எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்

பட மூலாதாரம், S.P. Velumani
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் தொடர்ச்சியாக அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். `ரெய்டின்போது வேலுமணியை கைது செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் தலைமையில் இருந்து உத்தரவுகள் வந்தன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
அ.தி.மு.கவின் சட்டமன்ற கொறடாவும் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் 10 ஆம் தேதி காலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை, சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர் அன்பரசனின் இல்லம், சென்னையில் உள்ள `நமது அம்மா நாளிதழ்' அலுவலகம், கே.சி.பி இன்ஜீனியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ், அதன் இயக்குநர் சந்திரசேகர் ஆகியோரது இல்லம், அலுவலகம், பண்ணை வீடுகள் உள்பட அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
காலை உணவு, ரோஸ் மில்க்

கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் 811 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடப்பதாகக் கூறப்பட்டது.
கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த நேரத்தில் வேலுமணியின் வீட்டின் முன்பாக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு காலை உணவு, டீ, ரோஸ் மில்க் என உணவு உபசரிப்புகள் நடந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
`ரெய்டு பற்றி முன்கூட்டியே அறிந்தது போல இங்கு வந்தவர்களுக்கு முன்பே உணவு தயார் செய்யப்பட்டதா?' என்ற கேள்வியும் எழுந்தது. இந்தச் சோதனை நிறைவடைந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இருந்து 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், நிலம் தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பரிவர்த்தனைகள், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத் தொகை, ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் சென்னை, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளும் தப்பவில்லை.
எஸ்.பி.வேலுமணி ட்வீட்
இந்தச் சோதனையின்போது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் என 10 எம்.எல்.ஏக்கள், 3 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட 200 பேர் மீது குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ரெய்டு நடவடிக்கையைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது, நியாயத்தின் பக்கம் நின்றும் எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் ஆதரவாக நின்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்ஸுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதேநேரம், லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வது தொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வது, முன்ஜாமீன் பெறுவது போன்றவை அதில் முக்கியமானவையாக உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். பிறகு ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி எழுப்பிய கேள்வி

பட மூலாதாரம், AIADMK
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர்கள் குழுவினரிடம் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அப்போது, `420 என்ற பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்ததெல்லாம் தேவையற்றது' என வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் முதல் தகவல் அறிக்கையில் இருந்த 2 சட்டப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி, `இந்த சட்டப் பிரிவுகள் என்ன சொல்கின்றன, எதற்காக இந்தப் பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன?' எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, `தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது? என்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை இ.பி.எஸ் வழங்கியதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
``சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த வேலுமணியிடம் 10 மணி நேரத்துக்கும் மேல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அனைத்துக்கும் வேலுமணி அமைதியாகவே பதில் அளித்தார். இதன்பின்னர், `கைது நடவடிக்கையை மேற்கொண்டால் என்ன செய்வது? என்பது குறித்து தலைமையில் ஆலோசித்தனர்.
வேலூரா.. புழலா?
அப்போது பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், `அவரை கைது செய்தால் புழல் அல்லது வேலூர் சிறைக்குக் கொண்டு செல்வார்கள். இதில், வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்படவே வாய்ப்பு அதிகம். அவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொண்டால் வேலூர் சிறைவாசல் வரையில் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சாலையின் இருபக்கமும் நிற்க வைத்து தி.முக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அடுத்ததாக, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது வேலூர் சிறைக்கு வெளியிலேயே மாதிரி சட்டசபையை நடத்த வேண்டும்' என்றார். இந்தத் தகவல் உளவுத்துறையின் கவனத்துக்குச் சென்றதால்தான் வேலுமணி மீதான கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டதாக அறிகிறோம்" என்கிறார் அ.தி.மு.க வழக்கறிஞர் அணியின் நிர்வாகி ஒருவர்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``கோவை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த ரெய்டு நடந்தபோது, ஒவ்வொரு பகுதிக்கும் 5 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு ஒன்று அமர்த்தப்பட்டது. அவர்களோடு சென்னையில் உள்ள குழுவினர் தொடர்ந்து ஆலோசித்த வண்ணம் இருந்தனர். பொதுவாக ஒரு ரெய்டு நடந்ததால், `சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சரே பார்த்துக் கொள்ள வேண்டும்' என்ற மனநிலையில் பலரும் இருந்ததால்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டின்போது பெரிதாக எந்தவித ஆர்ப்பாட்டங்களும் நடக்கவில்லை.
தி.மு.க செய்த நல்ல விஷயம்

பட மூலாதாரம், DVAC
அதேநேரம், `வேலுமணி வீட்டில் எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடக்கலாம்' என்பதால் சீனியர் நிர்வாகிகளும் தொடர்பு கொண்டால் வரக்கூடிய பகுதியிலேயே இருந்தனர். ரெய்டு தொடர்பான தகவல் முன்கூட்டியே வந்ததால்தான், எம்.எல்.ஏ விடுதியிலேயே வேலுமணி தங்கியிருந்தார்.
`சபாநாயகரின் கட்டுப்பாட்டில் விடுதி இருப்பதால், லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருவார்களா?' என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த ரெய்டின்போது மொத்த நிர்வாகிகளும் குவிந்துவிட்டதை தி.மு.க மூலமாக நடந்த நல்ல விஷயமாக எடப்பாடி பார்க்கிறார். இதன் அடுத்தகட்டமாக, வடமாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரை இலக்காக வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை பாயலாம் எனத் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட அந்த மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம். அது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருகிறது" என்கிறார்.
``வேலுமணி மீதான நடவடிக்கையால் அ.தி.மு.கவுக்குத்தான் சாதகம் என்கிறார்களே?" என தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``வேலுமணி மீது நாங்கள் புதிதாக எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை. `நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு தற்போது பதில் சொல்ல முடியாது' என ஓ.பி.எஸ் கூறினார். ஜெயக்குமாராலும் பதில் சொல்ல முடியவில்லை. வேலுமணி மீதான புகார்கள் என்பது கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கிலும் உள்ளது. அவர் மீது தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமும் புகார் கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் முகாந்திரம் இருந்ததால்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது" என்றார் கண்ணதாசன்.
4 கோடி ரூபாயாக மாறிய 10 லட்சம்!
தொடர்ந்து பேசிய கண்ணதாசன், `` ஊழல் வழக்குகளில் முகாந்திரம் இல்லாமல் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியாது. இதில் ஆதாரங்களைத் திரட்டிய பிறகுதான் வழக்கே போட முடியும். அந்த அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுள்ளது. இவர்கள் ஆள்களைத் திரட்டி சாப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இவர் நேர்மையாக இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என சவால் விட்டிருக்கலாம். மேலும், ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டதாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருக்கிறார். அவர் மீது வழக்கு போட்டதால்தானே தண்டனை உறுதியானது. உச்ச நீதிமன்றத்திலும் அது உறுதி செய்யப்பட்டது. அதற்கும் தற்போது போடப்பட்டுள்ள வழக்குக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
2006 ஆம் ஆண்டு, `10 லட்சம்தான் உள்ளது' எனக் கூறிய வேலுமணிக்கு 4 கோடி ரூபாய்க்கும் மேல் எப்படி சொத்துகள் வந்தன? அதுவும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கும் சகோதரருக்கும்தான் டெண்டர் கொடுத்துள்ளார். இவையெல்லாம் முறைகேடு கிடையாதா? யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தி.மு.கவுக்குக் கிடையாது. ஆதாரங்களை வைத்து வழக்கு போடுவதுதான் தி.மு.கவின் ஸ்டைல். இந்த வழக்கில் ஜெயலலிதாவைவிட அதிகப்படியான தண்டனையை வேலுமணி பெறப் போவது உறுதி" என்கிறார்.
தி.மு.கவினருக்கு உதவிய வேலுமணி
``ஆதாரம் இருந்ததால்தான் வழக்கு பதியப்பட்டது என தி.மு.க தரப்பில் கூறுகிறார்களே?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``அறுபது இடங்களுக்கு மேல் சோதனை செய்து வெறும் 13 லட்சத்தைக் கைப்பற்றியுள்ளனர். அந்த 13 லட்சத்துக்கும் போதுமான கணக்குகள் வைக்கப்பட்டுள்ளன. எங்கள் மடியில் கனமில்லாததால் எந்தவித பயமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் உள்பட பலமுறை ஸ்டாலினுக்கு எஸ்.பி.வேலுமணி சவால்விட்டார். `நீங்கள் ஒரு புகாரை நிரூபித்தால்கூட அம்மா கொடுத்த பதவிகளை இழக்கத் தயார்' என விவாததத்துக்கு அழைத்தார். அதற்கு அவரிடம் பதில் இல்லை.
ஆனால், `நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த கணமே அ.தி.மு.கவை அமைச்சர்களை சிறையில் தள்ளுவோம்' என வன்மத்துடன் ஸ்டாலின் பேசினார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கூறி ஆட்சிக்கு வர நினைப்பவர்களை பார்க்கிறோம். இவர்கள் பழிவாங்குவதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளனர். இதனை திட்டமிட்டு செய்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வேலுமணியை முடக்கிவிட்டால், அதிகப்படியான இடங்களில் வெல்லலாம் எனத் தி.மு.கவினர் தப்புக் கணக்கு போடுகிறார்கள்.
கோவை என்பது வேலுமணியின் கோட்டையாக உள்ளது. தலைமையின் வழிகாட்டலில் அவர் மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரால் பயன்பெற்றவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். தி.மு.கவைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகையை வழங்கியுள்ளார். தேர்தலை கணக்கில் வைத்து அவர் செயல்பட்டதில்லை" என்கிறார்.
தொழிலே செய்யக் கூடாதா?
``10 லட்ச ரூபாய் எப்படி 4 கோடியாக மாறியது என தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்புகிறார்களே" என்றோம்.
``அவரும் தொழில் செய்து கொண்டுதானே இருக்கிறார். தி.மு.க குடும்பத்துக்கு இவ்வளவு கோடி சொத்துகள் எப்படி வந்தன? ஓ.பி.எஸ், இ.பி.எஸ், வேலுமணி ஆகியோர் தொழிலே செய்ய மாட்டார்களா? அவரது அப்பா காலம் முதல் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அன்றைக்கு இருந்த மதிப்பையும் இன்றைக்குள்ள சந்தை மதிப்பையும் பார்க்க வேண்டும்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு. இவர்கள் எஃப்.ஐ.ஆர் போட்டதாலேயே குற்றம் என்பது ஆகிவிடாது. அ.தி.மு.கவின் நன்மதிப்பைக் கெடுத்து, இல்லாத மக்கள் செல்வாக்கை பெற்றுவிடலாம் என தி.மு.க நினைக்கிறது. கொரோனா நிவாரண பணிகளிலும் சொந்தப் பணத்தை எங்கள் எம்.எல்.ஏக்கள் செலவு செய்தனர். அதைக்கூட தி.மு.க தடுத்தது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான அ.தி.மு.கவின் பணிகள் தொடரும்" என்கிறார் கோவை மகேஸ்வரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












