தமிழ்நாட்டின் வினோத கிராமம்: மரண பயத்தில் மாடி வீடு கட்டாத மக்கள்

- எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் உள்ள வினோத கிராமங்கள் தொடரை பிபிசி வழங்குகிறது. அதன் அங்கமாக மாறுபட்ட எண்ணத்துடன் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு கிராமத்தை இன்று உங்களுக்கு வழங்குகிறோம்.
நாகரிகம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில், நகரத்திற்கு இணையாகவே கிராமங்களிலும் மாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் மாடி வீடுகளே இல்லாத வினோத கிராமம் ஒன்று என்றால் நம்ப முடிகிறதா?
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருத்த ராஜா பாளையத்தில் தான் இப்படி ஒரு நடைமுறையை கடந்த 150 ஆண்டுகளாக இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்.
ஏன் மாடிவீடுகள் இல்லை?
கருத்த ராஜா பாளையத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகே சுமார் 1600. பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர் அதோடு தென்னங்கீற்று ஓலையில் துடைப்பம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கே மாடி வீடுகளே கிடையாது. தரை தளத்துடன் கூடிய கான்கிரீட் வீடுகள் ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் சிமெண்ட் அட்டை வீடுகளே உள்ளன. காரணம் பெரியசாமி என்ற அவர்கள் நம்பும் சாமி.
சாமியே தரை தளத்தில் இருக்கும் போது உயரமான மாடியிலோ மாடிப்படியிலோ இருந்து சாமியை பாக்கக்கூடாது என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் மாடி வீடுகள் கட்டினால் அசம்பாவிதம் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.
இந்த கிராமத்தில் வாழ்ந்த முன்னோர்கள் விதித்த கட்டுப்பாடே, கிராமத்தில் யாரும் மாடி வீடு கட்டக்கூடாது என்பது தானாம். அதை இன்றளவும் கைவிடாமல் பின்பற்றி வருகிறார்கள்.

கருத்த ராஜா பாளையம் ஊருக்கு வெளியே ஓடை அருகே உள்ள பெரிய சாமி கோயில் எராளமான வவ்வால்கள் கத்தும் சத்தத்தோடு அச்சத்தை ஏற்படுத்தும்படிதான் இருக்கிறது பெரியசாமி பெரிய விழிகளோடு குதிரையில் அமர்ந்து மிரட்டுகிறார்.
மக்கள் என்ன கூறுகிறார்கள்?
மாடி வீடுகள் கட்டக்கூடாது என்ற நம்பிக்கை இன்றளவும் தொடருவது குறித்து கருத்த ராஜா பாளையத்தில் வசிக்கும் பலரிடம் பேசினோம்.

"கருப்பையா என்கிற பெரியசாமி மிகவும் சக்தி வாய்ந்த சாமி. எங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால் இந்த சாமி காவலர் உருவத்தில் நாயுடன் எங்கள் கனவில் வருவார், நல்லது சொல்லுவார், இங்கு யாரேனும் தப்பு செய்திருந்தால், அவர்கள் பெரியசாமி கோயிலுக்கு சென்று வேல் ஒன்றை தலைகீழாக நட்டு வைத்தால் அவர்களின் தவறை சாமி மன்னித்துவிடுவார்" என்கிறார் செல்வராணி.
"பெரிய சாமி கோயிலில் கோபுரமோ, மேற்கூரையோ இல்லை. அதன் காரணமாக இந்த பகுதிகளில் யாரும் மாடி வீடு கட்டுவதில்லை. அப்படி யாரேனும் மாடி வீடு கட்டியிருந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஏதேனும் சோதனை காட்டிவிடும்" என்றார் செல்வராணி
அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி வேறொரு வினோதமான வழக்கத்தைப் பற்றிச் சொன்னார்.

"வீடுகளில் யாரும் இரவு நேரத்தில் குழந்தைகளை தொட்டிலில் படுக்க வைக்க மாட்டோம். தரையில்தான் படுக்க வைப்போம்" என்றார் முத்துசாமி.
"கருத்தராஜா பாளையத்தில் இருந்து பெரியசாமி கோவில் எல்லைக்குள் நுழைந்த உடன் யாரும் செருப்பு அணிய மாட்டோம் கோவில் எல்லையை தாண்டிய பின்னர் தான் செருப்பு அணிவோம். இந்த கட்டுப்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம்.அதே போல பெரியசாமி கோயிலில் ஏராளமான பழந்தின்னி வெளவால்கள் உள்ளன. அவை மாலை நேரத்தில் கொல்லிமலைக்கு சென்று பழங்கள் சாப்பிட்டு விட்டு விடியற்காலையில் எங்கள் ஊருக்கே திரும்பி விடும்" என்கிறார் அவர்.
அடுத்து நாம் சந்தித்த முத்துவோ, "இந்த ஊர் தோன்றிய காலத்தில் இருந்து யாரும் மெத்த வீடே கட்டியதில்லை அதையும் மீறி சிலர் மாடி வீடு கட்டினால் பெரியசாமி அவர்களது குடும்பத்தில் பல சோதனையை காட்டிவிடும்" என்றார்.

"அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விடுவார்."
"எனக்கு 70 வயது ஆகிறது. 10 தலைமுறையாக யாரும் இங்கு மாடி வீடு கட்டியது இல்லை. எனக்கு அரசு தொகுப்பு வீடு கட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் நான் கட்டவில்லை" என்றார் முத்து.
இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இந்த நம்பிக்கையைப் பின்பற்றுகின்றனர்.

"எங்கள் குடும்பத்தில் எங்களுடைய தாத்தா, பாட்டி யாருமே மாடிவீடு கட்டியது இல்லை. நாங்களும் அதனை தொடர்ந்து கடைபிடிக்கிறோம்" என்கிறார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் கமலி.
"எங்க ஊர்மக்கள் கூரை வீட்டிலும், ஓட்டு வீட்டிலும் இருந்தே பழக்கப்பட்டு விட்டோம். நான் படித்து வேலைக்கு சென்றாலும் மாடிவீடு கட்டும் என்ற எண்ணமே எனக்கு வராது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். பெரியசாமி இரவு வேட்டைக்கு செல்வதாக கூறுகின்றனர். அதனை நான் நம்புகிறேன். சிலர் இதனை மூடநம்பிக்கை என்றும் கூறினாலும் அதனை நாங்கள் ஏற்கவில்லை" என்றார்
தொடர்ந்து பெரியசாமி கோயில் பூசாரி பழனிசாமியிடம் பேசினோம்.
"15ம் நூற்றாண்டில் இந்த சாமியின் வேண்டுகோள்படி கொல்லிமலையை சேர்ந்த பழங்குடி இனத்தவர் இந்த சாமியை இங்கு கொண்டு வந்து வைத்தனர். பின்னர் இந்த பகுதி மக்கள் சிலையை வணங்கத் தொடங்கினர். இங்கு காலங்காலமாக மக்கள் திருவிழா எடுத்து வழிபடுகிறார்கள்."

"இரவு ஒரு மணியளவில் தென்பகுதிக்கு இந்த சாமி செல்லும். அப்போது யாரும் குறுக்கே வரக்கூடாது. அப்படி வந்தால் அவர்களுக்கு ஏதேனும் சோதனை காட்டும். குழந்தை பிறந்தால் இரவு 6 மணிக்கு மேல் யாரும் குழந்தையை தொட்டிலில் போட மாட்டார்கள். அப்படி போட்டால் குழந்தை இறந்துவிடும். கி.பி 15ம் நூற்றாண்டில் இருந்து இங்கு மாடி வீடே கிடையாது. இந்த கோவிலில் உள்ள பெரியசாமி கீழே அமர்ந்திருப்பதால். நாங்கள் யாரும் மாடி மீது அமர கூடாது என்பதற்காக மாடி வீடு கட்டுவதில்லை" என்றார் பூசாரி.
பகுத்தறிவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
இது குறித்து பிபிசி தமிழுக்காக சேலம் திராவிட கழக மண்டல செயலாளர் விடுதலை சந்திரனிடம் பேசினோம்.

"இது காலங்காலமாய் கடவுள் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கை தான். ராஜபாளையத்தில் மட்டுமல்ல, இதுபோன்ற மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உள்ளன. தலைவாசல் அருகே உள்ள வீரங்கி அய்யனார் கோயிலில் உள்ள கடவுளை நம்புகின்றனர். அங்குள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் மின் விளக்கை பயன்படுத்தக்கூடாது என்று தங்களின் முன்னோர்கள் சொன்னதாகக் கூறி இதுவரை இரவில் மின் விளக்கே பயன்படுத்துவதில்லை," என்றார்.
"இத்தகைய எண்ணமம் மாற வேண்டும். அந்த காலத்தில் தாத்தா குடுமி வைத்திருந்தார் இப்போது உள்ளவர்கள் கிராப் வெட்டிக் கொள்கிறார்கள் அதுபோல முன்னோர்கள் கோவணம் கட்டியிருந்தார்கள் இப்போது நாம் பேன்ட் அணிகிறோம் இவை எல்லாம் ஒருவித பரிணாம வளர்ச்சி. நாம் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும். காலம் வளர்ச்சி அடையும் வேளையில் நாம் மீண்டும் 200 வருடங்கள் பின்னோக்கிப் போக கூடாது. கண்டிப்பாக இவை ஒரு நாள் மாறும். அந்த மாற்றத்தை பெண்கள் கொண்டு வருவார்கள். பெண்களை அறிவாளியாக ஆக்க வேண்டும் என்றால் அவர்களிடம் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள் என்று பெரியார் கூறுவார். அதுபோல அந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் படித்தால் மட்டும் போதாது. படிப்போடு பகுத்தறிவும் வேண்டும். அப்போதுதான் ஒருநாள் இந்த கிராமத்திலும் மாற்றம் வரும்," என்றார் விடுதலை சந்திரன்.
பிற செய்திகள்:
- 2015ல் ரத்து செய்த சட்டப்பிரிவில் தொடர்ந்து வழக்குப் பதிவதா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி
- சிங்கப்பூரில் 10ல் 3 பேருக்கு வேலை பறிபோகலாம் என கவலை: இந்தியர்கள் மனநிலை என்ன?
- 146 ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவின் நிலவறையில் அடைக்கப்பட்டது உண்மையா?
- காலக்கெடுவுக்குள் வெளிநாட்டுப் படைகள் முழுவதும் வெளியேறவேண்டும் - தாலிபன்கள் கண்டிப்பு
- சாலைக்காக 30 ஆண்டுகள் நடந்த போராட்டம், ஒரு ட்வீட்டில் வெற்றி பெற்ற கதை
- பாலைவனத்தில் 100க்கு மேல் புதிய ஏவுகணை தளங்கள் அமைக்கிறதா சீனா? அணு ஆயுதங்கள் குவிக்கவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












