தமிழகத்தில் மேலும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு - அண்மைய சர்வதேச செய்திகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் இன்று (ஜூன் 5) புதிதாக 1,438 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று 12 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 232-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று இறந்த 12 நபர்களில் பெரும்பாலானவர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாதிப்புக்கு உள்ளான 1,438 நபர்களில் 33 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், இலங்கை, துபாய், கத்தார், டெல்லி, ,மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1,116நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் செயல்படும் 74 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 5, 60,693மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 15,692 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 861 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைப்பட உள்ளன என்றார்.
''கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைதன்மையுடன் தினமும் வெளியிடுகிறது. இறப்பு எண்ணிக்கை மற்றும் பரிசோதனைகளை குறைத்துச் சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. நாங்கள் எந்த தகவலையும் மறைக்கவில்லை. தமிழக அரசின் கொரோனா செய்திக்குறிப்பை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என்பதை கவனிக்கவேண்டும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா சோதனை மையங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. நாம்தான் அதிக சோதனைகளை செய்கிறோம்,'' என்றார். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஜி(BCG) தடுப்பூசி சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னையில் கொரனா தொற்று அதிகரிக்கும் நிலையில், அப்பகுதியில் எடுக்கப்படும் தடுப்பு பணி நடவடிக்கைள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர்கள் தமிழக அரசு நியமித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்றவாறு சென்னை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் கொரோனா தொற்றாளர்களை கண்டறிவது, தனிமைப்படுத்துவது, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பணிகளுக்காக மூத்த ஐ.ஏ,எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியர்த்தப்பட்டு, அவர்களின் பணிகளை அமைச்சர்கள் கண்காணிப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலம் 3,4,5 - மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார்
சென்னை மண்டலம் 13,14,15 - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
சென்னை மண்டலம் 8,9,10 - உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்
சென்னை மண்டலம் 1,2,6 - வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
சென்னை மண்டலம் 7,11,12 - போக்குவரத்துதுறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நேற்றுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256ஆக இருக்கிறது. இது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதில் குறிப்பாக சென்னையில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது. சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693ஆக இருக்கிறது.
அதனை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருப்பதாக தெரிகிறது.
உலக நிலவரம் என்ன?
கொரோனா தொற்று பரவல் தொடங்கி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆனாலும், உலகின் பல நாடுகள் இன்றும் இதில் இருந்து மீள முடியாத நிலையில்தான் இருக்கின்றன.
இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 3ல் ஒரு பகுதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பது அங்குதான்.
அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது.
அதற்கு அடுத்த இடத்தில் பிரிட்டன், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன.

பட மூலாதாரம், AFP
ஆப்ரிக்காவை பொறுத்த வரை தென் ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் இரான் ஆகிய நாடுகளிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.
மலேசியாவில் அண்மைய தகவல் என்ன?
மலேசியாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,266ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 13 நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு நோயாளி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 116-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,540 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றைப் போலவே டெங்கு காய்ச்சல் குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம் அறிவுறுத்தி உள்ளார்.
மலேசியாவில் டெங்கு காய்ச்சல் என்பது எப்போதுமே இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், நடப்பாண்டில் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.7 விழுக்காடு குறைந்துள்ளது என்றும், 82 பேர் பலியாகி உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 53,187 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது 46,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் மொகிதின் யாசின் குறுகிய கால பொருளாதார மீட்சித் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டின் போது மலேசிய பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களை மேம்படுத்துதல், வணிகங்களை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதாரத்தை தூண்டுதல் எனும் மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் இந்த திட்டம் நிறுவப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க சிறப்பு விமானங்கள்
சிங்கப்பூரில் இன்று புதிதாக 261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் சிங்கப்பூரர்கள் என்றும், மற்றவர்களில் பெரும்பாலானோர் அந்நியத் தொழிலாளர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி, 37,183ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பல்வேறு காரணங்களால் சிங்கப்பூரில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பலரும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அவர்களுக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இம்மாதம் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருந்து சென்னை, மதுரை ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்ததாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் முடக்க நிலை தளர்வின் முதற்கட்டமாக உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கேயே அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.
மிகவும் கவலைக்குரிய நாடாக பிரேசில் இருக்கிறது. அங்கு இதுவரை சுமார் 6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், உலகெங்கும் கொரோனா பாதிப்பு குறித்து வெளியான தரவுகளை விட, உண்மையான பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிக தொற்றுகளை எதிர்கொள்ளும் அபாயம் இந்நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் குறைந்தது 86 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சீனாவை விட அதிகமாகும்
வங்க தேசத்தில் இதுவரை குறைந்தது 57,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770-ஆக அதிகரித்துள்ளது.
ஆனால், உயிரிழப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இதுவரை இந்தியாவில் 6348 பேர் இறந்துள்ளனர். பாகிஸ்தானில் 1,793 பேரும், வங்க தேசத்தில் 781 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், இந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு வரும் மாதங்களில் உச்சம் அடையும் என்பதால், அதை அந்தந்த நாட்டு சுகாதாரத்துறைகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












