"இந்தியர்கள் செக்ஸ் பற்றி பேசுவதில்லை, அதனால் அவர்களுக்கு உதவுகிறேன்"

பாலியல்

பட மூலாதாரம், PALLAVI BARNWAL

படக்குறிப்பு, பல்லவி பர்ன்வால்

இந்தியாவில் பல பள்ளிகள் பாலியல் கல்வியை அளிப்பதில்லை. பெற்றோரை பாலியல் மற்றும் உறவுகள் குறித்து குழந்தைகளிடம் பேசிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றன. ஆனால் பெற்றோருக்கு செக்ஸ் பற்றி குழந்தைகளிடம் என்ன பேச வேண்டும் என்று உறுதியாகத் தெரிந்திருப்பதில்லை என்று பிபிசியின் மேகா மோகனிடம் கூறினார் பாலியல் பயிற்சியாளரான பல்லவி பர்ன்வால்.

எனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் பழமைவாத இந்தியக் குழந்தை வளர்ப்பு முறையில் வளர்ந்ததே பாலியல் பயிற்சியாளராக அடிப்படையாக அமைந்தது.

எனது பெற்றோரின் திருமணம் குறித்து வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. அப்போது எனக்கு 8 வயதிருக்கும். நான் எனது பெற்றோரின் திருமணம் குறித்த கேள்விகளை எதிர்கொண்டேன் .

சில விருந்துகளில், நான் எனது பெற்றோரிடம் இருந்து தனியாக இருந்தால், சில உறவுப் பெண்கள் என்னை மடக்கி கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.

"இன்னும் உனது பெற்றோர் ஒரே அறையில்தான் தூங்குகிறார்களா?"

"அவர்களுக்கு வாக்குவாதம் நடப்பதைக் கேட்டிருக்கிறாயா"

"வீட்டுக்கு யாராவது ஆண் வருவதைப் பார்த்திருக்கிறாயா?"

விருந்துகளின்போது தின்பண்டங்கள் இருக்கும் மேஜை அருகே நான் நின்றுகொண்டிருப்பேன். ஐஸ்கிரீமை எடுத்து கிண்ணத்தில் வைத்து சாப்பிட நினைத்துக் கொண்டிருப்பேன். அல்லது தோட்டத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

திடீரென அதிகம் அறிமுகம் இல்லாத பரிச்சயமில்லாத சில பெண்கள் என்னைச் சூழ்ந்து கொள்வார்கள். எனக்கு நிச்சயமாகப் பதில் தெரியாத கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள்.

பல ஆண்டுகள் கழிந்து எனக்கு விவாகரத்து ஆன பிறகுதான் எனது அம்மா முழுக் கதையையும் எனக்கு சொன்னார். எனது பெற்றோருக்குத் திருமணம் ஆன புதிதில், நானும் எனது சகோதரனும் பிறப்பதற்கு முன்பாக, எனது அம்மாவுக்கு வேறொரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அது பின்னர் உடல் ரீதியான உறவாக மாறியிருக்கிறது. சில வாரங்களில் குற்ற உணர்வால் அந்த உறவை எனது அம்மா முறித்துக் கொண்டார். ஆனால் இந்தியச் சமூகங்களில் எல்லா இடங்களிலும் கண்களும் வாய்களும் இருக்கும். சில நாள்களில் எனது தந்தையின் காதுகளுக்கு வதந்தி எட்டியிருக்கிறது.

10 ஆண்டுகளாக அதை மனதுக்குள் பூட்டி வைத்திருந்த என் அப்பா, இரு குழந்தைகள் பிறந்த பிறகு அதைப் பற்றி எனது அம்மாவிடம் கேட்டிருக்கிறார்.

என்ன பதில் கூறினாலும் அது நமது உறவை எந்த வகையிலும் பாதிக்காது என்று அவர் உறுதி கூறியிருக்கிறார். அதை நம்பி என் அம்மா எல்லாவற்றையும் அவரிடம் கூறியிருக்கிறார். அந்த உறவு பெரும்பாலும் செக்ஸை பற்றியது அல்ல, நெருக்கத்தைப் பற்றியது என அம்மா கூறியிருக்கிறார். அது இருவரும் திருமணமான பிறகு, குடும்பமாக வளர்ச்சியடையும் காலத்துக்கு முற்பட்ட நேரத்தில் நடந்தது.

பல்லவி

பட மூலாதாரம், PALLAVI BARNWAL

படக்குறிப்பு, பல்லவி பர்ன்வால்

இதைக் கூறி முடித்ததும், அந்த அறையில் சட்டென அமைதி குடியேறிவிட்டது. அதை அம்மா உணர்ந்தார். அப்பா உடனடியாக விலகினார். நீண்ட காலமாக அவர் சந்தேகித்து வந்த கதையை அம்மா உறுதி செய்த உடனேயே அவர்களுக்கு இடையேயான நம்பிக்கை அறுந்துபோனது. உறவு மிக வேகமாக மட்கத் தொடங்கியது.

நமது குடும்பத்துக்குள் செக்ஸ் மற்றும் பாலியல் நெருக்கம் குறித்து முறையாகப் பேச முடியாத சூழல் இருப்பதால் குடும்பங்கள் பிரிந்து போகின்றன என்பதை இது மிகத் தெளிவாக எனக்கு உணர்த்தியது.

எனது குடும்பம் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுள் ஒன்றான பிகாரைச் சேர்ந்தது. மக்கள்தொகை அதிகம் கொண்ட, மிகப் பரந்து பிராந்தியம் இது. நேபாளத்தை எல்லையாகக் கொண்ட மாநிலம். நடுவே கங்கே நதி ஓடுகிறது. எனது குழந்தைப் பருவம் மிகவும் பழமைவாதப் பாரம்பரியம் கொண்டது. பெரும்பாலான குடும்பங்களில் செக்ஸ் என்பது வெளிப்படையாகப் பேசும் பொருள் அல்ல. எனது பெற்றோர் கைகளைப் பற்றிக் கொண்டதோ, தழுவிக் கொண்டதோ இல்லை. எனது சமூகத்தில் பலரும் ஈர்ப்புடன் இருந்ததாகவும் எனது நினைவில் இல்லை.

"14 வயதில் செக்ஸ் பற்றி அறிந்தேன்"

பாலியல்

பட மூலாதாரம், Getty Images

எனக்கு 14 வயது இருக்கும்போது செக்ஸை பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்தது.

ஒரு நாள் மதிய நேரத்தில், எனது அப்பாவின் புத்தக அலமாரியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்போது புதினங்களுக்கும் வரலாற்றுப் புத்தகங்களுக்கும் இடையே ஒரு துண்டுப் பிரசுரம் சிக்கியது. அதில் பெண்களும் ஆண்களும் தங்களது உடல்களை பயன்படுத்தும் ஒரு ரகசிய உலகம் பற்றிய விரிவான சிறுகதைகள் இருந்தன. அந்தப் புத்தகம் நிச்சயமாக ஓர் இலக்கியம் அல்ல. அது வேறு வகையானது.

அதில் ஒரு கதையில் ஒரு இளம் பெண் சுவரில் துளையிட்டு பக்கத்து வீட்டு திருமணமான தம்பதி படுக்கையில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கிறார். அதற்கு முன் நான் கேள்விப்பட்டிராத 'சும்பன்' என்ற ஹிந்தி வார்த்தையின் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அதன் பொருள் வேட்கையான பிரெஞ்ச் முத்தம்.

அப்போது எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அதைப் பற்றிப் பேசுவதற்கு யாருமில்லை.

எனது நண்பர்களுடன் இந்த அளவுக்கு நெருக்கமாக எதையும் விவாதித்துக் கொண்டதில்லை.

அதைப் படித்த பிறகு என்னால் சற்று நேரத்துக்கு சுய நினைவுக்கு வர முடியவில்லை. எனது அம்மா அழைத்த குரல் கேட்ட பிறகுதான் உலகத்துக்குத் திரும்பி வந்தேன்.

அது 1990-களின் பிற்பகுதி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அப்போது எனக்குத் தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் பாலியல் நெருக்கம் பற்றி அந்த வயதில்தான் தெரிந்துகொள்ளத் தொடங்குவார்கள் என்றும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

பெல்ஜியம் நாட்டில் ஏழு வயதிலேயே குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப்படவில்லை. 2018-ஆம் ஆண்டுதான் பாலியல் கல்வி பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. ஆனால் அதிலும் பல மாநிலங்கள் அதை அமல்படுத்துவதில்லை என்று முடிவு செய்தன. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் தகவல்படி இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றியோ, அது ஏன் வருகிறது என்பது பற்றியோ தெரியவில்லை.

பல்லவி

பட மூலாதாரம், PALLAVI BARNWAL

படக்குறிப்பு, பல்லவி பர்ன்வால்

ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்ததால் எனக்கும் பேரார்வம் ஏற்பட்டு அதைக் கண்டறியும் துணிவு ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அந்த எண்ணத்தை நான் மனதில் போட்டுப் புதைத்து விட்டேன். இந்தியாவின் பெரும்பாலான பெண்களைப் போலவே பழமையாகவே வளர்ந்துவிட்டேன்.

நான் எனது கன்னித்தன்மையை இழந்தபோது எனக்கு வயது 25. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் நடந்தது. அப்போதும் எனக்கு செக்ஸ் பற்றிய போதிய அனுபவம் இருக்கவில்லை.

எனது திருமணம் முடிந்த முதல் இரவை நான் பெருந்தோல்வி என்றுதான் கூற முடியும். மணமகனின் வீட்டில் முதல் இரவு அறையில் பூவிதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த படுக்கையைத் தலைகுனிந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தச் சூழல் எனக்கு நகைப்புக்குரியதாக இருந்தது. மெல்லிய சுவர்கள் வழியாக குடும்பக் கதைகள் பேசப்படுவதைக் நான் கேட்க முடிந்தது, அப்படிப் பேசிக் கொண்டிருந்தவர்களில் பலர், எங்கள் திருமணத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள். தூங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் எங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே குழுமியிருந்தனர்.

பல்லவி

பட மூலாதாரம், PALLAVI BARNWAL

படக்குறிப்பு, TED Talk உரை நிகழ்த்தும் பல்லவி பர்ன்வால்

நான் கன்னித்தன்மையுடன் இருக்கிறேன் என்பதை எனது அப்போதைய கணவருக்கு புரியும்படி உணர்த்துவதற்கு என் அம்மா வலியுறுத்தினார். அதனால் வெட்கப்படும்படியாகவும், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பத்தில் இருக்கும்படியாகவும் நான் காட்டிக் கொள்ள நேர்ந்தது.

அதுவரை நாங்கள் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. திடீரென படுக்கையறைக்குள் இருந்தோம். மனைவிக்கான பணிகளைச் நான் செய்ய வேண்டும் என எதிர்பார்த்தார்கள். நான் அப்போது கன்னித்தன்மையுடன் இல்லை. அதே நேரத்தில் நான் தயாராகவும் இல்லை.

இன்றுவரை எனக்கு முதலிரவைப் பற்றிய கேள்விகளுடன் ஏராளமான குறுஞ்செய்திகள் வருகின்றன. முதலிரவில் அதிகமாக வெட்கப்படாமலும் அதே நேரத்தில் அதிக அனுபவம் இல்லாததுபோலவும் காட்டிக் கொள்வது எப்படி எனப் பலர் கேட்கிறார்கள்.

நானும் எனது கணவரும் 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம். தொடக்கத்திலேயே ஒரு தவறான நபரைத் திருமணம் செய்து கொண்டேன் எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

எனவே அவருடன் உறவு கொள்வது நான் அஞ்சும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. நாங்கள் நேரங்களையும் தேதிகளையும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். என்னுடன் பணியாற்றிய ஒருவருடன் நெருங்கும் வரை வரை எனது திருமணச் சிக்கல் பழுதுபார்க்க முடியாதது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் அதை நோக்கிச் செல்லவில்லை. அதே நேரத்தில் திருமணத்தில் தொடரவும் நான் விரும்பவில்லை. எங்கள் திருமண உறவு முடிவுக்கு வந்தது.

"அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்தேன்"

32 வயதானபோது, நான் ஒற்றைத் தாயாக மாறியிருந்தேன். திடீரென என் மீது பாரம் விழுந்தது. நான் விவாகரத்தானவள் என்பதால் சமூகம் என்னை வழுக்கி விழுந்தவளாகப் பார்க்கத் தொடங்கியது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் எந்த வருங்காலத் திட்டமும் இன்று தொடர்ச்சியான பல பாலியல் உறவுகளில் ஈடுபட்டிருந்தேன்.

நான் அனைத்தையும் பரிசோதித்தேன். மிகவும் வயதானவர், திருமணமானவர் எனப் பலருடனும் உறவு கொண்டிருந்தேன். நான் மிகவும் வெளிப்படையாக இருந்ததால், எனது கலந்துரையாடல்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. திருமணமான பல நண்பர்கள் என்னுடைய அறிவுரையைக் கேட்க என்னிடம் வந்தார்கள். என்னுடைய சுதந்திரமானமான நடவடிக்கைகளால் கவரப்பட்ட எனது அம்மா, என்னுடனும் எனது மகனுடன் வந்து சேர்ந்தார்.

என்னைச் சுற்றி செக்ஸை பற்றியும் பெண் உரிமைகள் பற்றியும் பல பெண்ணியக் கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும். 2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் வைத்து ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, நகரம் முழுவதும் பேரதிர்ச்சி ஏற்பட்டிருந்தது.

பாலியல்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் செக்ஸ் என்பது மகிழ்த்திருக்க வேண்டியது என்பதில்லாமல், வன்முறையானது என்பது போன்ற கருத்தை இந்தக் கலந்துரையாடல்கள் ஏற்படுத்தியதுதான் எனக்குக் கவலையளித்தது. உண்மையில், பெரும்பாலும் இந்தியப் பெண்கள் தங்கள் பாலியல் நெருக்கம் என்பது தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய மகிழ்ச்சியான ஒன்று நினைப்பதில்லை. தங்களுக்கு அத்துமீறல்கள் நடக்கும்போது அதை அடையாளம் காண முடியாமல் போகும் அளவுக்கு அமைதியும் அவமானமும் அவர்களிடம் உருவாகி விடுகிறது.

"புதிய தளத்துக்கு மாறினேன்"

நான் வாடிக்கையாளர் விற்பனைப் பிரிவில் இருந்துபோது, வேலையில் ஒரு மாற்றம் தேவை என எண்ணினேன்.

செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு முன்முடிவு இல்லாத இடத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பும், மக்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்கக்கூடிய ஒரு தளமும் இருப்பதாக எனக்குப் பட்டது.

நான் ஒரு பாலியல் மற்றும் நரம்பு - மொழியியல் பயிற்சியாளராக பயிற்சி பெற்றேன், ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைத்தேன், அங்கு என்னிடம் எதையும் கேட்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தேன் அவர்களின் உரையாடலை ஊக்குவிப்பதற்காக எனது சொந்த பாலியல் அனுபவங்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டேன்.

அது வேலை செய்தது. பாலியல் கற்பனைகள், சுயஇன்பத்தைச் சுற்றியுள்ள தவறான புரிதல், செக்ஸ் இல்லாத திருமணங்கள் உள்ளிட்ட பல அம்சங்களில் ஆலோசனையைப் பெற மக்கள் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். ஆனால் பல கேள்விகள் பெற்றோரிடமிருந்து வந்தவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் செக்ஸ் மற்றும் உறவுக்கான சம்மதம் பற்றி ஏன் பேச வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு Ted Talk உரை நிகழ்த்தும்படி என்னிடம் கேட்டார்கள்.

நான் உடலுறவில் ஈடுபடும் மேற்கத்திய இந்திய பெண் மட்டுமல்ல என்பதைக் காட்டுவதற்காக மேடையில் புடவை அணிந்து தோன்றினேன். பல இணையத் தளங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்தியர்கள்தான் உலகிலேயே மிகவும் ஆபாசக் காணொளிகளைக் பார்த்ததாக கூறிய போர்ன்ஹப் தளத்தின் 2019-ஆண்டுத் தரவுகளை பார்வையாளர்களுக்கு காட்டினேன். நாம் ரகசியமாக உறவு கொண்டிருந்தோம். அது யாருக்கும் உதவவில்லை.

அந்த உரைக்குப் பிறகு ஒரு நாளைக்கு 30 க்கும் மேற்பட்ட கேள்விகள் மற்றும் பயிற்சிக்கான கோரிக்கைகள் வரத் தொடங்கின.

அது செக்ஸ் பொம்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்று கேட்கும் ஒரு பெண்ணாக இருக்கலாம் அல்லது கோவிட்டிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் சுயஇன்பம் செய்யத் தொடங்குவது பாதுகாப்பானதா என்று கேட்கும் ஒரு நபராக இருக்காலம். (எனது பதில்: கோவிட் தொற்று இருக்கும்போது சுயஇன்பம் செய்து கொண்டால் அது உடல் சோர்வுக்கு வழிவகுக்கும், ஆனால் முழுவதும் மீண்ட பிறகு வழக்கத்துக்குத் திரும்பிவிடலாம்)

பாலியல்

பட மூலாதாரம், Getty Images

இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு என்னுடைய வலி மிகுந்த கடந்த காலத்தை நினைவூட்டுகின்றன. செக்ஸ் கூட பல நேரங்களில் பிரச்சினை அல்ல. என் பெற்றோரின் வளர்ப்பு முறையும், செயல்பாடுகளும் அந்த வலியின் ஒரு பகுதியாக இருந்தன, ஏனென்றால் மனித வாழ்க்கையின் மிகவும் இயல்பான பகுதியைப் பற்றி ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. என் சொந்த திருமணத்தில் செக்ஸ் வறட்சி இருந்தது, ஏனென்றால் அதுபற்றி நாங்கள் ஒருவருக்கொருவர் பேச முடியவில்லை.

என் மகனுக்கு இப்போது கிட்டத்தட்ட எட்டு வயது, சில ஆண்டுகளில் அவனுக்கு ஆர்வம் ஏற்படும் எனக்குத் தெரியும். அவனுக்கு பாலியல் ரீதியாக ஆர்வத்துடன் இருக்க வேண்டிய நேரம் வரும்போது, ​​ நன்கு அறிந்தவராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் சூழலில் நான் அவரை வளர்த்திருக்கிறேன என்று நம்புகிறேன்.

பெற்றோருக்கு பல்லவி பர்ன்வாலின் ஆலோசனைகள்

உங்கள் குழந்தைகள் ஏன் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வதன் மூலம் தொடங்குங்கள்

செக்ஸ் பற்றிப் பேசுவது உங்கள் பிள்ளைகளின் பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து பாதுகாக்க உதவும். . சுயமரியாதைக் குறைவு, உடல் உருவத்தைப் பற்றிய கவலை, பாலியல் முறைகேடு, ஆரோக்கியமற்ற உறவுகள் மற்றும் பாலியல் நுகர்வு ஆகியவை பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளில் ஒரு சில.

உங்களுடைய சொந்த அனுபவங்களைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்

குழந்தைகள் பெற்றோரின் கதைகளுடன் நம்பமுடியாத அளவுக்கு தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். நீங்கள் வளர்ந்து வரும் போது செக்ஸ் பற்றிய உணர்வு உங்களுக்கு எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்கள் உங்களை தவறுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் உண்மையான மனிதர்களாக பார்க்க விரும்புகிறார்கள். உங்கள் இளம் வயதில் நீங்கள் எதிர்கொண்ட செக்ஸ் தொடர்பான சவால்கள், குழப்பங்கள் மற்றும் தவறான கருத்துக்களைப் பற்றி பேசினால், உங்கள் குழந்தையுடன் ஒரு சிறந்த இணைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் பாலியல் விழுமியங்களைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள். நிர்வாணம், டேட்டிங்,, எல்ஜிபிடி, ஓரின சேர்க்கை திருமணம், கருக்கலைப்பு, கருத்தடை, திருமணத்திற்கு புறம்பான செக்ஸ், ஆரோக்கியமான உறவுகள் மற்றும் காத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள்.

செக்ஸ் பற்றிய உண்மைகளை சொல்லிக் கொடுங்கள்

உங்கள் குழந்தைகள் 10 முதல் 14 வயதிற்குள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

1. பாலுணர்வைச் சுற்றியுள்ள உங்கள் எதிர்பார்ப்புகளும் மதிப்புகளும்

2. ஆண் மற்றும் பெண் பாலின உறுப்புகளின் சரியான பெயர்கள் மற்றும் பங்கு

3. உடலுறவு என்றால் என்ன, கருத்தரிப்பு எவ்வாறு நிகழ்கிறது

4. பருவமடையும் போது ஏற்படும் உடல் மற்றும் உணர்வு மாற்றங்கள்

5. மாதவிடாய் சுழற்சியின் தன்மை மற்றும் செயல்பாடு

6. எல்ஜிபிடி உறவுகள், பாலினம், சுயஇன்பம், கருக்கலைப்பு

7. குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்ன

8. பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் என்னென்ன மற்றும் அவை எவ்வாறு பரவுகின்றன

9. பாலியல் முறைகேடுகள் என்றால் என்ன, பாலியல் முறைகேட்டை எவ்வாறு தடுப்பது, ஒருவேளை அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும்.

10. இந்த தகவல்கள் அனைத்தும் வயதுடன் தொடர்புடையவை, எனவே அதை எப்போது பகிர வேண்டும், எந்த அளவுக்குத் தர வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

காணொளிக் குறிப்பு, 'தினமும் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை'

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :