ஐ.டி. சட்டம் பிரிவு 66ஏ: 2015ல் ரத்து செய்த சட்டப் பிரிவில் தொடர்ந்து வழக்குப் பதிவதா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

ஷ்ரேயா சிங்கால்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66ஏ ரத்து செய்யப்படவேண்டும் என்று இந்திய ஒன்றியத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஷ்ரேயா சிங்கால்.

2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ் மக்கள் மீது தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இணையத்தில் எழுதுகிற கருத்துகளுக்காக வழக்குத் தொடர வழிவகை செய்த இந்த சட்டப் பிரிவை ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றியம் என்று குறிக்கப்படும் வழக்கின் தீர்ப்பில் ரத்து ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000, பிரிவு 66ஏ ரத்து செய்யப்பட்ட பிறகும் அதன் கீழ் வழக்குப் பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல். தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான 3 நபர் பெஞ்ச் இது குறித்து தங்கள் கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

நடந்து கொண்டிருப்பது மிக மோசமானது. ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டார் ஃபாலி நாரிமன்.

இது போன்ற விவகாரங்களில் வழக்குப் பதிவு செய்வது எப்படி அதிகரித்திருக்கிறது என்று பார்க்கும்படி கோரினார் பியுசில் அமைப்புக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சஞ்சய் பாரிக்.

இதற்குப் பதில் அளித்த நீதிபதிகள், தாங்கள் இந்த விஷயத்தில் நோட்டீஸ் அளிப்பதாக கூறினர். நாரிமன் தவிர, கே.எம்.ஜோசப், பி.ஆர்.கவாய் ஆகிய நீதிபதிகள் இந்த பெஞ்சில் இடம் பெற்றிருந்தனர்.

சட்டப் பிரிவு 66ஏ ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 229 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. ரத்து செய்யப்பட்ட பிறகு 1,307 வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இன்னும் 570 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று என்று சஞ்சய் பாரிக் கூறியதாக என்.டி.டி.வி. இணைய தளம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் எத்தனை வழக்கு?

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 381 வழக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 291 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 245 வழக்குகளும், ராஜஸ்தானில் 192 வழக்குகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 38 வழக்குகளும், அசாமில் 59 வழக்குகளும், டெல்லியில் 28 வழக்குகளும், கர்நாடகத்தில் 14 வழக்குகளும், தெலங்கானாவில் 15 வழக்குகளும், தமிழ்நாட்டில் 7 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 37 வழக்குகளும் இந்த சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பாரிக் வாதிட்டுள்ளார்.

இந்தப் பிரிவு பேச்சுரிமையைப் பறிப்பதாக கூறித்தான் 2015ல் உச்ச நீதிமன்றம் இதனை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு வழக்குரைஞர் கூறியது என்ன?

இந்திய ஒன்றியத்துக்காக வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இந்த சட்டத்தை ரத்து செய்தாலும், இந்த சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு: "பல்கலைக்கழகம் இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்" - தமிழகத்திற்கு இது பொருந்துமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்குகளா, அதிர்ச்சி அடைந்த உச்ச நீதிமன்றம்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியதுடன், இது குறித்து எழுத்துமூலம் வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி அவரைக் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் மத்திய அரசை இரண்டு வாரங்களில் பதில் தாக்கல் செய்யும்படி கூறி நோட்டீஸ் வழங்கியது உச்ச நீதிமன்றம். இரண்டு வாரம் கழித்து மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது

பியுசிஎல் அமைப்புக்காக இந்த வழக்கை தாக்கல் செய்த அபர்ணா பட் என்ற வழக்குரைஞர், ரத்து செய்யப்பட்ட சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட இந்த வழக்குகள் காவல் நிலைய அளவில் மட்டுமல்ல, நீதிமன்றங்களில்கூட விசாரணை நிலையில் கூட உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

"இந்த விவகாரம் 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கின் தீர்ப்பு நகல் நாட்டின் எல்லா மாவட்ட நீதிமன்றங்களுக்கும் கிடைக்கும்படி உயர் நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும், எல்லா மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் இந்த தீர்ப்பு நகல் கிடைக்கும்படி இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று 2019 பிப்ரவரி 15ம் தேதி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

மாநில தலைமைச் செயலாளர்கள் தங்கள் மாநில டிஜிபிக்களுக்கு இந்த நகலை அனுப்பி அது பற்றி போலீசுக்கு விழிப்புணர்வூட்டவேண்டும் என்று தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம்," என்று சட்ட விவகாரங்களை எழுதும் பார் & பெஞ்ச் இணைய தளம் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :