம் காக்கிறது.
சேத்தன் அஹிம்சா என்று அறியப்படும் சேத்தன் குமார் கடந்த சில வாரங்களுக்கு முன் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அக்காணொளியில் அவர் பேசிய கருத்துகளுக்கு எதிராக பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் சில அமைப்புகள் அவர் மீது காவல்துறையிடம் மூன்று புகார்களைக் கொடுத்துள்ளனர்.
ஒரு சமூக செயற்பாட்டாளர், வெளிநாட்டினருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் சேத்தன் மீது புகாரளித்து இருக்கிறார். அப்புகாரில், சேத்தன் ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா விதிகளை மீறியுள்ளதால், அவரை மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேத்தன் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153A மற்றும் 295A பிரிவுகளை மீறினாரா என்கிற நோக்கில் தான் காவல் துறையினரின் விசாரணை இருக்கிறது. அதாவது சேத்தன் மதம் அல்லது இனத்தை வைத்து இரு தரப்பினருக்கு மத்தியில் பகையை ஏற்படுத்தினாரா அல்லது வேண்டுமென்றே மத நம்பிக்கைகளைப் புண்படுத்தினாரா என்கிற அடிப்படையில் காவல் துறை விசாரிக்கிறது. கடந்த ஜூன் 16ஆம் தேதி பசவங்குடி காவல் துறையினர் சேத்தனை அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சேத்தன் என்ன கூறினார்?
"கடந்த 1,000 ஆண்டுகளாக பிராமணியம் பசவா மற்றும் புத்தரின் தத்துவங்களைக் கொன்றது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் பிராமணியத்தை எதிர்த்தார். புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் இல்லை, அப்படிக் கூறுவது முட்டாள்தனம்," என காணொளியில் பேசினார் சேத்தன் குமார்.
மேலும் "பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் ஆன்மாவை ஒழிப்பதாகும். நாம் பிராமணியத்தை வேர் அறுக்க வேண்டும். - அம்பேத்கர்.
எல்லா மனிதர்களும் சமமாகப் பிறந்திருக்கும் போது, பிராமணர்கள் மட்டும் உயர்ந்தவர்கள் என கூறி, மற்றவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக் கூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது. அது மிகப் பெரிய பொய். - பெரியார்" என ட்விட் செய்து தன் கருத்துக்கு வலு சேர்த்தார்.
இது போக கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான உபேந்திரா, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கொரோனா உதவித் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். அதில் பூசாரி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறித்து தன் விமர்சனங்களை முன்வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
சாதிகளைக் குறித்து பேசுவதுதான் சாதியவாதத்தை நிலை நிறுத்தும் என பதில் கொடுத்தார் உபேந்திரா. பிராமணியம் தான் சமத்துவமற்ற நிலைக்குக் காரணம் என அதற்கு மீண்டும் பதிலளித்தார் சேத்தன்.
தான் பிராமணர்களுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் பிராமணியத்துக்கு எதிரானவன் எனவும், கன்னட உலகிலேயே பிராமணியத்தை பல பிராமணர்கள் எதிர்த்திருக்கிறார்கள், அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன என்றார் சேத்தன்.
"சேத்தன் ஓர் அமெரிக்க பிரஜை என்பதும், அவர் ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா (ஓசிஐ) அட்டையை வைத்திருப்பவர் என்பதும் எங்களுக்குத் தெரியாது. ஓசிஐ அட்டையை வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக் கூடாது" என பிபிசி இந்தியிடம் கூறினார் கிரிஷ் பரத்வாஜ் என்கிற சமூக ஆர்வலர்.
யார் இந்த சேத்தன் குமார்?

பட மூலாதாரம், INSTAGRAM/CHETANAHIMSA
37 வயதான சேத்தன், அமெரிக்காவில் இரண்டு இந்திய மருத்துவர்களுக்கு பிறந்தவர். யேல் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை நிறைவு செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.
"ஆ தினகலு (அந்த நாட்களில்) என்கிற திரைப்படத்தில் நடிக்க,வணிக அம்சங்கள் இல்லாத புதிய முகமாக இருந்தார்" என அப்படத்தின் இயக்குநர் கே.எம். சைத்தன்யா பிபிசி இந்தியிடம் கூறினார்.
அந்த திரைப்படம் மறைந்த கன்னட மூத்த நடிகர் கிரிஷ் கர்னாட்டால் திரைக்கதை எழுதப்பட்டது, இசை இளையராஜாவால் அமைக்கப்பட்டது. அது 2007 இல் ஒரு பெரிய வெற்றிப்படமாக மாறியது. அதன்பிறகு, சேத்தன் சில திரைப்படங்களில் பணியாற்றினார், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற படம் என்றால் அது 2013ஆம் ஆண்டில் வெளியன 'மைனா' தான்.
மகேஷ் பாபு இயக்கிய மற்றொரு படம் 'அதிரதா'. அப்படம் வணிக ரீதியில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களை கொண்டிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அதற்கு கதாநாயகனின் அரசியல் கருத்துக்கள் காரணமாக கூறப்பட்டது.''
அது சேத்தனை ஒரு செயற்பாட்டாளராக வளர்ச்சியடைய வைத்தது. திரையுலகில் அவரது வளர்ச்சி குறைய வைத்தது.
"அவர் அர்ப்பணிப்புள்ள நடிகர், ஆனால் வெற்றிகரமானவர் அல்ல. அவர் இன்னும் `ஆ தினகலு' சேத்தன் என்றுதான் அழைக்கப்படுகிறார். அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக வளர்ந்திருக்கிறார். சமூக அக்கறையுள்ள மிக முக்கிய நடிகராக அவர் தனித்து நிற்கிறார்,'' என கன்னட சினிமா இயக்குநர் மன்சூர் என அறியப்படும் மஞ்சுநாத் ரெட்டி பிபிசி இந்தியிடம் கூறினார்.
மன்சூர் `நதிச்சரமி' என்கிற பல தேசிய விருதுகளை வென்ற கன்னட படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேத்தன் வித்தியாசமானவர்

பட மூலாதாரம், INSTAGRAM/CHETANAHIMSA
கன்னட திரையுலகில் நன்கு அறியப்பட்ட பிரபலமானவர்கள் எந்தவொரு சமூகப் பிரச்னையிலும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. காவிரி பிரச்னை போன்ற விவகாரங்களில் கூட, தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதனால் தான் கன்னட திரியுலகமும் போராட்டம் நடத்தினர் என்பதை அனைவரும் அறிவர்.
அத்தகைய சூழலில் குடகு மாவட்டத்தில் பழங்குடியினர் தங்கள் வன வாழ்விடங்களிலிருந்து அகற்றப்படுவதால். இடம்பெயர்ந்தவர்களுக்கு வாழ மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிய போராட்டக்காரர்களுடன் சேத்தனும் தர்ணாவில் கலந்து கொண்டார்.
எந்தவொரு சமூகப் பிரச்னை குறித்தும் கருத்து தெரிவிக்காததன் தொடர்ச்சியாக, ஒரு சில கன்னட திரையுலகினர் சேத்தன் தொடர்பான சமீபத்திய பிரச்சினை குறித்தும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
"இந்த விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.'' என ஒருவர் கூறினார். "இந்த சிறுவனைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை,'' என மற்றொருவர் கூறினார்.
"சினிமாவில் ஒரு பொது விதியாக பிரபலங்கள் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை. எந்தவொரு நடிகரும் பழங்குடியினரை வெளியேற்றுவது பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் அல்லது 'மீடூ' விவகாரத்தில் சேத்தனைப் போல ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள். ஸ்ருதி ஹரிஹரனை சேத்தன் ஆதரித்த பின்னர்தான் மக்கள் அவரை வில்லன் போல சித்தரிக்கத் தொடங்கினர், '' என்கிறார் மன்சூர்.
மீடூ பிரசாரத்தின் போது மூத்த நடிகர் அர்ஜுன் சார்ஜா மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேத்தன் `திரைப்படத் தொழிலில் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான' (FIRE) அமைப்பு ஒன்றைத் தொடங்கினார், அவ்வமைப்பு சினிமா துறையில் நிலவும் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு நிதி ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டது. அதற்குப் பிறகுதான் கன்னட சினிமா சேத்தனை கண்டு கொள்ளாமல் விடத் தொடங்கியது என்கிறார் மன்சூர்.
"சேத்தன், தான் சரி என நம்புவதைச் செய்வதன் மூலம் பெறப் போகும் பெயரையோ புகழையோ பொருட்படுத்தாத, அதைப் பற்றி கவலைப்படாத ஒரு மனிதர். இந்த துறையில் தங்கள் உரிமை மறுக்கப்படுபவர்களுக்கு உதவ விரும்புகிறார். வெறுமனே பேசாமல், அது தொடர்பாக ஏதையாவது செய்கிறார், '' என்கிறார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.
நதிச்சரமி திரைப்படத்தில் தேசிய விருது பெற்றவர்களில் நடிகை ஸ்ருதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேத்தனுக்கு நீளும் ஆதரவுக் கரம்

பட மூலாதாரம், INSTAGRAM/SRUTHI_HARIHARAN22
மன்சூர் மற்றும் ஸ்ருதி இருவரும் பிராமணியத்தை பற்றிய சேத்தனின் கருத்துகளைப் ஆமோதிக்கிறார்கள்.
"அவர் பிராமணர்களுக்கு எதிராக எதையும் குறிப்பிடவில்லை. தொழில் துறையில் நிலைத்திருக்கும் பிராமணிய கலாசாரம் பற்றி அவர் பேசியுள்ளார். அவர் பிராமண மனநிலையைக் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளார், '' என்கிறார் மன்சூர்.
தான் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறுவதில் ஸ்ருதி வெளிப்படையாக இருந்தார், தங்கள் குடும்பத்தில் சில மத நடைமுறைகள் இருந்ததாகவும், அதை தான் பின்பற்றவில்லை எனவும் கூறுகிறார்.
"பிராமணியம் சமத்துவத்தை மறுக்கிறது என்பதை நான் சேத்தனுடன் ஒப்புக்கொள்கிறேன். உதாரணமாக மாதவிடாய் போன்ற பிரச்னைகள் வரும்போது, அதன் கட்டமைப்பு மிகவும் ஆணாதிக்கமானது. அவர் யாரையும் புண்படுத்தியதாக நான் நினைக்கவில்லை, '' என்கிறார் ஸ்ருதி.
"அதிகம் நாசூக்காகவும் சாதூர்யமாகவும் பேசத் தெரியாத ஒரு கொள்கை பிடிப்பு கொண்ட இளைஞர்,'' என்கிறார் தேசிய விருது பெற்ற இயக்குநர் கவிதா லங்கேஷ்.
பிற செய்திகள்:
- கால்நடை திருட்டு சந்தேகம்: திரிபுராவில் மூவர் அடித்துக் கொலை
- பயணத் தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர் நீக்கம்
- 14ஆம் நூற்றாண்டில் பெருந்தொற்றின் போது தொலைந்த தங்க நாணயம் கண்டெடுப்பு
- தமிழ்நாட்டில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன?
- கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை முறை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












