காஷ்மீர் பத்திரிகையாளர்கள்: தங்கள் பணியை செய்வதற்காக 'துன்புறுத்தப்படும்', 'விசாரிக்கப்படும்' சூழ்நிலை உணர்த்துவது என்ன?

ஆகிப் ஜாவீத்

பட மூலாதாரம், SAJID RAINA

படக்குறிப்பு, ஆகிப் ஜாவீத்
    • எழுதியவர், அமீர் பீர்ஜாதா
    • பதவி, பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்ததில் இருந்து இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஊடகவியல் என்பது ஆபத்தான நடவடிக்கையாகிவிட்டது.

'கிரேட்டர் காஷ்மீர்' செய்தித் தாள் அலுவலகங்களையும், ஏ.எஃப்.பி. முகமையின் இதழாளர் பர்வேஸ் புகாரியின் வீட்டையும் இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு முகமை இந்த வாரம் சோதனையிட்டபோது, இதழியல் என்பது இங்கு எவ்வளவு ஆபத்தான பணி என்பது தெளிவாகத் தெரிந்தது.

யூனியன் பிரதேசத் தலைநகரான ஸ்ரீநகரில் தொண்டு நிறுவனங்கள், முன்னணி செயற்பாட்டாளர்களின் வீடுகள் உள்பட 9 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தியது. இந்த நபர்களும், அமைப்புகளும் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று அதனை பிரிவினைவாத செயல்களுக்குப் பயன்படுத்துவதாக கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேச்சுரிமை, மாறுபடும் உரிமை ஆகியவை பெரிய அளவில் நசுக்கப்படும் சூழ்நிலையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதுதான் கவலையளிப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். கடந்த ஓராண்டில் இங்கே குறைந்தபட்சம் 18 செய்தியாளர்களாவது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒரு டஜனுக்கும் குறைவில்லாத பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் உள்ளன.

ஐந்து இதழாளர்கள் தங்கள் கதைகளை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஆகிப் ஜாவீத், வயது 28

ஸ்ரீநகரின் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் வரவழைக்கப்பட்டார் ஆகிப் ஜாவீத்.

Article 14 இணைய தளத்துக்கு அவர் அனுப்பிய சமீபத்திய செய்தியின் படத்தையும் தலைப்பையும் மாற்றவேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியதாக அவர் கூறுகிறார்.

காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்துவந்த சட்டப் பிரிவு 370 (இந்தப் பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது) தொடர்பாக ட்விட்டரில் இட்ட பதிவுகளுக்காக போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு எப்படி டஜன் கணக்கான காஷ்மீர் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் மௌனமானார்கள் என்பது பற்றியது இந்த செய்தி.

தமது செய்தியில் அந்த காவல் நிலையத்தின் தவறான படத்தை பயன்படுத்தியதாக போலீசார் குற்றம்சாட்டினர் என்று கூறுகிறார் ஜாவீத். தாம் அப்போது பிணைக் கைதியைப் போல உணர்ந்ததாகவும் முகக் கவசம் அணிந்த போலீசார் தம்மை அறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தவறான தகவலைத் தருகிறவை என்றும் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போலீஸ். அந்த அறிக்கையிலேயே குறிப்பிட்ட செய்தியின் தலைப்பு, படம், செய்தியின் குறிப்பிட்ட சில அம்சங்கள் உண்மைக்குப் புறம்பானவை, தவறான தகவலைத் தருகிறவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியில் தமது இணைய இதழின் ஆசிரியரைத் தொடர்புகொண்டு செய்தியில் மாற்றங்களைச் செய்யும்படி கோரியதாகவும் ஜாவீத் கூறினார்.

முதலில் அந்த செய்தியின் தலைப்பு:

"The real cyber bully: Police in Kashmir question Twitter users" (உண்மையான இணைய அடாவடிக்காரர்கள்: ட்விட்டர் பயனர்களை விசாரணைக்கு உட்படுத்தும் காஷ்மீர் போலீஸ்) என்று இருந்தது.

இது, பிறகு, "காஷ்மீர் ட்விட்டர் பயனர்களை விசாரணைக்கு உட்படுத்தும் போலீஸ்" என்று மாற்றப்பட்டது.

அந்தக் காவல் நிலையத்தின் தவறான புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக Article 14 ஒரு மன்னிப்புச் செய்தியையும் வெளியிட்டது.

"இந்த நடவடிக்கைகள் படம் தவறாக இருப்பது தொடர்பானவை மட்டும் என்றால் போலீசார் ஒரு விளக்கத்தை அனுப்பியிருந்தால் போதும். நாங்கள் அதை மாற்றியிருப்போம்" என்கிறார் ஜாவீத்.

"எப்போது ஒரு ஊடகவியலாளர் அடிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும், அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இதனால்தான் இப்போதெல்லாம் அடிக்கடி ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்".

பீர்ஜாதா ஆஷிக், 39

பீர்ஜாதா ஆஷிக்

பட மூலாதாரம், MUKHTAR ZAHOOR

தி ஹிந்து, ஆங்கில நாளிதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் பீர்ஜாதா ஆஷிக் என்பவருக்கு எதிராக ஏப்ரல் மாதம் ஸ்ரீநகர் போலீஸ் ஒரு வழக்குப் பதிவு செய்தது.

சமீபத்திய செய்தி ஒன்றில், தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டப்படும் இருவரது சடலங்களை அவர்களது குடும்பத்தார் தோண்டி எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஆஷிக் குறிப்பிட்டிருந்தார்.

அவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டவர்கள். அவர்கள் அரசால் புதைக்கப்பட்டு, அவர்கள் சமாதிகளும் குறிப்பிடப்படவில்லை.

அவர்களது உடல்களை ஒப்படைத்தால் அதனால், பெரிய அளவிலான இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பெருந்தொற்றுக் காலத்தில் நோய் பரவ வழி ஏற்படும் என்பதால் அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், அவர்களது உடல்களைத் தோண்டி எடுத்து இறுதிச் சடங்கு செய்ய தங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக இறந்த இருவரில் ஒருவரது உறவினர்கள் ஆஷிக்கிடம் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தார் தந்த விண்ணப்பத்தின் நகல் தம்மிடம் இருந்தது என்றும், இது தொடர்பான தமது கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை என்றும் ஆஷிக் தெரிவித்தார்.

ஆனால் செய்தி வெளியான பிறகு இது போலிச் செய்தி என்றும், மக்கள் மனங்களில் பீதியையும், அச்சத்தையும் இது ஏற்படுத்தும் என்றும் போலீசார் கூறுகின்றனர். மாவட்ட அதிகாரிகளிடம் உறுதி செய்துகொள்ளாமல் இதை வெளியிட்டதாகவும் அவர்கள் ஆஷிக் மீது குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், செய்தியிலேயே இது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமாதியை பார்வையிட வழங்கிய அனுமதியை சடலங்களை தோண்டி எடுப்பதற்கான அனுமதி என்று குடும்பங்கள் தவறாகப் புரிந்துகொண்டதாக பிறகு தி ஹிந்து நாளிதழிலேயே விளக்கம் வெளியிடப்பட்டது. ஆனால், ஸ்ரீநகரில் உள்ள காவல் நிலையத்துக்கு ஒருமுறையும் அவரது வீட்டில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள அனந்தநாக் காவல் நிலையத்துக்கு ஒருமுறையும் அழைத்து விசாரிக்கப்பட்டார் ஆஷிக்.

தம்மிடம் இடைவிடாமலும், அச்சுறுத்தும் வகையிலும் கேள்விகள் கேட்கப்பட்டன என்கிறார் அவர். இரண்டாவது முறையும் விசாரணை மிக நீளமாக இருந்துள்ளது. அதே கேள்விகளையே அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டனர். "என்னை அவர்கள் போக அனுமதித்தபோது மணி இரவு 10.30" என்கிறார் அவர்.

திருத்தம் வெளியிடும்படி தொலைபேசி வாயிலாகவோ, மெயில் மூலமாகவோ அதிகாரிகள் கேட்டிருக்க முடியும் என்று கூறும் அவர், "ஆனால், அவர்கள் விசாரணையையே தண்டனையாக மாற்ற விரும்பினர். எனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார்கள். ஆனால், அவர்கள் வழக்கை முடிக்கவில்லை. எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னை மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம்" என்கிறார் ஆஷிக்.

அனுராதா பாஷின், வயது 52

அனுராதா பாஷின்
படக்குறிப்பு, அனுராதா பாஷின்

அக்டோபர் 19ம் தேதி காஷ்மீர் டைம்ஸ் என்ற பத்திரிகையின் ஸ்ரீநகர் அலுவலகத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இந்த உள்ளூர் பத்திரிகையின் எக்சிகியூட்டிவ் எடிட்டர் அனுராதா பாஷின்.

இந்த நடவடிக்கைக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதோடு, இது குறித்து முன்கூட்டியே அறிவிப்பும் தரவில்லை என்கிறார் அனுராதா. இது ஒரு மிரட்டல் உத்தி என்கிறார் அவர். ஜம்முவில் உள்ள தங்கள் பத்திரிகையின் அலுவலகம் இன்னும் திறந்திருப்பதாகவும், ஆனால், ஜம்முவில் உள்ள ஊழியர்கள் மட்டும் அலுவலகம் சீல் வைக்கப்பட்டதால் வீட்டில் இருந்தே பணியாற்றுகின்றனர் என்றும் அனுராதா குறிப்பிடுகிறார்.

'எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா' என்ற பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு, இந்த நடவடிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பத்திரிகை சுதந்திரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது. உரத்துப் பேசுவதற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை இது என்கிறார் அனுராதா.

இது தொடர்பாக பிபிசி கருத்து கேட்டதற்கு அதிகாரிகள் பதில் கூறவில்லை.

2019ல் காஷ்மீரில் தரைவழித் தொலைபேசி, மொபைல் இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவை தடை செய்யப்பட்டு ஒரு தகவல் தொடர்பு இருட்டடிப்பு நிகழ்ந்து, ஊடக செய்தி சேகரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் அனுராதா. "நான் நீதிமன்றத்தை நாடியவுடன், செய்தித் தாளுக்கு வழங்கப்பட்டுவந்த அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன" என்கிறார் அவர். எதைப் பேசவேண்டும் என்பதை அவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஃபாஹாத் ஷா, வயது 30

ஃபாஹாத் ஷா

பட மூலாதாரம், MUKHTAR ZAHOOR

ஸ்ரீநகரில் மே மாதம் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பல வீடுகள் நாசமடைந்தது குறித்து செய்தி வெளியிட்டதற்காக ஃபாஹத் ஷா போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

காஷ்மீர் வாலா என்ற வாரப் பத்திரிகை மற்றும் இணைய தளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் இவர்.

குறைந்தது 15 வீடுகள் இந்த சண்டையில் நாசம் அடைந்ததாக அவரது செய்தி குறிப்பிட்டது. தங்கள் நகைகளை போலீசார் களவாடியதாக அந்த தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.

செய்தி வெளியான சில நாள்களிலேயே தங்கள் மீது அவதூறு செய்ததாக போலீஸ் குற்றம்சாட்டியதாக ஷா குறிப்பிடுகிறார்.

"துப்பாக்கிச் சண்டை நடந்தபோது அனைத்து தகவல் தொடர்பு வழிகளும் துண்டிக்கப்பட்டன. அப்போது எப்படி நாங்கள் போலீசைத் தொடர்புகொள்ள முடியும்? இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு போலீஸார் தங்கள் தரப்பு வாதங்களை தெரிவித்திருந்தால் அதையும் நாங்கள் வெளியிட்டிருப்போம்" என்கிறார் அவர்.

முதலில் விசாரணை நடந்து சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வேறொரு காவல் நிலையத்துக்குத் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் இவர். இந்த முறை போலிச் செய்தி வெளியிட்டதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அக்டோபர் மாத தொடக்கத்தில் மீண்டும் நான்கு மணி நேரத்துக்கு அவர் அடைத்துவைக்கப்பட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்கிறார் இவர்.

இது குறித்து அறிய போலீசை தொடர்புகொண்டது பிபிசி. ஆனால், பதில் ஏதும் இல்லை.

"அழைக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது, விசாரிக்கப்படுவது ஆகியவை இதற்கு மேல் ஆச்சரியமளிக்காது. மெதுவாக இதுவே விதிமுறையாகி வருகிறது," என்கிறார் ஷா.

மஸ்ரத் சஹ்ரா, 26

மஸ்ரத் சஹ்ரா

பட மூலாதாரம், MUKHTAR ZAHOOR

"யாரும் இப்போது பேசத் துணிவதில்லை. ஊடக சமூகத்துக்குள் அவர்கள் (போலீஸ்) உருவாக்கியுள்ள சூழல் காரணமாக, ஊடகப் பணியை விட்டு விலகிய பலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்," என்கிறார் மஸ்ரத் சஹ்ரா என்ற புகைப்பட இதழாளர்.

அடக்குமுறைச் சட்டமான சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் இவருக்கு எதிராக ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்தது போலீஸ். "குற்ற நோக்கத்துடன், தேச விரோதப் பதிவு ஒன்றை பகிர்ந்தார்" என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

போலீஸ் குறிப்பிடும் பதிவு என்பது இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் 2018ம் ஆண்டு பதிவேற்றப்பட்ட ஒரு புகைப்படம். அது ஒரு மத ஊர்வலம். இரண்டாண்டுகளுக்கு முன்பு இறந்த புர்ஹான்வானி என்ற தீவிரவாதியின் புகைப்படத்தை அதில் பங்கேற்றவர்கள் ஏந்தியிருப்பதைக் காட்டும் படம் அது.

புர்ஹான் வானியின் மரணம் அப்பகுதியில் பரவலான போராட்டங்களுக்கு காரணமானது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் பலரது ஆதரவையும் பெற்றிருந்தார் அவர். இந்திய பாதுகாப்புப் படையினரோடு நடந்த சண்டையில் 22 வயதான புர்ஹான் வானி கொல்லப்பட்டதையும் அவர்கள் எதிர்த்துப் போராடினர். அவரது மரணத்தை கொள்கைக்கான தியாகமாகவும் பலர் கருதினர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் பதிவு குறித்து மஸ்ரத் மீது வழக்குத் தொடர்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

"அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைக் கைது செய்யலாம் என்ற அச்சம் என் மனதில் இருக்கிறது" என்கிறார் அவர்.

"என் மூலமாக அவர்கள் ஊடகவியலாளர் சமூகத்துக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள். நாங்கள் இந்தப் பெண்ணைக் கூட விட்டுவைக்கவில்லை. எனவே இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழ்த்தப்படலாம் என்பதே அந்த செய்தி" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: