இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்தை வெளியிட்டால் கைது செய்யும் சட்டத்தை ரத்து செய்தது இந்திய உச்ச நீதிமன்றம்

இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரமளிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவை ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

66ஏ சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனை ரத்துசெய்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 66ஏ சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனை ரத்துசெய்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், இணையத்தில் சில கருத்துக்களை தடை செய்ய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை.

சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே மரணடைந்த போது, மும்பையில் நடந்த கடையடைப்பைக் கண்டித்து, தாணே மாவட்டத்தில் பால்கர் என்ற இடத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா, ரீனு சீனிவாசன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவுசெய்தனர்.

இதற்காக அவர்கள் இருவரும் 66ஏ பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து இந்தச் சட்டப் பிரிவில் திருத்தம் செய்யக்கோரி ஷ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

2013 மே 16ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. அதன்படி, சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நபரைக் கைது செய்யும் முன்பாக மூத்த காவல்துறை அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அந்த அறிவுறுத்தலில் கூறியிருந்தது.

தொடர்ந்து இந்தப் பொது நல வழக்கை விசாரித்துவந்த ஜே. செல்லமேஸ்வர், ஆர்.எஃப். நாரிமன் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 26ஆம் தேதியன்று தீர்ப்பை ஒத்திவைத்தது.

அதற்குப் பிறகு இன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், இந்தச் சட்டப் பிரிவு ரத்துசெய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்தச் சட்டத்தின் 66ஏ பிரிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாசகங்கள் தெளிவற்றவையாக இருப்பதாகவும் "புண்படுத்துவது" என்பது போன்ற வார்த்தைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படாது என்று தற்போதைய அரசு வாக்குறுதி அளித்தாலும் அடுத்து வரும் அரசுகளை அது கட்டுப்படுத்தாது என்றும் 66 ஏ என்ற சட்டபிரிவு, அதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களின் அடிப்படையில்தான் முடிவுசெய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.