கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் தணியத் தொடங்கிய வேளையில், அதற்கு எதிரான தடுப்பூசி இயக்கம் அனைத்து நாடுகளாலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் கைவிடப்பட்ட அல்லது கண்டு காணப்படாத நிலையில் இருப்பவர்களாக சிறப்புக் குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்பட வல்லரசு நாடுகளில் கொரோனா முதல் அலை தீவிரமானபோது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது கொரோனா தாக்கத்தின் வாய்ப்புகளை அதிகம் கொண்டிருந்தவர்களாக மாற்றுத்திறனாளிகளும் சிறப்புக் குழந்தைகளும் இருந்தனர். முதல் அலை முடிந்து இரண்டாவது அலை தனது தாக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியபோதுதான் இந்த சமூகத்தினரையும் உள்ளடக்கிய தடுப்பூசி திட்டத்தை சில நாடுகள் அறிவித்தன.
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டங்கள் ஒருபுறமிருக்க, சிறப்பு குழந்தைகளின் பெற்றோரில் ஒரு பிரிவினர் தடுப்பூசி போடுவதால் தங்களுடைய குழந்தைக்கு நரம்பியல் ரீதியிலான தாக்கம் அல்லது பாதிப்பு நேரலாம் என்று அஞ்சி முக்கிய தடுப்பூசிகளை போடுவதை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது 1990களில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையால் எழுந்த அச்சமாக தொடங்கி இன்றளவும் மக்கள் மனங்களில் நீங்காத சந்தேகமாக வேரூன்றியிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு கூட அமெரிக்காவின் மிஸ்ஸூரி மாகாணத்தின் வெப்ஸ்டெர் குரோவ்ஸ், நெதர்லாந்தின் ஹேக் பகுதியில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பேரணியை சிலர் முன்னெடுத்த நடவடிக்கை சர்ச்சையாகியது.
ட்யூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ஜே. ஸ்மித் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில், அமெரிக்காவில் 2006ஆம் ஆண்டில் ஒரு சதவீதமாக இருந்த தடுப்பூசியை பெற விரும்பாதோரின் சதவீதம், அடுத்த ஆண்டு இரண்டு சதவீதமாக உயர்ந்ததாக குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் இப்போதும் தடுப்பூசி மூலம் தவிர்க்கக் கூடிய நோய் பாதிப்பால் சிறார்கள் இறப்பதை காண முடிவதாக கூறும் அவர், 2008ஆம் ஆண்டில் மின்னிசோட்டா மாகாணத்தில் ஹீமோஃபிலஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி தொற்றால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டதில் ஒருவர் இறந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த பாதிப்பு 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பதிவானதாக பேராசிரியர் மைக்கேல் ஜே ஸ்மித் குறிப்பிடுகிறார்.
பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த அந்த சிறார்களுக்கு உரிய தடுப்பூசியை போட அவர்களின் பெற்றோர் தவிர்த்ததே காரணம் என்பது, பிந்தைய விசாரணையில் தெரிய வந்தது.
தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, சின்னம்மை போன்றவை தடுப்பூசி மூலம் தவிர்க்கப்படக்கூடிய நோய்கள். எந்த அளவுக்கு ஒரு பெரும் சமூகமாக இந்த வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறதோ அந்த அளவுக்கு அங்கு வாழும் சிறார்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்து.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், பல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் பிறந்தவுடன் வளர்ச்சிக்குறைபாடு பிரச்னைகளை சந்திக்கும்போது, தடுப்பூசி போட்டால் அவர்களுக்கு ஆட்டிசம் என்ற மன வளக்குறைபாடு ஏற்படலாம் அல்லது தீவிரமாகலாம் மற்றும் மூளை சிந்தனை திறன் பாதிக்கப்படலாம் எனக் கருதி தடுப்பூசி போடுவதை தவிர்ப்பதை காண முடிகிறது.
எங்கிருந்து வலுவடைந்தது இந்த சந்தேகம்?
1998ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வேக்ஃபில்ட் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் தமது குழுவினருடன் இணைந்து நடத்திய ஆய்வு, லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. வளர்ச்சிக் குறைபாடு, இரைப்பைக் குடல் பிரச்னைகளை எதிர்கொண்ட 12 சிறார்களில் 9 பேர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்களாக இருப்பதாக அந்த ஆய்வாளர்கள் குழு கண்டறிந்தது.
அவர்களின் அறிக்கைப்படி, "12 சிறார்களும் எம்எம்ஆர் (மீசில்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு மாதத்துக்குள்ளாக அவர்களின் வளர்ச்சியில் வித்தியாசமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியது. எம்எம்ஆர் தடுப்பூசியில் உள்ள தட்டம்மை வைரஸ் இரைப்பை பகுதி வழியாக சென்று பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அங்கிருந்து புரதங்கள் ரத்தம் வழியாக மூளைக்குச் சென்று ஆட்டிசத்தை தோற்றுவிக்கிறது," என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை, தொலைத்தொடர்பு, மற்றும் இணையதளங்களின் அறிமுகம் அதிகம் இல்லாத காலத்திலேயே உலக அளவில் வேகமாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இது மருத்துவ உலகில் விவாதத்தையும் தூண்டியது.
13 வகை வைரஸ்கள் பற்றி ஆய்வு
இந்த எம்எம்ஆர் தடுப்பூசிக்கும் தட்டம்மைக்கும் ஆட்டிசத்துக்கும் இடையிலான சாத்தியமிகு தொடர்பை ஆராய உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் முற்பட்டனர். கெர்பெர் என்ற அமெரிக்க குழந்தைகள் ஊட்டச்சத்துணவு தயாரிப்பு நிறுவனமும் குழந்தைகளிடையே பரவும் தொற்று நோய் பற்றிய ஆராய்ச்சியை விரிவாக மேற்கொண்ட அமெரிக்க மருத்துவருமான பால் ஏ. ஓஃபிட்டும் 13 வகை தொற்று நோய் ஆய்வை மேற்கொண்டனர். கடைசியில் எம்எம்ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
இது ஒருபுறமிருக்க, பிரிட்டனில் 1988 முதல் 1999ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் எம்எம்ஆர் தடுப்பூசி போடும் விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில்தான் அங்கு ஆட்டிசம் குறைபாடு பாதித்த சிறார்கள் பிறப்பது அதிகமானது.

பட மூலாதாரம், Getty Images
இதே காலகட்டத்தில் எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்றும் போட்டுக் கொள்ளாத சிறார்களுக்கும் ஆட்டிசம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் நிலை தொடர்பான ஆய்வுகள் ஒப்பிடப்பட்டன.
1991 முதல் 1998ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் பிறந்த 5,37,303 டென்மார்க் சிறார்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களில் 82 சதவீதம் பேர் எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக் கொண்டது தெரிய வந்தது. இதில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 4,40,655 பேரில் 608 பேருக்கு மட்டுமே ஆட்டிசம் குறைபாடு இருந்தது தெரிய வந்தது. தடுப்பூசி போடாத 96,648 பேரில் 130 பேருக்கு மட்டுமே ஆட்டிசம் குறைபாடு கண்டறியப்பட்டது.
இதன் பிறகு 1999 முதல் 2010ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் டென்மார்க்கில் பிறந்த 6,57,461 சிறார்களிடம் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போடப்பட்ட எம்எம்ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர். உலக அளவில் நடத்தப்பட்ட பிற ஆய்வுகளிலும் இதே முடிவுகளே வெளி வந்தன.
சர்ச்சை மருத்துவருக்கு தடை

பட மூலாதாரம், Getty Images
இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டில் லேன்செட் சஞ்சிகை, 1998இல் பிரிட்டிஷ் பொது மருத்துவ கவுன்சில் ஆய்வுத்தரவுகள் அடிப்படையிலான ஆய்வுக்குறிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து,பிரிட்டன் மருத்துவ பதிவேட்டில் இருந்து ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உள்நோக்கத்துடன் போலியான தகவல்களை ஆய்வில் புகுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனில் அவர் மருத்துவ பணியை தொடர தடை விதிக்கப்பட்டது.
எம்எம்ஆர் தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக அளவில் ஆய்வறிக்கைகள் துணைநின்றாலும், அவற்றை ஒரு பிரிவு பெற்றோர் இன்னும் ஏற்காதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டு முதல் இன்றளவும் சிலர் தட்டம்மை பாதிப்பை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். அவர்கள் 'தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்' என்கிறது அமெரிக்க நோய் கட்டுப்பாட்டுத்துறை.
இதுபோலவே அமெரிக்கா, ஐரோப்பாவில் போடப்படும் திமரோசல் தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பூசிகள் மீதும் மக்களில் ஒரு பிரிவினர் அச்சம் கொண்டவர்களாக உள்ளனர். குழந்தை பிறந்தது முதல் அதற்கு டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டசிஸ், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா போன்ற நோய்களுக்கான தடுப்பூசி போடப்படுகிறது.
இது தவிர வேறு சில இன்ஃபுளுவென்சா நோய்களுக்கும் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், இவ்வளவு தடுப்பூசிகளை போடும் அளவுக்கு தங்களுடைய பிள்ளைகளுக்கு தாங்கும் திறன் இருக்காது என்று சில பெற்றோர் நம்புவதும் தடுப்பூசியை அவர்கள் தவிர்க்க காரணம் என்கிறது மருத்துவ உலகம்.
ஒருபுறம் வைரஸ் தடுப்பூசிக்கு எதிரான தவறான தகவல்களை மருத்துவ உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வு மூலம் பொய்யானவை என நிரூபித்திருந்தாலும் 1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் வேகமாக பரவிய அந்த தகவல்கள், இன்றளவும் ஆணி வேராக பல பெற்றோரின் மனங்களில் ஊன்றி தங்களின் சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தவிர்க்கச் செய்து வருகிறது. இது குறித்த முழுமையான பின்னணியை அறியவே வரலாறில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கினோம்.
இந்தியாவில் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
இனி, இந்த தடுப்பூசி போடும் வழக்கத்தை தவிர்ப்பது சரிதானா என்பது குறித்து பல்வேறு தரப்பு மருத்துவர்கள், பெற்றோர் சமூகம் மற்றும் சிறப்புக்குழந்தைகளுக்கான சேவையில் ஈடுபட்டுள்ள நிபுணர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
டெல்லியில் புகழ்பெற்ற அரசு மருத்துவமனையாக விளங்கும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மன நல மருத்துவ பிரிவின் தலைமை மருத்துவரும் பேராசிரியருமான ஸ்மிதா தேஷ் பாண்டே, "கொரோனா வைரஸ் உள்பட எந்தவொரு வைரஸ் நோயிலிருந்தும் பாதுகாக்க அரசு அறிவுறுத்தும் தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகளால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை நிரூபிக்க இதுநாள் வரை அறிவியல்பூர்வ தரவுகள் கிடையாது," என்கிறார்.
"ஒருவேளை சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் தடுப்பூசி போடுவதை தவிர்ப்பவர்களாக இருந்தால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆபத்தான தாக்கத்தை எளிதாக எதிர்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.
"மற்ற சாதாரண குழந்தைகளை விட சிறப்புக் குழந்தைகளுக்குத்தான் வைரஸ் பாதிப்புகளில் இருந்து மேலதிக பாதுகாப்பு தேவை. அதில் சமரசத்துக்கே இடம் தரக்கூடாது," என்று அவர் வலியுறுத்தினார்.
"மன நலன் அல்லது நரம்பியல் குறைபாடுகளுடன் கூடிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் சிறார்கள், கொரோனா தடுப்பூசியை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அத்தகையோரின் பெற்றோர் முதலில் தங்களுக்கும், பிறகு தங்களுடைய பிள்ளைகளுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்," என்று அறிவுறுத்துகிறார் ஸ்மிதா தேஷ்பாண்டே.

பட மூலாதாரம், PRAVEEN SUMAN
இதே கருத்தை மற்றொரு பிரபல மருத்துவமனையான சர் கங்காராம் மருத்துவமனையின் சிறார் வளர்ச்சி மையத்தின் இயக்குநரான டாக்டர் பிரவீண் சுமன் வலியுறுத்தினார். இவர் தலைமை வகிக்கும் மையத்தில் தினமும் கற்றல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான சிறப்புக் குழந்தைகள் மற்றும் சிறாருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
"சிறப்புச் சிறார்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுகிறோமோ அந்த அளவுக்கு அவர்களை அந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நாம் காக்கிறோம்," என்கிறார் இவர்.
சிறப்புச்சிறார்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் நோய்வாய்ப்பாட்டால், அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய கூடுதல் தேவை, அவர்களின் பெற்றோருக்கோ பாதுகாவலருக்கோ ஏற்படும். கொரோனா வைரஸ் தடுப்பூசியை கூட இயன்றவரை விரைவாக அவர்கள் போட்டுக் கொள்ளவே நாங்கள் வலியுறுத்துகிறோம். வைரஸ் தடுப்பூசி போடும்போது, சிறப்பு சிறார்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை தரப்படுவது அவசியம்," என்றும் அவர் வற்புறுத்துகிறார்.
ஏற்கெனவே உடல் நல பிரச்னையில் உள்ள சிறாருக்கு, குறிப்பிட்ட ஒரு நோய்க்கான தடுப்பூசி போட்டால் அது அவரை பாதிக்குமா என கேட்டதற்கு, "எங்களிடம் உள்ள ஆய்வுத் தரவுகளின்படி அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறுவேன்," என்கிறார் பிரவீண் சுமன்.

பட மூலாதாரம், Getty Images
இதனால் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் எதை தேர்வு செய்ய வேண்டும் என சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆட்டிசத்துக்கான சிகிச்சை வழங்கும் ஸ்வாபிமான் அறக்கட்டளை இயக்குநர் பார்த்திபனிடம் பேசினோம்.
"ஆட்டிசம் அல்லது பிற குறைபாடுடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், பாதிப்பு அளவு கடுமையாகவே இருக்கக் கூடும். கொரோனாவின் முதல் அலையிலேயே சிறப்புச் சிறார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். அவர்களை மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை தருவது நடைமுறையில் பல சிக்கலான சூழல்களை உருவாக்கும். அதிலும் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுடன் சேர்த்து அவர்களைப் பராமரிப்பவர்களும் பல பிரச்னைகளை சந்தித்தனர். இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்தும் வைரஸில் இருந்து சிறப்புச் சிறார்களை காக்க அவர்களையும் முன்னுரிமை தரப்படுவோர் வரிசையில் சேர்த்து தடுப்பூசி போட ஊக்குவிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், PARTHIBAN
தடுப்பூசி போட பெற்றோர் தரப்பில் தயக்கம் காட்டப்படுகிறதா என்று கேட்டதற்கு, "இதற்கு முன்பு மக்கள் எப்படி இருந்தார்கள் என தெரியாது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் பரவல், தடுப்பூசி போட்டால் மட்டுமே பாதிப்பு தணியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. தடுப்பூசி போட்டால் மட்டுமே தீர்வு என்ற நம்பிக்கையை கொண்டவர்களாக பெற்றோர் மாறி விட்டனர். வெளிநாடுகளில் உள்ள நிலைமை வேறு. இந்தியாவில் தடுப்பூசி ஒழுக்கம் என்பது மரபு வழியாக உள்ளது," என்றார் பார்த்திபன்.
ஆட்டிசம், சிறப்புக்குறைபாடு போன்ற பிரச்னைகளைக் கடந்து,குழந்தை பிறந்தவுடன் பல்வேறு பருவங்களில் போட வேண்டிய வழக்கமான வைரஸ் தடுப்பூசியை போட்டால் ஆட்டிசம் போன்ற பாதிப்பு நேரலாம் என சிலர் கூறி தடுப்பூசி போட தயங்குகிறார்களே என்று கேட்டோம்.
"அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போல வருடந்தோறும் இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட பிற காய்ச்சல், உடல் உபாதைகளுக்கு தடுப்பூசி போடும் வழக்கம் இந்தியாவில் கிடையாது. ஆனால், தங்களுடைய பிள்ளைக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளதை உறுதிப்படுத்திய பிறகு, ஹெபடைடிஸ் தடுப்பூசி போட சில பெற்றோர் தயக்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது. சிலர் ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு எம்எம்ஆர் தடுப்பூசி போட்டால் அதற்கு பேச்சு வராமல் போகலாம் என தயங்குவார்கள். அதே சமயம், டெட்டனஸ், போலியோ போன்ற அத்தியாவசிய கட்டாய தடுப்பூசிகளை பெற்றோர் கட்டாயம் போட வேண்டும். ஆட்டிசம் குழந்தைக்கு பேச்சு தடங்கல் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் அதற்குரிய சிகிச்சையை தொடங்கி முன்னேற்றம் கண்டதும் எம்எம்ஆர் தடுப்பூசியை சில கால இடைவெளி விட்டுப் போடலாம்," என்கிறார் பார்த்திபன்.
கவலை தரும் சில வகை தடுப்பு மருந்துகள்

பட மூலாதாரம், Getty Images
பெற்றோர் காட்டும் தயக்கமும், தடுப்பூசியை இடைவெளி விட்டு போடுவதும் சரிதானா என்று ஸ்பார்க் குழந்தைகள் நல சிகிச்சை மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கொலம்பியா பசிஃபிக் சமூகங்கள் என்ற அமைப்பின் ஆலோசகருமான டாக்டர் கார்தியாயினியிடம் பேசினோம். இவர் சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகள் மற்றும் வயோதிகர்கள் நலனுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.
"சில வகை துணைக்கூறுகள் சேர்க்கப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள், நிச்சயமாக சிறப்புக்கவனம் தேவைப்படும் சிறாருக்கு கவலை தரக்கூடியவைதான். அத்தகைய தடுப்பு மருந்தை எடுத்த பிறகு வளர்ச்சி மைல்கல்லின் பல தூரத்தை எட்டிய பல குழந்தைகள், பின்தங்கிய நிலைக்கு வந்ததை பார்த்திருக்கிறோம்," என்கிறார் இவர்.
"குறிப்பிட்ட ஒரு வெளிப்புரதத்தால் ஒருவரது உடல் எதிர்ப்புத்திறன் கட்டுப்படுத்தப்படுவதை எதிர்த்து செயலாற்றுவதே தற்போதைய தடுப்பு மருந்துகளின் நோக்கம். தனியாக இயங்கி வந்த எதிர்ப்பு ஆற்றலை தாக்கிய வைரஸுக்கு, உள்செலுத்தப்படும் மருந்து எதிர்வினையாற்றி அதற்கே உரிய வகையில் செயலாற்றுகிறது."
அந்த வகையில் இந்தியா போன்ற நாட்டில் சில வகை நோய்களை ஒழிக்க, நமக்கு நிச்சயமாக தடுப்பு மருந்துகள் அவசியம். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின்போது, வயோதிகர்களின் உயிரிழப்பு விகிதம் குறைந்தது. அவர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி மருந்தே இதற்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களையே கொரோனா தாக்கியிருக்கிறது.
சிறார்கள் அதிக அளவில் கொரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தாவிட்டாலும், பலர் கடுமையான காய்ச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகளை எதிர்கொண்டனர். சிறப்புக்கவனம் தேவைப்படும் பெரியவர்கள், சமூக இடைவெளி போன்ற அம்சங்களை கடைப்பிடிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள். எனவே, அத்தகையோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை தர வேண்டும்," என்று டாக்டர் கார்தியாயினி வலியுறுத்தினார்.
சிறப்புச்சிறார்களைப் பொருத்தவரை சரியான உணவு முறை, உள்ளூரிலேயே கிடைக்கும் தானியங்கள் அடங்கிய சீரான ஊட்டச்சத்து, பருவகால காய்கறிகள் மூலம் அவர்களின் உடல் எதிர்ப்புத்திறனை பெருக்கலாம். அவர்களுக்கு பாக்கெட் நொறுக்குத்தீனிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக கைகொடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்கிறார் இவர்.
கொரோனா வைரஸில் இருந்து சிறப்புச் சிறார்களை தடுப்பு மருந்துகள் மூலம் முழுமையாக காக்க முடியுமா என கேட்டதற்கு, "வெளிப்படையாக சொல்வதென்றால் சிறார்களை கொரோனாவில் இருந்து தடுப்பூசி மருந்துகள் காக்கும் என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இந்த பெருந்தொற்றில் இருந்து ஒன்றை அறிகிறோம். சிறார்கள் இயல்பானவர்களோ சிறப்புக் கவனம் தேவைப்படுபவர்களோ யாராக இருந்தாலும், அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தை கொரோனா இல்லாத சூழலாக மாற்றினால், நிச்சயமாக அவர்கள் காக்கப்படுவார்கள். அதை உறுதிப்படுத்த வேண்டியது பெரியவர்கள் மட்டுமே. இப்போதைய சூழலில் சிறார்களின் உடல் எதிர்ப்புத்திறனை சரியான உணவுமுறை, தூக்கம், சூரிய வெளிச்சத்தில் உடலை காட்டுவது, மூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக இருப்பது போன்ற முறைகளை கடைப்பிடித்தாலே போதும், சிறார்களைக் காக்கலாம்," என்று கூறினார் டாக்டர் கார்தியாயினி.
வெளிநாடுகளில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் தெற்காசிய நாடுகளில் வாழும் மக்கள் தடுப்பூசிகள் மீது எப்போதுமே அதிக நம்பிக்கையை கொண்டிருப்பார்கள்.
2019ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த லாபநோக்கமற்ற ஆய்வு அமைப்பான வெல்கம் குளோபல் மானிட்டர், "இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 10ல் 8 பேர் தடுப்பூசி போடுவதை விரும்புபவராக உள்ளனர். அதுவே மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் 59 சதவீதம் பேராக உள்ளனர்," என்று தமது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
ஒரு காலத்தில் போலியோ நோயால் இந்தியா பாதிப்பை எதிர்கொண்டபோது, தமது 16 ஆண்டுகால இடைவிடாத போலியோ நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் தடுப்பு மருந்தை செலுத்தி அந்த நோயை அறவே இல்லாமல் இந்தியா ஒழித்துக் காண்பித்தது.
ஆனால், அந்த உறுதிப்பாட்டை குலைக்கும் வகையில் தற்போது உலகின் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு எதிரான பிரசாரத்தை இயக்கமாக முன்னெடுக்க சிலர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images
"என்னுடல் என்னுரிமை", "அனார்கி ஃபார் ஃப்ரீடம்" போன்ற பல தளங்கள், தடுப்பூசிக்கு எதிரான எண்ணத்தை வலுப்படுத்த அவற்றின் பக்கங்களை பின்தொடருவோரை ஊக்குவிக்கின்றன. இத்தகைய தளங்களை வழிநடத்துபவர்கள், தங்களை "ஆன்ட்டி வேக்சர்ஸ்' (தடுப்பூசிக்கு எதிரானவர்கள்) என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
இந்த தடுப்பூசி திட்டத்தை உலக வல்லரசுகள், பெரு மருந்தக நிறுவனங்களின் பணம் கறக்கும் கூட்டுச்சதி என பிரிவினர் சமூக ஊடகங்களில் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
இதுபோன்ற எதிர்மறை ஊக்குவிப்பாளர்களின் தகவல்களை புறந்தள்ளி விட்டு தடுப்பூசிக்கு ஆதரவான இயக்கத்தில் மக்களை சேர பல நாடுகளிலும் வெவ்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் முழு தடுப்பூசி போட்டுக் கொண்ட குடியிருப்புவாசிக்கு 1 மில்லியன் பரிசுத்தொகை லாட்டரி மூலம் வழங்கப்படும் என்று அங்குள்ள ஆளுநர் அறிவித்துள்ளார்.
சுறுசுறுப்பிலும் விடாமுயற்சியிலும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஜப்பானில் கடந்த 5ஆம் தேதி நிலவரப்படி அதன் மக்கள்தொகையில் 12.65 சதவீதம் பேர் மட்டுமே கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களை போட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் இப்போதும் சில மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டு விட்டு இரண்டாவது தடுப்பூசி எப்போது கிடைக்கும் என காத்திருக்கும் நிலையில்தான் பலரும் உள்ளனர்.
தற்போது இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும், வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வகை கொரோனா திரிபுகள் பல நாடுகளில் தோன்றுகின்றன.
இந்தியாவில் இரு தவணை கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ்கள் போட அறிவுறுத்தும் மத்திய, மாநில அரசுகளிடம், "புதிய வகை கொரோனா திரிபுகளை இந்த தடுப்பூசிகள் காக்குமா?", "இந்த தடுப்பூசிகளின் ஆயுள் எவ்வளவு நாளைக்கு இருக்கும்?, மீண்டும் அடுத்த ஆண்டு தடுப்பூசி போடும் நிலை வருமா?" என்று கேள்வி எழுப்பினால், அவையும் பதிலுக்காக சர்வதேச ஆய்வுகளின் முடிவுகளையே எதிர்பார்த்துக் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












