ட்விட்டர் Vs இந்திய அரசு: நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே பதவி விலகும் ட்விட்டர் நிர்வாகி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசாந்தோ கே. ராய்
- பதவி, தொழில்நுட்ப எழுத்தாளர்
புதிய டிஜிட்டல் ஊடக விதிகள் விவகாரத்தில் இந்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகி தர்மேந்திர சாதுர் பதவி விலகியுள்ளார்.
இவர் இந்த சமூக ஊடக நிறுவனத்தில் இடைக்கால குறைதீர் அதிகாரியாக சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் ஊடக விதிகளின்படி பெரிய சமூக ஊடக நிறுவனங்களில் இத்தகைய பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
இந்த நிலையில், தர்மேந்திர சாதுரின் ராஜிநாமா குறித்து ட்விட்டர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. ஆனாலும், தர்மேந்திர சாதுரின் பெயர், இந்திய அரசு விதிகளின்படி ட்விட்டர் இணையதள பக்கத்தில் இடம்பெறவில்லை.
தகவல் தொழில்நுட்பம் (இடைக்கால வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிகள் விதி) விதிகள் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
அந்த விதிகளின்படி, இந்தியாவில் சேவை வழங்கும் சமூக ஊடக நிறுவனங்கள், அதன் மூன்று முழு நேர நிர்வாகிகளாக இந்தியர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் இந்திய குடியிருப்புவாசிகளாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஒருவர், விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், மற்றொருவர் சமூக ஊடகத்துக்கு வரும் புகார்களை கவனிப்பவராக இருக்க வேண்டும், மற்றொருவர் 24 மணி நேரமும் அரசின் சட்ட அமலாக்கத்துறைகளுடன் ஒருங்கிணைந்து விதிகள் அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
புதிய ஆணைப்படி சர்ச்சைக்குள்ளான தகவல் பற்றி தெரிய வந்தவுடன் 36 மணி நேரத்துக்குள் அது தொடர்பான இடுகைகளையோ பதிவுகளையோ சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனம் தமது தளத்தில் இருந்து அகற்ற வேண்டும். அந்த நிறுவனம் ஆட்சேபகர தகவல்கள், ஆபாச காட்சிகள் போன்றவற்றை தானியங்கியாக அகற்ற ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும்.
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் புதிய விதிகளின்படி சில நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக அனுப்பிய பதிலை ஆராய்ந்த இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை, ட்விட்டர் நிறுவனம் நியமித்த புதிய நிர்வாகிகளில் இருவர் அதன் முழு நேர ஊழியர்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியது. மேலும், அந்த கடிதத்தில் இடம்பெற்ற இடம் ட்விட்டர் நிறுவனத்துக்குரியது அல்ல என்றும் அது ஒரு சட்ட ஆலோசனை வழங்கும் அலுவலகம் என்றும் அரசு கூறியது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் தவறான செயல்பாடுகள் இருந்தால் அதற்கு பொறுப்பு வகிக்கும் தலைமை அதிகாரி பற்றிய விவரத்தை ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் இந்திய அரசு கூறியது.
ஆனால், இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்காத ட்விட்டர் நிறுவனம், இடைக்காலமாக ஒரு தலைமை அதிகாரியை நியமித்துள்ளதாக மட்டும் குறிப்பிட்டது. புதிய வழிகாட்டுதல்களுக்கு உடன்பட இயன்ற அனைத்து முயற்சியும் எடுக்கப்படுவதாக ட்விட்டர் நிறுவனம், அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்தது.
ஆனால், தர்மேந்திர சாதுரின் திடீர் ராஜிநாமா இந்த விவகாரத்தை தற்போது மேலும் சிக்கலாக்கியிருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, காவல்துறை அனுப்பி சம்மனில் இருந்து விலக்கு பெற தற்காலிக அனுமதியை நீதிமன்றத்திடம் இருந்து சமீபத்தில்தான் ட்விட்டர் இந்திய பிரதிநிதி பெற்றிருந்தார். அந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து அவருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், அவருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, 72 வயது முஸ்லிம் பெரியவரின் தாடியை மழிக்கும் காட்சியை ட்விட்டரில் சில பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் பகிர்ந்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அந்த காட்சி இந்திய தலைநகர் டெல்லியை அடுத்த காஜியாபாத் மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், காணொளியில் இடம்பெற்றது போல அது வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்குடன் கூடியதல்ல என்றும் தங்களுடைய குடும்பத்தாருக்கு மூட நம்பிக்கை தொடர்பான பொருட்களை விற்ற முஸ்லிம் பெரியவரை அவரை தாக்கிய நபர்கள் ஏற்கெனவே அறிந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உண்மையை சரிபார்க்காமல் தவறான தகவலை பகிரவும் அதன் மூலம் வன்முறையை தூண்டவும் சில நபர்களின் இடுகைகள் காரணமாக இருந்ததாகக் கூறி உள்ளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சர்ச்சைக்குரிய காணொளியை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து பகிர்ந்ததற்காக 'தி வயர்' என்ற இணையதளம், மூன்று பத்திரிகையாளர்கள், மூன்று அரசியல் கட்சி தலைவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.
காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக, சமூகத்தில் வகுப்புக்கலவரத்தை தூண்டும் நோக்குடன் காணொளி பகிரப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 21ஆம் தேதி இந்த பதிவு தொடர்பான 50 இடுகைகளை ட்விட்டர் நிறுவனம் கட்டுப்படுத்தியிருந்தது. மேலும், காணொளி காட்சி மூலம் காவல்துறை உயரதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி தெரிவித்தார். ஆனால், அவர் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தங்களுடைய தளத்தில் பகிரப்பட்ட பிறரின் இடுகைகள் தொடர்பாக சமூக ஊடக நிறுவன பிரதிநிதி ஆஜராக சம்மன் அனுப்பப்படுவது அரிதான நடவடிக்கையாக கருதப்படுகிறது. சர்ச்சைக்குரிய கருத்துகளை இந்திய சட்டவிதிகளுக்கு உட்பட்டு நீக்குவோம் என உத்தரவாதம் அளித்தால், இந்திய செல்போன் நிறுவனங்களைப் போலவே, சமூக ஊடக நிறுவனங்களுக்கும் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும். இதைத்தான் இடைக்கால பாதுகாப்பு அந்தஸ்து என்று இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அழைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், தற்போதைய விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனம், இந்திய அரசின் டிஜிட்டல் ஊடக விதிகளுக்கு இணங்கும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபாடு காட்டாத நிலை தென்படுவதால், இடைக்கால பாதுகாப்பு அந்தஸ்தை அந்த நிறுவனம் இழப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் விதிகளுக்கு உடன்படாத நிறுவனங்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ட்விட்டர் மூலமே சமூக ஊடகங்களுக்கு காண்பிக்க இந்திய அரசு முயல்வதாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் உரிமைகள் செயல்பாட்டாளர் நிகில் பஹாவா கூறுகிறார். இந்தியாவில் இன்டர்நெட் சேவையில் பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது மேலதிக கட்டுப்பாட்டை பிரயோதிக்கும் நடவடிக்கையாகவே இதை பார்க்க முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இடைக்கால பாதுகாப்பு அந்தஸ்தை இழப்பதென்பது, சமூக ஊடக நிறுவனங்களுக்கு சிக்கலானதாக மாறும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் மத உணர்வு என்பது எளிதில் காயம் அடையக்கூடியது. உதாரணமாக, இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசுவை கேலிச்சித்திரமாக வரைந்தால் கூட அது மத உணர்வை புண்படுத்தக் கூடியதாக கருதப்படலாம். அப்படி ஒரு நிலை வந்தால், ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கில் புகார்கள் குவியலாம். அப்படி ஒரு வழக்கு ட்விட்டருக்கு எதிராக பதிவாவதாக இருந்தால், அதுவே, டிஜிட்டல் ஊடக விதிகளின்கீழ் இந்தியாவில் பதிவாகும் முதலாவது வழக்காக இருக்கும்.
ஆனால், அரசின் டிஜிட்டல் ஊடக விதிகளுக்கு உடன்படும் விவகாரத்தில் அரசின் விதிகளை எதிர்ப்பது ட்விட்டர் மட்டுமல்ல. கடந்த வாரம் இதே விவகாரத்தில் அரசின் விதிகளை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
உலக அளவில் இந்தியாவில் மிகப்பெரிய பயனர் பலத்தை கொண்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம் நடத்தி வரும் வாட்ஸ்அப். இந்தியாவில் இதன் பயனர்களின் எண்ணிக்கை 40 கோடிக்கும் அதிகமாகும்.
சர்ச்சை தகவலின் மூலத்தை கண்டறியும் இந்திய அரசின் விதிப்படி நடப்பதென்றால், என்கிரிப்ட் செய்யயப்பட்ட இரு தரப்பு உரையாடலை டிகிரிப்டிங் செய்வது அவசியம். இப்படி செய்வது தங்களுடைய பயனர் உரையாடல் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்று கருவதாகக் கூறி வாட்ஸ்அப் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இதே நடைமுறையை சிக்னல் செயலி, ஆப்பிள் செல்பேசியின் ஐமெசேஜ் ஆகியவையும் கடைப்பிடிப்பதால், அவை கூட இந்திய அரசின் டிஜிட்டல் ஊடக விதிகளின் கட்டுப்பாடுகளுக்கு உடன்படும் விஷயத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஆனால், இப்போதைக்கு அரசு வாட்ஸ்அப் செயல்பாடு மீதே கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












