புதுச்சேரியில் எரியும் குப்பை மலை: மூச்சுத்திணறும் தமிழ்நாடு எல்லை கிராமம்

குப்பை மலை
படக்குறிப்பு, தீப்பற்றி எரியும் குரும்பாபேட் குப்பை கிடங்கு
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, குருமாம்பேட் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. மலைபோல குவிக்கப்படும் அந்த குப்பைகளில் திடீரென தீ ஏற்பட்டு, கடுமையான புகை பரவுவது தொடர்கிறது. இதனால் புதுச்சேரி எல்லையிலுள்ள தமிழ்நாடு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? புதுச்சேரி அரசு என்ன சொல்கிறது?

புதுச்சேரி குரும்பாபேட் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. நாள்தோறும் சுமார் 300 டன் அளவில் புதுச்சேரி நகரப் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இங்கே கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த குப்பைக் கிடங்கினால், புதுச்சேரி தமிழக எல்லையில் உள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ காரணமாக புகை படர்ந்து அருகாமை வாழ் மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. இதனால் அதிக பாதிப்பை எதிர்கொள்வது, தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பை கிராம மக்கள். இதனால் இந்த குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

தமிழ்நாடு புதுச்சேரி

சமீபத்தில் இங்கு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வானில் படர்ந்த புகை இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட உள்ளூர் மக்கள், தொடரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இங்குள்ள கள நிலவரத்தை அறிய பெரம்பை கிராம மக்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.

புதுச்சேரி தமிழ்நாடு
படக்குறிப்பு, இளையமுருகன்

பெரம்பை பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் இளைய முருகன், "புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே புதுச்சேரியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் 10 ஆண்டுகளாக கொட்டப்படுகின்றன. பல போராட்டங்களை நடத்தி விட்டோம். புதுச்சேரி முதல்வர், துணைநிலை ஆளுநர் முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பசுமை தீர்ப்பாயம் வரை முறையிட்டு விட்டோம். உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை," என்று கூறினார்.

தமிழ்நாடு புதுச்சேரி
படக்குறிப்பு, தீயில் கருகியதால் புகை மாசு நிறைந்து காணப்படும் குரும்பாபேட் குப்பை கிடங்கு

கடந்த இரண்டு நாட்களாக இந்த கிடங்கில் உள்ள குப்பைகள் எரிவதால் அதை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

"இந்த கிடங்கில் தினமும் சுமார் 300 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதன் தாக்கத்தால், காற்றும் நீரும் மாசடைந்து பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகிறோம். இப்போது தீ பெரிய அளவில் ஏற்படவே எங்கள் பிரச்னை இன்று அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால் நாங்கள் இதை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம்," என்று இளைய முருகன் கூறுகிறார்.

தமிழ்நாடு புதுச்சேரி
படக்குறிப்பு, விஜயம்மாள்

இதே கிராமத்தை சேர்ந்த 70 வயது விஜயம்மாள், "ஒரு மதில் சுவர் மட்டுமே எங்கள் கிராமத்திற்கும், இந்த குப்பை கிடங்கிற்கும் உள்ள இடைவெளி. இதைச் சுற்றி பல கிராமங்கள் உள்ளன. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் எங்கள் கிராமம் முழுவதும் புகை படர்ந்துள்ளது. நல்ல வேளையாக காற்று வேகமாக வீசவில்லை. இல்லையென்றால் இந்த குப்பை கிடங்கில் தீ மேலும் அதிகமாகி பெரும் பிரச்னையாகியிருக்கும். அப்படியொரு பெரும் பிரச்னை ஏற்பட்டிருந்தால் மட்டுமே அரசு இந்த பிரச்னையில் தலையிடுமா? என்று தெரியவில்லை," என்கிறார்.

"பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும் நாங்கள் தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே எங்களது குடும்பத்தை நடந்த முடியும். இந்த பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எங்களிடம் பண பலம் கிடையாது. நாங்கள் இப்படியேதான் வாழ வேண்டுமா?" எங்கள் பிரச்னைக்கு தீர்வு என்பதே கிடையாதா? என்று அப்பகுதி கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜரத்தினம்

"இந்த குப்பை கழிவுகளால் இங்கு வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்," என்று கூறுகிறார், இங்கு வாழும் ராஜரத்தினம் கூறுகிறார்.

"இங்கே குப்பை கொட்டுவதை தடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு முடியற்சிகளும் பலனளிக்கவில்லை. ஏற்கெனவே பலர் இந்த கிராமத்தில் இனி வாழவே முடியாது என்று கருதி வெளியூர்களில் குடியேறி விட்டனர். வீட்டில் அமர்ந்து சாப்பிடக்கூட முடியாது. சாப்பிடும்போது ஈக்கள் சாப்பாடு முழுவதும் மொய்க்கும். நிலத்தடி நீர் முழுவதுமாக வீணாகி விட்டது. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள இரண்டு நீர் தேக்க தொட்டிகள் மூடப்பட்டுவிட்டன."

"பலருக்கு தோல் வியாதி, காச நோய் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. குவியும் குப்பை அளவை குறைக்க சில நேரங்களில் அது கொளுத்தப்படுகிறது. அந்த புகையே ஊர் முழுவதும் படர்கிறது. பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கும் சென்று வந்துள்ளனர். எனவே தயவு செய்து தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் இணைந்து இந்த பிரச்னைக்கு நல்ல முடிவை எடுக்க வேண்டும்," என்கிறார் ராஜரத்தினம்.

புதுச்சேரி தமிழ்நாடு
படக்குறிப்பு, குரும்பாபேட் குப்பை கிடங்கு

புதுச்சேரியை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் கண்ணன், "குப்பைகளின் துர்நாற்றம், அங்கிருந்து வரக்கூடிய ஈக்கள் மற்றும் பூச்சிகளால் அருகாமையில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நோய்த் தொற்று அதிக அளவில் பரவுகிறது. இந்த குப்பை கிடங்கை அடிக்கடி தீ வைத்து எரிக்கின்றனர். அதை யார் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தீயிட்டு கொளுத்தும்போது அதிலிருந்து வரக்கூடிய புகையால்தான் மக்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. கொரோனா கால சூழலில், இந்த மக்கள், அதிலும் குறிப்பாக குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்," என்கிறார்.

"குப்பைகளை இனியும் இங்கே கொட்டாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குப்பைகளை பயோ-ரெமிடியேஷன்(Bio remediation) முறை மூலம் கையாள இருப்பாக கூறுகின்றனர். ஆனால் நீண்ட காலமாகவே இது வாய்ச்சொல் அளவிலேயே உள்ளது. இப்போதைய தேவை போர்க்கால நடவடிக்கை. எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த குப்பைகளை நவீன தொழில்நுட்ப முறையில் கையாள வேண்டும்," என்று வலியுறுத்தினார் கண்ணன்.

பெரம்பை மக்களின் குறைகள் தொடர்பாக புதுச்சேரி நகராட்சியிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. "புதுச்சேரி குருமாம்பேட் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது. குப்பைகளை பயோ-ரெமிடியேஷன்(Bio remediation) மற்றும் பயோ மைனிங்(Bio Mining) செய்து குப்பைகளை முழுமையாக காலி செய்ய துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தப்பணிகள் விரைவுபடுத்தப்படும்," என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.

காணொளிக் குறிப்பு, மாசடைந்த ஆற்றில் முக்குளித்து குப்பை பொறுக்கும் சிறுவன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :