ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: இரான், துர்க்மெனிஸ்தான் எல்லைகளை கைப்பற்றிய தாலிபன்

பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தானை இரான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைக்கும் எல்லைப் புறங்களைக் கைப்பற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகப் படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் தாலிபன்கள் புதிய புதிய பகுதிகளை அரசாங்கப் படைகளிடம் இருந்து பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இரான் அருகே உள்ள இஸ்லாம் குவாலா, துர்க்மெனிஸ்தான் அருகே உள்ள தொர்குண்டி ஆகிய எல்லையோர நகரங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்களும் கூறுகின்றனர்.
என்ன பாதிப்பு?
இஸ்லாம் குவாலா எல்லைப் பகுதி ஆப்கானிஸ்தான் - இரான் இடையிலான மிகப் பெரிய வணிக நுழைவாயில். இந்த எல்லை வழியாக நடைபெறும் வணிகத்தின் மூலம் ஆஃப்கன் அரசுக்கு மாதம் 2 கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான வருமானம் வரும். அதைப் போலவே தொர்குண்டி நகரம், துர்க்மெனிஸ்தான் உடனான வணிக நுழைவாயிலாக உள்ளது.
இந்த இரு எல்லைப்புற நகரங்களையும் மீண்டும் கைப்பற்ற ஆஃப்கன் படைகள் முயற்சி செய்துவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியான் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
"எல்லைப் பாதுகாப்பு அலகுகள் உள்பட அனைத்து ஆஃப்கன் பாதுகாப்புப் படைகளும் அங்கே உள்ளன. அப்பகுதிகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன," என்று அவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இஸ்லாம் குவாலா எல்லைப்பகுதி தங்கள் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஹெராட் மாகாணத்தில் 5 மாவட்டங்களை சண்டை இல்லாமலேயே தாலிபன்கள் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுங்க அலுவலகத்தில் இருந்து இறக்கப்பட்டதா ஆஃப்கன் கொடி?
எல்லைப் பகுதியில் உள்ள சுங்க அலுவலகம் ஒன்றின் கூரையில் இருந்து ஆப்கானிஸ்தான் கொடியை தாலிபன்கள் இறக்குவதைப் போலத் தெரியும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக தாலிபன்கள் தெரிவிக்கின்றனர். இதை அரசாங்கம் மறுக்கிறது. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

பட மூலாதாரம், Reuters
நாட்டின் 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துவிட்டதாக பிற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் மேற்குப் பகுதியில் இரான் எல்லைப் புறத்தில் தொடங்கி, நாட்டின் மறுபுறத்தில் சீன எல்லைப் புறம் வரை ஒரு வளைகோடு போல இந்த தாலிபன் கட்டுப்பாட்டு பகுதி பரவியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க செயல்பாடுகளின் மையமாக விளங்கியது பரந்து விரிந்த பாக்ரம் விமான தளம். இந்த வாரத் தொடக்கத்தில் அரசாங்கத்திடம்கூட சொல்லிக்கொள்ளாமல் இந்த தளத்தை அவசர அவசரமாக காலி செய்துவிட்டுக் கிளம்பினர் அமெரிக்கப் படையினர். ஒரு காலத்தில் இந்த தளத்தில் பல பத்தாயிரம் படையினர் முகாமிட்டிருந்தனர்.

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

இந்த வாரத் தொடக்கத்தில் 1000க்கு மேற்பட்ட ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தஜிகிஸ்தான் தப்பி ஓடினர். இந்த நாடு ஆப்கானிஸ்தானுக்கு வட கிழக்கே அமைந்துள்ளது. தாலிபன்களை தங்களை நோக்கி முன்னேறி வந்த நிலையில் அவர்கள் தப்பித்து ஓடினர்.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தை தாலிபன்கள் சடுதியில் கைப்பற்றிக்கொண்டதாக ரஷ்யா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா சக்கரோவா தெரிவித்தார்.
20 ஆண்டுகால சண்டைக்குப் பிறகு அமெரிக்கத் துருப்புகளை திரும்பப் பெற தாம் செய்த முடிவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியாயப்படுத்திப் பேசிய சில மணி நேரத்தில் இந்த செய்தி வெளியானது.
"வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல், ஆப்கானிஸ்தானில் சண்டை போடுவதற்கு இன்னொரு தலைமுறை அமெரிக்கர்களை நான் அனுப்பமாட்டேன்," என்று தெரிவித்தார் பைடன்.
ஆப்கானிஸ்தானின் முழு பகுதியையும் கட்டுப்படுத்தும் சாத்தியம் ஆப்கானிஸ்தான் அராசங்கத்துக்கு இருக்காது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தாலிபன்கள் ஒரு 6 மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிவிடுவார்கள் என்று சில அமெரிக்க உளவுத்துறை ஆய்வாளர்கள் கூறுவதாக ஜூன் மாதம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் தாலிபன்களை கட்டுப்படுத்த முடியும் என்று அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி வலியுறுத்துகிறார். சில பகுதிகளில் தாங்கள் இழந்த பகுதிகளை ஆப்கன் படையினர் திரும்பக் கைப்பற்றிவிட்டதாகவும் தோன்றுகிறது.
நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள குவாலா - இ - நா என்ற நகரில் உள்ள அரசாங்க கட்டடங்களை அரசாங்கப் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது தொடங்கியுள்ள புதிய தாக்குதலில் தாலிபன்கள் நுழைந்த முதல் பெரிய மாகாணத் தலைநகரம் இதுதான்.
மூன்று விதமான நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் தோன்ற சாத்தியமுள்ளது என்று பிபிசியிடம் பேசிய பிரிட்டன் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் நிக் கார்ட்டர் தெரிவித்தார்.
முதலாவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம், "எல்லா மாகாணத் தலைநகரங்களையும் தனது கையில் வைத்துள்ள நிலையில், தனது கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளக்கூடும்," என்றார் அவர்.

பட மூலாதாரம், EPA
"நாடு பிளவுபட்டு, அரசாங்கம் கலகலத்துப் போகக்கூடும் என்பது இரண்டாவது சோகமான சாத்தியப்பாடு. தாலிபன்கள் நாட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறார்கள். 1990களில் ஏற்பட்டதைப் போல பிற தேசிய இனத்தவரும், இனக்குழுவினரும் நாட்டின் பிற பகுதிகளை கட்டுப்படுத்தக்கூடும்," என்று தெரிவித்தார் அவர்.
"அரசியல் சமரசம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை நடப்பது மூன்றாவது நம்பிக்கை அளிக்கும் சாத்தியப்பாடு. அமெரிக்க நடவடிக்கைகள் ஆகஸ்டு 31-ம் தேதி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும். ஆனால், வெளிநாட்டுப் படைகளின் பெரும்பகுதி ஏற்கெனவே கிளம்பிவிட்டன," என்றார் அவர்.
அரசாங்கத்துக்கும் தாலிபன்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடரும். ஆனால், பேச்சுவார்த்தை அடிக்கடி தடைபடுகிறது, குறிப்பிடும்படியாக முன்னேற்றம் காணாமல் நின்றுவிடுகிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்






















