கொரோனா தடுப்பூசி உடலில் வேலை செய்கிறதா என பரிசோதிக்க முடியுமா? ஆன்டிபாடி டெஸ்ட் பயன்படுமா?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு, நம் உடலில் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு உருவாகி விட்டதா என்று பார்க்க முடியுமா? அதற்கு ஆன்டிபாடி சோதனை பயனுள்ளதாக இருக்குமா?

இப்போது செலவு செய்து ஆன்டிபாடி செய்துபார்ப்பது அதிகரித்துவிட்டதே இது தேவையா? பயனுள்ளதாக இருக்குமா?

இந்தக் கேள்விக்குப் பதில் தேடுவதற்கு முன்பு ஆன்டிபாடி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எதிர்ப்பான்கள் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

உடலில் உள்ள தோல், மூக்கின் சளிம சவ்வுகள் போன்ற இயற்கையான தடுப்பரண்களைக் கடந்து நோய்க்கூறு உடலில் நுழைந்துவிட்டால், உடனடியாக நமது உடலின் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் நோய்க்கூறுகளை எதிர்த்துப் போராடத் தொடங்கும்.

அந்தப் போராட்டம் போதுமானதாக இல்லாதபோது நோயை எதிர்த்துப் போராட 'தகவமைப்பு எதிர்ப்பாற்றல்' என்ற ஒன்று உடலில் தூண்டப்படும். இது ஆன்டிபாடிகள் எனப்படும் எதிர்ப்பான்களை உருவாக்கும்.

இந்த எதிர்ப்பான்கள் எல்லா நோய்களுக்கும் பொதுவானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட நோய்க்கானவை மட்டுமே. எடுத்துக்காட்டாக, கோவிட்-19 நோயை எதிர்ப்பதற்காக உருவாகும் எதிர்ப்பான்கள், டைஃபாய்டு நோயை எதிர்க்க உதவாது.

இந்த எதிர்ப்பான்கள் உருவாவதற்கு ஓரிரு நாள்கள் முதல் ஓரிரு வாரங்கள் வரைகூட ஆகலாம் என்பதே வல்லுநர்கள் கருத்து.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

சரி இப்போது கோவிட் 19 நோய்க்கான ஆன்டிபாடிகளைப் பற்றிய பேச்சு ஏன் வருகிறது?

சார்ஸ் கோவ்-2 என்ற வைரசால் உருவாகும் கோவிட்-19 நோய் ஒருவருக்கு தற்போதோ, அல்லது கடந்த காலத்திலோ தொற்றியதா என்பதைத் தெரிந்துகொள்ளவும், கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடலில் அது நோய் எதிர்ப்பு எதிர்வினையை தூண்டியிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் பலர் இந்த சோதனையை எடுத்துக்கொள்கிறார்கள்.

கொரோனா தொற்றுக்கு எதிராக தனது உடலில் போதிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதை முடிவு செய்ய ஆன்டிபாடி பரிசோதனை செய்துகொள்வது சரியா? அது தேவையா?

குறிப்பாக, "நான் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கோவிட் நோய்க்கு எதிராக எனக்கு பாதுகாப்பு கிடைத்துவிட்டதா என்று தெரிந்துகொள்ள ஆன்டிபாடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா?" என்ற கேள்விக்கு பல வல்லுநர்களும் 'வேண்டாம்' என்றே பதில் சொல்கிறார்கள்.

கோவிட் 19 நோய்க்கு எதிராக உங்கள் பாதுகாப்பு அல்லது நோய் எதிர்ப்பு அளவை மதிப்பிட ஆன்டிபாடி பரிசோதனை பரிந்துரைக்கப்படுவது இல்லை என்கிறது அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளம்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

"ஏன் இத்தனை பேர் கோவிட் 19 ஆன்டிபாடி பரிசோதனை செய்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் அதிகம் பணம் இருந்தால் தானம் செய்யுங்கள்" என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை வகுப்புக் குழுவின் உறுப்பினரும், புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் ஜெ.அமலோற்பவநாதன்.

"எந்த ஒரு பரிசோதனைக்கும் தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக இரண்டு பேருக்கு கோவிட் ஆன்டிபாடி சோதனை செய்வதாக வைத்துக்கொள்வோம். ஒருவருக்கு IgG ஆன்டிபாடி அதிகமாகவும், மற்றொருவருக்கு குறைவாகவும் இருக்கிறது. இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? ஆன்டிபாடி அதிகமாக இருப்பவரை விட குறைவாக இருப்பவருக்கு தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்று கூறமுடியாது. இருவருமே சமூக தடுப்பூசி நடைமுறைகளை சமமாகவே கடைப்பிடிக்கவேண்டும். ஏனெனில் IgG ஆன்டிபாடி அளவு மட்டுமே முழுவிவரத்தையும் தந்து விடாது. நோயெதிர்ப்பு அமைப்பு மிக சிக்கலானது. அதன் ஒருபகுதியை மட்டுமே இந்த ஆன்டிபாடி அளவு காட்டும். மருத்துவர் பரிந்துரைத்தால் ஒழிய, இந்த பரிசோதனையை செய்யவேண்டாம்" என்று எழுதியுள்ளார் அவர்.

"உடலில் ஆன்டிபாடிகள் இருப்பதால் நீங்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாக மாட்டீர்களா என்பது தெரியவில்லை" என்கிறது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை இணைய தளம்.

கிட்டத்தட்ட இதே பதிலை சொல்கிறது அமெரிக்க அரசின் உணவு & மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ.) இணைய தளம். அத்துடன் அது இன்னொன்றையும் சொல்கிறது. ஆன்டிபாடி பரிசோதனை பிழையாக அமைவதற்கு சில வாய்ப்புகளை அது குறிப்பிடுகிறது. அதில் ஒன்று, இந்த பரிசோதனை சார்ஸ் கோவ்2 என்ற கொரோனா வைரசுக்கான ஆன்டிபாடிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக வேறு கொரோனா வைரசின் ஆன்டிபாடிகளை தவறாகப் பார்த்துவிட்டு பாசிட்டிவ் முடிவு தருவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறது எஃப்.டி.ஏ. தளம்.

மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு இணைய தளம் இன்னொரு தகவலையும் சுட்டிக்காட்டுகிறது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

"இரு வகையான கோவிட்-19 ஆன்டிபாடிகள் உள்ளன. ஒன்று பைன்டிங் ஆன்டிபாடி. அது வைரஸ்மீது ஒட்டிக்கொண்டு நோய் எதிர்ப்பு வினயைத் தூண்டும். மற்றொன்று நியூட்ரலைசிங் ஆன்டிபாடி. இது வைரசை நேரடியாகத் தடுத்து, அது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும். ஆராய்ச்சியாளர்கள் இந்த நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகளை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளையே பயன்படுத்துகின்றனர். இந்த பரிசோதனை வணிகரீதியாக அவ்வளவாக கிடைப்பதில்லை.

பலவித ஆன்டிபாடி பரிசோதனைகள் உள்ளன. அவை அனைத்துமே ஆன்டிபாடிகளை சரிவர கண்டுபிடிப்பதில்லை. ஆனால், ஒருவேளை நீங்கள் சரியான பரிசோதனையை கண்டுபிடித்து, அதுவும் துல்லியமான ஆன்டிபாடி அளவை உங்களுக்கு சொல்லிவிட்டாலும், அதை எப்படிப் புரிந்துகொள்வது என்பது ஒரு சிக்கல். ஏனெனில், ஆன்டிபாடிகள் மட்டுமே கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில்லை. அவை கொரோனாவுக்கு எதிராக உடலில் முன்களப் பாதுகாப்பை வழங்கலாம். ஆனால், வைரசை நினைவில் வைத்துக்கொண்டு மறு தொற்று ஏற்படாமல் காப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது டி செல் நோய் எதிர்ப்பாற்றல். தடுப்பூசிகள் கணிசமான அளவில் உருவாக்கும் இந்த டி செல் எதிர்ப்பாற்றலை அளவிட்டு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆன்டிபாடி பரிசோதனை அதற்கு உதவாது," என்கிறது எம்.ஐ.டி. மருத்துவப் பல்கலைக்கழகம்.

எனவே பலவித ஆன்டிபாடி பரிசோதனைகளில் எது பொருத்தமானது என்பதை கண்டுபிடிப்பது கடினம், அந்தப் பரிசோதனை துல்லியமான முடிவுகளைத் தருவது அரிது, அப்படியே துல்லியமான ஆன்டிபாடி அளவுகளை அந்தப் பரிசோதனை கண்டறிந்து சொன்னாலும், அது எந்த அளவுக்கு கொரோனா தொற்றுக்கு அல்லது மறு தொற்றுக்கு எதிராகப் பாதுகாப்பை ஒருவருக்கு வழங்கியிருக்கிறது என்று சொல்லமுடியுமா என்பது சந்தேகம். இதுதான் பல திசை வல்லுநர்கள் கூறுவதன் சாரம்.

ஆராய்ச்சி, கல்வியியல் நோக்கங்களுக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது. தனிநபர் ஒருவர் கொரோனாவுக்கு எதிராக பெற்றிருக்கும் பாதுகாப்பை அளவிட இந்த சோதனையை செய்வது மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே நடக்க வேண்டும், என்பதே வல்லுநர்கள் கூறும் இன்னொரு செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :