பருவநிலை மாற்ற ஆபத்து: மீத்தேன் வாயுவுக்கு கடிவாளம் போட்டால் கொஞ்சம் வாய்தா வாங்கலாம்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், மேட் மெக்கிராத்
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்
மீத்தேன் வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்தால், அது பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் புவிக்கு கொஞ்சம் கால அவகாசம் தருவதாக அமையும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தற்போது புவி வெப்ப நிலை அதிகரித்து வருவதற்கு பெருமளவுக்கு மீத்தேன் வாயு காரணமாக இருக்கிறது என்பது சமீபத்தில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டுக் குழு (ஐபிசிசி) ஆய்வறிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்று.
தற்போது நிகழும் புவி வெப்பநிலை உயர்வில் 30-50 சதவீதம் இந்த மீத்தேன் வாயுவால் நிகழ்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை. வேளாண்மை, எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் நடக்கு ம் கசிவு, குப்பை மேடுகள் போன்றவை மீத்தேன் வாயு உற்பத்திக்கு பெருமளவுக்கு காரணமாக அமைகின்றன.
பல பத்தாண்டுகளாக புவி வெப்பமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதே வழி என்று அதிலேயே கவனமாக இருந்தார்கள். காடுகள் அழிப்பு, மின்சார உற்பத்தி போன்ற மனித நடவடிக்கைகளாலேயே கரியமில வாயு உற்பத்தி நிகழ்ந்தது. புவி வெப்பமயமாவதற்கு மிகப் பெரிய காரணமாக இப்போதும் கரியமில வாயுவே இருக்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட புவி வெப்பநிலை உயர்வில் 70 சதவீதம் கரியமில வாயுவாலேயே நிகழ்ந்துள்ளது.
ஆனால், இந்த அளவுக்கு மீத்தேன் (CH4) வாயு மீது இந்த அளவுக்கு கவனம் ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஐ.நா. ஆய்வு ஒன்றில் மீத்தேன் வாயுவால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து குறிப்பிடப்பட்ட பிறகு இந்த பாராமுகம் முடிவுக்கு வந்தது.
இந்த வாரம் வெளியான முக்கியமான ஐபிசிசி அறிக்கையில் தற்போது நிகழ்ந்து வரும் புவி வெப்ப நிலை உயர்வில் 0.5 டிகிரி உயர்வுக்கு மீத்தேன் வாயுவே காரணமாக இருப்பதாக விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு மீத்தேன் வாயுவும் எங்கிருந்து வருகிறது?
சுமார் 40 சதவீத மீத்தேன் நீர்நிலைகள் போன்ற இயற்கை மூலாதாரங்களில் இருந்து வெளியாகிறது. ஆனால், பெருமளவு வாயு, பலவிதமான மனித நடவடிக்கைகள் மூலம் வெளியாகிறது.
"கால்நடை வளர்ப்பு, நெல் உற்பத்தி, குப்பை மேடுகள் போன்ற பல காரணிகள் மூலம் இது நிகழ்கிறது," என்கிறார் அயர்லாந்து மயூந்த் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும் ஐபிசிசி அறிக்கையை எழுதியவர்களில் ஒருவருமான பேராசிரியர் பீட்டர் தார்ன்.

பட மூலாதாரம், Reuters
"இயற்கை எரிவாயு என்று தவறாக அழைக்கப்படும் புதைபடிவ எரிவாயு உற்பத்தி, அதை ஓரிடத்தில் இருந்து ஓரிடத்துக்கு எடுத்துச் செல்வது, பயன்பாடு ஆகியவை மீத்தேன் உற்பத்திக்கான பெரிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது."
2008ம் ஆண்டு முதல் மீத்தேன் உமிழ்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது. பாறை உடைப்பு முறையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் மீத்தேன் வாயு எடுப்பது அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
2019 வாக்கில் வளி மண்டலத்தில் மீத்தேன் அளவு வரலாறு காணாத அளவு அதிகரித்தது. தொழில் புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைப் போல இரண்டரை மடங்கு மீத்தேன் வாயு காற்று மண்டலத்தில் கலந்திருந்தது.
கரியமில வாயுவைவிட பல மடங்கு வீரியம்
100 ஆண்டு காலத்தில் கரியமில வாயுவைப் போல 28 முதல் 34 மடங்கு அதிகம் புவியை வெப்பமாக்குகிறது மீத்தேன் என்பது விஞ்ஞானிகளை கவலை கொள்ளவைக்கிறது.
20 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு மீத்தேன் வாயு அதே அளவு கரியமில வாயுவைப் போல 84 மடங்கு வீரியமாக வெப்பமாக்க வல்லது.
ஒரு நேர்மறை அம்சம்
ஆனால், மீத்தேன் வாயுவில் ஒரு நேர்மறையான அம்சம் என்னவென்றால், கரியமிலவாயுவைப் போல நீண்ட காலத்துக்கு காற்றில் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்காது.

பட மூலாதாரம், Getty Images
"இன்று நீங்கள் ஒரு டன் மீத்தேன் வாயுவை உமிழ்ந்தால், ஒரு பத்தாண்டில் அரை டன் மீத்தேன்தான் வளிமண்டலத்தில் இருக்கும்," என்கிறார் பேராசிரியர் தார்ன்.
"இருபது ஆண்டுகளில் அது கால் டன்னாகிவிடும். எனவே, இப்போது மீத்தேன் உமிழ்வை நிறுத்த முடியுமானால், இந்த நூற்றாண்டின் முடிவில் காற்று மண்டலத்தில் உள்ள மீத்தேன் அளவு இயற்கையான அளவுக்கு குறைந்துவிடும். அதாவது 1750ம் ஆண்டு என்ன அளவு இருந்ததோ அந்த அளவுதான் இருக்கும்."
அடுத்த பத்தாண்டில் 40-45 சதவீதம் மீத்தேன் உமிழ்வு குறைந்தால், 2040 வாக்கில் புவி வெப்பநிலை அதிகரிப்பில் 0.3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும் என்று நம்புகிறார்கள் வல்லுநர்கள்.
0.1 டிகிரி குறைவதுகூட மிக முக்கியமான என்று இருக்கும் நிலையில், இந்த அளவுக்கு வெப்பநிலை அதிகரிப்பு குறையுமானால், தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்ற வரம்பை மீறாமல் காப்பாற்றிக்கொள்ள இது பெரிய உதவியாக இருக்கும்.
என்ன செய்தால் இதை அடையலாம்?
சில மிக எளிய நடவடிக்கைகள் மூலம் விரைவாக மீத்தேன் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
"இந்த நடவடிக்கைகளில் சில ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான செலவுபிடிக்கக்கூடியவை," என்கிறார் லண்டன் ராயல் ஹல்லோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யூவன் நிஸ்பெட்.
"குறிப்பாக எரிவாயு தொழில்துறையில் கசிவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். 10-20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அந்த கசிவுகளை கண்டுபிடிப்பது எளிது. காரணம் மேம்பட்ட கருவிகள் வந்துவிட்டன. பெரிய நகர்ப்புற குப்பைக் குவியல்கள் மீது மண்ணை பரப்பலாம். பயிர்க் கழிவுகளை கொளுத்துவதைத் தடுக்க பல விஷயங்களை செய்யலாம். இது போன்ற விரைவான நடவடிக்கைகள் நல்ல பலன்களைத் தரும். அமெரிக்காவில் 1990-2016 காலகட்டத்தில் குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் வாயு சேகரிக்கும் முயற்சி காரணமாக மீத்தேன் உமிழ்வு 40 சதவீதம் அளவுக்கு குறைந்தது"

பட மூலாதாரம், Reuters
வேளாண்மையில், கால்நடைத் தீவனம், எரு போன்றவை தொடர்பாக அறிமுகமாகியுள்ள பல தொழில்நுட்ப மாற்றங்கள் மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதில் உதவி செய்யும். ஆனால், பெரிய அளவில் மீத்தேன் உமிழ்வை குறைப்பதற்கு அரசியல் மட்டத்தில் நடவடிக்கை தேவை.
அயர்லாந்து, நியூசிலாந்து போல பொருளாதாரத்தில் வேளாண்மை பெரிய பங்காற்றும் நாடுகளில் இத்தகைய மாற்றங்கள் சர்ச்சைக்குரியவை. இந்த நடவடிக்கைகள் வெற்றி பெறவேண்டுமானால், இவை சமத்துவமாகவும், நியாயமான முறையிலும் மேற்கொள்ளப்படவேண்டும்.
"மக்கள் இனி ஆடு, மாடு வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்ல முடியாது," என்கிறார் தார்ன்.
"நிலத்தை வேறுவிதமாக நிர்வகிப்பதற்கான உதவிகளை வழங்கும் கொள்கை வேண்டும். இனி கால்நடைகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்று முழங்குகிறவர்களால் இதைச் செய்யமுடியாது. நுட்பமான அணுகுமுறையாக இது இருக்கவேண்டும்."
பால் பொருள், இறைச்சி ஆகியவற்றுக்கான நுகர்வோர் தேர்வு இந்த துறையின்மீது தாக்கம் செலுத்தும். எண்ணெய் எரிவாயு துறையும் மீத்தேன் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் பெரிய சவாலை எதிர்கொள்ளும்.
இதுவரை கட்டுப்பாடுகளால் கசிவுகளை குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், உமிழ்வுகளை விரைவாக அடையாளம் கண்டு குறைப்பதற்கு தொழில்நுட்பத்தை நாடுவதற்கு எரிபொருள் நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
"கசிவுகளைத் தடுப்பதில் இந்த துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது போதாது," எண்ணெய் வளத்துறையில் நீண்ட அனுபவம் மிக்கவரும் mCloud Technologies என்ற எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் பதவி வகிப்பவருமான எர்னல் சேன்டோஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Reuters
எல்லா பசுமை இல்ல வாயுக்களையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரே விதமான அணுகுமுறையை கையாண்டு மீத்தேன் வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை நீர்த்துப் போகச் செய்துவிடக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்களை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மான்ட்ரியல் ஒப்பந்தத்தைப் போல மீத்தேன் வாயுவுக்கு மட்டும் தனித்துவமான நடைமுறை வேண்டும் என்று பலரும் கோருகிறார்கள்.
நீண்ட கால நோக்கில் வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்தவேண்டும். அந்தப் பாதையில் நமக்கு உதவி செய்வதற்கு வெவ்வேறு வாயுக்களுக்கும் வெவ்வேறுவிதமான அணுகுமுறை வேண்டும். இது நமக்கு கால அவகாசம் பெற்றுத் தரும் என்கிறார் பீட்டர் தார்ன்.
கடைசியில் நிகர கரியமில வாயு உமிழ்வு பூஜ்ஜியத்தை அடையவேண்டும். ஆனால், அதற்கான பாதையில் மீத்தேன் வாயுவுக்கு கடிவாளம் போடுவது அந்த இலக்கை எட்டுவதற்கு உதவும் என்பதே வல்லுநர்கள் பலரின் பார்வை.
பிற செய்திகள்:
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்
- ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? - விரிவான பின்னணி
- தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா?
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












