புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தென்னிந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என கொரோனா ஊரடங்கு உணர்த்துகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா வைரஸ் முடக்கநிலை அறிவிக்கப்பட்டபின் பிற மாநிலங்களில் நடந்ததைப் போலவே கர்நாடக மாநிலத்தில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்களும் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முயன்றனர்.
பலர் நடந்து சென்றார்கள். மற்றவர்கள் தங்களால் ஆன எல்லா வழிகளிலும் முயன்றார்கள்.
அவர்கள் ஊர் திரும்புவதற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கர்நாடக அரசும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. சில ரயில்களும் அதற்காக ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனால், எந்த ரயிலும் கர்நாடகாவை விட்டுக் கிளம்பாது என்று மே மாதத் தொடக்கத்தில் கர்நாடக அரசு அறிவித்தது.
அந்த அறிவிப்புக்கு முன்னர்தான், கான்ஃபெடேரஷன் ஆஃப் ரியல் எஸ்டேட் டெவெலப்பர்ஸ் அசோசியேஷன் (CREDAI) எனும் கட்டுமானத் துறையினர் சிலர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவைச் சந்தித்திருந்தனர்.
அந்த சந்திப்புக்குப் பின் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும், தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் முடிவில் மனமாற்றத்தை ஏற்படுத்துமாறும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் எடியூரப்பா.
தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டுச் சென்றுவிட்டால், தங்கள் தொழில் பாதிக்கும் என்று தொழிலதிபர்கள் முதல்வரிடம் கூறினர் என்று செய்திகள் வெளியாகின.
இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று விமர்சனங்கள் எழுந்தாலும், "அவர்கள் வேலை இல்லை என்பதால்தான் சொந்த மாநிலங்களுக்குப் போகின்றனர். இனிமேல் அவர்களுக்கு வேலை இருக்கும்," என்று கர்நாடக அரசுத் தரப்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதே மே மாதத்தின் இறுதியில் தமிழக ஊடகங்களில் இன்னொரு செய்தி வெளியாகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிப்காட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டதால் கடும் தொழிலாளர் பற்றாக்குறை உண்டாகிறது.

அதனால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞர்கள், மற்றும் தொழிற்படிப்பு முடித்த உள்ளூர் இளைஞர்கள் ஆகியோரை அடையாளம் காண உதவுமாறு சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள், அப்பகுதியில் உள்ள ஊராட்சித் தலைவர்களை அணுகவுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
அந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பது வட இந்தியத் தொழிலாளர்கள் சென்றதால் உண்டான ஆள் பற்றாக்குறையைப் போக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
வட இந்தியத் தொழிலாளர்கள் தென்னிந்தியாவில் ஏன் தேவை?
பொறியியல் படிப்பதற்கு இருந்த நுழைவுத் தேர்வை 2006ஆம் ஆண்டு முதல் ரத்து செய்வதாக அறிவித்தார் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி.
நுழைவுத் தேர்வுக்கு பணம் கட்டி படிக்க வசதியுள்ள, பெரும்பாலும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்குமிருந்து பொறியியல் பட்டதாரிகள் உருவானார்கள்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறுவதற்கான குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வித்தகுதி உயர்த்தப்பட்டே வந்தது, அதன்கீழ் 12ஆம் வகுப்பு வரை படித்த பெண்களைவிட, கல்லூரிப் படிப்பு முடித்த பெண்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் நிதி போன்றவை காரணமாக பொறியியல் மட்டுமல்லாது கலை மற்றும் அறிவியல் பிரிவுகளிலும் தமிழகத்தில் கணிசமான பட்டதாரிகள் உருவானார்கள்.
கல்வித்திட்டம் மற்றும் அதன் தரம் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து நீடித்தாலும், 2000மாவது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் கல்லூரிகள் உருவாகின.
சிறுநகரங்களிலும், கிராமப்புறங்களிலும் கூட கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தின் பொருளாதார வலிமைகளில் ஒன்றாக இருக்கும் பொதுப் போக்குவரத்து, மாணவர்கள் எளிதாகத் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வர உதவியது.
இன்றைக்கும் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட சுமார் இரண்டு மடங்கு இருப்பதற்கு மேற்கண்டவை முக்கியக் காரணிகளாக உள்ளன.

இந்தப் புத்தாயிரமாவது ஆண்டில் உண்டான சேவைத் துறைகளின் வளர்ச்சி, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, தொழிற்கல்வியும், பட்டப்படிப்பும் முடித்த தமிழக மாணவர்கள் திறன்சார் வேலைகளில் ஈடுபட வாய்ப்பளித்தன.
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்புகளைத் தேடி தமிழர்கள் செல்வது இப்போதும் தொடர்ந்தாலும், தொழிலாளர்களாக இல்லாமல், பொறியாளர், பேராசிரியர் போன்ற தொழில்முறைப் பணியாளர்களாக செல்லத் தொடங்கினர்.
இதனால் உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற, கல்வி அல்லது பயிற்சி மூலம் எந்தத் துறையிலும் நிபுணத்துவம் தேவைப் படாத பணிகளுக்கு ஆட் பற்றாக்குறை உண்டாகத் தொடங்கியது.
உற்பத்தி துறையிலும் கணிசமான வளர்ச்சியோடு முழு வீச்சில் பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெறத் தொடங்கிய காலகட்டம் அது என்பதால் அப்போது புதிதாக வேலை வாய்ப்புகளும் கணிசமாக உருவாகின.
மக்கள்தொகை கட்டுப்பாடு, உயர்கல்வி பரவலாக்கல் உள்ளிட்டவற்றில் தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்கள் அடைந்த கணிசமான வெற்றி, பெரிதாக படிப்பில்லாமல் உடல் உழைப்பு மூலம் செய்யப்படும் வேலைகளுக்கான தொழிலாளர்களின் தேவையை அதிகரித்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்புக்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்தது ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தலைமையிலான அரசு. இதன்மூலம் பட்டதாரிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
இந்தத் திட்டம் தெலுங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் இரு மாநிலங்களிலும் இன்றும் தொடர்கிறது.
இது மட்டுமல்லாது 1990களின் தொடக்கத்தில் தொடங்கிய தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மிகவும் தீவிரமான விளம்பரம் கொடுத்தார். அவரது ஆட்சிக்காலத்தில் மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகள் பெரும் எண்ணிக்கையில் தொடங்கப்பட்டன. பொறியியல் பட்டம் பெற்ற பெரும்பாலானோர், உற்பத்தித் துறைகளை விடவும் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பினர்.
இவற்றையும் மீறி ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து புலம்பெயர்வோர் பெரும்பாலும் அண்டை மாநிலங்களுக்கும், அரபு நாடுகளுக்கும் சென்றனர். தென்னிந்தியாவிலேயே நீர்ப்பாசனத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் மாநிலங்களாக ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகியவை உள்ளன.
இதனால் சமீப ஆண்டுகளில் இவ்விரு மாநிலங்களிலும், குறிப்பாக தெலங்கானாவில் பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பல காலத்துக்குப் பிறகு மீண்டும் வேளாண் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இது வேறு நாடுகளுக்கும், வேறு மாநிலங்களுக்கும் பிழைப்புத் தேடி சென்றவர்களையும் மீண்டும் சொந்த ஊர் திரும்பி வேளாண் தொழில் செய்ய வைத்தது.
கேரளாவுக்குப் பல பத்தாண்டுகளாகவே மத்திய கிழக்கு நாடுகள் உடனான தொடர்பு, பொருளாதார ரீதியில் வலுவாக இருப்பதால் அங்கிருந்து வேலை வாய்ப்புக்காகப் புலம்பெயர்பவர்கள் வெளி மாநிலங்களைவிடவும் அரபு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இவற்றின் காரணமாக, தொழிற்கல்வி, உயர்கல்வி ஆகியவற்றால் பெறக்கூடிய வேலைகளை நோக்கி தென்னிந்தியர்கள் நகர்ந்ததால் அந்தப் வேலைவாய்ப்புகளை பெற வட இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர்கள் நிரப்பினர்.
வட மாநிலத்தவர்கள் தென்னிந்தியாவுக்கு வேலை தேடி வந்தது மட்டுமல்லாது, தென்னிந்தியத் தொழில் நிறுவனங்கள் முகவர்கள் மூலம் அவர்களை அழைத்து வரப்படுவதும் தொடங்கியது.
'வட இந்தியத் தொழிலாளர்கள் விரைவில் வராவிட்டால் பிரச்சனை'
"வட இந்தியாவில் இருந்து அவர்கள் இங்கு வந்தபோது குறிப்பிட்ட தொழில் எதிலும் அவர்கள் திறன் பெற்றவர்களாக இல்லை. இங்கு வந்தபின் நாம் அவர்களை திறன் மிக்கவர்களாக மாற்றியுள்ளோம். எல்லாம் முடிந்து அவர்கள் திரும்பி வருவார்கள். பொருளாதார சூழ்நிலை மீண்டும் தொழில் முழு வீச்சில் தொடங்கும் என நம்புகிறோம்," என்று கூறுகிறார் கோவை மாவட்ட சிறு தொழிலதிபர்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி.

பட மூலாதாரம், Getty Images
"இப்போது சந்தைத் தேவை குறைவாக இருப்பதால், உற்பத்தியும் குறைவாக உள்ளது. அதனால் உள்ளூரில் உள்ள தொழிலாளர்களை வைத்தே சமாளிக்க முடிகிறது. ஆனால், பெரும்பான்மையான ஊழியர்களாக வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தியிருந்த நிறுவனங்கள் இப்போது சிரமத்தை எதிர்கொள்கின்றன," என்று பிபிசி தமிழிடம் ராமூர்த்தி தெரிவித்தார்.
இன்னொரு தென் மாநிலமான தெலங்கானாவிலும் இதே நிலைமைதான். "எங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களில் சுமார் 60% பேர் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்தான். சொந்த ஊருக்குச் சென்றவர்கள் உடனடியாகத் திரும்ப மாட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியும். இன்னும் இரண்டு - மூன்று மாதங்களுக்குள் அவர்கள் திரும்பி வரவில்லை என்றால் எங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் மேலும் மோசமாகும்," என்று கூறுகிறார் தெலங்கானா மாநில சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சங்கத்தின் தலைவர் அப்பி ரெட்டி.
வட இந்தியா - தென் இந்தியா: தொழில் வளம் - மனித வளம்
இந்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தரவுகளின்படி இந்தியாவிலேயே மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரம். (2018-19இல் 24,11,600 கோடி ரூபாய்)

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு. (2018-19இல் 16,64,159 கோடி ரூபாய்) மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் உத்தரப்பிரதேசம் (2018-19இல் 15,42, 432 கோடி ரூபாய்) மற்றும் கர்நாடகா (2018-19இல் 15,35,224 கோடி ரூபாய்). எனினும் இந்த இரு மாநிலங்கள் இடையே சுமார் 7,000 கோடி ரூபாய் மட்டுமே வேறுபாடு.
அதாவது தன்னைவிட மூன்று மடங்கு மக்கள்தொகை கொண்ட மாநிலத்தை தமிழகம் முந்திவிட்டது. தமிழகத்தைவிட கொஞ்சம் குறைவான அளவே மக்கள்தொகை கொண்டுள்ள கர்நாடகம், தன்னைவிட சுமார் மூன்றரை மடங்கு மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தை நெருங்கிவிட்டது.
தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகியவை தற்போது ஒரே மாநிலமாக இருந்தால் ஒட்டுமொத்த உள்மாநில உற்பத்தியில் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்திலும் தமிழகம் மூன்றாம் இடத்திலும் இருந்திருக்கும்.
எனினும், கட்சிகள், ஆட்சிகள் வெவ்வேறாக உள்ளன என்பதால் இதே அளவு மதிப்பு இருந்திருக்குமா என்பதும் கேள்விக்குறிதான். ஆனால், நிச்சயம் தொழில் வளர்ச்சி மிகுந்துள்ள இந்திய மாநிலங்கள் பட்டியலில் இருந்திருக்கும்.
தென் மாநிலங்களிலேயே குறைவான ஒட்டுமொத்த மாநில உற்பத்தி உடைய கேரளா (2017-18க்கான தரவுகளின்படி 7,00,532 கோடி ரூபாய் ) அதைவிட சுமார் மூன்று மடங்கு மக்கள்தொகை கொண்ட வட இந்திய மாநிலமான பிகாரைவிட (2017-18க்கான தரவுகளின்படி 4,84,740 கோடி ரூபாய்) ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பைக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எனினும், பின் தங்கிய மாநிலங்களாகக் கருதப்படும் வட இந்திய மாநிலங்கள் சமீப ஆண்டுகளில் வளர்ச்சி விகிதத்தில் நல்ல நிலையில் உள்ளன. கடந்த இரு நிதியாண்டுகளில் உண்டாகியுள்ள பொருளாதார சரிவு இந்தியா முழுமைக்குமானது என்பதால், அந்த மாநிலங்கள் தனிப்பட்ட வகையில் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை.
வளர்ச்சி அதிமாக உள்ள மற்றும் குறைவாக உள்ள இந்திய மாநிலங்கள் இடையே பொருளாதாரச் சமநிலை உருவாகும்போது, தொழிலாளர்களை வேறு மாநிலங்களுக்கு அனுப்பும் வளர்ச்சி குன்றிய மாநிலங்கள் தாங்களாவே தங்கள் மாநிலத்தவர்களுக்கு போதிய அளவு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிலையில் இருக்கலாம்.
மனித வளத்துக்காக வேறு மாநிலங்களை நம்பியுள்ள தொழில் வளர்ச்சியுள்ள மாநிலங்கள் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி முறையை இயந்திரமயமாக்கி வருகின்றன. மானியங்கள் மற்றும் அரசின் பிற சலுகைகள் அதற்கு உகந்தவையாகவும் உள்ளன.
"இப்போது முடக்கநிலையால் அனுபவித்துள்ள இன்னல்களால் திரும்பி வருவது குறித்த அச்சம் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ள தொழிலாளர்களுக்கு இருக்கலாம். ஆனால், பொருளாதாரத் தேவைகள் நிச்சயம் அவர்களை சில மாதங்களில் இங்கே திரும்பி வர வைக்கும். ஏனெனில், பிகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் இங்கு இருப்பதைப் போல பொருளாதார வளம் பெற்று, சமநிலையை அடைய இன்னும் பத்து - இருபது ஆண்டுகள் ஆண்டுகள் ஆகலாம்," என்கிறார் 'கொடிசியா' தலைவர் ராமமூர்த்தி.
அந்தச் சமநிலை வரும்வரை தொழில்வளம் உள்ள தென் மாநிலங்களும் மனிதவளம் மிகுந்த வட மாநிலங்களும் உற்பத்தி முறையில் இணைந்தே இயங்க வேண்டியிருக்கும்.
பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் பல்லா சதீஷ் கொடுத்த உள்ளீடுகளுடன் எழுதப்பட்ட கட்டுரை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












