புதுச்சேரியில் முடிவுக்கு வந்த என்ஆர்சி - பாஜக இழுபறி: 16ம் தேதி சபாநாயகர் தேர்தல்

புதுவையில் முடிவுக்கு வந்த என்ஆர்சி - பாஜக இழுபறி

புதுச்சேரி சட்டப் பேரவை கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டபேரவை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக மே 7ம் தேதி பதவியேற்றார்.

முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி ஒதுக்குவதில் கடந்த ஒரு மாதமாக குழப்பம், இழுபறி நீடித்து வந்தது.

துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள், சபாநாயகர் பதவி ஆகியவற்றை தங்களுக்குத் தரவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. துணை முதல்வர் பதவி வழங்க முதல்வர் ரங்கசாமி விரும்பாததால், அதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்க கடந்த வாரம் ரங்கசாமி சம்மதித்தார். இதை ஏற்றுக்கொண்ட பாஜக, அதன்பிறகு முக்கியத் துறைகளை முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே இழுபறி ஏற்பட்டது.

ரங்கசாமி
படக்குறிப்பு, முதல்வர் ரங்கசாமி.

ஒரு மாதத்துக்கு மேலாக அமைச்சரவை பதவி ஏற்க முடியாத நிலை புதுச்சேரி அரசியலில் தொடர்ந்துவந்தது. இந்த யூனியன் பிரதேசத்துடன் சேர்ந்து நடத்தப்பட்ட தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புதிய அமைச்சரவைகள் பதவி ஏற்று நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் கொரோனா தொற்றுக் காலத்தில் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் புதுச்சேரியில் இன்னும் அமைச்சரவை குறித்தே பேச்சு நடந்துவருவது விமர்சனத்துக்கு உள்ளானது.

கடந்த வாரம் புதுச்சேரி வந்த பா.ஜ.க. மேலிடப்பார்வையாளர் எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் புதுச்சேரி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். முதலில் மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏம்பலம் செல்வத்தை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தயக்கம் காட்டியதால் நியமன சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இந்த பிரச்சினையும் தாமதத்துக்கு காரணமானது. இதனால் பா.ஜ.க. மேலிடம் இந்த பிரச்சினையில் தலையிட்டு மீண்டும் ஏம்பலம் செல்வத்தை சபாநாயகராக நியமிப்பது என முடிவு செய்தது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக முதல்வர் ரங்கசாமியிடம் பா.ஜ.க. மேலிடம் தெரிவித்தது.

இந்த நிலையில் சபாநாயகர் தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் கூட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

அன்றைய தினமே சபாநாயகர் தேர்தல் நடத்தவும் அனுமதி தந்துள்ளார். தேர்தல் நியமன சீட்டுகளை பேரவை செயலாளரிடம் பெறலாம். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தனித்தனியாக அனுப்பியுள்ளோம். அலுவல் நடத்தை விதிப்படி நியமனச்சீட்டுகளை வரும் ஜூன் 15ம் தேதி நண்பகல் 12 வரை தரலாம்," என சட்டபேரவை செயலர் குறிப்பிட்டுள்ளார்.

போட்டி இருந்தால் வரும் 16ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும். ஆளுங்கட்சி தரப்பில் சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வம் போட்டியிட உள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில் போட்டியிடாவிட்டால் போட்டியின்றி ஏம்பலம் செல்வம் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

புதுவை பாஜக தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ. நமசிவாயம்.
படக்குறிப்பு, புதுவை பாஜக தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ. நமசிவாயம்.

முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்தவுடன் சபாநாயகர் தனது ஏற்புரையை நிகழ்த்துவார். சபாநாயகர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நிலவிய அமைச்சரவை தொடர்பான பிரச்சினைகள் தற்போது பேசி தீர்வு காணப்பட்டுள்ளன. இனி இதில் இழுபறிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை
படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவை

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் "புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்கும் விஷயத்தில் பாஜகவின் பணி முடிந்து விட்டது, இனி முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை அமைக்கும் முடிவை அறிவிப்பார். அடுத்த வாரம் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளது," என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :