சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்கள்: கீ செயின் தோற்றத்தில் நவீன வசதிகளுடன் அறிமுகம்

சாம்சங்

எண்களை சுற்றி ஒரு நபரை அழைத்த டெலிபோன், பட்டன் செல்போனாகி, விரல்களால் உலகை வலம் வரும் ஸ்மார்ட்ஃபோன்களாக உருமாறி, இன்று புத்தகம் போல் திறக்கவும், பர்ஸ் போல மடிக்கும் அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன்களின் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.

தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் கேலக்சி Z ஃப்லிப் 3 மற்றும் ஃபோல்ட் 3 என இரண்டு ரக மடக்கு வசதி கொண்ட (Holdable) ஸ்மார்ட் செல்ஃபோன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதன் விலை 1,000 பவுண்ட் ஸ்டெர்லிங் (இந்திய ரூபாயில் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்) இருக்கலாம். மடக்கு வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் இன்று வரை ஒரு தனித்துவம் வாய்ந்த பொருளாகவே காணப்படுகிறது.

சாம்சங் நிறுவனமோ தன் மடக்கு வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை குறைத்திருப்பதாகவும், ஒரு சராசரி பயனர் பயன்படுத்தும் அளவுக்கு அதன் தாக்குபிடிக்கும் தன்மையை மேம்படுத்தி இருப்பதாகவும் கூறுகிறது.

சாம்சங் கேலக்சி நோட் சீரிஸின் சில முக்கிய வசதிகள், உதாரணமாக ஸ்டைலஸ் பேனாக்கள் இந்த ஃபோல்ட் 3 ஸ்மார்ட்ஃபோனில் இருக்கின்றன என்கிறார் சிசிஎஸ் இன்சைட் என்கிற ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த பென் வுட்.

மடக்கு வசதி கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி எல்லோருக்கும் கொண்டு செல்ல இது சரியான சமயம் என சாம்சங் நிறுவனம் கருதுகிறது என்கிறார் பென்.

ஆனால் சாம்சங்கின் போட்டியாளரான ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், அதை பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பது போல இருப்பது கவனிக்கத்தக்கது. அந்நிறுவனங்களோ முதலீடு செய்யும் பணத்துக்கு நுகர்வோர் மத்தியில் தேவை இருக்குமா என கேள்வி எழுப்புகின்றனர் என்கிறார் பென்.

ஃபோல்ட் 3

6.2 இன்ச் திரை கொண்ட ஃபோல்ட் 3 ஸ்மார்ட்ஃபோன் 7.6 இன்ச் டேப்லெட் புத்தகம் போல திறக்கலாம்.

அந்த விரிவடையும் திரைக்குள் ஒரு செல்ஃபி கேமராவை வைத்திருக்கிறது சாம்சங். அந்த கேமராவை பயனர்களால் கிட்டத்தட்ட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அதை வடிவமைத்து இருக்கிறார்கள்.

ஃபோல்ட் 3 ஸ்மார்ட்ஃபோன் டேப்லட் போல விரிவடையும் போது, அது டேப்லெட் போல செயல்பட மென்பொருளில் அதிக கவனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேப்லெட் போல விரிவடையும் போது ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாற டாஸ்க்பார் போன்ற வசதிகள் இருக்கின்றன.

சாம்சங்

அதே போல் மடக்கு வசதி கொண்ட சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன்களில், ஸ்டைலஸ் பேனா பயன்படுத்தும் வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்ஃபோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் நீர் உட்புகாத படி (Water resistant) முதல்முறையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

Z ஃப்லிப் 3

சாம்சங் நிறுவனம் வெளியிட இருக்கும் மற்றொரு மடக்கு வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் Z ஃப்லிப் 3.

6.7 இன்ச் திரையளவு கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனை பர்ஸை மடிப்பதைப் போல மடிக்கலாம்.

மடித்த பின்னும் 1.9 இன்ச் திரை இருப்பதால், ஸ்மார்ட்ஃபோனுக்கு வரும் அறிவிப்புகளை போனை திறக்காமலேயே பார்க்கலாம்.

வெகுஜன மக்களுக்கும் மடக்கு வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு செல்வதற்கான சரியான காலமிது என சாம்சங் நிறுவனத்தின் மார்க் நாட்டன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

"மடக்கு ஸ்மார்ட்ஃபோன்களை மேம்படுத்துவதற்கு எங்களுக்கு போதுமான ஆண்டுகள் இருந்தன"

"நாங்கள் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தி இருக்கிறோம். மடக்கு ஸ்மார்ட்ஃபோன்களை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறனையும் நாங்கள் மேம்படுத்தி இருக்கிறோம்"

சாம்சங்

"எல்லாம் கை கூடி வரும் நேரத்தில் நாங்கள் இருக்கிறோம்" என கூறினார் மார்க் நாட்டன்.

Z ஃப்லிப் 3 செல்போனின் விலை 947 பவுண்ட் ஸ்டெர்லிங். இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 95,000 ரூபாய். சாம்சங் நிறுவனம் விற்பனை செய்யும் மடக்கு வசதி கொண்ட செல்ஃபோன்களிலேயே 1,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்குக் குறைவாக விற்பனையாகும் முதல் செல்ஃபோன் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோல்ட் 3 ஸ்மார்ட்ஃபோனின் விலை கடந்த ஆண்டை விட கொஞ்சம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும், ஒட்டுமொத்தமாக சந்தையைப் பார்க்கும் போது, விலை அதிகமாகத் தான் இருக்கிறது.

இந்த மடக்கு ஸ்மார்ட்ஃபோன்கள், சாதாரணமாக சந்தையில் கொஞ்சம் குறைந்த விலையில் கிடைக்கும் முன்னணி ஸ்மார்ட்ஃபோன்களை விட எந்த விதத்தில் பெரிய வசதிகளைக் கொடுக்கிறது என கேள்வி எழுப்புகிறார் பென்.

மற்ற சாதனங்கள்

சாம்சங் நிறுவனம் ஃபோல்ட் 3 மற்றும் ஃப்லிப் 3 ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்திய போது, தன் புதிய இயர் பட்ஸ் மற்றும் கெலாக்சி 4 கடிகாரத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்த கடிகாரம் வியர் ஓ எஸ் மூலம் இயங்குகிறது. இந்த வியர் ஓ எஸ் என்பது கூகுள் நிறுவனத்தின் வியர் ஓ எஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் சென் (Tizen) ஸ்மார்ட் கடிகாரத்தின் இயங்கு தளம் இணைந்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்க்கு போட்டியாக, இந்த வியர் ஓ எஸ் இங்குதள கடிகாரங்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :