'தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவு ஓர் அபாயமாக உருவெடுக்கிறது': ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

மக்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன். இதன் காரணமாக அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ்நாடு பெரும் சிக்கல்களைச் சந்திக்கும் என்கிறார் அவர். பிபிசி தமிழிடம் இது தொடர்பாக அவர் பேசியதிலிருந்து..

கே. தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கும் விகிதம் தொடர்ந்து குறைந்துவருவது குறித்து கவலைப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதா?

ப. இது மிகப் பெரிய அபாயம். இது குறித்து இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால், இன்னும் பத்து வருடத்தில் நிறையப் பேர் பேசுவார்கள். மக்கள் தொகையைப் பற்றிப் பேசும்போது, replacement rate என்று ஓர் எண்ணைக் குறிப்பார்கள். அதாவது மக்கள் தொகை ஏறாமலும் இறங்காமலும் இருக்க வேண்டுமானால், எத்தனை குழந்தைகள் பிறக்க வேண்டுமென்ற விகிதம் அது. 2.1 என்ற அளவில் இருப்பதுதான் சரியானது.

ஆனால், தமிழ்நாட்டில் இது 1.5 - 1.6 என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை எப்படி வீழ்ந்துகொண்டிருக்கிறதோ, அந்த நிலைமை இங்கு வரப்போகிறது என்று அர்த்தம். சீனாவில் இந்தப் பிரச்னை மிகத் தீவிரமாக இருக்கிறது. அதனால், மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

விரைவில் தமிழ்நாட்டில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்தப் பிரச்னை வேறு பல தீவிரமான பிரச்னைகளை உருவாக்கும்.

கே. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில், தொடர்ந்து மக்கள் தொகை குறைவது நல்லது என்ற பார்வைதான் இருக்கிறது. இம்மாதிரி சூழலில், ஒரு மாநிலத்தில் மட்டும் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டுமெனச் சொல்வது சரியா?

தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

ப. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரே மாதிரியான வளர்ச்சி கிடையாது. தென் மாநிலங்களில் நல்ல வளர்ச்சி இருந்தது. கல்வியறிவு இருந்தது. ஆகவே, மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார்கள். மக்கள் தொகை குறைவு என்பது தமிழ்நாட்டில் மட்டும் பிரச்னையாக இருக்கவில்லை. கேரளாவிலும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.

1970களிலும் 80களிலும் அரசு மிகத் தீவிரமாக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கான பிரசாரங்களைச் செய்தது. இதன் விளைவாக நாட்டின் தென்பகுதியில் மக்கள் தொகை கட்டுப்பட ஆரம்பித்தது. என்னுடைய பெற்றோர் காலத்தில், அவர்களுடன் பிறந்தவர்கள் நான்கைந்து பேர் இருந்தார்கள். என்னுடைய காலத்தில் 2-3 பேர் இருந்தார்கள். இப்போது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைதான் இருக்கிறது. அல்லது குழந்தையே இருப்பதில்லை.

நான் தேர்தல் பணியாற்றும்போது, ஒரு தொகுதியில் உள்ள புள்ளிவிவரங்களை ஆராய்ந்துகொண்டிருந்தேன். அதில், பெரும்பாலானவர்கள் 35 வயது முதல் 45 வயதுக்குள் இருந்தார்கள். இந்தியாவில் சராசரி வயது 25ஆக இருக்கிறது; இந்தியா ஓர் இளைய தேசம் என எண்ணிக்கொண்டிருக்கும்போது, இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதையடுத்து வேறு சில தொகுதிகளை எடுத்துப் பார்த்தேன். பெரும்பாலான தொகுதிகளில் நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆகவே, இந்த மக்கள் தொகை வளர்ச்சி குறைவு என்பது ஓர் அபாயமாக உருவெடுக்கிறது என்பது புரிந்தது.

நீங்கள் எந்த மாவட்டத்தில் பார்த்தாலும் தொழிலாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கோவிட் நோய் பரவலின்போது அவர்கள், வெளியேறிவிட்டதால் பல இடங்களில் வேலை நின்றுவிட்டதைப் பார்த்தோம். ஆக, தமிழ்நாட்டில் வேலை செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது தெளிவு.

கே. தமிழ்நாட்டில் ஏற்கனவே மக்கள் தொகை 8 கோடியை நெருங்கும் நிலையில், மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வது நெருக்கடியை அதிகரிக்காதா?

சென்னை

பட மூலாதாரம், Getty Images

ப. அதிகரிக்காது. இப்போதே மக்கள் தொகையை அதிகரிக்க ஆரம்பிக்கவில்லையென்றால் பல சிக்கல்கள் வரும். முதலாவதாக, இளையவர்களைச் சார்ந்திருக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முதியவர்களைக் கவனிக்க பணியாற்றக்கூடிய இளைய சமுதாயத்தினர் தேவை. அது குறைந்தால், பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.

இப்போது பெரும்பலானவர்கள் 35 - 45 வயதில் இருப்பது மாறி, 45-55 என்று மாறும். பிறகு 55க்கு மேல் சராசரி வயது அதிகரிக்கும். அப்போது வேலை பார்ப்பவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள்.

இப்போது இந்தப் பிரச்னை பெரிதாகத் தெரியாமல் இருக்கக் காரணம், வெளியிலிருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள். தவிர, வேலை பார்க்கும் வயதில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

இந்தப் பிரச்னையை மாற்ற நினைத்தால், இப்போதே நாம் செயல்பட வேண்டும். அரசு உரிய அறிவிப்புகளைச் செய்யவேண்டும்.

கே. வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு முக்கியக் காரணம், தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகம்; அவர்கள் உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு வருவதில்லை என்ற காரணமும் இருக்கிறதே..

சென்னை

பட மூலாதாரம், Getty Images

ப. ஒரு வகையில் அது உண்மைதான். தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகம். 80களில் இருந்தே இது நடந்து வருகிறது. ஆனால், அது மட்டுமே உண்மை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் எத்தனை பேர் இந்தி பேசுபவர்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். நிலைமை புரியும்.

கே. இந்தப் பிரச்னை, வேறு என்ன விதங்களில் எதிரொலிக்கும்?

ப. எனக்குத் தெரிந்த பணியாளர் ஒருவர் ஒதிஷாவில் இருந்து வந்தவர். அவரிடம் ரேஷன் கார்டு மாற்றிவிட்டீர்களா என்று கேட்டேன். அவர் மாற்றிவிட்டார். இத்தனைக்கும் அவர் முதல் தலைமுறை. இப்போது பணியாளர்களாக வட மாநிலங்களில் இருந்துவந்தவர்கள் விரைவிலேயே இங்கே குடும்ப அட்டையைப் பெறக்கூடும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவர்கள் மாநிலமே தெரியாது. அவர்கள் வாக்களிக்கும் முறை, பண்பாடு எல்லாமே வேறு மாதிரியாக இருக்கும்.

2026ல் இந்தியா முழுவதும் மக்களவை இடங்கள் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது மக்கள் தொகையை வைத்துத்தான் ஒவ்வொரு மாநிலத்திற்கான மக்களவை இடங்கள் முடிவுசெய்யப்படும். இம்மாதிரி பிரச்னை எழக்கூடாது என்பதற்காகத்தான் 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையிலேயே எல்லாவற்றையும் தீர்மானிப்பது என முன்பு ஒப்புக்கொண்டோம்.

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

ஆகவேதான் அதற்குப் பிறகு மக்களவை இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தற்போதைய மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, மக்களவை இடங்கள் மாற்றப்படவிருக்கின்றன. கட்டாயம் இடங்கள் மாற்றப்படும் என ஹர்தீப் சிங் பூரி ஏற்கனவே கூறிவிட்டார். இன்னும் ஆறு வருடங்கள் கழித்து பார்க்கும்போது மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடும் கேரளாவும் மிகவும் பின்தங்கியிருக்கும்.

இப்போது தமிழ்நாட்டில் 40 இடங்கள் இருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்கள் இருக்கின்றன. அதாவது இரண்டு மடங்கு. இடங்கள் திருத்தப்படும் போது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஐம்பது இடங்களும் உத்தரப்பிரதேசத்தில் 160 இடங்களுமாக மாற்றப்படும். அப்படியானால், தமிழ்நாட்டைப் போல மூன்று மடங்கு இடங்கள் உ.பியில் இருக்கும். ஆகவே தென் மாநிலங்களின் ஆதரவே இல்லாமல் இந்தியாவை ஆட்சி செய்ய முடியும். அதை நோக்கித்தான் செல்கிறோம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. "ஜெய்ஹிந்த்"-ஐ விட இதுதான் மிக முக்கியமான பிரச்னை.

இந்தியாவில் ஏற்கனவே பொருளாதார ரீதியாக சமமற்ற தன்மை இருக்கிறது. தென்னிந்தியா வலுவாகவும் வட இந்தியா பலவீனமாகவும் இருக்கிறது. இதனால்தான் நிதியைப் பகிர்ந்தளிப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. அதனால்தான், நம்முடைய மருத்துவக் கல்லூரி இடங்களை பிறருக்கு ஏன் அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 2026இல் குறைவான இடங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டால், ஏன் தனியாகச் செல்லக்கூடாது என்ற கேள்வியெழும். எழவேண்டுமென சொல்லவில்லை. ஆனால், தமிழ்நாட்டிற்கு 45 இடங்கள் என ஆக்கிவிட்டு, உ.பிக்கு 160 இடங்கள் அளிக்கப்பட்டால் எல்லோருமே அந்த உணர்வை அடைவார்கள்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை மத்திய அரசு வலியுறுத்தியபோது, நாம் அதைச் சரியாகச் செய்தோம். வட மாநிலங்கள் அப்படிச் செய்யவில்லை. சரியாகச் செய்த நமக்கு தண்டனை என்றால் அதை எப்படி ஏற்பது?

ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

பட மூலாதாரம், Anand srinivasan facebook

படக்குறிப்பு, ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

கே. இதற்கு என்ன தீர்வு என நினைக்கிறீர்கள்?

ப. இப்போது நாட்டில் எந்த விஷயத்திலும் ஒருமித்த உணர்வு திரட்டப்படுவதில்லை. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் சுமுகமான நிலை இல்லை. ஆகவே 2026ல் நாடாளுமன்ற இடங்களைப் பிரிப்பதை தள்ளிப்போட வேண்டும். தமிழ்நாட்டில் கூடுதலாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.

ஏற்கனவே சீனாவில் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஜப்பானில் வேலை பார்க்கவே ஆளில்லை. ஐரோப்பாவிலும் இந்தப் பிரச்னை துவங்கிவிட்டது. இந்தியாவிலும் பார்சி போன்ற சில சமூகங்கள் குறைந்து வருகின்றன. இது தமிழ்நாட்டில் ஏன் நடக்காது? இன்றைக்கு நான் பயமுறுத்துவதாக தோன்றலாம். ஆனால், இது நடக்கபோகிறது.

இதன் விளைவாக, தமிழ்நாட்டில் தமிழ் தேசிய உணர்வு அதிகரிக்கும். வடக்கிலிருந்து வந்தவர்கள் வாக்களிக்கக்கூடாது என்ற குரல்கள் எழும். ஆனால், சட்டரீதியாக அதைத் தடுக்க முடியாது. ஒரு கட்டத்தில் இந்தி பேசுபவர்கள் 10 சதவீதமென்று வந்துவிட்டால், அவர்களால் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க முடியும். கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில் 3 சதவீதம்தான் வித்தியாசம்.

ஆகவே எதிர்காலத்தில் இந்தி பேசுவோரின் வாக்குகளைப் பெற எல்லாக் கட்சிகளும் முயலும். அவர்கள்தான் எந்தக் கட்சி வெற்றிபெறுமென்பதை முடிவுசெய்வார்கள். உள்ளூர் மக்கள் அதற்கு எதிராக மாறுவார்கள். மொழி ரீதியான ஒருங்கிணைவு அதிகரிக்கும்.

ஏற்கனவே தமிழ் தேசிய உணர்வு இருக்கிறது. இப்போது இந்த மக்கள் தொகை பிரச்னையை சரிசெய்யவில்லையென்றால், அந்த உணர்வு வேகமாக வளரும். ஆகவே இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :