இந்திய பணவீக்கத்தில் சிறிய சரிவு - மலையைத் தோண்டியபோது எலி வந்த கதையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலோக் ஜோஷி
- பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி இந்திக்காக
பணவீக்கத்தின் புதிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் விலையேற்ற விகிதம் அதாவது பணவீக்க விகிதத்தில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விகிதம் மே மாதத்தில் 6.30% ஆக இருந்தது , ஜூன் மாதத்தில் இது சிறிதே குறைந்து 6.26% ஆக உள்ளது. சாதாரண மனிதனின் பார்வையில் இது மலையைத் தோண்டியபோது எலி வெளியே வந்தது போல இருக்கிறது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வல்லுநர்களும் பொருளாதார நிபுணர்களும் இந்த புள்ளிவிவரம் தொடர்பாக மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஏனெனில் பணவீக்க விகிதம் கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சத்தில் பெரும்பாலான வல்லுநர்களும் இருந்தனர்.
வெவ்வேறு தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் அல்லது முகமைகளின் ஆய்வில் இந்த விகிதம் 6.5 முதல் 6.9 சதவிகிதம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதனால்தான் இந்த புள்ளிவிவரம் அவர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இருப்பினும், இப்போது கூட பணவீக்க விகிதம் நான்கு முதல் ஆறு சதவிகிதத்திற்கு இடையே இல்லை. அதாவது பணவீக்கத்திற்காக ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட இது இன்னும் அதிகமாகவே உள்ளது.
பணவீக்கம் குறித்த ரிசர்வ் வங்கியின் கவலையைத் தீர்ப்பதாக இந்தப் புள்ளிவிவரம் இல்லை. ஆனால் கவலை இருந்தாலும்கூட அடுத்த மாதம் தான் வெளியிட இருக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசிக்காது என்று பெரும்பாலான வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் இந்தப் பணவீக்க விகிதம் ,வளர்ச்சியை தியாகம் செய்யும் அளவுக்கு அதிகமாக இல்லை.
நாட்டின் பொருளாதார நிலையைப் பார்ப்பவர்களின் கருத்து இதுதான். ஆனால் பொதுவாக மக்களின் கைகளில் உள்ள பணத்தின் நிலையை நாம் பார்க்க விரும்பினால், மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.
ஆனால் உணவுப்பொருட்களின் பணவிக்க விகிதம் இந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. அது 5.01 சதவிகிதத்திலிருந்து 5.15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையில் என்ன தாக்கம்

பட மூலாதாரம், Getty Images
இங்கு காணப்படும் அதிகரிப்பு ஒரு வருடத்திற்கு முந்தைய விலைகளுடன் ஒப்பிடப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. கடந்த ஆண்டு மே மாதத்தில், உணவு பணவீக்கம் 9.2 சதவிகிதமாகவும் ஜூன் மாதத்தில் 8.75 சதவிகிதமாகவும் இருந்தது. அதாவது இந்த அதிகரிப்பு ஏற்கனவே இருந்த அதிக விலைக்கு மேல் உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு நவம்பர் வரை இந்த விகிதம் 9 சதவிகிதத்திற்குக் கீழே வரவில்லை என்பதோடு கூடவே செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இது முறையே 10.68 மற்றும் 11.07 சதவிகிதத்தை எட்டியது. எனவே இப்போது நாம் பார்ப்பது அனைத்தும் இதை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. 9 சதவிகிதத்திற்கும் மேற்பட்டதாகவே அவை இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
நாம் உணவுப் பொருட்களை கவனித்தால், தானியங்களின் பணவீக்கத்தில் சிறிது சரிவு உள்ளது மற்றும் காய்கறிகளின் பணவீக்க விகிதம் நெகட்டிவ். அதாவது பூஜ்ஜியத்திற்கு கீழே -0.7% ஆக உள்ளது. இதன் பொருள் என்னெவென்றால் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பால் மற்றும் சர்க்கரையின் பணவீக்கமும் மிகக் குறைவு. இருப்பினும் இவை பால் விலை அதிகரிப்பதற்கு முந்தைய புள்ளிவிவரங்கள். ஆனால் மறுபுறம், பருப்பு வகைகளில் 10 சதவிகிதம், பழங்களில் 11.82 சதவிகிதம், முட்டையில் 20 சதவிகிதம் மற்றும் அனைத்து சமையல் எண்ணெய்களிலும் 34.78 சதவிகித பணவீக்க விகிதம், அபாய அளவைக்காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது.
உணவுப் பொருட்கள் அல்லாமல், மிகவும் கவலைதரும் ஒரு விஷயம் குறித்து அனைவருக்குமே தெரியும். ஆனால் அதன் விளைவை இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. சுகாதார வசதிகளின் பணவீக்க விகிதம் 7.71% ஆகவும், எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்க விகிதம் 12.68% ஆகவும் உள்ளது. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளில் இந்த தரவு 11.56% ஆக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் (எரிபொருள் மற்றும் சரக்கு போக்குவரத்து) பணவீக்கம் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இதன் காரணமாக ஏறக்குறைய எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக் கூடும்.
இது குறித்து அரசுக்குத் தெரியாது என்றோ, எச்சரிக்கை செய்யப்படவில்லை என்றோ சொல்லமுடியாது. ஆனால் இதற்குப் பிறகும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பதைப்பார்க்கும்போது, வரும் மாதங்களில் பணவீக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை கற்பனை செய்வது கடினம் அல்ல.
இந்த நேரத்தில் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகரிக்கும் சூத்திரத்தை ரிசர்வ் வங்கியால் எளிதில் முயற்சிக்க முடியாது, ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு தேவை உந்துசக்தியே. இந்த நிலையில் வட்டியை அதிகரித்து, அதன் வேகத்திற்கு கடிவாளம் போட முடியாது.
பிற செய்திகள்:
- விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டது ஏன்? பின்னணி தகவல்கள்
- கொரோனா தடுப்பூசி செயல்படுகிறதா என்று பார்க்க ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்கலாமா?
- “பீடி, சிகரெட், புகையிலை வழக்கம் இல்லாத தமிழக கிராமம்
- சதாமிடமிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறிய இராக் ஒலிம்பிக் வீரர்
- "சுதந்திரமான இன்டர்நெட் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்" - எச்சரிக்கும் சுந்தர் பிச்சை
- "இந்தியர்கள் செக்ஸ் பற்றி பேசுவதில்லை, அதனால் அவர்களுக்கு உதவுகிறேன்"
- சிரிஷா பண்ட்லா: விண்வெளி சுற்றுலாவில் ஒரு மணி நேரம் - இந்தியர்கள் கொண்டாடுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












