சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை நீண்டகாலம் தொடரும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ்
- பதவி, வணிக செய்தியாளர், சிங்கப்பூர்
சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்ற தகவலை தாங்கி வந்துள்ளது புதிதாக வெளியிடப்பட்ட சீனாவின் ஐந்தாண்டு திட்டம்.
தேசியப்பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஏகபோக நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான புதிய விதிகள் அறிமுகம் செய்யப்படும் என்று உலகின் இரண்டாவது பொருளாதாரமான சீனா கூறியுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறையை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த ஐந்தாண்டு திட்டம் வந்துள்ளது.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில், இந்த ஐந்தாண்டு திட்ட ஆவணம், சீனக் குடியரசைத் தோற்றுவித்தவரான மவோவின் பெயரை குறிப்பிட்டுள்ளது.
2025ம் ஆண்டு வரையிலான காலத்தைப் பேசும் இந்த 10 அம்சத் திட்டத்தை சீனாவின் அரசு கவுன்சிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியும் புதன்கிழமை வெளியிட்டன.
அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்கம், பண்பாடு, கல்வி ஆகிய துறைகள் தொடர்பான சட்டங்கள் பலப்படுத்தப்படும் என்கிறது அந்த திட்டம்.
ஏகபோக நிறுவனங்கள், வெளிநாடு தொடர்பான சட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் சீன அரசு உத்தேசித்திருப்பதாக அந்த திட்டம் சொல்கிறது.
இணைய நிதித்துறை, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை தொடர்பான சீனாவின் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த நெறிமுறைகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீதான சீனாவின் நடவடிக்கை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் அதிகரிக்கும் என்ற கவலையை இந்த அறிவிப்புகள் தோற்றுவித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்ததை அடுத்து, அமெரிக்கா, ஹாங்க் காங், சீனா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பல சீன நிறுவனங்களின் பங்கு விலை கடுமையாக சரிந்தது.
ஏற்கெனவே நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இதர பல வணிக நிறுவனங்கள் மீது ஏகபோக எதிர்ப்பு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது சீனா.
அலிபாபாவுக்கு இமாலய அபராதம்
சீனப் பெருநிறுவனமான அலிபாபா மீது நடத்தப்பட்ட விசாரணை, அந்நிறுவனம் சந்தையில் பல ஆண்டுகளாக தனக்கு உள்ள ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்திக் கொண்டது என்று கண்டுபிடித்தது. இதையடுத்து விதிக்கப்பட்ட 280 கோடி டாலர் அபராதத்தை கடந்த ஏப்ரல் மாதம் அலிபாபா ஏற்றுக்கொண்டது.
பிரத்யேக இசை உரிம ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ளும்படி கடந்த மாதம் டென்சென்ட் நிறுவனத்துக்கு சொல்லப்பட்டது.
குவாய்ஷோ, டென்சென்டின் மெசேஜ் டூல் QQ, அலிபாபாவினஅ டௌபௌ, வெய்போ போன்ற நாட்டின் பெரிய ஆன்லைன் தளங்களில் இருந்து பொருத்தமற்ற, குழந்தைகள் தொடர்பான உள்ளடக்கங்களை நீக்கும்படி ஜூலையில் உத்தரவிடப்பட்டது.
சீனாவின் டியூஷன் தொழில்துறை
தனிப்பட்ட ஆசிரியர்கள் வழங்கும், டியூஷன் சேவைகள் கடும் பரிசீலனைக்கு உள்ளாகும் என்று சீன அதிகாரிகள் இந்த வாரம் அறிவித்தனர்.
சமீபத்திய சோதனையில் விதிகளை மீறி, உரிமம் இல்லாமல் டியூஷன் சேவை வழங்கியதாக ஒரு நபருக்கும், 6 நிறுவனங்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
சீனாவில், பள்ளி நேரத்துக்குப் பிந்திய டியூஷன் சேவை வழங்கும் நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 120 பில்லியன் டாலராகும். கடந்த மாதம் சீன அரசு வெளியிட்ட சீர்திருத்தத்தின்படி இந்த நிறுவனங்கள் லாபம் சாரா நிறுவனங்கள் என்று பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்த நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் தடை செய்யப்படுகிறது. பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இந்த டியூஷன் சேவைகளில் முதலீடு செய்யக்கூடாது. இந்த டியூஷன் நிறுவனங்கள் பங்கு மூலம் நிதி திரட்டக்கூடாது என்கிறது புதிய கட்டுப்பாடு.
ஆன்லைன் காப்பீட்டு, வங்கித் துறை மீதான ஒழுங்கு முறை அமைப்பு தனது கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது என்கிறது கைக்சின் செய்தி நிறுவனம்.
பிற செய்திகள்:
- கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் எல். முருகனின் 'ஆசீர்வாத யாத்திரை' - பாஜகவின் திட்டம் என்ன?
- பருவநிலை மாற்ற ஆபத்து: மீத்தேன் வாயுவுக்கு கடிவாளம் போட்டால் கொஞ்சம் வாய்தா வாங்கலாம்
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்
- ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? - விரிவான பின்னணி
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












