5000 ஆண்டுகளுக்கு முன் தொற்று நோயால் உயிரிழந்த முதல் நபர்

5000 ஆண்டுகளுக்கு முன் தொற்று நோயால் உயிரிழந்த முதல் நபர் இவர்தான்

பட மூலாதாரம், DOMINIK GOLDNER, BGAEU, BERLIN

    • எழுதியவர், ஹெலன் ப்ரிக்ஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

தி பிளாக் டெத் - உலகில் பிளேக் தொற்று நோயால் உயிரிழந்த முதல் நபரை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய நாடான லாட்வியாவில் இருந்த ஒரு நபருக்குதான் முதன் முதலில் இந்த தொற்று நோய் இருந்துள்ளதாக, அதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவையே இந்த பிளேக் தொற்று நோய் புரட்டிப் போட்டது. 1347-ஆம் ஆண்டு முதல் 1351-ஆம் ஆண்டு வரை தீவிரமாக பரவிய இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை உலகில் எந்த போரிலும் ஏற்படுத்திராத உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என பிரிட்டானிக்கா இணையதளம் குறிப்பிடுகிறது.

ஐரோப்பாவின் கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகை இந்த நோயால் அழிந்து போனது.

பின்னர் பல நூற்றாண்டுகளுக்கு அவ்வப்போது இந்த நோய் பரவி, லட்சக்கணக்கானோரை காவு வாங்கியது.

"இதுவரை உலகிலேயே பிளேக் நோயால் உயிரிழந்த பழமையான நபர் இவர்தான்" என்கிறார் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பென் க்ராஸ் க்யோரா.

கண்டெடுக்கப்பட்ட இந்த எச்சங்கள் 5,300 ஆண்டுகள் பழமையானவை என்று அவர் கூறுகிறார்.

பால்டிக் பெருங்கடலுக்குள் பாயும் சலக் நதிக்கரையோராத்தில் உள்ள மயானத்தில், மூன்று வேறு நபர்களுடன் இந்த நபரும் புதைக்கப்பட்டுள்ளார்.

பால்டிக் பெருங்கடலுக்குள் பாயும் சலக் நதி

பட மூலாதாரம், HARALD LUBKE, ZBSA, SCHLOSS GOTTORF

படக்குறிப்பு, பால்டிக் பெருங்கடலுக்குள் பாயும் சலக் நதி (தற்போது லாட்வியா)

நான்கு உடல்களின் எலும்புகள் மற்றும் பற்களை எடுத்து பேக்டீரியா அல்லது வைரஸ் தொற்று இருக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

அதில் இருபதுகளில் இருந்த ஒரு வேட்டைக்காரருக்கு பிளேக் நோயின் பழமையான திரிபால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

"அவர் ஏதோ ஒரு கொறிக்கும் பிராணியால் கடிக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படும் Yersinia pestis என்ற பாக்டீரியல் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு நாட்களிலுருந்து ஒரு வாரத்திற்குள் இறந்திருக்கலாம்" என்று க்ராஸ் க்யோரா தெரிவிக்கிறார்.

இந்த பழமையான திரிபு சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன் உருவானதாக இருக்கலாம் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், மத்திய ஐரோப்பாவில் விவசாயம் தொடங்கப்பட்ட போது வந்ததாக இருக்கலாம் என்கின்றனர்.

5000 ஆண்டுகளுக்கு முன் தொற்று நோயால் உயிரிழந்த முதல் நபர் இவர்தான்

பட மூலாதாரம், DOMINIK GOLDNER, BGAEU, BERLIN

இந்த பாக்டீரியம் பயணித்து, பெரும் தொற்றாக உருவாகாமல் அவ்வப்போது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

காலப்போக்கில் இந்த பாக்டீரியா அதிகளவில் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி, புபோனிக் ப்ளேகாக மாறியிருக்கக்கூடும்.

இந்தக் கொள்ளை நோய் இப்போதும் காணப்பட்டாலும், ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் ஆண்டிபயோட்டிக் மருந்துகளால் குணப்படுத்த முடியும்.

இந்த ஆராய்ச்சி, செல் ரிபோர்ட்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

புபோனிக் பிளேக் என்றால் என்ன?

புபோனிக் பிளேக் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய் ப்ளேக் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இதனை சிலர் கொள்ளை நோய் என அழைக்கும் வழக்கமும் உள்ளது. யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் ப்ளேக் தொற்று உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படும்.

மனிதர்களுக்கு பரவக்கூடிய பொதுவான சில நோய்களில் புபோனிக் ப்ளேக்கும் ஒன்று. 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை உலகம் முழுக்க 3248 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 584 பேர் இந்த தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள்,விரல்கள் போன்ற உடல் பாகங்கள் கருப்பாக மாறிவிடும் என்பதால், இதனை `தி பிளாக் டெத்` அதாவது கருப்பு மரணம் என வரலாற்றாசிரியர்கள் அழைத்தனர்.

சமீப காலங்களில் இந்த தொற்று பாதிப்பு மிக குறைவாக பதிவாகியிருந்தலும், வரலாற்றில் இந்த நோய் ஏற்படுத்தியுள்ள சுவடுகள் வலி மிகுந்தவை என்பதால் அது குறித்த அச்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :