விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டது ஏன்? - பின்னணி தகவல்கள்

நடிகர் விஜய்

பட மூலாதாரம், VIJAY

படக்குறிப்பு, நடிகர் விஜய்
    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீரிதிமன்றம். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு கேட்டதன் பின்னணி என்ன?

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்ட சொல்லியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக நீதிக்காக பாடுபடுவாதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு என அந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி?

instagram @kiransaphotography

பட மூலாதாரம், instagram @kiransaphotography

2012-ல் பிரிட்டனில் தயாரான சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸை இறக்குமதி செய்தார் நடிகர் விஜய். இதையடுத்து அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்தும், வரி வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் விஜய். மேலும் அந்த மனுவில் இந்த காருக்கு வரி செலுத்தாத காரணத்தால் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பதிவு செய்ய முடியாமலும், காரை பயன்படுத்த முடியாமலும் உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் புகழ்பெற்ற நடிகர் என்பதால் உரிய நேரத்தில் சரியான வரி செலுத்த வேண்டும் அதுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதையும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

வரிவிலக்கு கேட்டது ஏன்?

மனுவில் தான் நடிகர் என்பதை விஜய் குறிப்பிடமால் இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு சொகுசு காரை பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்வதற்காக காரின் மொத்த விலையில் 20% செலுத்தப்பட்ட நிலையில் இங்கு நுழைவு வரி என்பது வசூலிக்க தடை வேண்டும் என்பதே இதன் விஜய் தரப்பு மனுவில் விடுத்திருந்த கோரிக்கை.

VIJAY

பட மூலாதாரம், VIJAY

கார் பிரியரான நடிகர் விஜயிடம் வின்டேஜ் மற்றும் பிஎம்டபுள்யூ கார்கள், மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார்கள் உள்ளன. இதில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் குறைந்தபட்ச விலை ரூ. 5 கோடியும் அதிகபட்ச விலை ரூ. 9.50 கோடி ஆகவும் உள்ளது. மற்ற கார்களை போல அல்லாமல், ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிக்கவே குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இதன் பெரும்பாலான வேலைகள் மனித உழைப்பில் செய்யப்படுவதுதான். மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரியர்களுக்கு ஏற்றாற்போலவே அவர்கள் விரும்பும் வண்ணம், காரின் உள்ளே வசதிகள் போன்றவை பிரத்யேக கவனத்துடன் செய்து கொடுக்கப்படும்.

இதில் நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை 2012-ல் சுமார் 3.5 கோடி ரூபாய். இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ்1 வகையை சார்ந்தது. லிட்டருக்கு ஐந்து முதல் எட்டு கிலோ மீட்டர் வரை அந்த கார் மைலேஜ் கொடுக்கக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோமீட்டர்.

தமிழ் திரைப்பட உலகில், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் விஜய், தனுஷ் ஆகியோர் இந்த ரோல்ஸ் ராய்ஸ் வகை கார்களை வைத்திருக்கிறார்கள்.

எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்

விஜய்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, டிரெண்டாகும் விஜய் ஹேஷ்டேக்

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடனேயே நடிகர் விஜய்க்கு ஆதரவாக 'WeSupportThalapathyVijay' எனவும், எதிர்ப்பு தெரிவித்து 'வரிகட்டுங்க_விஜய்' எனும் ஹேஷ்டேக்குகள் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

மேலும் கிரிக்கெட் வீரர் சச்சின் இங்கிலாந்தில் இருந்து கடந்த 2002ல் ஃபெராரி காரை இறக்குமதி செய்தார். அதற்கான இறக்குமதி வரி மட்டுமே ரூ. 1.6 கோடி என சொல்லப்பட்டது. அப்போது வரி விலக்கு கேட்டு சச்சின் ஆளும் மத்திய பாஜக அரசுக்கு கடிதம் எழுத, சச்சினுக்கு வரி விலக்கு கிடைத்து அது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த வகையில், தற்போது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மட்டுமே வரியாக 1 கோடி ரூபாய் இருப்பதால் அதை வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என அவரது தரப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால், தற்போது நுழைவு வரியுடன் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்த அவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவு தொடர்பாக விஜய் தரப்பு என்ன சொல்கிறார்கள் என தெரிந்து கொள்ள அவரது மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ்ஸிடம் பேசியபோது, "நடிகர் விஜய் அவர்கள் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இது குறித்து இன்னும் அவரிடம் பேசவில்லை. அவர் ஏதேனும் தெரிவிக்கும் பட்சத்தில் நிச்சயம் தெரிவிக்கிறோம்" என்பதோடு முடித்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :