முடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள்

ஹனுமன்தா
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக

"நீ எங்கிருந்தாலும் உன்னை எரித்து கொன்று விடுவோம் என அவர்கள் சொன்னார்கள். நாங்கள் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும், தொடர்ந்து அச்சத்துடன்தான் வாழ்கிறோம். எனவே எங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள நாங்களே முடிவு செய்தோம்."

இவை திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற 27 வயது ஹனுமன்தாவின் சொற்கள். அவருடன் அவரின் உறவினர் 22 வயது பாசாவராஜுவும் தற்கொலைக்கு முயன்றார்.

அவர்களின் தற்கொலை முயற்சிக்கு காரணம் அவர்கள் முடிதிருத்த முயன்றதுதான் என்பது குற்றச்சாட்டு.

முதலில் அவர்களிடம் முடி வெட்டுபவர், "நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இது லிங்காயத்துக்களுக்கான (உயர்ந்த சாதி என கருதப்படும்) இடம். இங்கு ஹொலேயாஸ் (தலித் பிரிவினர்) வரக்கூடாது," என்று தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹோசாஹல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹனுமன்தா மற்றும் பாசாவராஜுவுக்கு எதிராக திரண்டுள்ளனர்.

"நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இது எங்களது இடம். இது எங்களது தனிப்பட்ட இடம், என அவர்கள் எங்களை நோக்கி சத்தம் போட்டார்கள். ஏன் நாங்களும் இங்கு முடி வெட்டிக்கொள்ள கூடாது என கேட்டதற்கு அவர்கள் எங்களை தள்ளிவிட்டனர். எங்களை தடுத்து அடிக்க தொடங்கினர்," என்று தெரிவிக்கிறார் ஹனுமன்தா.

"நாங்கள் இரண்டே பேர். ஆனால் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள். நாங்கள் புகார் கொடுப்போம் என்று தெரிவித்தோம் ஆனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொள்ளுங்கள் என அவர்கள் தெரிவித்தனர்" என்கிறார் ஹனுமன்தா.

பிபிசி ஹிந்தி சேவையிடம் ஹனுமன்தா சொன்ன அனைத்தையும், இந்த சம்பவம் தொடர்பாக வைரலான வீடியோ உறுதி செய்கிறது.

"அங்கு எழுப்பப்பட்ட கூச்சலால் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார்" என ஹனுமன்தா தெரிவித்தார்.

குறைந்த எண்ணிக்கையில் தலித் குடும்பங்கள்

ஹனுமன்தா மற்றும் பாசாவராஜு இருவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் தலித் குடியிருப்பை சேர்ந்தவர்கள். அது மிகச்சிறிய பகுதி. 20 வீடுகள் மட்டுமே அங்கு உள்ளது.

ஆனால் லிங்காயத் சமூகத்தினர் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர். சில கணிசமான முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர் ஆனால் அவர்கள் இந்த பிரச்னையில் தலையிடமாட்டார்கள் என்கிறார் ஹனுமன்தா.

முதலில் அந்த இருவரும் அருகிலுள்ள யெலபுராகா வட்டத்துக்குத்தான் செல்ல முயன்றனர் ஆனால் பொதுமுடக்கம் காரணமாக அங்கு அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தங்கள் கிராமத்திற்கு திரும்பிய அவர்கள், ஒரு வீட்டின் அருகே இருக்கும் முடித்திருத்தும் கடைக்கு சென்றுள்ளனர்.

ஹனுமன்தா வீடியோ

பட மூலாதாரம், HANUMANTHA

"இளைஞர்கள் அங்கு முடிதிருத்திக்கொள்ள சென்றதும் வாக்குவாதம் தொடங்கியுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர், முடித்திருத்தம் செய்பவர்கள் இருப்பது தனியார் இடம். எனவே இவர்கள் அங்கிருக்கத் தேவையில்லை என தெரிவித்தார்," என பிபிசியிடம் தெரிவித்தார் கோப்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஸ்ரீதர்.

முடித்திருத்தம் செய்வதில் என்ன பிரச்னை?

முடித்திருத்தம் என்பது எளிதான ஒரு விஷயம்தான் ஆனால் தலித் மக்கள் முடித்திருத்தம் செய்துகொள்ள விரும்புவதுதான் அத்தனை கடினமானதாக உள்ளது.

"கிராமத்தில் உள்ள தலித்துகள் முடித்திருத்தம் செய்து கொள்வது எளிதான விஷயமாக இருந்ததில்லை. முடித்திருத்தம் செய்வோரும் தலித்துகள் வந்து முடிவெட்டி செல்கிறார்கள் என்றால் பிற சாதியினர் அங்கு வர மாட்டார்கள் என அஞ்சுகின்றனர்," என தலித் சங்கா ஓகுடா சங்கத்தை சேர்ந்த எம்.ஆர்.பெரி பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரே கிணற்றில் நீர் இறைப்பதுகூட, தங்களை உயர்சாதி என்று கருதிக்கொள்வோருடன் பிரச்சனை ஏற்படக் காரணமானது என்கிறார் பெரி.

"பைப் தண்ணீர் வந்த பிறகு இந்த பிரச்னை ஓரளவு சரியானது ஆனால் பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் கப்களில்தான் நீர் அல்லது தேநீர் வழங்கப்படுகிறது." என்கிறார் பெரி.

மேலும் உயர்சாதி என்று கருதிக்கொள்ளும் சாதியை சேர்ந்தவர்களுடனான வியாபாரத்தை இழக்க விரும்பாத இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரோ அல்லது முஸ்லிம் சமூகத்தினரோ, முடித்திருத்தம் செய்பவர்களை போல அவர்களுக்கு சாதகமாகவே பேசுவர் அல்லது அமைதியாக இருந்துவிடுகின்றனர்.

இதேபோன்ற சம்பவங்களை பகல்கொட் மாவட்டத்தின் ஹன்குண்ட் தாலுக்கா, ராய்சூர் மாவட்டத்தின் மான்வி தாலுக்கா மற்றும் கர்நாடாகாவில் பிற இடங்களிலும் நீங்கள் பார்க்கலாம் என்கிறார்கள் தலித் சங்கா ஒகுடாவை சேர்ந்த செயற்பாட்டாளர்கள்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மசூரின் நஞ்ஜன்குட் தாலுக்காவில் உள்ள நாயகா சமூகத்தினரும் லிங்காயத் சமூகத்தினரை போன்றே நடந்து கொண்டனர். நாயகாஸ் என்பவர்கள் பட்டியலின பழங்குடியினர். ஆனால் அவர்கள் நஞ்ஜன்குட் தாலுக்காவில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள். எனவே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அவர்களுக்கே ஆதரவு தந்தனர்.

"எனவேதான் தலித் இளைஞர்கள் நகரங்களுக்கு சென்று முடித்திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. நகரத்தில் இந்த வேறுபாடு இல்லை. இருப்பினும் இந்த பழைய நடைமுறைகளை எதிர்த்து தலித் இளைஞர்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்" என்கிறார் பெரி.

இந்த சம்பவம் தொடர்பாக ஹோசாஹல்லியை சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இன்று தலித் மக்கள் கிராமத்திற்குள் செல்ல முடியவில்லை. பிற சமூகத்தை சேர்ந்த மக்கள் எங்களிடம் பேசுவதில்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலி செய்பவர்கள். விவசாயக் கூலிகள். நாங்கள் வாழ்வதற்கு பக்கத்து கிராமத்திற்கு சென்று வேலை பார்க்கிறோம்." என்கிறார் ஹனுமன்தா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :