கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் பாஜக: எல். முருகனின் 'ஆசீர்வாத யாத்திரை' - பலன் கிடைக்குமா?

பட மூலாதாரம், L. MURUGAN
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`ஆசீர்வாத யாத்திரை' என்ற பெயரில் மேற்கு மண்டலங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேற்கொள்ளவிருக்கிறார். `சமூகரீதியாக செல்வாக்காக உள்ளவர்களை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டுவதும் அந்த மக்களிடம் ஆசீர்வாதம் பெறுவது இந்தப் பயணத்தின் நோக்கம்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.
இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்று 30 நாள்கள் கடந்துவிட்டன. தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்ப்பது தொடர்பாக பல்வேறு கூட்டங்களை மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வருகிறார்.
மேற்கு மண்டலத்தில் இருந்து பா.ஜ.கவுக்கு 2 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பிறகு, இங்கு கட்சியை வளர்க்கும் பணிகளில் எல்.முருகன் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். அதன் ஒருகட்டமாக, வரும் 16 ஆம் தேதி முதல் 3 நாள்கள் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். `இந்த யாத்திரையை பிரமாண்டமாகக் காட்ட வேண்டும்' என்பதற்காக நடத்தப்படும் கூட்டங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.
அதென்ன ஆசீர்வாத யாத்திரை?
`` தமிழ்நாட்டில் அனைத்து வகையிலும் கட்சி வளர வேண்டும் என்ற முடிவில் அகில இந்திய தலைமை உள்ளது. இந்தமுறை அமைச்சரவை விரிவாக்கத்தில் 12 எஸ்.சி, 8 எஸ்.டி, 11 மகளிர், 24 மாநிலங்கள் என பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படியொரு அமைச்சரவை இதுவரையில் அமைந்தது இல்லை. இதன் அடுத்தகட்டமாக, நாடாளுமன்றத்தில் இவர்களை அறிமுகப்படுத்துவதற்கு காங்கிரஸ் விடவில்லை.
எனவே, இவர்கள் அனைவரும் நேரடியாக மக்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற உள்ளனர். அதற்காக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. எந்தச் சமூக மக்களின் அடையாளமாக இவர்கள் இருக்கிறார்களோ, அவர்களிடம் சென்று, `பா.ஜ.க எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது' எனப் பேச உள்ளனர். ஆசிர்வாத யாத்திரையின் நோக்கம் இதுதான்" என்கிறார் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
மேலும், `` 16 ஆம் தேதி காலை கோவையில் தொடங்கி மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி வழியாக எல்.முருகன் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பின்னர், திருப்பூரில் தங்கிவிட்டு, பெருமாநல்லூர், ஈரோடு எனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாமக்கல்லில் தங்க உள்ளார்.
மூன்றாவது நாள், நாமக்கல், சேலம், ஆத்தூர் பகுதிகளுக்குச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது சில சாதிகளில் செல்வாக்காக உள்ளவர்களையும் அந்தச் சாதியைச் சேர்ந்த இளைஞர்களையும் பா.ஜ.கவில் இணைப்பது பிரதான நோக்கமாக உள்ளது" என்கிறார்.
யாருக்கெல்லாம் முக்கியத்துவம்?
எல்.முருகன் மேற்கொள்ளும் ஆசீர்வாத யாத்திரையையொட்டி, கடந்த சில வாரங்களாக கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள சில சமூகங்களின் தலைவர்களிடம் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, மேற்கு மண்டலத்தில் பரவலாக உள்ள அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்பினர், முருகனுக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பாக கூட்டங்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

`` கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில்தான் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வரும் நாள்களில், `அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' எனத் தலைமை கூறியுள்ளது.
காரணம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அருந்ததியர் சாதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அ.தி.மு.க அணிக்குக் குறைவான வாக்குகளே வந்துள்ளன. அவர்களின் வாக்குகள் பலவும் தி.மு.க பக்கம் சென்றுவிட்டது. எனவே, முருகனின் சுற்றுப்பயணத்தில் அந்தப் பகுதி மக்களையும் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்கிறார் மேற்கு மண்டல பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` ஆசிர்வாத யாத்திரையின்போது, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட சில அமைப்புகளில் இருந்து பிரிந்தவர்களையெல்லாம் பா.ஜ.க பக்கம் கொண்டு வரும் வேலைகள் நடக்கின்றன. முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியும், `பா.ஜ.கவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்' என அந்தப் பகுதி மக்களிடம் பேசி வருகிறார்.
3 நோக்கங்கள்
இந்தப் பயணத்தில் கண்டுகொள்ளப்படாத சில சாதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது முதல் நோக்கமாக உள்ளது. குறிப்பாக, மேற்கு மண்டலம் என்றாலே 2 சாதிகளை மட்டுமே மையப்படுத்துகின்றனர். ஆனால், ஒரு வார்டில் நான்கைந்து பூத்துகளில் அருந்தியர் சாதி வாக்குகள் உள்ளன. இவர்களுக்கு எந்த முக்கியத்துவத்தையும் அரசியல் கட்சிகள் கொடுப்பதில்லை. இதுதவிர, மொழிவழி சிறுபான்மை மக்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனை மாற்றியமைக்கும் முயற்சியில் முருகன் ஈடுபட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவதாக, மத்திய அரசின் திட்டத்தால் பயனடைந்த பயனாளர்களை இந்த யாத்திரையில் ஒருங்கிணைத்து வருகிறோம். அவர்கள் மூலமாக அவர்கள் குடும்பத்தினரின் ஆதரவை பா.ஜ.க பக்கம் கொண்டு வருவதும் முக்கிய திட்டமாக உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முத்ரா வங்கிக் கடன், கல்விக் கடன் என மத்திய அரசால் பலனடைந்தவர்களின் எண்ணிகை அதிகம். அவர்கள் எல்லாம் இந்தப் பயணத்தில் முருகனை சந்தித்துப் பேச உள்ளனர். மூன்றாவதாக, மாநில மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகள் மாற்றிமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. `கட்சிப் பணிகளை சரியாக கவனிக்காதவர்கள் தேவையில்லை' என்ற முடிவை மாநிலத் தலைமை எடுத்துள்ளது. விரைவில் நிர்வாகிகள் மாற்றமும் நடக்க உள்ளது" என்கிறார்.
பா.ஜ.க பக்கம் போகவில்லை. ஆனால்?
இதையடுத்து, எல்.முருகனின் யாத்திரைக்கு ஆதரவு கொடுத்து வரும் சத்திரியர் மகா சபையின் ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நாங்கள் பா.ஜ.க பக்கம் போகவில்லை. தேசிய அரசியலில் எங்களுக்கென ஓர் அங்கீகாரத்தை பா.ஜ.க கொடுத்துள்ளது. எங்களின் அடையாளமாக முருகன் மாறியுள்ளார். அவரை உள்ளன்புடன் நாங்கள் வரவேற்கிறோம். தொடர்ந்து எங்கள் சமூகத்தை பிரதானப்படுத்துவற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
நேற்று முன்தினம் 30 அமைப்புகளை அழைத்து கூட்டம் நடத்தினோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் சமூக மக்கள் நிறைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1.25 கோடி மக்கள் உள்ளனர். இந்தச் சமூகத்தில் உள்ள சில அமைப்புகள், நலிந்தவர்களின் பெயரைச் சொல்லி பல்வேறு வியாபாரங்களைச் செய்கின்றன. நாங்கள் அதற்குள் செல்ல விரும்பவில்லை. எங்கள் சமூகத்துக்கான தேவைகளை நிறைவேற்றுவதை முக்கிய பணியாகப் பார்க்கிறோம்" என்கிறார்.

பட மூலாதாரம், L.MURUGAN
`` அருந்ததியர் சமூகத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 சதவிகித உள்ஒதுக்கீடு கொடுத்தாரே?" என்றோம். `` மேற்கில் உள்ள 12 மாவட்டங்களில் நாங்கள் அடர்த்தியாக இருக்கிறோம். தி.மு.க அரசு 3 சதவிகிதம் கொடுத்ததால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. முன்னேறிய சமூகத்துக்கு 10 சதவிகிதம் கொடுத்ததுபோல, இந்தச் சமூகத்துக்கும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.
இந்தியா முழுவதும் எங்கள் சமூக மக்கள் 20 கோடிப் பேர் உள்ளனர். இவர்களுக்கு பொதுவான பெயரை வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். எல்.முருகனுக்கு விசுவாசத்தின் அடிப்படையில் ஆதரவு கொடுக்கிறோம். அதேநேரம், பா.ஜ.கவில் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை" என்கிறார்.
எடுபடாத முருகனின் முயற்சி
பா.ஜ.கவுக்கு அருந்ததியர் சமூக அமைப்புகள் ஆதரவு கொடுப்பது தொடர்பாக, ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சில சுவரொட்டிகளை வாட்ஸ்அப்பில் பார்த்தேன். எல்.முருகனின் இந்த யாத்திரையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்துக்கென 6 அமைப்புகள் உள்ளன. அவர்களும் பா.ஜ.கவுடன் நிற்கவில்லை.

பட மூலாதாரம், Adiyaman facebook page
அவர்கள் பா.ஜ.க பக்கம் செல்வதற்கும் வாய்ப்பில்லை. இவர்களே புதிதாக சில அமைப்புகளை தோண்டியெடுத்து அவர்களை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். முருகனுக்கு ஆள் கிடைக்காத காரணத்தால் குக்கிராமங்களில் உள்ள பெயரே தெரியாத சில அமைப்புகளை கொண்டு வந்து நிறுத்துகிறார்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அதியமான், `` தமிழ்நாட்டில் பா.ஜ.கவில் ஆள்களே கிடையாது. ராசிபுரத்தில் உள்ள சில சமுதாய இளைஞரிடம் பேசிய முருகன், ` எங்கள் கட்சிக்கு வாருங்கள். மாதம் 5 ஆயிரம் கொடுக்கிறோம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் சில தகவல்களைப் போடுங்கள்' என்றார்.
அது எடுபடவில்லை. நாங்கள் இந்தக் களத்தை திராவிட இயக்கம், பெரியார், அம்பேத்கரிய கொள்கைளைப் பின்பற்றும் வகையில் கட்டமைத்து வைத்துள்ளோம். அதனால் அவர் பக்கம் யாரும் போகத் தயாராக இல்லை. முருகனை 15 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். அவரை சாதி ரீதியாக நான் பார்க்கவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் பயிற்சி எடுத்தவர். அதிகாரத்தை வைத்து எதையாவது செய்ய முயற்சிக்கிறார்" என்கிறார்.
மேலும், `` எல்.முருகனின் முயற்சியால் சற்று சலசலப்பு ஏற்படுத்தத்தான் செய்யும். காரணம், இந்தச் சமூகத்தில் வேலைவாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். முருகன் பக்கம் போனால் எதாவது கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவர்கள் செல்லலாம். கருத்து ரீதியாக பார்த்தால் பா.ஜ.க பக்கம் செல்வதற்கு யாரும் தயாராக இல்லை" என்கிறார்.
இதில் என்ன தவறு இருக்கிறது?

பட மூலாதாரம், Sr sekar bjp facebook page
``பா.ஜ.கவின் ஆசிர்வாத யாத்திரை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதே?" என பா.ஜ.க மாநி பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சமூகரீதியாக நாங்கள் குறிப்பிட்டு செயல்படவில்லை. மேற்கு மண்டலத்தில் உள்ள எஸ்.சி சமூக மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அந்தந்த பகுதிகளில் பிரதானமாக உள்ள சமூகங்களை மையமாக வைத்து செயல்படுகிறோம். ஈரோட்டில் நெசவாளர்கள் அதிகமாக உள்ளனர்.
அவர்களை சந்திப்பது இந்தப் பயணத்தில் ஒரு நோக்கமாக உள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி விவரங்கள் எங்களுக்கு வரவில்லை. பா.ஜ.க மீது ஈர்ப்பில் உள்ள சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக கூட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை எங்களை பக்கம் வரவைப்பதைவிட நாங்கள் அவர்களை நோக்கி செல்கிறோம்" என்கிறோம்.
மேலும், `` இந்த நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பா.ஜ.க ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளது. இதனை நாங்கள்தான் செய்கிறோம் என அவர்களிடம் கூற வேண்டியது எங்களின் கடமை. அப்படி யாருக்கெல்லாம் நன்மையைச் செய்துள்ளோமோ அவர்களைச் சந்திக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்கிறார்.
பிற செய்திகள்:
- திருடிய பணத்தில் 2,000 கோடி ரூபாயை திருப்பி தந்த கிரிப்டோகரன்சி ஹேக்கர் - ஏன்?
- பருவநிலை மாற்ற ஆபத்து: மீத்தேன் வாயுவுக்கு கடிவாளம் போட்டால் கொஞ்சம் வாய்தா வாங்கலாம்
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்
- ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? - விரிவான பின்னணி
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












