புதுச்சேரி ஆளும் கூட்டணியில் குழப்பமா? ஒரு மாதமாகியும் அமைச்சரவையில் பாஜக சேராதது ஏன்?

ரங்கசாமி
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஒரு மாதம் கடந்து விட்ட பிறகும் அங்கு என். ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்கவில்லை. புதுச்சேரி அரசியலில் என்ன நடக்கிறது?

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி மே 7ஆம் தேதி பதவியேற்றார்.

முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி ஒதுக்குவதில் கடந்த ஒரு மாத காலமாக குழப்பம் மற்றும் இழுபறி நீடித்து வந்தது.

அமித் ஷா நேரடியாக தலையீடு

முன்னதாக பாஜக தரப்பில் துணை முதல்வர் பதவி உட்பட மூன்று அமைச்சர்கள் பதவி வழங்க வலியுறுத்தி பாஜக மேலிட பொறுப்பாளர்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு முதல்வர் ரங்கசாமி உடன்படாததால், டெல்லியில் உள்ள பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ரங்கசாமியிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, கடந்த வாரம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய மேலிட பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இறுதியாக, சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்ய ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.

பாஜகவிற்கு முக்கிய இலாகாவை ஒதுக்க முன்வரும் ரங்கசாமி

சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவிகளை பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்வதாக கூறிய நிலையில், மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சந்திரசேகர் எம்பி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இலாகாக்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முக்கிய துறையான உள்துறையை பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பாஜக தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்த துணை முதல்வர் பதவி கைவிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி

பதவியை விட்டுக்கொடுக்க பாஜக தயார்

இந்த சூழலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, நாங்கள் இருவருமே சுமுகமாக ஓர் அணியாக இருப்பதாக முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற கட்சித் தலைவருமான நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "புதுவை மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு பாஜக செயல்படுகிறது. இதில், பாஜக 3 அமைச்சர்கள் வாங்கிவிட்டோமா? அல்லது 2 அமைச்சர்கள் வாங்கி விட்டோமா? என்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. எங்களுக்கு பதவி முக்கியமில்லை மக்கள் தான் முக்கியம், பதவி இரண்டாவது பட்சம் தான். அதன் அடிப்படையில் விட்டுக்கொடுத்துப் போக நாங்கள் தயாராக இருக்கிறோம். இதனால், முதல்வருடன் பேசி, அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வர் தொடர்பாக தேசிய தலைமை முடிவெடுக்கும், அதை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார்," என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

பாஜக நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி

ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே குழப்பம் நீடித்து வந்த காரணத்தால், அமைச்சரவை பொறுப்பேற்பதில் காலதாமதமாகிறது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று உள்ள சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மாற்று கட்சிகளும், சமூக செயல்பாட்டாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய சமூக செயல்பாட்டாளர்கள் கண்ணன், "ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலம் ஆகிவிட்டது. ஆனால், பதவியாக இவர்களுக்குள் நடக்கும் இழுபறியால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் நிறைவேறாமல் தேங்கியுள்ளன. இந்த பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து செயலாற்ற துறை ரீதியாக அமைச்சர்கள் களப்பணியாற்ற வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டு கால காங்கிரஸ் - திமுக ஆட்சியில் ஆட்சியாளர் ஆளுநருக்கு இடையே நிலவி வந்த அதிகார மோதல் போக்கு காரணமாக பல துறைகள் சார்ந்த பணிகள் செயல்படுத்த முடியாமல் போனது. இதனால் பொது மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்கள் பணிகளை விரைந்து செயல்படுத்தும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், பதவி மற்றும் முக்கிய இலாகாவை கைப்பற்றுவதில் இந்த அரசு குறியாக இருந்ததால், இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது," என்றார் அவர்.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசியல் செய்வது முறையானது அல்ல என்று கூறும் கண்ணன், இந்த நேரத்தில் யார் இறங்கி வேலை செய்கிறார்களோ அவர்களே மக்கள் தலைவராக உருவெடுக்க முடியும் என்கிறார் அவர்.

ஆட்சியை கைப்பற்ற முயல்கிறதா பாஜக

"பாஜக செயல்பாடு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்பை தான் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி ஆதரவு இல்லாமல் ஒரு இடங்களை கூட அவர்களால் வென்று இருக்க முடியாது. ஆனால் தற்போது பதவிக்காக ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுப்பது பாஜக மீது மக்களுக்கு வெறுப்புணர்வையே ஏற்படுத்துகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் புதுச்சேரியில் பாஜகவால் வளர முடியாது. மேலும் வரும் காலங்களில் இதே போன்ற சூழலை பாஜக கையாளுமென்றால் இந்த கூட்டணி பிரிவதற்கு வாய்ப்புள்ளது.

பாஜக மற்ற மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாபஸ் பெற வைத்து ஆட்சியை கைப்பற்றியது போல புதுச்சேரியில் செய்ய முடியாது. பாஜக மீது மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பலை நிலவி வருகின்றதால், ரங்கசாமிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக அதிகாரத்திலுள்ள பதவி மற்றும் முக்கிய இலாகாவை கைப்பற்றுவதில் குறியாக இருக்கின்றனர்.

ஆட்சியை கவிழ்த்தால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது பாஜகவிற்கு தெரியும். அதன் காரணமாகவே அதிகாரத்தை கைப்பற்ற பாஜகவினர் துடிக்கின்றனர். அதன் காரணமாகவே தற்போது பேச்சுவார்த்தை இழுபறி ஏற்பட்டு காலதாமதமாகிறது," எனக் சமூக செயல்பாட்டாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கே அதிகாரம் இல்லாத போது துணை முதல்வர் பதவி ஏன்?

சபாநாயகர் பதவியை பாஜக கேட்டு பெற்றிருப்பது கூட எதிர்வரும் காலத்தில் இந்த ஆட்சியை தன்வசம் படுத்தவே உள்நோக்கத்துடன் பாஜக செயல்படுவதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த இளங்கோவன் குற்றம்சாட்டுகிறார்.

இது குறித்து அவர் பேசுகையில். "தற்போது பாஜக புதுச்சேரியில் ஜனநாயகத்தை சீர்குலைத்து கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சி காலத்திலிருந்த அரசை செயல்பட விடாமல் கிரண் பேடி மூலமாக மத்திய அரசு முடக்கியது. ரங்கசாமியின் ஆதரவினால் தான் பாஜகவும் வந்துள்ளது. ஆனால் தொடர்ந்து கூட்டணி தர்மத்திற்கு எதிராகவே பாஜக செயல்படுகின்றனர்.

இளங்கோவன்

பட மூலாதாரம், ELANGOVAN

முன்னதாக 'கூட்டணிக்கு தலைவர்' ரங்கசாமி என்றனர், அவரும் முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் அவர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, எந்த தகவலும் தெரிவிக்காமல் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளனர்.

குறிப்பாக பாஜக தேர்தலில் வெற்றி பெற காரணமாக இருந்த கூட்டணி கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதனால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நோக்கத்தில் தான் செயல்படுகின்றனர்," என்றார்‌ அவர்.

அதிலும் முதல்வருக்கே அதிகாரம் இல்லாத புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி எதற்கென இளங்கோவன் கேள்வி எழுப்புகிறார்.

மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி செயலற்று கிடக்கிறது

மேலும் புதுச்சேரி அரசியல் விவகாரங்களை மிக நெருக்கமாகக் கவனித்து வரும் மூத்த அரசியல் ஆய்வாளர் நடராஜன் கூறுகையில், "புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால் புதுச்சேரியைத் தவிர மற்ற நான்கு மாநிலங்களும் அமைச்சரவை பொறுப்பேற்றது மட்டுமில்லாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் கொரோனா தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால், புதுச்சேரியில் அமைச்சரவை பொறுப்பேற்காமல் காலதாமதம் செய்வது தவறான முன்னுதாரணத்தைக் காட்டுகிறது.

புதுச்சேரி

ரங்கசாமி தலைமையிலான மந்திரிசபையை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ற மாதிரி சபையை மக்களும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் சமீப காலமாக பாஜகவின் நடவடிக்கைகளே இந்த கால தாமதத்திற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது," என்கிறார் அவர்.

புதுச்சேரியில் மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில், அமைச்சரவை இல்லாமல் கிட்டத்தட்ட குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறுவது போல இருப்பதாக நடராஜன் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விவகாரத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும். கைக்கு எட்டியது வாயிக்கு எட்டாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. அமைச்சரவை அமைக்கக் கூடிய வலிமை இருந்தும் பாஜகவின் நடவடிக்கைகளால் இது காலதாமதம் ஆகிறது," என்று‌ மூத்த பத்திரிகையாளர் நடராஜன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :