தமிழ்நாட்டில் 25 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தமிழ்நாட்டில் 25 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது.

    இன்று ஒரு நாளில் மட்டும் 3,715 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று 54 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,00,002. உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 33,059.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் 436 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 214 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

    மொத்த பாதிப்புகளின் அடிப்படையில் மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 60.98 லட்சம்.

  3. தாலிபன்களுடன் மோதல்: ஆஃப்கன் வீரர்கள் 1,000 பேர் தஜிகிஸ்தானில் தஞ்சம்

    AFGHANISTAN

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000 பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்துள்ள தகவலை, ஒரு செய்திக்குறிப்பு மூலம் தஜிகிஸ்தான் எல்லை காவல் படை உறுதிப்படுத்தியிருக்கிறது.

    ஆஃப்கானிஸ்தானில் சமீப வாரங்களாக தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். அந்த நாட்டை நேட்டோ கூட்டுப்படையினர் பாதுகாக்கத் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையில், அன்னிய படையினருக்கு எதிராக தாலிபன்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.

    முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் காய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று அந்த இயக்கத்தினர் அளித்த உறுதிமொழயின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

    ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

    இதனால், தாலிபன் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கன் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்தது.

    இந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி, திங்கட்கிழமை காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தாலிபன் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

    ஆஃப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை தாலிபன்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அன்றாடம் மேலும் சில பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் தாலிபன்கள் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.

    ஆப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைந்து கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும். ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

    அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன. ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தீவிரமானால், போர் நடக்கும் இடங்களில் வாழும் மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மத்திய ஆசிய நாடுகளை நோக்கி அகதியாக தஞ்சம் அடையலாம் என்ற நிலையும் நிலவுகிறது.

    பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லீஸ் டூசெட், ஆஃப்கானிஸ்தானில் உள்ள மக்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    இவர்களின் தாய்நாடு எதை நோக்கிச் செல்கிறது என்பது நிச்சயமற்று உள்ளது. தங்களின் சொந்த கிராமம், நகரம், தங்களின் குடும்பம் மற்றும் வாழ்க்கை என்னவாகும் என்பதை அறியாதவர்களாக இவர்கள் உள்ளனர் என்கிறார் லீஸ் டூசெட்.

    எனினும், தீவிரமாகும் வன்முறைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தாலிபன் தரப்பு செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

    பல மாவட்டங்களில், போரிட ஆஃப்கானிஸ்தான் படையினர் மறுத்து விட்டதால், மத்தியஸ்தம் மூலமே அவை தங்கள் வசம் வந்ததாக சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார்.

    ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபன்களை 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

    அமெரிக்காவில் 9/11 தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் காய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தாலிபன்கள் சேர்ந்து செயல்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

    மேற்கு நாடுகளுக்கு எதிரான வெளிநாட்டு ஜிஹாதிகளின் முகாமாக ஆஃப்கானிஸ்தான் மாற்றப்படாது என்பதை அமெரிக்க படையினர் உறுதிப்படுத்தி விட்டதால், அந்த நாட்டில் இருந்து தமது படையினர் விலக்கிக் கொள்ளப்படுவது சரியானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

    AFGHANISTAN
  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, 84 வயதாகும் ஸ்டேன் சுவாமி காலமானார் - பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்

    ஸ்டேன் சுவாமி

    பட மூலாதாரம், RAVI PRAKASH / BBC

    படக்குறிப்பு, ஸ்டேன் சுவாமி

    தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினரின் நலன்களுக்காக குரல் கொடுத்து வருபவராக அறியப்பட்ட ஸ்டேன் சுவாமி மும்பை மருத்துவமனையில் இன்று காலமானார்.

    மும்பை உயர் நீதிமன்றத்தில் இவரது பிணை மனு இன்று விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான தகவலை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

  5. மேகேதாட்டு விவகாரம்: தமிழக அனுமதி தேவையில்லை - கர்நாடகா காங்கிரஸ் தலைவர்

    காவிரி

    பட மூலாதாரம், DK SHIVAKUMAR

    படக்குறிப்பு, டாக்டர் டி.கே. சிவகுமார், கர்நாடகா காங்கிரஸ் தலைவர்

    கர்நாடகா அரசு அமல்படுத்தவிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார்.

    காவிரியில் மேகேதாட்டு அணை திட்டத்தை ரூ. 9000 கோடி மதிப்பில் செயல்படுத்த கர்நாடகா அரசு உத்தேசித்துள்ளது.

    பெங்களூர் நகருக்கு சீரான குடிநீர் விநியோகம், 400 மெகா வாட் மின்சாரத்தை உறுதிப்படுத்தும் மின்சார தயாரிப்பு திட்டம் ஆகியவை இந்த மேகேதாட்டு அணை திட்டத்தின் நோக்கம்.

    2017இல் இந்த திட்டத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த மாநில அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெற அங்கு ஆய்வு செய்ய மத்திய அரசை கர்நாடகா அரசு வற்புறுத்தி வருகிறது.

    இந்த நிலையில், க‌டந்த ஜூன் 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, ‘கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது' என வலியுறுத்தினார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செவ்வாய்க்கிழமை இந்திய நீர்ப்பானத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திப்பதற்காக தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி வந்துள்ளார்.

    இந்த நிலையில், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார், தமது ட்விட்டர் பக்கத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

    அதில், நீர் ஆதாரம் கொண்ட மாநிலம், அந்த நதி நீர் பாய்ந்தோடும் மாநிலத்தில், தனது திட்டங்களுக்காக அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது.

    எனவே, கர்நாடகா முதல்வர், தமிழக முதல் அமைச்சரிடம் அனுமதி கோருவது சரியானதல்ல. கர்நாடகா முதல்வரிடம் அரசியல் நலன்கள் தெளிவற்று உள்ளதன் பிரதிபலிப்பே இது என்று அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், 400 மெகாவாட் மின்சாரம், 4.75 டிஎம்சி குடிநீர் தேவைக்காகவே கர்நாடக அரசு மேகேதாட்டு கூட்டு குடிநீர் மற்றும் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதில் எவ்வித தடங்கலும் ஏற்படாது. காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளுக்கு இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இத் திட்டம் இரு மாநில மக்களுக்கும் நலனையே பயக்கும். ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    கர்நாடக அரசு அதை எதிர் கொண்டு வரும் நிலையில், இந்த திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    அதே வேளையில் தமிழக அரசு காவிரி படுகையில் குந்தா, சில்லஹள்ளி ஆகிய இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக இரு நீர் மின் திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. குந்தா நீர் மின் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த 12.2.2021 அன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

    சில்லஹள்ளி நீர் மின் திட்டமானது நிபுணர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதுதவிர தமிழகஅரசு மேட்டூர் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும், இதர காவிரிபடுகை பகுதிகளிலும் மேலும் சிலதிட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

    இந்த சூழலில் நான் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நல்ல‌ உறவை மேம்படுத்த விரும்புகிறேன். இதை தமிழக அரசு நல்ல முறையில் பரிசீலித்து, மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். இந்த விவகாரங்களுக்கு தீர்வுகாணும் வகையில் இருமாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம்," என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  6. அமேசான் நிறுவன தலைமை பதவியை துறந்தார் ஜெஃப் பெசோஸ் - அடுத்தது என்ன?

    Jeff

    பட மூலாதாரம், g

    படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ்

    அமேசான் நிறுவனத்தை 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நிறுவிய ஜெஃப் பெசோஸ், இதுநாள் வரை வகித்து வந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இன்று முறைப்படி விலகியிருக்கிறார்.

    இதைத்தொடர்ந்து தமது கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் அவர் முழு நேரமும் கவனம் செலுத்தவிருக்கிறார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார்.

    உச்சம் தொட்ட ஆன்லைன் வர்த்தகம் ஆரம்ப காலத்தில் ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகுவேன் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் ஜெஃப் பெசோஸ். அதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.

    இனி பெசோஸ் என்ன செய்வார்?

    கடந்த பிப்ரவரி மாதமே, தமது பதவி விலகல் தொடர்பான முடிவை ஜெஃப் பெசோஸ் வெளியிட்டிருந்தார். அவரது பொறுப்பை ஏற்கவிருக்கும் ஆண்டி, கிளெட் கம்ப்யூட்டிங் தொழிலை கவனித்து வருகிறார். 53 வயதாகும் ஆண்டி ஜெஸ்ஸி, ஹார்வர்டில் படித்த பிறகு, அமெசான் நிறுவனத்தில் 1997ஆம் ஆண்டில் சேர்ந்தார்.

    தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் தொடரும் ஜெஃப் பெசோஸ், நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் பிரசார மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்.

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை நீண்ட காலமாக தக்க வைத்து வந்தவர் ஜெஃப் பெசோஸ். அவரது சொத்து மதிப்பு 16,700 கோடி டாலர்கள். இந்திய மதிப்பில் இது சுமார் 13 லட்சம் கோடி ரூபாயாகும்.

    உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி. அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது கிடைத்தது.

    கடந்த டிசம்பர் மாதம், அந்த பணத்தில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாயை அவர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

    Jeff

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஓரிஜின் விண்ணூர்தியின் மாதிரி வடிவமைப்பு
  7. காவிரி: டெல்லியில் நாளை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்துடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

    துரைமுருகன்

    பட மூலாதாரம், DURAIMURUGAN

    காவிரியின் குறுக்கே மேகேதாட்டு தடுப்பணை கட்ட அம்மாநிலத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று டெல்லியில் நாளை இந்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசும்போது வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன்.

    இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு திங்கட்கிழமை வந்துள்ளார் திரைமுருகன். நாளை அவர் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகா அணை கட்டியது குறித்து மத்திய அமைச்சருடன் பேசவுள்ளேன். மேகேதாட்டுவிலும் அம்மாநில அரசு தடுப்பணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்துவேன் என்று கூறினார்.

  8. சிவகங்கையில் மீன்பிடி திருவிழா - மீறப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்

    சிவகங்கை மீன்பிடி திருவிழா

    காரைக்குடி அருகே கொரோனா அச்சம் மின்றி கிராம மக்கள் மீன் பிடி திருவிழா கொண்டாடினர்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் சிவகங்கை மாவட்ட கிராமங்களில்,ஒரு சில கிராமங்களைத் தவிர, பெரும்பாலான கிராமங்களில் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாட்டம் கல்லல் அருகே உள்ள ஆலம்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான குருந்தம்பட்டு, கல்லல், எழுமாபட்டி, வேப்பங்குளம், கிழப்பூங்கொடி, கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆலம்பட்டு கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தி மீன்களை பிடித்தனர்.

    அதிகாலை முதல் சிறியவர்கள் முதல் பெரியவர் என அனைவரும் மடிவலை, கொசு வலை, ஊத்தா, வாரி, அரிகூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    அவர்கள் விராமீன், குறவை, கட்லா , கெளுத்தி, உளுவை, கெண்டை, ஜிலேபி போன்ற மீன்களை பிடித்துச் சென்றனர். இந்த மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள் முகக் கவசம் இன்றி கூடியதாலும், சமூக இடைவெளி கேள்விக்குறியானதாலும். கொரோன தொற்று குறைந்துவரும் நிலையில், மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,

    எனவே இது போன்ற சமூக இடைவெளியை மறக்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து, தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

  9. பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிர் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

    பிலிப்பைன்ஸ்

    பட மூலாதாரம், Reuters

    பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை கடந்து சென்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

    டஜன் கணக்கானவர்கள் இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளனர்.

    நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரப்படி காலை 3.30) இந்த விபத்து நடந்துள்ளது.

    ஜோலோ தீவில் உள்ள விமான ஓடு பாதையின் எல்லையைக் கடந்து இந்த விமானம் ஓடியபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது விமானத்தில் 92 பேர் இருந்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் உடனடியாக 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  10. பாஜக - சிவசேனா இடையே கருத்து வேறுபாடு உண்டு, ஆனால், இரண்டும் எதிரிகள் அல்ல, பாஜக முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கருத்து

    பாஜக - சிவசேனை இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், இரண்டும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ்.

    அவரது கருத்து அரசியல் ஊகங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.

    பாஜக - சிவசேனை இடையே மீண்டும் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போதுதான் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.

    "அரசியல் முடிவுகள் அவ்வப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே எடுக்கப்படுகின்றன. சிவசேனை பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

    சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் பாஜக தலைவர் ஒருவரை சந்தித்தது பற்றி கேட்டபோது, அது பற்றித் தமக்குத் தெரியாது என்றும், சஞ்சய் காலையில் ஒன்று பேசுவார், மாலையில் வேறொன்று பேசுவார் என்று கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கருத்து வேறுபாடு உண்டு. எதிரிகள் அல்ல. சிவசேனை குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கருத்து.
  11. ஹபீஸ் சயீத் வீட்டருகே குண்டு வெடிப்பு - இந்தியா மீது இம்ரான் குற்றச்சாட்டு

    பாகிஸ்தான் லாகூர் நகரில், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் வீட்டுக்கு அருகே ஜூன் 23ம் தேதி நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

    அந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.

    இந்த நிகழ்வுக்கு இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டினார் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசூப்.

    அவரது செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் இம்ரான் கானும் இந்த நிகழ்வுக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.

    லாகூர் குண்டு வெடிப்பு.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லாகூர் குண்டு வெடிப்பு.
  12. காலக்கெடுவுக்குள் வெளிநாட்டுப் படைகள் முழுதாக வெளியேறவேண்டும் - தாலிபன்

    நேட்டோ படையினர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, நேட்டோ படையினர்.

    சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள், தாங்களே அளித்த செப்டம்பர் மாத கெடுவுக்குள் முழுதாக வெளியேறிவிடவேண்டும். அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவர் என்று தாலிபன் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

    தூதரகங்களையும், காபூல் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாக்க முக்கியமாக அமெரிக்கத் துருப்புகளைக் கொண்ட 1000 படையினர் மட்டும் கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படும் பின்னணியில் தாலிபனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

    20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்ள நேட்டோ படையினர் கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் வன்முறை அதிகரித்துள்ளது. தாலிபன்கள் அதிக பிரதேசங்களைப் பிடித்துக்கொண்டனர். ஆப்கன் படைகள் தனியாக நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், காபூல் நகரின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரிக்கிறது.

    காபூல் நகரை ராணுவ ரீதியாகப் பிடிப்பது தாலிபன் கொள்கை அல்ல என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ல தாலிபன் அலுவலகத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர், படைகள் வெளியேறிய பிறகு ராணுவ ஒப்பந்ததாரர்கள் உட்பட வெளிநாட்டு சக்திகள் எதுவும் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    “தோஹா உடன்படிக்கைக்கு மாறாக அவர்கள் சில படையினரை விட்டுச் சென்றால் அதன் பிறகு எப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து எங்கள் தலைமை முடிவு செய்யும். தூதர்கள், தொண்டு நிறுவனங்களை தாலிபன் தாக்காது. எனவே அவர்களுக்கென்று பாதுகாப்புப் படையினர் தேவையில்லை. நாங்கள் வெளிநாட்டுப் படையினருக்கு எதிரானவர்கள் மட்டுமே. வெளிநாட்டுத் தூதர்களுக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ எதிரி அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.

    அரசு சார்பாகப் பேசிய எம்.பி. ரஸ்வான் முராத், நேட்டோ படை விலக்கல் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார். தாலிபனோடு அரசு பேச்சுவார்த்தைக்கும், சண்டை நிறுத்தத்துக்கும் தயாராக உள்ளது. அமைதிக்கான தங்கள் பற்றினை தாலிபன் தற்போது நிரூபிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

  13. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு வரவேற்கிறோம்

    வணக்கம் நேயர்களே, இந்த பக்கத்தில் உலகம், இந்தியா, தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை தொகுத்து வழங்குகிறோம்.