ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் இடையே 20 ஆண்டுகளாக போர் நடப்பது ஏன்? - விரிவான பின்னணி

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், EPA

இருபது ஆண்டுகாலப் போருக்குப் பிறகு, அமெரிக்காவும் 2001ல் அவர்களால் பதவியிறக்கப்பட்ட தாலிபனும் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றன. வெளிநாட்டுப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துவங்கியிருக்கின்றன.

இந்தப் போர் பலநூறு மக்களைக் கொன்றதோடு பல லட்சம் பேரைப் புலம்பெயரவும் வைத்திருக்கிறது. மேற்கு உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கு ஆஃப்கானிஸ்தானில் இடம் தர மாட்டோம் என்று தாலிபன் வாக்களித்திருக்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களில் தாலிபான் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அதிகமான நிலப்பரப்பைக் கைப்பற்றியிருக்கிறது. ஆஃப்கானிஸ்தானின் ராணுவ வீரர்கள், வலுவிழந்த தனது அரசாங்கத்தைக் காப்பாற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தேசிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் தாலிபன் ஒப்புதல் அளித்திருக்கிறது என்றாலும் இங்கு உள்நாட்டுப் போர் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அமெரிக்காவின் மிக நீளமான போரான இதை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் ஜோ பைடன், இந்தப் போரைக் கண்காணிக்கும் நான்காவது அதிபராவார். 11 செப்டம்பர் 2021ல் எல்லா படைகளும் முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஒரு இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் போர் அமெரிக்காவின் நீண்ட போராகும்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் போர் அமெரிக்காவின் நீண்ட போராகும்

ஏன் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானுடன் போரிட்டது? ஏன் அது இத்தனை காலம் நீடித்தது?

வாஷிங்டனையும் நியூயார்க்கையும் குறிவைத்த 9/11 தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக அமெரிக்கா களம் இறங்கியது. 3000 பேர் இறந்த 9/11 தாக்குதலுக்கு ஒஸாமா பின் லேடன் தலைமையிலான இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவே காரணம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஆஃப்கானிஸ்தானில் 1996ம் ஆண்டிலிருந்து பதவியில் இருந்த தாலிபன்களின் பாதுகாப்பில் பின்லேடன் இருந்தார். அவரை ஒப்படைக்கத் தாலிபான்கள் மறுத்தபோது, அமெரிக்கா அதை ராணுவரீதியாக எதிர்கொண்டது. தீவிரவாத அச்சுறுத்தலை அழிக்கவும் ஜனநாயகத்துக்கு ஆதரவு தரவும் தாலிபான்களைப் பதவியிலிருந்து இறக்கியது.

சூழ்நிலையிலிருந்து நழுவிய தீவிரவாதிகள், பின்னர் ஒன்றுசேர்ந்தார்கள்.

நேட்டோ ஆதரவாளர்கள் அமெரிக்காவுடன் இணைந்தனர். 2004ல் ஆஃப்கானிஸ்தானில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் கொடூரமான தாலிபன் தாக்குதல் தொடர்ந்து நடந்தன. 2009ல் அதிபர் பராக் ஒபாமா நடத்திய "ட்ரூப் சர்ஜ்" தாலிபான்களைக் கொஞ்சம் கட்டுக்குள் வைத்தது என்றாலும் அது நெடுங்காலம் நீடிக்கவில்லை.

2001க்குப் பிறகான மிக மோசமான காலகட்டமாக 2014 கருதப்படுகிறது. அந்த ஆண்டு நேட்டோவின் சர்வதேச ராணுவங்கள் தங்கள் படையெடுப்பை நிறுத்திக்கொண்டன. பாதுகாப்பின் பொறுப்பு ஆஃப்கானிஸ்தான் ராணுவத்திடம் விடப்பட்டது. இது தாலிபனுக்கு சாதகமாக அமையவே, அவர்கள் மேலும் இடங்களைக் கைப்பற்றினர்கள்.

அமெரிக்காவுக்கும் தாலிபனுக்கும் இடையே நடந்த அமைதிப்பேச்சுவார்த்தைகள் முதலில் திட்டவட்டமாகத் தொடங்கப்படவில்லை. ஆரம்பகட்டத்தில் ஆஃப்கன் அரசும் இதில் பெரிதும் கலந்துகொள்ளவில்லை. படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை கத்தாரில் 2020 பிப்ரவரியில் எட்டபப்ட்டது. ஆனாலும் தாலிபன் தாக்குதல்கள் நிற்கவில்லை. ஆஃப்கான் பாதுகாப்புப் படையினர் மீதும் பொதுமக்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். திட்டமிட்ட படுகொலைகள் நடந்தேறின. அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பின் அளவு அதிகரித்தது.

20 ஆண்டுகள் ஆஃப்கானிஸ்தானில் நடந்த போர் - எப்போது என்ன நடந்தது?

9/11 தொடங்கி, பெரிய அளவில் நடந்த சண்டையாக மாறி, இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் வரை இதுதான் நடந்தது:

11 செப்டம்பர் 2001

ஆஃப்கானிஸ்தானிலில் இருந்த ஒஸாமா பின் லேடனின் தலைமையில் இயங்கும் அல் கொய்தா, அமெரிக்க மண்ணில் அதுவரை நிகழ்ந்திராத தீவிரவாதத் தாக்குதலை நிகழ்த்தியது

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது

பட மூலாதாரம், Getty

நான்கு பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டன. இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது மோதின, கட்டிடம் இடிந்து விழுந்தது. ஒரு விமானம் வாஷிடங்க்டனில் உள்ள பெண்டகனை இடித்தது, ஒன்று பெனிசில்வேனியாவில் உள்ள வயல்வெளியில் விபத்துக்குள்ளானது. கிட்டத்தட்ட 3000 பேர் இறந்தனர்.

7 அக்டோபர் 2001

முதல் வான்வழித் தாக்குதல்

அமெரிக்காவின் தலைமையில் உள்ள சில படைகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் மற்றும் அல்கொய்தா தளங்களின்மீது குண்டு வீசுகின்றன. காபூல், காந்தஹார், ஜலாலாபாத் நகரங்கள் தாகக்பப்டுகின்றன.

ஒரு தசாப்தம் நீடித்த சோவியத் யூனியன் ஆக்கரமிப்புக்குப் பிறகு ஒரு உள்நாட்டுப் போர் வந்தது. அதன்பிறகு தாலிபான்கள் பதவிக்கு வந்திருந்தனர். பின்லேடனை ஒப்படைக்க அவர்கள் மறுத்தனர். அவர்களது வான்படைகளும் சிறு போர் விமானங்களின் கூட்டம் ஒன்று அழிக்கப்பட்டது.

13 நவம்பர் 2001

காபூலின் வீழ்ச்சி

கூட்டணி அமைப்புகளின் ஆதரவோடு இயங்கிய தாலிபன் எதிர்ப்புக் குழுவான வடக்குக் கூட்டணி காபூலுக்குள் நுழைகிறது. தாலிபான்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

2001 நவம்பர் 13ம் தேதிக்குள் எல்லா தாலிபன்களும் வெளியேறிவிட்டனர் அல்லது அடக்கப்பட்டனர். மற்ற நகரங்களும் வீழ்ந்தன.

26 ஜனவரி 2004

பெரிய சட்டமன்றம் (லோயா ஜிர்கா) ஒன்றில் ஒப்பந்தங்கள் நடந்தபிறகு, புதிய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்தானது. அக்டோபர் 2004ல் இது அதிபர் தேர்தலுக்கும் வழிவகுத்தது.

7 டிசம்பர் 2004

ஹமீத் கர்ஸாய் அதிபராகிறார்

GETTY

பட மூலாதாரம், ஹமீத் கர்ஸாய்

போபால்ஸி துராணி இனக்குழுவின் தலைவரான ஹமீத் கர்ஸாய், புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபராக இவர் இரு ஐந்தாண்டு காலங்கள் நீடித்தார்.

மே 2006

ஹெல்மாண்டுக்கு பிரிட்டிஷ் துருப்புகள் அனுப்பபட்டன

ஆஃப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள தாலிபான் ஆக்கிரமிப்புப் பகுதியான ஹெல்மாண்ட் மாகாணத்தில் பிரிட்டிஷ் படைகள் வந்திறங்கின.

மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு உதவுவதற்காகவே அவர்கள் வந்திருந்தார்கள் என்றாலும், போர் அவர்களை இழுத்துக்கொண்டது. 450 பிரிட்டிஷ் வீரர்கள் இறந்தனர்.

17 பிப்ரவரி 2009

ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் படைவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். அதிகபட்சம் 1,40,000 வீரர்கள் வரை இருந்தனர்.

இராக்கில் அமெரிக்கா கையாண்ட யுத்தி இங்கும் பின்பற்றப்பட்டது. பொதுமக்களைப் பாதுகாப்பதோடு ஊடுருவும் படைகளைக் கொல்வதாகவும் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

2 மே 2011

ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டார்

GETTY

பட மூலாதாரம், ஒசாமா

பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாதில் ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் அமெரிக்க நேவி சீல்களால் கொல்லப்பட்டார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு கடலில் அடக்கம் செய்யப்பட்டது. சி.ஐ.ஏ நடத்திய 10 வருடத் தேடல் முடிவுக்கு வந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானை நம்ப முடியாது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வசித்த தகவல் இதை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் இருந்தது.

23 ஏப்ரல் 2013

முல்லா உமரின் இறப்பு

முல்லா உமரின்

பட மூலாதாரம், EPA

தாலிபானின் நிறுவனர் முல்லா உமர் இறந்தார். அவரது இறப்பு இரண்டு ஆண்டுகள் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

ஆஃப்கானிய உளவுத்துறை தரும் தகவல்களின்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த கராச்சி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தனது நாட்டில் வசிக்கவில்லை என்று பாகிஸ்தான் மறுக்கிறது.

28 டிசம்பர் 2014

நாட்டோவின் விலகல்

காபூலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாட்டோ தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்கிறது. அமெரிக்கா ஆயிரக்கணக்கான படைகளை விலக்கிக்கொள்கிறது. மீதி இருக்கும் பெரும்பான்மையினர் ஆஃப்கானிய ராணுவ வீரர்களுக்கு உதவவும் பயிற்சி அளிக்கவுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.

2015

தாலிபான் மீண்டெழுகிறது

தற்கொலைப் படை, கார் குண்டுவெடிப்பு என தொடர் தாக்குதல்களைத் தாலிபான் நிகழ்த்துகிறது. காபூலின் நாடாளுமன்றக் கட்டிடமும் குண்டுஸ் நகரமும் தாக்கப்படுகின்றன. இஸ்லாமிய தீவிரவாதி அமைப்புகள் ஆஃப்கானிஸ்தானில் செயல்படத் தொடங்குகின்றன.

25 ஜனவரி 2019

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிப்பு

ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கானி, தான் 2014ல் பதவி ஏற்றபின்பு 45,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கிறார். முன்பு கணிக்கப்பட்டதை விட இந்த எண்ணிக்கை கூடுதலானதாக இருந்தது.

29 பிப்ரவரி 2020

கத்தார், தோஹாவில் அமெரிக்காவும் தாலிபானும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடுகின்றன. தாலிபான்கள் தங்கள் ஒப்பந்தத்தை சரியாக செயல்படுத்தினால், 14 மாதங்களுக்குள் எல்லா படைகளையும் விலக்கிக்கொள்வதாக அமெரிக்காவும் நேட்டோவும் உடன்படுகின்றன.

11 செப்டம்பர் 2021

இறுதி விலகலுக்கான நாள்

9/11 தாக்குதல் முடிந்து சரியாக 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்கப் படைகள் 11 செப்டம்பர் 2021ல் ஆஃப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்கு முன்பே படைகள் முழுமையாக விலகிவிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

யார் இந்தத் தாலிபான்கள்?

1989ல் சோவியத் படைகள் வெளியேறியபிறகு நடந்த உள்நாட்டுப் போரில் உருவானவர்கள் இவர்கள். பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலும், தென்மேற்குப் பகுதியிலும் இவர்களில் பலர் இருந்தார்கள். ஊழலை ஒழித்து பாதுகாப்பை உறுதிப்படுத்துதாக இவர்கள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பான இஸ்லாமிய வாழ்க்கை முறையை மேற்கொள்பவர்கள். 1998க்குள் கிட்டத்தட்ட முழு ஆஃப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தார்கள்.

ஷரியா என்ற இஸ்லாமிய சட்டத்தின் தீவிர வடிவம் ஒன்றை அமல்படுத்தி, கொடூரமான தண்டனைகளை அறிமுகப்படுத்தினார்கள். ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் முழு உடலையும் மறைக்கும் புர்கா அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். சினிமாவும் தொலைக்காட்சிகளும் இசையும் தடை செய்யப்பட்டன.

ஆதரவற்று நிற்கும் குழந்தைகள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஆதரவற்று நிற்கும் குழந்தைகள்

பதவியிலிருந்து விலக்கப்பட்டபின்பு பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இவர்கள் கூடினார்கள். 2001க்குப் பிறகான காலகட்டத்தை கவனித்தால், முன்பு எப்போதையும் விட இன்று மிக வலுவானவர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். தாலிபான்களில் இன்று 85,000 முழுநேர வீரர்கள் இயங்குகிறார்கள்.

இந்தப் போரால் விளைந்த சேதம் என்ன?

உயிரிழப்பு பற்றிய எண்ணிக்கைகளை சரியாகக் கணிக்க முடியவில்லை. கூட்டணி அமைப்புகளில் நடந்த உயிரிழப்புகள் சரியாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. தாலிபான் மற்றும் ஆஃப்கன் பொதுமக்களின் உயிரிழப்புகள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை.

ப்ரவுன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, 69,000 ஆஃப்கன் வீரர்கள் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. பொதுமக்களிலும் தாலிபன்களிலும் தலா 51,00 பேர் இறந்திருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.

2001ம் ஆண்டு தொடங்கி 3,500 கூட்டணி வீரர்கள் இறந்திருக்கிறார்கள், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள். 20,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். உலகிலேயே புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மூன்றாவது நாடு ஆஃப்கானிஸ்தான் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

2012க்குப் பிறகு 50 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்குள்ளேயோ அல்லது வேறு நாடுகளிலோ இவர்கள் வசித்து வருகிறார்கள்.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடந்த போர் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக 2020ம் ஆண்டுவரை அமெரிக்கா 978 பில்லியன் டாலர்களை செலவழித்திருப்பதாக ப்ரவுன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

அடுத்து என்ன நடக்கும்?

மீண்டும் தாலிபான் நாட்டை ஆக்கிரமிக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

காபூலின் அரசாங்கத்தைத் தாலிபன்கள் கவிழ்க்க மாட்டார்கள் என்று பைடன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால் ஜூன் மாதம் வந்த ஒரு அமெரிக்க உளவுத்துறை அறிக்கை, படைகள் வெளியேறியபின்பு ஆறு மாதங்களில் ஆஃப்கன் அரசு கவிழும் என்று சொல்கிறது. பிபிசி மற்றும் பிறரின் ஆராய்ச்சிகள், ஆகஸ்டிலேயே தாலிபான்கள் பாதி நாட்டைக் கைப்பற்றிவிட்டார்கள் என்று தெரிவிக்கிறது.

இவர்கள் கைப்பற்றிய இடங்களை அரசு எதிர்த்தது. முக்கிய நகரங்களில் போர் நடந்தது, பல முக்கிய நகரங்கள் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அமெரிக்க தூதரகம், காபூல் விமான நிலையம் மற்றும் சில அரசு கட்டிடங்களைப் பாதுகாப்பதற்காக 650 முதல் 1000 வீரர்கள் ஆஃப்கானிஸ்தானில் இருப்பார்கள் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது. மீதமிருக்கும் எந்தப படைவீரரும் தாக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் தெரிவிக்கின்றனர்.

பிபிசி

மறுபடி அந்த நாடு தீவிரவாதிகளுக்கான பயிற்சிக்களமாக மாறிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைபிடிக்கப் போவதாகவும், அமெரிக்காவையோ அதன் நட்பு நாடுகளையோ தாக்குவதற்காக எந்தக் குழுவும் ஆஃப்கானில் இயங்காது எனவும் தாலிபன்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு இஸ்லாமிய அரசை நிறுவுவதுதான் தங்கள் நோக்கம் என்றும், எந்த நாட்டையும் அச்சுறுத்த மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் தாலிபானையும் அல்கொய்தாவையும் பிரிக்க முடியாது என்று கூறும் நிபுணர்கள், அல்கொய்தாவின் உறுப்பினர்கள் சண்டைப்பயிற்சி எடுத்ததையும் குறிப்பிடுகிறார்கள். தாலிபான்கள் ஒரு ஒருங்கிணைந்த குழுவாக செயல்படவில்லை என்பதும் முக்கியமானது. சில தலைவர்கள் பிரச்சனையை உருவாக்காமல் மேலை நாடுகளிடமிருந்து விலகி இருக்க நினைக்கலாம். வேறு சிலரோ அல்கொய்தாவிடமிருந்து பிரிவதில் தயக்கம் காட்டலாம்.

ஐ.எஸ். கே.பி என்ற இஸ்லாமிய அமைப்பின் கிளை ஒன்று கோரசான் மாகாணத்தில் இயங்குகிறது. அவர்களைத் தாலிபன்கள் எதிர்க்கிறார்கள். தாலிபான்களைப் போலவே இவர்களும் அமெரிக்கா மற்றும் நேட்டோவால் பதவி இறக்கப்பட்டவர்கள்தான். படைகள் விலகியபிறகு இவர்கள் மீண்டும் இணையலாம். இந்த அமைப்பில் சில நூறு வீரர்களிலிருந்து 2000 வீரர்கள் மட்டுமே உண்டு என்றாலும், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், டஜிகிஸ்தானை இவர்கள் ஆக்கிரமித்தால் அது பிரச்சனையை உருவாக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :