கொரோனா தடுப்பூசி: பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றால் தடுப்பூசி வேலை செய்யவில்லையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா இரண்டாம் அலை இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. அதற்குள் அடுத்த சில மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.
கொரோனாவை எதிர்கொள்ள சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது, அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்வது போன்ற சில விஷயங்கள் நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்றவைகள் எல்லாம் தனி மனிதர்களின் கையில் இருக்கின்றன.
அடுத்த கொரோனா அலைக்குப் போதுமான மருத்துவமனைகளை ஏற்பாடு செய்வது, ஆக்சிஜன் தேவைகளை தயார்படுத்துவது, மருந்து மாத்திரை விநியோகம் போன்ற பணிகள் எல்லாம் அரசின் கையில் இருக்கின்றன.
ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விஷயத்தில் மட்டும் இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகள், மக்கள் என பலரும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது.
இந்த தடுப்பூசி விஷயத்தில் மக்கள் மற்றும் அரசாங்கத்தைத் தாண்டி, பல்வேறு போலி செய்திகள், வதந்திகள், மக்களின் தேவையற்ற அச்சங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஒர் சாரார் கூறுகிறார்கள் என்றால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் எந்த வித உடல் உபாதைகளோ பக்க விளைவுகளோ ஏற்படவில்லை என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
'அனைவருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படாது'
தங்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பதாலேயே, தங்கள் உடலில் கொரோனா தடுப்பூசி வேலை செய்யவில்லையோ எனவும் சந்தேகப்படுகிறார்கள்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படாது என பிபிசியிடம் தெளிவுபடுத்துகிறார் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்புக் குழுவைச் சேர்ந்த பொது சுகாதார வல்லுநர் மருத்துவர் குழந்தைசாமி.
"பொதுவாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. சுமார் ஐந்து சதவீதம் பேருக்குத் தான் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகையால் பக்க விளைவுகள் ஏற்படாதவர்களின் உடலில் தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று பொருள் அல்ல. மேலும் பக்க விளைவுகளுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு அணுக்கள் (ஆன்டிபாடிகள்) உருவாவதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.
தடுப்பூசி செலுத்திக் கொண்டு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாதவர்களுக்கு, நீண்ட நாட்களாக இருந்த மூட்டு வலி இப்போது குறைந்துவிட்டது, ரத்த அழுத்தம் அதிகரித்திருக்கிறது, சரியாக பசி எடுக்கவில்லை, சுவாசிப்பதில் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இன்னும் சிலரோ தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு, பயத்தில் தாங்களாகவே இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்கின்றனவா போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்கனவே ஒருவரின் உடலில் இருக்கும் நோயால் ஏற்படும் விளைவுகளுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.
"பொதுவாகவே நம் மக்கள் ஒரு திருவிழாவையோ, பண்டிகையையோ , முக்கிய சம்பவங்களையோ நினைவில் வைத்து சம்பவங்களைத் தொடர்புபடுத்திக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம்.
இந்த தீபாவளியில் இருந்துதான் மூட்டு வலி அதிகரித்தது. போன பொங்கலின் போதுதான் அறுவை சிகிச்சை நடந்தது என கூறுவார்கள். அப்படி இப்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் ஒரு முக்கிய நிகழ்வாகி இருக்கிறது." என மக்களின் மனநிலையைக் குறித்து விளக்குகிறார்.
"பொதுவாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், முதல் ஓரிரு நாட்கள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருக்கலாம். அதற்கு பாராசிடமால் மாத்திரையை இரு தினங்களுக்கு எடுத்துக் கொண்டாலே, கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பின் விளைவுகள் எல்லாம் முழுமையாக குணமாகிவிடும்.
'தடுப்பூசி செலுத்தும் முன்னரே இருந்திருக்கும்'
அதையும் தாண்டி, ஒருவர் உடலில் காய்ச்சலோ, இதயப் பிரச்னைகளோ, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால், அவருக்கு தடுப்பூசி செலுத்தும் முன்னரே அது தொடர்பான பிரச்னைகள் இருந்திருக்கும்.
அதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தம் இல்லை. கொரோனா தடுப்பூசியைச் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் அவர்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படலாம். அவர்கள் தங்கள் மருத்துவர்களிடம் இது தொடர்பாக கலந்தாலோசிப்பது நல்லது"
"எந்த ஒரு நோயும் ஒருவரின் உடலில் தொற்றி, அது தன் தாக்கத்தை முழுமையாக வெளிப்படுத்த சில தினங்கள் ஆகும். உதாரணமாக ஒரு நபருக்கு டைஃபாய்ட் தொற்று ஏற்பட்டுவிட்டது என வைத்துக் கொள்வோம்.

பட மூலாதாரம், Getty Images
அதன் பிறகு அவர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொள்கிறார். சில தினங்களுக்குப் பிறகுதான் டைஃபாய்ட் தொற்று, காய்ச்சலாக மாறும். இப்போது இவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான் டைஃபாய்ட் ஏற்பட்டது என்று கூறுவது எப்படி பொருத்தமற்றதோ, அப்படித்தான் கொரோனா தடுப்பூசிக்கும் நீங்கள் சொல்லும் ரத்த அழுத்த அதிகரிப்பு, மூட்டு வலி போன்ற பிரச்னைகளின் தீவிரம் அதிகரிப்பதற்கும், குறைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.
"இது இப்போது மட்டுமல்ல, போலியோ சொட்டு மருந்து செலுத்தும் போதும் இது போன்ற புகார்கள் எழுந்துள்ளன
ஓராண்டுக்கும் குறைவான வயதுள்ள குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின் இறந்துவிட்டது என புகார் கூறினர். இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை செய்து பார்த்தால், அக்குழந்தைக்கு மசால் வடை கொடுத்ததால் மூச்சுக் குழாயில் அவ்வுணவு சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்திருந்தது.
அதே போல குழந்தையை படுக்க வைத்து பால் ஊட்டியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்த குழந்தையைக் கூட போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட பின் இறந்ததாக புகார் கூறிய சம்பவங்களும் இந்தியாவில் நடந்திருக்கிறது.
இப்போது கொரோனா தடுப்பூசி தொடர்பாகவும் அதே போன்ற வதந்திகளும், சம்பந்தமே இல்லாத விஷயங்களை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திப் பேசுவதும், பயப்படுவதும் அதிகரித்திருக்கிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












